பக்கங்கள்

30 ஜூன் 2010

தென்னிந்திய திரைப்படத் துறையின் போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை.-சல்மான் கான்.


'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை என வட இந்திய சினிமா நட்சத்திரம் சல்மான்கான் தெரிவித்தார். சல்மான்கான் மற்றும் தென்னிந்திய நடிகை அசின் ஆகியோரடங்கிய குழு, 'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பை இலங்கையில் ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவாறு தெரிவித்தார்.இதில் கலந்து கொண்ட நடிகர் சல்மானிடம் ஊடகவியலாளர் ஒருவர்," தென்னிந்தியாவில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், "நான் ஒரு நடிகன், அரசியல்வாதியல்ல. 'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை. இந்த விடயம் தொடர்பில் நான் இதுவரை எதுவித பிரச்சினையையும் எதிர்நோக்கவில்லை. குறித்த திரைப்படத்தினை தென்னிந்தியாவில் திரையிடுவதிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட மாட்டாது. படத்தின் ஒருசில காட்சிகள் மொரிஷியஸ் தீவுகளில் நடத்தப்பட்டாலும், அநேகமான காட்சிகள் இலங்கையிலேயே எடுக்கப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.

நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் சந்தித்து பேசியுள்ளனர்.


தலைமைறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா சமீபத்தில் யாருக்கும் தெரியாமல் சென்னை வந்து சென்றுள்ளார். அவர் பத்திரிகை ஒன்றுக்கும் பேட்டி அளித்துள்ளார். அவர் பேட்டி அளித்துள்ள அதே நாளில் நித்யானந்தாவும் பெங்களூரில் பேட்டி கொடுத்தார். நித்யானந்தா-ரஞ்சிதா சந்திப்பு நடந்த பிறகே இருவரும் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.நித்யானந்தா யோசனையின் பேரில் தான் ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார் என்கின்றனர். அவரது ஆன்மீக பணிகள் சிறப்பானவை என்று புத்தகத்தில் குறிப்பிடுவார் என் கின்றனர். ஆபாச வீடியோ பட விசயங்களும் புத்தகத்தில் இடம் பெறுமாம். சந்திப்பில் ரஞ்சிதா தனக்கு ஆதரவாக இருப்பதை நித்யானந்தா உணர்ந்து கொண்டாராம். ரஞ்சிதா தொடர்ந்து ஆசிரமத்தோடு தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் முதலாமாண்டு நினைவலைகள்!

துயர் சுமந்து தவிக்கின்றோம்!



புளியங்கூடல் மேற்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் முதலாமாண்டு நினைவலைகள்.

எங்களுக்காய் வரவு:15.03.1926

கலங்கவைத்து விரைவு 30.06.2010.

தந்தையே எமக்கு உயிர் தந்த தெய்வமே! நாளும் பொழுதும் உங்கள் நினைவுகள் சுமந்து கலங்குகிறோம் நாமிங்கு! என்னானது ஏதானது?எமைப்பிரிய எப்படியானது?பாசக்கூட்டில் வாழ்ந்த எம் கூட்டை உடைத்து தந்தை பறவை ஏன் தான் பறந்தது? பிள்ளைகள் இங்கு துடிப்பது தெரியுமோ?மனைவியே இங்கு கதறுதல் கேட்குமோ?மருமக்கள் இங்கு தவிப்பது புரியுமோ?பேரர்கள் இங்கு கலங்குதல் விளங்குமோ? யாருக்கும் தீங்கு எண்ணிடா உள்ளம்,ஊருக்கு உதவி செய்வதில் வள்ளல். பணமே வேண்டாமல் கைவைத்தியம் செய்வதில் சமர்த்தர், உறவுகளை விடவும் நட்புக்கள் அதிகம் கொண்ட பண்பாளர், இனி எங்கே காண்போம் தந்தையே உங்களை? இன்னொரு பிறப்பு எமக்கு இருந்தால் உங்களின் பிள்ளைகளாய் பிறக்கவே வேண்டுகிறோம்!என்றுமே நீங்கா துயர் சுமந்து நிற்கிறோம் தந்தையே உங்கள் நினைவலைகளால்.


தகவல்:மனைவி,பிள்ளைகள் மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.

29 ஜூன் 2010

அதிசயம்! மனித உருவில் ஆட்டுக்குட்டி...!


ஆத்தூர் அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பைத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு, நேற்று அதிகாலை 5 மணியளவில் கடும் சிரமத்துடன் குட்டியை ஈன்றது. பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில் இறந்தே பிறந்ததை கண்ட வெற்றிவேல் அதிர்ச்சியடைந்தார். ஆட்டுக் குட்டியின் உடலில் முடிகள் இல்லை. ரப்பர் பொம்மை குழந்தை போல காணப்பட்டது. தகவலறிந்த அப்பகுதியினர், அதிசய ஆட்டுக் குட்டியை வியப்புடன் பார்த்துச் சென்றனர். கால்நடை மருத்துவ ஆய்வாளர் சேகரன், ஆட்டுக்குட்டியின் உடலை ஆத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.
கால்நடை மருத்துவர் தேவேந்திரன் கூறியதாவது: ஒரே வகையான கிடா ஆடு மூலம் பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்காக கருவூட்டல் செய்கின்றனர். மரபணு கோளாறு காரணமாக உடல் முழுவதும் நீர் நிரம்பி, ரப்பர் போன்ற குட்டி பிறந்துள்ளது. ஆடு சினை பிடிப்புக்கு வேறு கலப்பின கிடாவை பயன்படுத்த வேண்டும். மனித இனத்தில் நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்தால் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பது போல, ஆடுகளுக்கும் இனவிருத்தியில் குறைபாடு ஏற்படும். ஆத்தூரில் பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில், ரப்பர் குழந்தை போல் உள்ளதால் பரிசோதனை செய்யவுள்ளோம். இவ்வாறு தேவேந்திரன் கூறினார்.

தமிழ் மக்களை தமது காலடியில் விழ வைப்பதே....!காணொளி பகுதி 2

தமிழ் மக்களை தமது காலடியில் விழ வைப்பதே சிங்கள அரசின் நோக்கம்.


கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.
தனிப்பிட்ட முடிவில் கொழும்பு சென்று பிரித்தானிய திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவென கே.பியின் ஏற்பாட்டில் கடந்த 15ஆம் நாள் முதல் 20ஆம் நாளுக்குள் 6 புலம்பெயர் நாடுகளிலிருந்து 9 பேர் கொழும்பு சென்றிருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களிற்குச் சென்றதுடன், சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச, நீண்ட காலம் சிறீலங்கா படைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரன, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்திருந்தனர். கொட்டாபயவுடனான சந்திப்பின்போது அவர் உள்ளே வந்தபொழுது கே.பி அவரைக் கட்டித்தழுவ முற்பட்டதாகவும், அவரது இந்த நடவடிக்கை தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் கூறும் மருத்துவர் அருட்குமார், விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்ட பிரிவு - 4 முகாமைப் பார்வையிட அனுமதி மறுத்த படையினர், பிரிவு இரண்டாவது முகாமிற்கு தம்மை அழைத்துச் சென்றதாகவும், அங்கும் படைப் புலனாய்வாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டவர்களே முன்னாள் போராளிகள் போன்று தம்மை சந்திக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆணவத்துடன் கொட்டாபய ராஜபக்ச தம்முடன் உரையாடியதாகக் கூறும் மருத்துவர் அருட்குமார், வரலாற்றைப் பற்றி யாரும் பேசக்கூடாது எனவும், அரசு செய்யும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு மட்டும் நல்க வேண்டும் என, அடிமை போன்று நடத்த முற்பட்டதாகவும், புலம்பெயர் மக்களின் பணத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார். புலம்பெயர் மக்களை கே.பி ஊடாக உள்வாங்க முனைவது, அல்லது புலம்பெயர் தமிழ் மக்களை பிரிவுகளாக உடைத்து சின்னா பின்னமாக்கி மன்டியிட வைப்பது என்பதில் சிறீலங்கா அரசும், படைப் புலனாய்வாளர்களும் திட்டமிட்டிருப்பதை தமது சந்திப்புக்களில் உணர முடிந்ததாக கூறும் மருத்துவர் அருட்குமார், கே.பியை 2006ஆம் ஆண்டே தான் சந்தித்திருப்பதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இலங்கையின் வளங்களை இந்தியா சுரண்டுவதாக இந்த சந்திப்புக்களில் குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா அரச தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களை தரக்குறைவாகப் பேசியதாகவும், தமிழர் புனர்வாழ்வு மையம் (ரி.ஆர்.சி) என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி, அதனூடாக புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அருட்குமார் கூறினார்.

28 ஜூன் 2010

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜோதி ரவி நாலாம் மாடியில்.


கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஏ.கே. கண்ணன் என்ற ஜோதிரவி சிற்றம்பலம் தனது சொந்த ஊரான கரவெட்டியில் வாழ்ந்து வந்த வேளையில், கொழும்பில் இருந்து சென்ற சிறப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு 4ம் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
நன்னடத்தை காரணமாக பிணையில் கனடிய நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு தனது வன்செயல் சார்ந்த செயல்களில் இருந்து புனர்வாழ்வு பெற்று தனது குடும்பத்துடன் ஒரு சாதாரண குடும்பஸ்தராக வாழ்ந்து வந்த வேளையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாடு கடத்தப்பட்ட ஏ.கே. கண்ணன் என அழைக்கப்படும் சிற்றம்பலம் யோதிரவி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கனடாவில் புலம்பெயர் சமூகங்களிடையே ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி மற்றும் தங்கள் மண்ணில் அனுபவித்த வன்முறைகள் காரணமாக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு புலம்பெயர் சமுதாயத்தை சேர்ந்த குழுக்கள் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத சம்பவங்களில் தொடர்புபடுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதுண்டு.
அந்த வகையில் தமிழர்கள் கனடாவிற்கு வருகை தந்த போது வியட்நாமியக் குழு வன்முறை மற்றும் இந்தியக் குழு வன்முறைகள் அதிகரித்துக் காணப்பட்டன.
அதற்கு முன்பான காலத்தில் ஸ்பானிய, இத்தாலிய மற்றும் ஐரோப்பிய குழுக்கள் தங்கள் ஆரம்பப் புலம்பெயர்வில் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்டு கால ஓட்டத்தில் அவற்றில் இருந்து மீண்டு வந்தன.
சட்ட ஒழுக்க நடைமுறைகளிற்கு குந்தகம் விளைவிக்கும் இக்குழுக்கள் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளத்தையுமே அவமரியாதைக்கு உட்படுத்தி விடுவதே வழமை.
அந்த வகையில் தமிழர்கள் சார்ந்த குழுக்களும் அவ்வாறே செயற்பட்டன. இவ்வாறு தமிழர்களின் புலம்பெயர்தலின் போன வன்முறைக் குழுவாக அடையாளம் காணப்பட்ட ஏ.கே.கண்ணன் குழுவின் தலைவரான கண்ணன் எனப்படும் யோதிரவி சிற்றம்பலம் தான் திருந்தி வாழ்தலிற்கு தன்னை உட்படுத்தி சாதாரண குடும்பஸ்தராக தனது மனைவி பிள்ளைகளுடன் கனடாவில் வசித்து வந்த போதே எந்தவித முன்னறிவிப்புமின்றி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்ட ஜோதிரவி சிற்றம்பலம் தனது சொந்த ஊரான கரவெட்டி சென்று தன்னை மீள் வாழ்க்கைக்கு உட்படுத்தி வந்த போதே கொழும்பில் இருந்து சென்ற சிறப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு 4ம் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அவரது உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோதிரவியின் நிலை குறித்து அவரது மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்கள் அதீத கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு இவ்வாறான வன்முறை நெருக்குவாரமானது நாடு கடத்தப்படுபவர்கள் எதிர்நோக்கக்கூடிய அபாயத்தைக் கனடா போன்ற பொதுநலவாய நாடுகளிற்கு எடுத்துக் காட்டுகிறது.

தமிழீழம் பெற்று தருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?-விஜயகாந்த்.


தமிழ் ஈழத்தை பெற்று தருவது குறித்து செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. அதேசமயம் அரசு பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருவதோடு, அரசு ஆலைகள் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன.
எனவே தமிழில் படித்தவர்களுக்கு தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், அரசு கொண்டு வரும் சட்டம் அமைய வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்று தருவது குறித்து செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா.நிபுணர்குழு நியூ யோர்க்கில் கூடுகிறது.


ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தச் செய்தியில், "இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் டருஷ்மன் தலைமையில் இந்தக் குழு இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது. குழுவின் அமர்வுகள் தொடர்பில் எந்தவிதமாக கருத்துக்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை யாரிடம் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 ஜூன் 2010

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்க போவதில்லை.


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக் கடிதத்திற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு 15 அம்சங்கள் கொண்ட நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.குறித்த கடிதத்திற்கான உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவிதமாக தொடர்புகளையும் பேணுவதில்லை என வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக இலங்கை உத்தியோகபூர்வமாக பதிலளிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருந்தது.

ஐ.நாவின் நிபுணர் குழுவுக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவுக்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் நாடும் தனது வரவேற்பை தெரிவித்துள்ளது. இந்த குழு, இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.
பிரான்ஸின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே யுத்தம் நிறைவடைந்தவுடன் யுத்த மீறல்கள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இதன் படி, அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மாண்புமிக்கோர் குழுவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவுடன் இணைந்து இது தொடர்பில் செயல்பட வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.
இலங்கையில் யுத்தக் குற்றசாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள், தொடர்பான விசாரணைகள், முடிக்கப்படாமல் தொக்கி நிற்கவிட கூடாது. எனவே இதனை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இதன் அடிப்படையிலேயே, இலங்கையின் எதிர்கால சந்ததியினரின் நிம்மதியான வாழ்கை இருக்கும் என பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

26 ஜூன் 2010

கே.பியின் ஏற்பாட்டில் இலங்கை சென்று திரும்பியோர் விபரம் வெளியாகியுள்ளது.



புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து அண்மையில் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விஜயம் செய்த குழுவினர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன
புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இக்குழுவில்,
1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி அவுஸ்திரேலியா
2. திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவிற்சலாந்து
3. சிறிபதி சிவனடியார் யேர்மனி
4. பேரின்பநாயகம் கனடா
5. விமலதாஸ் பிரித்தானியா
6. சார்ல்ஸ் பிரித்தானியா
7. மருத்துவர் அருணகுமார் பிரித்தானியா
8. கங்காதரன் பிரான்ஸ்
9. சிவசக்தி கனடா
ஆகியோரே இக்குழுவில் அங்கம் வகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இக்குழுவினர்களின் சந்திப்புக்கான ஒழுங்குகளை இலங்கை அரசினால் கைது செய்யபட்டு தடுத்து வைக்கபட்டுள்ள புலிகளின் சர்வேதேச பொறுப்பாளர் கே.பி என்று அழைக்கபடும் செல்வராசா பத்மநாதனால் ஒழுங்கு செய்யப்பட்டதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் திருடிய பெண்கள்.


நயினை நாகபூசணி அம்மன் கோவிலின் தேர்த் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. குடாநாட்டில் பல பாகங்களிலும் இருந்து திரண்ட ஏராளமான பக்தர்கள் இடையே திருட்டுக் கும்பல்களும் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளன. நேற்றைய திருவிழாவின் பல பெண்களின் தாலிக்கொடிகள், சங்கிலிகள், காப்புகள் போன்ற தங்க ஆபரணங்கள் களவு போயுள்ளன. பெண்ணொருவர் போட்டிருந்த தாலிக்கொடியை அபகரிக்க முயன்ற பெண்ணொருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.இவரிடம் விசாரணை செய்தபோது திருடுவதற்கென்றே கோவிலுக்கு வந்த மேலும் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பெண்களும் நவநாகரீக உடையில் கோயிலைச் சுற்றிவந்துள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குறிகட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் செம்மொழி மாநாடு பற்றிய கேலிச்சித்திரங்கள்.











தமிழால் வாழும் கருணாநிதியின் செம்மொழி நாட்டுக்கூத்து கேலி சித்திரங்கள்,

சித்திரவதைக்கு ஆளானோரின் சர்வதேச ஆதரவு தினம்.


சித்திரவதைக்கு ஆளானோரின் சர்வதேச ஆதரவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகலாவிய ரீதியில் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வருடாந்தம் ஜூன் 26ஆம் திகதி இன்றைய நினைவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.1987ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபை சித்திரவதைக்கு எதிராக தீர்மானம் எடுத்திருந்தது. அதனை நினைவுகூரும் பொருட்டே இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, நீதி மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை ஐ.நாவின் இந்தத் தீர்மானம் எடுத்துக் காட்டுகின்றது.அதேவேளை, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

25 ஜூன் 2010

உலகத்தமிழர் நெஞ்சில் அழியாத சித்திரமாக பிரபாகரன் தீட்டப்பட்டுள்ளார்.


இலங்கையில் பிரபாகரன் தலைமையில் மீண்டும் களம் அமையும் என்று பழனியில் நடைபெற்ற திருமண விழாவில் ம.தி. மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆயக்குடி பேரூர் ம.தி.மு.க. செயலாளர் செல்வத்தின் மகன் திருமணத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று நடத்தி வைத்து பேசியபோதே இவ்வாறு கூறினார். மேலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் அழியாத சித்திரமாக பிரபாகரன் தீட்டி வைக்கப்பட்டுள்ளார். இன்று உலகத் தமிழர்களின் நெஞ்சில் அமைதி இல்லை. மகிழ்ச்சி இல்லை. துன்பப் புயல் வீசி வருகிறது.இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் மற்றும் ஆயுத உதவி செய்தது. ஆயிரக்கணக்கான நமது தொப்புள் கொடி உறவுகள் அழிக்கப்பட்டனர். ஈழ போராட்டத்திற்கு எதிராக 7 வல்லரசு நாடுகள் செயல்பட்டன. அரசியல் துரோகம் செய்து இருக்கலாம். களங்கள் முடிந்து விடவில்லை. லட்சியங்கள் தோற்பதில்லை. ஈழத்தமிழர் களுக்கு ஒரு விடியல் பிறக்கத் தான் போகிறது. ஈழத்தமிழர்கள் சிந்திய ரத்தம், செய்த தியாகம் வீண் போகாது. தரணியெங்கும் வாழும் தமிழர்கள் கிளர்ந்தெழுவர். இலங்கையில் பிரபாகரன் தலைமையில் மீண்டும் களம் அமையும் என்று பேசியுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கான உணவில் பூச்சி புழுக்கள்.


மட்டக்களப்பு பகுதியில் உள்ள வெலிக்கந்தை புனர்வாழ்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் அங்குள்ள படையினருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, கண் மண் தெரியாமல் சரமாரியாக இராணுவம் தாக்கியதில் முன் நாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் செய்தியை நாம் ஏற்கனவே பிரசுரித்திருந்தோம். ஆனால் தற்போது இது குறித்து மேலதிகச் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது.தடுப்பு முகாலில் உள்ள பல முன் நாள் போராளிகளை இராணுவம் இழிவாக நடத்திவருகிறது. போஷாக்கு குறைவான உணவுகளைக் கொடுப்பதோடு, ஒரு இளைஞருக்கு தேவையான அளவு உணவைக் கொடுக்காமல், அவர்களை அரைப் பட்டினி போட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகிறது இராணுவம். சாப்பாட்டில் அதிகமாக பூச்சி புழுக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அருவருப்படையும் முன் நாள் போராளிகள் சில வேளை உணவு உண்பதை தவிர்க்கிறார்கள். சிங்கள சமையல் காரர்களைக் கொண்டு இந்த தடுப்பு முகாமில் உணவு சமைக்கப்படுவதாகவும், அவர்கள் அசுத்தமாகவும், அருவருக்கத் தக்க விதத்திலும் உணவை சமைப்பதாகவும் தெரியவருகிறது.இதனை இராணுவத்தினர் வேண்டும் என்றே செய்துவருகின்றனர். தமிழ் இளைஞர்களை போஷாக்கு குறைபாட்டாளர்களாக மாற்றவும், அவர்களை வெளியே விடும்போது இனி ஒரு போராட்டம் வெடிக்காமல் இருக்கவும், அல்லது முகாமில் இருந்து தப்பி ஓட சக்தியற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகவுமே இராணுவத்தினர் இவ்வாறு செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு பெரும் சித்திரவதைக்கும், பட்டினிக்கும், மன உளைச்சல்களுக்கும் என பல தரப்பட்ட பிரச்சனைகளை தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர். சமீபத்தில் கே.பி உட்பட 8 தமிழ் பிரமுகர்கள் தடுப்பு முகாமிற்குச் சென்றதாகவும் அங்கே அவர்கள் போராளிகளைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போர் உக்கிரமடைந்த இறுதி கால கட்டத்தில் புலிகள் இயக்கத்தில் கடைசிநேரத்தில் இணைக்கப்பட்ட சில தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமையே இவர்களுக்கு காட்டப்பட்டது. உண்மையான அல்லது பழைய போராளிகளைத் தடுத்துவைத்திருக்கும் இரகசிய முகாம்களை இதுவரை இராணுவம் யாருக்கும் காட்டியது இல்லை என்பதே உண்மையாகும்.உலகளாவிய ரீதியில் பல தமிழ் அமைப்புக்கள் இருந்தும் இவ் விடயத்தில் ஏன் எந்த அமைப்பும் தலையிடவில்லை? ஐ.சி.ஆர்.சி, மன்னிப்புச் சபை, மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புக்கள் முன் நாள் போராளிகளில் காட்டும் அக்கறையில் 100 ல் ஒரு பங்கையாவது தமிழ் அமைப்புகள் காட்டாதது ஏன்? விடுதலைக்காகப் போராடிய அமைப்பை தற்போது சர்வதேசம் ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ளது, அதற்காக அவ் அமைப்பில் உள்ளவர்கள் மனிதர்கள் இல்லை என்றாகிவிடுமா, அவர்கள் என்ன மிருகங்களா? அவர்களுக்கு மனித உரிமைகள் இல்லையா? இவ் விடயத்தில் தமிழ் அமைப்புகள் தலையிட ஏன் பின்னடிக்கின்றன. தேர்தல்கள் நடைபெறுகின்றது, பல புது அமைப்புகள் உருவாகின்றன, ஆனால் இவ் விடயம் குறித்து எவரும் பேச தயார் இல்லை. காரணம் தம் நிலையை தக்கவைக்கவே ஒவ்வொரு அமைப்பும் முனைகிறது.நீளமான நாக்குளி புழுவை, சோற்றில் புதைத்து வைத்துவிட்டு பின்னர் , போராளிகள் சாப்பிடும் வேளை அதனை எடுத்துக் காட்டி, """இது தான் தமிழீழ உணவு""" என்று சிங்கள இனவெறி இராணுவ சிப்பாய் கூறுகிறான், இப்படியான ஒரு கேவலமான நிலையில் எம் தமிழ் இளைஞர்கள் உள்ளனர். விடுதலைப் புலிகள் கைதுசெய்து வைத்திருந்த இராணுவ சிப்பாய்களை புலிகள் எவ்வாறு நடத்தினர் என்பதை அவர்கள் வாயிலாகவே நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் இன்றைய நிலை என்ன, உணர்வாளர்களே சற்று யோசியுங்கள்.

24 ஜூன் 2010

கரும் புலிகளை நினைவு கூறும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது.


அன்பான தமிழீழ-தமிழக மக்களே!எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகளாகச் செயற்பட்ட கரும்புலிகளை நினைவுகூரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அளவற்ற தியாகங்களைப் புரிந்து வளர்ந்த எமது விடுதலைப் போராட்டத்தில் தரை,கடல்,வான்,கரும்புலிகள் ஆற்றிய பங்கு அளப்பரியது. யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான தியாகங்களையும் சாதனைகளையும் இவர்கள் படைத்தார்கள். எமது போராட்டம் தேக்கமுற்ற நேரங்களிலெல்லாம் இந்த நெருப்பு மனிதர்கள் தடைகளைத் தகர்த்து எமது போராட்டத்தை வளர்த்தார்கள். காற்றுப்புக முடியாத இடங்களுக்குள் கரும்புலிகள் புகுந்து ஏதிரியை அழித்தார்கள். தமது சுயத்தை அழித்து எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது உயிரையே காணிக்கையாக்கிய அந்த அற்புத மனிதர்களின் தியாகத்தை வேறு எவராலும் ஈடுகட்ட முடியாது. "எமது இனத்தின் தற்காப்புக் கவசங்களாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்" என்ற எமது தேசியத்தலைவரின் கூற்றுக்கு அமைவாக அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.எதிர்வரும் யூலை ஐந்தாம் நாள் இந்த உன்னத மனிதர்களை நினைவுகூரும் "கரும்புலிகள் நாள் 2010" தழிழினத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் யூலை 5ம் நாள் கரும்புலிகள் நாளுக்குரிய சிறப்பு ஒலிபரப்பினை உலகம் முழுவதும் ஒலிபரப்ப திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. அன்பான தமிழ்மக்களே,கரும்புலிகள் பற்றிய சிறப்பு ஆக்கங்கள். கவிதை, சிறுகதை, நாடகம் உட்பட வானொலியில் ஒலிபரப்ப ஏற்றவாறு எவ்வகையான கலைப்படைப்பையும் நீங்கள் எழுதி அனுப்பலாம். எதிர்வரும் யூலை மூன்றாம் நாளுக்கு முன்பாக உங்கள் ஆக்கங்கள் புலிகளின் குரல் நிறுவனத்துக்குக் கிடைக்கத்தக்க வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்கலைப்படைப்புக்களை அனுப்ப: info@pulikalinkural.comநன்றி. புலிகளின் குரல் நிறுவனம்23.06.2010

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி அசின் கொழும்பு சென்றார்!


தமிழ் திரையுலகின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கொழும்பில் நடைபெற்ற பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான், தற்பொழுது தனது ‘றெடி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு மீண்டும் கொழும்பு சென்றுள்ளார்.
சல்மான் கானுடன் இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை அசின் கொழும்பு செல்லக்கூடாது என தென்னிந்திய திரைத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தும், தமிழ் மக்களையும், தமிழ் திரையுலகையும் மதிக்காது அசினும் கொழும்பு சென்றுள்ளார்.
‘அசின் போனால் அப்படியே போகட்டும்’ என தென்னிந்திய நடிகர் சங்க செயலர் ராதரவி எச்சரிக்கை செய்திருப்பது, அவரது திரைப்படங்களும் தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்படும் என்ற எச்சரிக்கையாகவே பார்க்க முடிகின்றது.
கொழும்பில் நடைபெற்ற பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கிரித்திக் றோசனின் கைட்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘றெடி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பை மொறீசியசில் நடத்த முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்த போதிலும், கொழும்பு சென்று திரும்பிய சல்மான் கான், சிறீலங்கா அரசு கொடுத்த வரவேற்பிலும், வேறு விடயங்களிலும் மயங்கி படப்பிடிப்பை மாற்றியுள்ளார்.

23 ஜூன் 2010

ஐ.நா.நிபுணர் குழு அமைப்பு,மகிந்த குழப்பம்!



ஐக்கிய நாடுகள் சபை நேற்று மாலை குழு அமைத்துவிட்டதாக அறிவித்தமையினாலும், ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வழங்குவதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்த பின்னர் தற்போது எழுத்து மூல நிபந்தனைகளை விதித்துள்ளமையினாலும் மஹிந்த கடும் கோபத்திற்குள்ளாகியுள்ளார்.
இதனால் இரவோடு இரவாகவே தனது மாளிகைக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களை அழைத்து மஹிந்த தனது கோபத்தை தெரியப்படுத்தியுள்ளதுடன் இரவிரவாக மந்திராலோசனையும் நடாத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் சலுகையினை நீடிக்கப்போவதென்று சொல்கின்றீர்கள். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதிக்கின்றது. இந்த மாற்றம் ஏன்? என பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அவர்களை மஹிந்தவும் சில மூத்த அமைச்சர்களும் குடைந்த வண்ணம் உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச குழு ஒன்றை அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பான் கி மூன் நியமித்த மூவர் கொண்ட குழு உறுப்பினர்களை கொண்ட நாடுகளுடன் உடனடியாக பேசுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

22 ஜூன் 2010

இராஜபக்ஷ நடத்தும் இன அழிப்பு திருமணங்கள்!


இலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே,
''தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் அக்கறையைப் பாரீர்!'' என புது தம்பட்டம் அடிக்கத் துவங்கியிருக்கிறார். அந்தத் திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை பன்னாட்டுப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிய, மறுவாழ்வுப் பணிகளுக்கான ஆணையர் பிரிகேடியர் சுதானந்தா ரணசிங்கே, ''மணமக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை ராணுவம் வழங்கும். இதுபோன்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும்'' என்றும் பெருமையாக முழங்கி இருக்கிறார்!
வெளியில் தெரிந்தவை இந்தத் திருமணங்கள்! யாருக்கும் தெரி யாமல் இலங்கையில் நடத்தப்படும் இனக்கலப்பு திருமணங்கள் குறித்து, சமீபத்தில் இலங்கையில் இருந்து நார்வே நாட்டுக்கு தப்பி வந்த தமிழர்கள் ஈழ உறவுகளிடம் நெஞ்சு நடுங்க விவரித்தனர். இதைத் தொடர்ந்து, ''தமிழ் இனத்தை படிப்படியாக அடையாளம் இழக்கச் செய்வதற்கான அடுத்த மெகா திட்டத்தில் இலங்கை அரசு இறங்கிவிட்டது!'' என்று பதற்றக் குரல்கள் கிளம்பத் துவங்கி யுள்ளன.
நார்வே தமிழ் மக்களவையின் தேசியப் பிரதிநிதியும், ஊடகத் துறைப் பொறுப்பாளருமான விஜய் அசோகன், ''தமிழர்கள் வாழும் பகுதிகளைக் கூறுகளாகப் பிரித்து தனித்தனி விதமாக சிங்கள அரசு இனவெறி காட்டி வருகிறது. யாழ்ப்பாணம் பகுதியில் போதை வஸ்துகளை வாரி இறைத்தும், சினிமா, உல்லாசம், ஆபாச நடனம் என கேளிக்கை கூத்துகளை நடத்தியும் ஈழத்தமிழர்களின் மூளையைமழுங்கடிக்கிறது சிங்கள அரசு. சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியான ஒரு தமிழ்ப் படத்துக்கு 'கட் அவுட்' வைத்து தமிழர்கள் பால் அபிஷேகம் நடத்தி இருக்கி றார்கள்! தமிழ்நாட்டு ரசிகர்களைப்போல், இந்த அளவுக்கு ஈழத் தமிழர்கள் ஒருபோதும் சினிமா பித்துப் பிடித்து கிடந்ததில்லை. அதேபோல், கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் எப்போதும் புகைச்சல் ஓயாதபடி மத துவேஷத்தைத் தூண்டிவிட்டு தமிழ் மக்களைத் துண்டாடி வருகிறது சிங்கள பேரினவாதம்.
இதில், உச்சபட்ச இன அழிப்புத் தந்திரமாகத்தான் வன்னிப் பகுதியில் கட்டாயக் கலப்புத் திருமணங்களின் மூலம் தன் குள்ளநரித்தனத்தை அரங்கேற்றி வருகிறது சிங்கள அரசு. அங்குள்ள தமிழர்களுக்கு வாழ்வாதாரமே விவசாயமும் மீன் பிடிப்பும்தான். வன்னி நிலப் பரப்பில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லிச் சொல்லியே தமிழர்களின் விவசாயத்தில் மண்ணை அள்ளிப்போட்ட ராணுவத் தரப்பு, அங்குள்ள மீன்பிடித் தளங்களையும் முழுக்க சிங்களவர்களுக்குக் கொடுத்துவிட்டது. ஒரு நாளைக்கு இங்கு பிடிக்கப் பட்ட மீன்கள் 10 லாரிகளில் கொழும்புவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வன்னி யின் வளங்கள் மொத்தமாக சிங்கள ஆட்களால் சுரண்டப் படுவதால் பிழைப்புக்கே வழியற்றுப் பிச்சை எடுக்கிற நிலையில் இருக்கிறார்கள் தமிழர்கள்.
இப்போது, வன்னிப் பகுதிகளில் ஒரு லட்சத்தை எட்டும் அளவுக்கு தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களில் விசாரணை என்கிற பெய ரில் பலரை சாகடித்தும், முகாம்களில் அடைத்தும் வக்கிர தாண்டவமாடியது சிங்கள அரசு. கிழடுதட்டிய ஆண்களும், எட்டு வயதுக்குட் பட்ட சிறுவர்களும் மட்டும் தான் தற்போது அங்கே இருக்கிறார்கள்! அங்குள்ள ஆயிரக்கணக்கான இளம் பெண்களுக்கு ஆண் துணையே இல்லை. ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்துக்கும் சிங்கள காடையர்கள்தான் காவலர்கள். தமிழ்ப் பெண் களிடம் நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் கொஞ்ச
நஞ்சமல்ல...
இந்த சூழலில்தான், சமீபகாலமாக ராணுவத்திலும், பாதுகாப்புப் பிரிவிலும் உள்ள சிங்கள இளைஞர்களைத் தமிழ்ப் பெண்களுக்கு மணம் முடித்து எங்குமே நிகழாத வக்கிரக் கொடூரத்தை ராஜபக்ஷே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் கொஞ்சமும் உடன்படாத நிலையில் இலவச உதவிகளைக் காட்டியும், மிரட்டியும் கட்டாயத் திருமணத்தை சிங்கள ராணுவம் நிறைவேற்றி வருகிறது. சிங்கள இளைஞர்கள் கடைசிக் காலம் வரை இந்தத் தமிழ்ப் பெண்களுடன் வாழ்வார்களா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. தமிழ்ப் பெண்களின் வயிற்றில் கருத்தரிக்கும் காலம் வரையோ, குழந்தை பிறக்கும் வரையோ வாழ்ந்துவிட்டு, பின்னர் நிர்க்கதியாக்கி ஓடிவிடக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இனவெறியின் உச்சகட்டமாக வன்னியில் ஒரு கலப்பினம் உருவாக்கும் திட்டத்தோடுதான் இத்தகைய நடவடிக்கைகளை ராஜபக்ஷே ஊக்கப்படுத்தி வருகிறார். அதேசமயம், இலங்கைக்கு வரும் பன்னாட்டுப் பிரதிநிதிகளிடம், 'கஷ்டப்படும் தமிழ்ப் பெண்களுக்கு சிங்கள இளைஞர்கள் மூலமாகவே மறுவாழ்வு கொடுக்கிறோம்' என தன் சதியையே சாதனை போல காட்டுகிறது சிங்கள அரசு. ஏ-9 பாதையில் கடுமையான கெடுபிடிகள் காட்டப்படுவதால், இத்தகைய சித்ரவதைகளில் இருந்து தப்பித்து வருவதும் தமிழ்ப் பெண்களுக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது!'' என ஆதங்கத்தோடு சொன்ன விஜய் அசோகன்,
''இதை பன்னாட்டு மனித நேய அமைப்புகள் உடனடியாகத் தடுக்க வேண்டும். தமிழக அரசியல் தலைவர்கள் இதன்மீது தீவிர கவனம் கொள்ளவேண்டும். இந்திய அரசின் பண உதவியில்தான் சிங்கள அரசு, தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டு வருகிறது. ராஜபக்ஷேயின் கலப்பினத் திருமணங்களுக்கு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், தமிழினம் என்பதே அங்குள்ள அரசு ஆவணங்களில் ஒருநாள் இல்லாமல்போய், இதுவரை இல்லாத கலப்பினம் உருவாகும். ராஜபக்ஷேயின் கனவின் இறுதிக் காட்சி வெற்றிகரமாக நிஜமாகிவிடும்!'' என ஆவேசமாக முடித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பேசினோம். ''உலகில் எத்தகைய சர்வாதிகாரிகளும் இத்தகைய கொடூரத்தில் ஈடுபட்ட தில்லை. தமிழ்ப் பெண்களைக் கட்டாயப்படுத்தி, யார் என்றே தெரியாத சிங்கள இளைஞர்களுக்கு கல்யாணம் செய்வது எத்தகைய அநியாயம்! தனக்கென தனி அடையாளங்களோடு சிறப்புடன் வாழ்ந்துவரும் தமிழினத்தை துடைத்து எடுக்க இப்படியும் ஒரு சதியா! வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை தொடர்ந்து நடத்தி வரும் இலங்கை அரசு, நிலையான ராணுவத் தளங்களையும் தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தி வருகிறது. அடுத்தகட்டமாக கலப்பின உருவாக்கத்தின் மூலமாகவும் தமிழினத்தையே வேரோடு அழித்துவிடத் துடிக்கிறது. இலங்கை அரசுக்கு எல்லாவிதத்திலும் துணையாக இருக்கிறது இந்திய அரசு. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா உள்ளிட்ட உலக அமைப்புகளும் இந்தக் கொடூரத்தை உடனடி யாகக் கண்டிக்க வேண்டும். ராஜபக்ஷேயின் இந்த அரக்கத்தனத்தை அகிலம் முழுக்க வெளிச்சம்போட்டு, தமிழ்ப் பெண்களின் விடிவுக்கு வழிவகுக்க வேண்டும்!'' என்று குமுறினார்.
யுத்தபூமியில் எதிரி நாட்டில் ஊடுருவும் படைகள், அந்நாட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களின் வயிற்றில் தங்கள் இனத்தை விதைத்துவிட்டுப் போகிற கொடுமைகளை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். ''யுத்தம் முடிந்தது. இப்போது அமைதி!'' என்று சொல்லிக் கொண்டே, 'வரலாற்று வக்கிரத்தை' அரங்கேற்றும் சிங்கள அரசை என்னதான் சொல்லுவது?

தமிழகத்தின் பொட்டு அம்மான் என அழைக்கப்படும் சிரஞ்சீவி மாஸ்ரர் கைதாகியதன் பின்னணி!


விடுதலைப்புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர்களில் முக்கிய நபரான சிரஞ்சீவி மாஸ்டர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டுவருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த விடயங்கள் தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜுனியர் விகடன் சஞ்சிகையில் வெளியான ஆக்கம் வருமாறு:-விழுப்புரம் தண்டவாள அதிர்வுகளே இன்னும் அடங்காத நிலையில் சந்திரகுமார், அருள் செல்வம், பாலா, செல்வம் என்கிற புனைப் பெயர்களைக்கொண்ட ‘சிரஞ்சீவி மாஸ்டரை’ வளைத்திருக்கிறது தமிழக உளவுத் துறை போலீஸ்!சிரஞ்சீவி மாஸ்டர், புலிகளின் உளவுத் துறையில் பொட்டு அம்மானின் அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 12 வருடங்களுக்கும் மேலாக மத்திய, மாநில உளவுத் துறைகளால் தேடப்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர், ஈழப் போரின் இறுதிக் காலத்தில் களத்தில் நின்றவர். கடைசிக்கட்ட நேரத்தில் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர், அதன் பிறகு என்ன ஆனார் என்பது தமிழீழ ஆர்வலர்களாலேயே நேற்று வரை யூகிக்க முடியாத விஷயம்.தமிழீழ ஆர்வலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, நம் தகவலையே முதல் செய்தியாகக் கேட்டு அதிர்ச்சியின் விளிம்புக்கே போனவர்கள், ”சிரஞ்சீவி மாஸ்டர், பொட்டு அம்மானின் பேரபிமானத்தைப் பெற்றவர். புலிகளின் தமிழகப் புலனாய்வுத் தலைவராக இருந்தார். இலங்கைக்கும் தமிழகத்துக்கும் அடிக்கடி விசிட் அடிப்பார். ஈழப் போர் தீவிரம் எடுத்த கால கட்டத்தில் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து அழைப்பு வர… உடனடியாகக் கிளம்பிப் போனார். போரின் உக்கிரம் மிகக் கடுமையானபோது, தமிழகத்துக்கு வந்து அதன் பாதிப்புகளை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்லி, தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது.ஆனால், இந்திய � இலங்கை அரசுகளின் தீவிரக் கண்காணிப்புகளைத் தாண்டி, அவரால் இங்கே வந்து சேர முடியவில்லை. அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில்… அவர் தமிழகத்தில் பிடிபட்டிருப்பதாகச் சொல்வது பெரிய விந்தைதான்!” என்கிறார்கள்.இன்னும் சிலரோ, ”திருகோணமலையில் உள்ள பன்குளம் பகுதியில் பிறந்த சிரஞ்சீவி, 91-ம் ஆண்டு இயக்கத்தின் நம்பகத்தைப் பெற்று யாழ்ப்பாணம் பகுதியில் தீவிர ஆயுதப் பயிற்சி எடுத்தார். அதன் பிறகு புலிகளின் உளவுப் பிரிவுக்கு வந்தார். 98-ம் வருடம் கண்ணன் என்கிற கண்ணப்பனும், சிரஞ்சீவியும் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அசம்பாவிதச் சம்பவங்களிலோ, ஆயுதக் கடத்தலிலோ ஈடுபடும் ‘அசைன்மென்ட்’ இவர்களுக்குக் கிடையாது. தமிழகத்தின் அரசியல் நிலைமைகளைக் கணித்துக் கொடுக்கும் பணி மட்டும்தான். அதைச் செவ்வனே செய்யக்கூடியவர் சிரஞ்சீவி. அதனாலேயே அவரை ‘தமிழ்நாட்டு பொட்டு அம்மான்’ என்பார்கள்.ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த சீரஞ்சீவி, இங்கு உள்ள அரசியல் நிலவரங்களை ஊன்றி ஸ்டடி செய்த பிறகு, இங்கு இருந்தே ஆயுதப் பரிவர்த்தனைக்கான பொறுப்பையும்ஏற்றார். அப்போதுதான் தமிழக போலீஸ் அவர் மீது கண் வைத்தது. அவரை மடக்கினால், புலிகளின் உளவு நெட்வொர்க்குகளைத் துல்லியமாகத் தெரிந்து கொண்டுவிடலாம் எனத் திட்டமிட்டு அவரை வளைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால், சாதுர்யமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.இலங்கைத் தமிழர் என சந்தேகிக்க முடியாத அளவுக்கு சென்னைத் தமிழிலும் சரளமாகப் பேசுவார். 2004-ல் அவர் மறுபடி சென்னைக்கு வந்து சென்றபோது, பல திசைகளிலும் ரூட் போட்டு அவரை வளைக்கத் துடித்தது போலீஸ். அவர் மீது எந்த வழக்குகளும் அப்போது இல்லை என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 2007-ல் சிவகரன் என்கிற போராளி வெடிமருந்து கடத்தியதாகப் பதிவான வழக்கில் சிரஞ்சீவி மாஸ்டர் பெயரும் சேர்க்கப்பட்டது. அப்போது போட்ட வழக்கு ஒன்றை வைத்தே அதன் பிறகு அவரை வெளிப்படையாக போலீஸ் தேடத் தொடங்கியது.தொண்டி வழியாக அவர் மீண்டும் சென்னைக்கு வரும் தகவலை அறிந்துகொண்ட உளவு போலீஸ், புலிகளின் அபிமானம் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அரசியல் புள்ளியை வளைத்து, அவர் மூலமாக சிரஞ்சீவியை வளைக்கத் திட்டமிட்டது. ஆனால், கண்ணப்பன் என்ற போராளி மட்டும் சிக்க, போலீஸின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எஸ்கேப் ஆனார் சிரஞ்சீவி.தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளை ஈழத்துக்கே அழைத்துச் சென்று… பிரபாகரன், பொட்டு அம்மான், தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் சிரஞ்சீவிதான். போர் உக்கிரமான காலத்திலேயே தமிழகத்து அரசியல் புள்ளி ஒருவரை ஈழத்துக்கு அழைத்துப்போய், குண்டு மழைகளுக்கு நடுவே வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டுவந்தார். கடைசிக் கட்ட ஈழப் போரில் பல்வேறு படை அணிகளாகப் பிரிந்து ஊடறுப்புத் தாக்குதல் நடத்தி வெளியேறியவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர் என எங்களுக்குத் தகவல் வந்ததே தவிர, தப்பித்த அவர் எங்கே இருக்கிறார் என்கிற விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்கள்.மேற்கொண்டு நாம் விசாரித்தபோது, ”ஒரு வாரத்துக்கு முன்னரே உளவுத்துறை போலீஸார் அவரை வளைத்துவிட்டதாகவும், புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து அவரிடம் துருவிக்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. கூடவே, தமிழக அரசியல் தலைவர்களின் புலித் தொடர்புகள் குறித்தும், அவர்களைச் சிக்கவைக்கும் விதமான தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம். விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணையின்போதே ‘புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்கலாம்’ எனச் சொன்ன போலீஸார், தற்போது சிரஞ்சீவியைச் சிக்கவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது!” என்று கூறுகிறார்கள் காவல் வட்டாரத்தின் அசைவுகளை அறிந்தவர்கள்.இன்னும் சில போலீஸார், ”இலங்கையில் போர் தொடங்கியபோது புலிகள் பலரும் தமிழகத்துக்குள் ஊடுருவினார்கள். சென்னை மடிப்பாக்கம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பரமேஸ்வரன் என்பவரும் போராளிகளும் தங்கி இருந்தது தெரிந்து அவர்களை வளைத்தோம். அப்போது சிரஞ்சீவி மாஸ்டர் குறித்து பரமேஸ்வரன் சொன்ன தகவல்கள் படு பயங்கரமானவை. அப்போதே,சிரஞ்சீவி குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டது எங்கள் துறை. போர்க்காலத்தில் அவர் ஈழத்தில் இருந்தார் என்ற தகவல் உறுதியானதாகத் தெரிகிறது. தற்போது சிக்கி இருக்கும் அவரிடம் பொட்டு அம்மான் குறித்து எங்கள் துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு லேசான புன்னகையை மட்டுமே சிரஞ்சீவி மாஸ்டர் பதிலாக்கியதாகவும் தெரிகிறது. ஈழத்தின் கடைசிக்கட்டப் போர்க் கொடூரங்களை மட்டும் மனம்விட்டுச் சொன்னவர், புலித் தலைவர்களின் நிலை குறித்த கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை!” என்றார்கள்.தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யான ஜாஃபர் சேட்டிடம், சிரஞ்சீவி கைது குறித்துக் கேட்டோம். ”விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவில் சிரஞ்சீவி மிக முக்கியமான ஆள். தீவிரமாகத் தேடப்பட்ட இவர், இலங்கைப் போருக்குப் பிறகு சந்திரகுமார் என்ற பெயரில் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு வெடி மருந்து கடத்தல் விவகாரத்தில் சிவா என்கிற சிவகரனுடன் சிரஞ்சீவி சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கு இருக்கிறது. மற்றபடி இலங்கைப் போருக்குப் பிறகு தமிழகம் வந்த சிரஞ்சீவி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர் மீது புதிதாக வழக்குகள் ஏதும் இல்லை. மற்றபடி மேற்கொண்டும் அவரிடம் விசாரித்து வருகிறோம்!” என்றவரிடம்,”விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பில் சிரஞ்சீவியைச் சிக்க வைக்க முயற்சிகள் நடப்ப தாகச் சொல்லப்படுகிறதே?” எனக் கேட்டோம். ”கிடையவே கிடையாது. விழுப்புரம் தண்ட வாளத் தகர்ப்பு விவகாரத்தில் சிரஞ்சீவிக்கு எவ்விதச் சம்பந்த மும் கிடையாது. தண்டவாளத் தகர்ப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக் கிறோம்!” என்றார்.கை மற்றும் கால்களில் காயங்களோடு போலீஸ் விசாரணையில் இருக்கும் சிரஞ்சீவி புலிகள் குறித்தும்… குறிப்பாக பொட்டு அம்மான் குறித்தும் என்ன சொல்லப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி!‘பிரபாகரன் இருக்கிறாரா?’ என்ற உலகளாவிய கேள்விக்கும் அவரிடம்… உறுதியான பதில் இருக்கலாம்!இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 ஜூன் 2010

புலம்பெயர் தேசங்களில் இருந்து சென்று அரச தரப்பை சந்தித்த கே.பியின் ஆட்கள் யார்?



சிறீலங்கா அரசின் உதவியாளராக செயற்பட்டுவரும் செல்வராஜா பத்மநாதனின் ஏற்பாட்டின் அடிப்படையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்று சிறீலங்கா அரசுக்கு தகவல்களை வழங்கி விருந்துண்டு வந்த குழுவினர் யார் என்பது தொடர்பில் பல விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்கா அரசுடன் செல்வராஜா பத்மநாதன் இணைந்து செயற்பட்டுவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரின் ஏற்பாட்டின் அடிப்படையில் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் இருந்து 9 பேர் அடங்கிய குழு ஒன்று சிறீலங்கா சென்று சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரீஸ் ஆகியோரை சந்தித்து வந்துள்ளனர்.
சிறீலங்கா சென்ற இந்த குழுவினர் யாழ் மற்றும் வன்னிப் பகுதிகளுக்கு சென்று அந்த மாவட்டங்களின் இராணுவ கட்டளை அதிகாரிகளையும் சந்தித்துள்ளதுடன், சிறிலங்கா அரசுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்கள் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளதாக பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றவாளி என அனைத்துலக சமூகம் புறம்தள்ள முயற்சிக்கும் கோத்தபாயாவுடன் விருந்தில் கலந்துகொண்ட இந்த குழுவின் செயற்பாட்டின் பின்னனியில் யாழ் மற்றும் கொழும்பில் இருந்து செயற்படும் பல ஊடகங்களின் பங்களிப்புக்களும் இருக்கலாம் என்ற அச்சங்களும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளது.

பான் கீ மூன் மூவர் கொண்ட நிபுணர் குழுவை இன்று அறிவிக்கிறார்!



இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் முகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் மூவரைக் கொண்ட நிபுணர் குழுவை இன்று அறிவிக்கவுள்ளார்.
பெரும்பாலும் இந்த குழுவில் இந்தோனேசிய இராஜதந்திரி ஒருவரும், ஆஸ்திரிய இராஜதந்திரி ஒருவரும் உள்ளடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குழுவின் சரியான வேலைத்திட்டங்கள் கடமைகள் என்னவென்பது இதுவரையில் வெளியாகவில்லை. எனினும், இராஜதந்திர தரப்புக்களின் தகவல் படி, இந்த குழு, போர்க்குற்ற விசாரணைகளுக்கு முன்னோடியாக அமைக்கப்படும் குழுவாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பின் படி, சுமார் 7000 பொது மக்கள் முதல் நான்கு மாதங்களில் கொல்லப்பட்டனர்.
அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக் கொண்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த தொகை மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு கடந்தவாரம் விஜயம் செய்திருந்த பான் கீ மூனின் அரசியல் துறை உதவி செயலாளர் லின் பெஸ்கோ குறித்த நிபுணர்குழு இலங்கை அரசாங்கத்துக்கும் உதவக்கூடியதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
எனினும், இதனை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த குழுவுடன் தாம் எந்த ஒரு தொடர்பையும் பேணப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிபுணர்குழு அமைப்பு தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று அவசர கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஏதிலிகள் தினம் நேற்றாகும்.


2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா.சபை ஜூன் 20ஆந் திகதியை சர்வதேச அகதிகள் தினமாகப் பிரகடனப்படுத்தியது. இது 2001 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் பல நாடுகளிலும் அகதிகள் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. முழு உலகிலும் மொத்தம் 40 கோடி மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 10 கோடிமக்கள் அகதிகளாக வாழ்வதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அகதிகள் தின நினைவுச் சின்னமாக வீடு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பொருத்தவரை, குறிப்பாக வடபகுதியில் 2,93,000இற்கும் மேற்பட்ட அகதிகள் வாழ்கிறார்கள். மெனிக் பாம், செட்டிக்குளம் போன்ற பகுதிகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 33,000 பேர்வரை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரச அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இது தவிர எமது அயல் நாடான இந்தியாவிலும் பெருந்தொகையான அகதிகள் உள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை அகதி வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இவர்களுக்காக 1117 சிறிய முகாம்கள் உள்ளன. இவை தவிர கேரளாவிலும் 700 குடும்பங்கள் வரை அகதிகளாக வாழ்கின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 ஜூன் 2010

அடாவடியில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் மீது தமிழ் மாணவர்கள் தாக்குதல்.


கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள தமிழ் மாணவர்களிடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெறும் யுத்தக் கொண்டாட்டங்களுக்கு பணம் கொடுக்கும்படியும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதனை கொண்டாடப் போவதாகவும் குடிபோதையில் சென்ற சிரேஸ்ட சிங்கள மாணவர்கள் இளைய தமிழ் மாணவர்களிடம் பணம் கேட்டதாகவும் அதில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பில் முடிவுற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இதனை அறிந்த சிரேஸ்ட தமிழ் மாணவர்கள் இரவோடு இரவாகச் சென்று சிங்கள மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் துணை வேந்தர் உள்ளிட்டவர்கள் பல்கலைக்கழகத்தில் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருணாநிதியோ ஜெயலலிதாவோ தமிழுக்காக எதையும் செய்யவில்லை.


உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகின்றன.
சென்னையில் 5 வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
5 வழக்கறிஞர்களையும் இன்று மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
’’இந்த போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழன் என்ற முறையில் ஆதரவு தெரிவிக்கிறேன்.
இந்த போராட்டம் வழக்கறிஞர்கள் போராட்டமாக அல்லாமல் மக்கள் போராட்டமாக மாறவேண்டும்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’2006 ம் ஆண்டிலெயே மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்ற உத்தரவு வழங்கிவிட்டது. அந்த உத்தரவு தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் இன்னமும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது வேதனை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதுமட்டுமல்ல, தமிழையும், தமிழக மக்களையும் உயர்த்த இவர்கள் இருவரும் எதுவும் செய்யவில்லை.பெயர்ப்பலைகைகளை தமிழில் மாற்ற எடுத்து வரும் நடவடிக்கை எல்லாம் வெறும் கண் துடைப்புதான்.
செம்மொழி மாநாட்டிற்கு இந்தியாவின் முதல் குடிமகள் வருகிறார். அவர் மூலமாக மாநாட்டிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாநாட்டிலேயே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி அளிக்கப்படவேண்டும். அதற்காக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

கல்லடி சாந்தி திரையரங்கிற்கு இனந்தெரியாதோர் தீ வைப்பு!


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள பிரபல சினிமா திரையரங்குக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கல்லடி சாந்தி திரையரங்குக்கே இவ்வாறு தீயிடப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் இன்று அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுகின்றது.இலங்கையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட்ட விருது வழங்கும் விழாவில் இந்நிய திரைப்பட தமிழ் நடிகர்கள் கலந்துக் கொள்ளாததைக் கண்டித்து துண்டு பிரசுரம் 'சுதந்திர இலங்கையின் தமிழர்கள்" என்ற அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்து.இந்த பிரசுரத்தில் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்திய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு குறிப்பிடப்படடுள்ளது.இந்நிலையில் கல்லடியில் உள்ள சாந்தி தியட்டருக்கு இனந் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

17 ஜூன் 2010

சிதம்பரத்தின் கூற்றுக்கு கெஹலிய மறுப்பு.


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதற்கான நிதி அவர்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் என்ற இந்திய அரசாங்கத்தின் கூற்றை இலங்கை மறுத்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான நிதி மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அரசினூடாகவே நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். "இந்தியா இலங்கைக்குப் பல வழிகளிலும் உதவி வருகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு 50ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை அமைச்சர் சிதம்பரம் முன்வைத்தார். அதன்போதே, வீடமைப்பதற்கான நிதி மக்களிடம் நேரடியாக வழங்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிதி நேரடியாக வழங்கப்படும் எனக் கூற முடியாது. நாட்டின் இறைமையை அது பாதிப்பதால் அரசாங்கத்தினூடாகவே நிதி வழங்கப்பட வேண்டும்" என கெஹெலிய மேலும் தெரிவித்தார்.

16 ஜூன் 2010

பார்வதி அம்மா யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்!


தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை மோசமானதையடுத்தே மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலியான இரத்தத்தை கண்டு மக்கள் அஞ்சுகிறார்கள்.-மாயா அருள்பிரகாசம்.


இலங்கைத் தமிழ்ப் பெண்ணான மாயா அருள்பிரகாசம், பாப் இசை உலகில் முன்னணிப் பாடகராகத் திகழ்கிறார். இவர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல முறை கூறிய கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. தற்போது வெளியான அல்பமான 'Born Free' இதேபோல சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.இந்த மாத ஆரம்பத்தில் வெளியான MIA இன் 'Born Free' வீடியோவை சில இணையங்கள் நிராகரித்தமை தெரிந்ததே. அந்த வீடியோவில் வெளிப்படையான வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும், பாடகி அந்த வீடியோ முழுதும் நெருக்கடி நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்துத் தனது கருத்தை வெளியிட்டுள்ள MIA, அதில் காண்பிக்கப்பட்டது போலியான இரத்தம் மற்றும் ஒரு நடிப்பு. ஆனால் மக்கள் உண்மையான படுகொலை வீடியோக்களைவிட இதற்குக் கோபப்படுகிறார்கள் என தி கார்டியன் பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் வீடியோவைக் கருத்தில் கொண்டே MIA இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேற்படி படுகொலை வீடியோ குறித்து தாம் ஆறு மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் எழுதியும் கூட அதைப் பற்றி ஒருவருமே பேசவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், எனவேதான் தாமும் ரோமெய்னும் சேர்ந்து ஒரு வீடியோவை உருவாக்கியதாகவும் அவர் மேற்கொண்டு கூறியுள்ளார்.மேலும், இலங்கைப் போர் நிறைவடைந்து சில மாதங்களின் பின்னர், இலங்கைக் கடற்கரையை உலகின் மிகச்சிறந்த உல்லாசப் பயண இடமாக தி நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது. இதற்கு எதிராகவும் MIA குரல்கொடுத்தது தெரிந்ததே. இலங்கைக் கடற்கரையில் 3 லட்சம் மக்கள் குண்டுபோட்டு கொல்லப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் அக்கடற்கரையை உலகின் முதற்தர இடமென குறிப்பிட்ட போது... உல்லாசப்பயணத்துறை அரசியலுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும்" என அவர் வாதாடுகிறார்.

15 ஜூன் 2010

வவுனியாவில் இராணுவ வாகனம் மோதி தாயும் மகனும் பலி!


வவுனியா வைத்தியசாலைக்கு முன்பு இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலியாகி உள்ளனர்.மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தாயும், அவரது 7 வயது மகனும் பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டி ஒன்று மோதியதால் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சைக்கிளில் சென்ற 35 வயதுடைய பிரேமளாதேவி சிவநேசன், அவரது 7 வயது மகனாகிய சிவநேசன் சஞ்சயன் ஆகியோரே இவ் விபத்தில் பலியாகி உள்ளனர்.இராணுவ ட்ரக் வண்டியே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும்,பேரூந்தே மோதியதாக படையினர் தெரிவித்ததாகவும் எனினும் இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கொண்டு சென்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டவாளர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்.-பழ.நெடுமாறன்.


மதுரை ஒத்தக்கடையில் நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டுவரவேண்டும் என்று 6 வழக்கறிஞர்கள் 8வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரை வழக்கறிஞர்கள் 6 பேர் சாகும்வரை உண்ணா நோன்பு போராட்டத்தை கடந்த 8 நாட்களாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மதுரை வழக்கறிஞர்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உண்ணாநோன்புப் போரில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களில் சிலரின் உடல் நிலை சீர்கெட்டு இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் தமிழக அரசு கொஞ்சமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இது தொடர்பாக மத்திய அரசு எத்தகைய முடிவும் எடுக்காமல் இத்தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. தமிழக அரசும் ஒப்புக்காக இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பிவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது.
ஆனால் தமிழகத்திற்குச் சட்டமன்ற மேலவை அமைக்கப்படவேண்டும் என்றத் தீர்மானத்தை சில மாதங்களுக்கு முன்னால் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய கையோடு முதலமைச்சர் தில்லிக்குச் சென்று அதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறார். அதில் காட்டிய வேகத்தை ஏன் இந்த பிரச்சினையில் காட்டாமல் நான்காண்டு காலமாகக் கடத்திக்கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு
மட்டும் புரிந்த ரகசியமாகும்.
மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்கும்போது அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் மதுரை வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
உடனடியாக முதலமைச்சரோ அல்லது சட்ட அமைச்சரோ தில்லிக்குச் சென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனே பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் வழக்கறிஞர்களின் போராட்டம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் கூடிய மக்கள் போராட்டமாக மாறும்’’என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிரான ஐந்தாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்த பயணத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைகும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த புதிய ஒப்பந்தங்களை கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வரும் 18ம் தேதி தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள் நடத்துகிறது. இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், ‘’ஈழத் தமிழர்களுக்கெதிரான ஐந்தாம் கட்டப்போரை இலங்கையும், இந்தியாவும் புதிய முறையில் தொடங்கியுள்ளன என்பதற்கான அடையாளம் தான் மன்மோகன் சிங் ராஜபக்சே இடையிலான உடன்பாடுகள்.
இந்தியாவும், இலங்கையும் போர்படைகளைப் பரிமாற்றிக் கொள்ளவும் சிங்களப் படையினர்க்கு இந்தியா உயர்தரப் பயிற்சி அளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்களக் காவல்துறையில் புதிதாக சேர்க்கப்படும் ஆட்களுக்கு இந்தியாவில் உயர்தரப் பயிற்சி அளிக்கப்படும். இந்தியா தனது செயற்கைக் கோள் தகவல் மையத்தை இலங்கையில் நிறுவும்.
பலாலி விமானப் படைத்தளத்தை மேலும் வலுப்படுத்தித் தர இந்தியா ஒப்புக் கொண்டள்ளது.
இத்தனை போர்த் தயாரிப்புகளும் எந்தப் பகை நாட்டிற்கு எதிராக? இலங்கையில் இந்தியாவும் சிங்கள அரசம் ஈழத் தமிழர்களைத்தாம் ஒரே பகை சக்தியாகக் கருதுகின்றன.
வடக்கு, கிழக்கு மாநிலங்கள் முழுவதையும் பல்லாயிரக்கணக்கான படை முகாம்கள் சூழ்ந்துள்ளன. சிங்களப் படையாளுக்குத் தெரியாமல் ஒரு தமிழர் சிறுநீர் கழிக்கக் கூட வெளியே போக முடியாது.
தமிழர்களின் வீடுகளையும் விளைநிலங்களையும் சிங்களர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதன்பிறகும் ஏன் புதிய போர்த் தயாரிப்புகள்? ஈழத் தமிழர்களை முற்றிலும் சிதைத்து உதிரிகளாக மாற்றுவதற்காகவே இந்தத் தயாரிப்பு.
இந்தியா தனது துணைத் தூதரகங்களை யாழ்ப்பாணத்திலும் அம்பன்தோட்டாவிலும் திறக்க உடன்பாடு போட்டுள்ளது. அந்தச் சுண்டைக்காய் நாட்டிற்குக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் போதாதா? தமிழர் தாயகப் பகுதிகளில் தூதரகப் பெயரில் படைசார் உளவுப் பிரிவுகளை நிறுத்துவது தான் இந்தியாவின் நோக்கம்.
வடக்கில் வசந்தம் என்ற பெயரில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களர் வேளாண் பண்ணைகள் அமைக்கும் திட்டத்தை இந்தியா, ஏற்கெனவே இலங்கைக்கு வழங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இப்போது போடப்பட்டுள்ளது.
போர் விதவைகளின் மறுவாழ்வுக்கு உதவுவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இத்திட்டம் சிங்களப் படையாட்களின் மனைவிமார்களுக்கு உதவிடத்தானே தவிர, போரால் விதவையான தமிழ்ப் பெண்களுக்கு உதவிட அல்ல.
தமிழகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடிய ஆபத்து உள்ளது.
பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற பெயரில் சிங்களப் பண்பாட்டையும் புத்தமதத்தையும் ஈழத்தில் திணிப்பதும் சிங்களக் குடியேற்றங்களை அங்கு அதிகப்படுத்துவதும் தான் நடக்கும்.
எனவே இந்திய அரசம் இலங்கை அரசம் போட்டுள்ள ஒப்பந்தங்கள் ஒவ்வொரு தமிழரையும் சிங்கள இராணுவக் கண்காணிப்பின் கீழ்வைத்து, உரிமைக்குக் குரல் கொடுப்போரை நசுக்கவே பயன்படும்.
இந்த ஒப்பந்தங்களை நீக்க வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 18.06.2010 வௌ்ளிக்கிழமை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீபா குறித்த விமர்சனங்கள் வெறும் அச்ச மனோபாவத்தால் ஏற்பட்டவை என்கிறார் கெஹலிய.


'சீபா' தொடர்பாக இலங்கைக்குள் அச்ச மனோபாவம் ஏற்பட்டுள்ளது. அதனால் சீபா பற்றி எதிர்ப்பு தெரிவிப்போர் அது என்னவென்று அறியாதவர்களே என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். 'சீபா' என்ற பரந்துபட்ட பொருளாதார பங்குடைமை உடன்பாடு தொடர்பான எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் வெறுமனே அச்ச மனோபாவத்தில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் அண்மையில் இந்தியா சென்ற தூதுக் குழுவில் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் இடம்பெற்றிருந்தார். இணையத்தளமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில், "உத்தேச உடன்படிக்கை இந்தியாவுடன் தற்போது அமுலில் உள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் அபிவிருத்தி செய்வதாக அமையும். இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இலங்கை 10 வருடங்களுக்கு முன் செய்து கொண்டது. எனினும் காலம் செல்லச் செல்ல உடன்படிக்கையை மேலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களும் இடைஞ்சல்களும் இருப்பதை இரு தரப்பினரும் உணர்ந்தனர். 10 வருடஇடைவெளி, அதனை காலம் கடந்த ஒன்றாகக் கருத வைத்து விட்டது.சீபாவுக்கு எதிரான விமர்சனங்கள் அடிப்படையற்றவை. எவ்வாறான குறைகள் இருந்திருந்தாலும் அவை அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அதில் குறை இருந்தால், எவரும் அதில் கைச்சாத்திட்டிருக்க மாட்டார்கள்.பொருளாதார கூட்டுறவுக்கான இரு தரப்பு உடன்படிக்கைகள் மூலம் சாதகங்களைப் பெறும் நோக்கிலேயே நாடுகள் இவற்றில் கைச்சாத்திடுகின்றன. அது எப்போதுமே ஒரு தரப்புக்கு மட்டும் சார்பாக அமையாது. விட்டுக் கொடுக்கும் கொள்கையுடனேயே அமையும். இரு தரப்பு உடன்படிக்கைகள் தொடர்பான இந்த பொதுவான நிலையை, சீபாவை எதிர்ப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்"என்றார்.

14 ஜூன் 2010

விசுவமடுவில் பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்கள சிப்பாய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நான்கு இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நீதவான் சிவகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்;தார்கள். இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந் ஆறு இராணுவத்தினரோடு 30 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியபோது, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும், சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்த ஏனைய சாட்சிகளும் எதிரிகளை அடையாளம் காட்டியுள்ளனர். இதனையடுத்து அடையாளம் காணப்பட்ட 4 பேர் மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சேகுவராவின் பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது!


இடது சாரிப் புரட்சித் தலைவர்களுள் ஒருவரான செகுவராவின் என்பத்தியிரண்டாவது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி பிறந்த இவர், 1959இல் கியூபாவை மீட்டவர் என்ற வகையில் போற்றப்படுகின்றார்.பிடரல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட இவர், இடது சாரிக் கருத்துக்களால் கவரப்பட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயல்படுவதில் தீவிரம் காட்டியவராவார். இளைஞர்கள் மத்தியில் இவர் பெரிதும் போற்றப்பட்ட ஒருவர். இவர் இளைஞராக இருந்த காலத்தில் ஆர்ஜென்டினாவில் உதைப்பந்தாட்டம் மற்றும் றக்பி என்பவற்றில் பிரபலம் பெற்றிருந்தார்.1971இல் இலங்கையில் ஏற்பட்ட இளைஞர் புரட்சியின் போது, இவரது பெயர் இலங்கையில் மிகப் பிரபலம் பெற்றிருந்தது. புரட்சிக் கருத்துக்களை அல்லது ஏகாதிபத்திய எதிர்கருத்துக்களைக் கொண்டோர், அக்காலப் பகுதியில் இலங்கையில் 'சேகுவரா' என்று அழைக்கப்படும் அளவு இலங்கையில் இவரது பெயர் பிரபலம் பெற்றிருந்தது.

கிழக்கில் ஆழிப்பேரலை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது!



எதிர்வரும் காலங்களில் கிழக்கில் ஆழிப் பேரலை அனர்த்தம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக பேராசிரியர் வில்பட் கெஹல்பன்னல தெரிவித்துள்ளார்.
நிக்கோபர் அந்தமான் தீவுகளுக்கு இடையிலான இந்து சமுத்திர நிலத்தட்டில் விலகல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் 8 முதல் 8.5 ரிச்டர் அளவிலான நில நடுக்கங்கள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நில அதிர்வு ஏற்பட்டால் அது இலங்கையின் கிழக்கு கரைப் பகுதியில் அனர்த்தங்களை ஏற்படுத்தக் கூடுமென சிரேஸ்ட பூவியியல் பேராசிரியர் கெஹல்பன்னல தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நிலஅதிர்வு ஏற்பட்ட பிரதேசத்தில் பாரிய நில அதிர்வு ஏற்படும் என தாம் ஏற்கனவே எதிர்வு கூறியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஜூன் 2010

சிம் கார்ட்டை தூக்கி வீசிய நாம் தமிழர் அமைப்பினர்.


ஈழத்தமிழர்களை ஈவுஇரக்கமின்றி கொன்று குவித்த ராஜபக்சேவுடன் வணிக ஒப்பந்தம் செய்துகொண்ட ஏர்டெல் நிறுவனத்தின் சிம்கார்டுகளை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று தூக்கி எறிந்துள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்.
கரூரைச்சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன், கோவையைச்சேர்ந்த ஹரிராம், திருப்பூரைச்சேர்ந்த ரகுபதி ஆகிய மூன்று நாம் தமிழர் கட்சியினரும் சிம் கார்டை தூக்கி எறிந்துள்ளனர்.
நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’பிக்கி வர்த்தக அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது.
ஏர்டெல் நிறுவனத்துடன் இலங்கை அரசு கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் – கொழும்பிலிருந்து புத்தளம் வரை – செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்போது 12இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் முதன்மையான செல் பேசி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவரும் ஏர்டெல்லிற்கு 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில்1.25 கோடி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
தமிழனைக் கொல்லும் அரசுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழனோடு வணிகமும் செய்யும் மனிதாபிமானமற்ற ஏர்டெல் நிறுவனம், ஈழத் தமிழினத்தை அழித்த இலங்கையின் இனப் படுகொலைப் போரில் அந்நாட்டிற்கு உதவியதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது.
அந்த உதவிக்கு கைமாறாகத்தான் அங்கு செல்பேசி சேவை நடத்த அனுமதி பெற்றதென்றும் கூறுகின்றனர். டெல்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஏர்டெல் செல்போன் நிறுவனம் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாகத்தெரிகின்றது.
ஆக, ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல், வெறும் இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது மட்டுமின்றி, தமிழின எதிர்ப்பில் ஆழமாக வேரூன்றிய நிறுவனமாக ஏர்டெல் செயல்பட்டு வருகிறது.
எனவே ஏர்டெல் நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்’’ என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் முதற்கட்டமாக மூன்று பேர் ஏர்டெல் சிம்கார்டை தூக்கி வீசியுள்ளனர்.

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் தேவை.-ஐரோப்பிய ஒன்றியம்.




சிறிலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அது தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் அமைக்கவுள்ள ஆலோசனைக்குழுவுக்கு தாம் முழு ஆதரவுகளை வழங்க உள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விடுத்துள்ள அறிக்கையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளன.
ஸ்பெயின், பிரான்ஸ், சுவிற்சலாந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் கூட்டாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலமைப்பொறுப்பை தற்போது ஸ்பெயின் கொண்டுள்ளது.
சிறீலங்கா மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் பிரான்ஸ் மிகவும் தீவிரமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையே காட்டுகின்றது.
ஐ.நாவின் செயலாளர் நாயகம் ஆலோசனைக்குழு அமைக்கும் திட்டத்தை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஜெனீவாவில் அழுத்தமாக விடுத்துள்ள அறிக்கை சிறிலங்கா அரசுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

12 ஜூன் 2010

மகிந்தவைக் களங்கப்படுத்தவே என் மீதான குற்றச்சாட்டு என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.


அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், அந்நாட்டு நல்வாழ்வுத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வந்திருந்தார்.
சென்னையில் 1986ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தா தனது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய ராஜபக்சேவுடன் வெள்ளிக்கிழமை அவரும் சென்று விட்டார்.
இந்தியாவில் இருந்தவரை தன் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாத டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சென்றவுடன் ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறார்.
இந்த வகையில் தமிழகத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, 1986ல் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், எனக்கு நேரடியாக தொடர்பு இல்லை. துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. எல்லோரும் போய்விட்ட பின்னால்தான் நான் வந்தேன். காவல் அதிகாரிகள் ஸ்ரீபால், தேவாரம் போன்றவர்கள் வந்தார்கள்.
1987ல் செய்துக்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி எனக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
தீவிரவார நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களும், பல்வேறு வழங்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னால் இலங்கை அரசு அவர்களின் குற்றங்களை மன்னிக்கலாம் என்று பிரிவு 2.11 கூறுகிறது. இதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம் என்று கூறப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய பயணத்தை கொச்சை படுத்துவதற்காக, என் மீதான குற்றச்சாட்டுக்கான சர்ச்சை எழுப்பப்படுகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்றும், முதல்வர் கருணாநிதி நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா இப்படி கூறினாலும், 1986ல் நடந்த சம்பவம் உண்மைதான் என்று அப்போதைய காவல்துறை அதிகாரிகள் உறுதிபட கூறியுள்ளனர். இதற்கிடையில் டக்ளஸ் தேவானந்தா மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நித்தியானந்தா சிறையிலிருந்து வெளியே வந்தார்.


52 நாள் சிறைவாசதத்துக்குப் பின்னர் வெளியே வந்தார் நித்யானந்தா.
நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இதையடுத்து அவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது.
மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் 50 நாள் தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை, பெங்களூர் சிஐடி போலீசார் இமாசலபிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் ராம்நகரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
நித்யானந்தாவை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்து 11.06.2010 அன்று தீர்ப்பு கூறப்பட்டது. நித்யானந்தாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி, நீதிபதி சுபாஷ் ஆதி உத்தரவிட்டார்.
இதையடுத்து 52 நாட்களாக ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நித்யானந்தா இன்று வெளியே வந்தார்.

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருவிழா ஆரம்பமாகியது.







ஊர்காவற்றுறை புளியங்கூடல் செருத்தனைப்பதி சிறிமகாமாரி அம்பாள்தேவஷ்தான வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று(11.06.2010)ஆரம்பமாகியது,தொடர்ந்து பதினொரு நாட்கள் நடைபெறும் இவ் உற்சபத்தில்8ம் நாள் வேட்டைத்திருவிழாவும்,9ம் நாள் தேர்த்திருவிழாவும்,10ம் நாள்தீர்த்தோற்சபமும்,11ம் நாள் பூங்காவனமும் நடைபெற்று கொடி இறக்கத்துடன்திருவிழா நிறைவுக்கு வரும்,அதனை தொடர்ந்து 12ம் நாள் வைரவர் மடைஇடம்பெறும்,திருவிழா நிறைவுற்று 8ம் நாள் எட்டாம் மடை வெகுசிறப்பாகநடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் புகையிரதப் பாதை குண்டுவைத்து தகர்ப்பு,ப.சிதம்பரம்தான் இலக்கா?


தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

விழுப்புரம் பொலிஸ் டி.ஐ.ஜி. மாசானமுத்து, ரயில்வே பொலிஸ் டி.ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், மாவட்ட பொலிஸ் சூப்பிரண்ட் பகலவன் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினரும் அங்கு சென்றனர்.

பொலிஸ் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, சக்தி வாய்ந்த குண்டு வைத்து ரயில் தண்ட வாளம் தகர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ரயில் தண்டவாளம் சுமார் 3 1/2 அடி நீளத்துக்குத் துண்டாகி தூள், தூளாக சிதறி இருந்தது. குண்டு வெடித்த வேகத்தில் அந்த பகுதி மின் இணைப்பு கம்பிகளும் சேதமடைந்தன. தண்டவாளம் சேதமடைந்திருந்த இடத்தில் 3 அடி ஆழத்துக்குப் பள்ளமும் ஏற்பட்டிருந்தது.

நாசவேலைக்குப் பயன்படுத்திய குண்டு சக்தி வாய்ந்த வெடி பொருட்களால் தயாரிக்கப்பட்டிருந்தது. டி.என்.டி. வெடி பொருள் கலவையால் குண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த வெடி குண்டு இயக்கப்பட்ட விதம் குறித்து பொலிசார் ஆய்வு செய்தனர்.

அப்போது மின் இணைப்பு கொடுத்து குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் வயல் உள்ளது. அந்த வயலில் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச உதவும் மோட்டர் உள்ளது.

அந்த மின் மோட்டரில் இருந்து மின் இணைப்பைப் பெற்று, மர்ம மனிதர்கள் குண்டை வெடிக்க வைத்துள்ளனர்.

சென்னையில் இருந்து சென்ற தென்னக ரெயில்வே குழு தண்டவாளத்தை சீரமைத்தது. இதையடுத்து சுமார் 6 மணி நேரம் கழித்து அந்த வழித்தடத்தில் மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

சிதம்பரத்துக்கு வைக்கப்பட்ட குறியா?

மத்திய மந்திரி ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று மாலையில் அம்பேத்கார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அவரது பாதுகாப்புக்காக இரவு 9.30 மணிக்கே கமாண்டோ படையினர் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து விட்டனர்.

ஆனால் டில்லியில் இருந்து ப.சிதம்பரம் வந்த விமானம் காலதாமதமாக இரவு 10.50 மணிக்குதான் சென்னை வந்தது. இதனால் ப.சிதம்பரம் மலைக்கோட்டை ரெயிலில் செல்ல முடியவில்லை. இரவில் நுங்கம்பாக்கம் வீட்டில் தங்கினார்.

ப.சிதம்பரம் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த மலைக்கோட்டை ரெயிலும் இரவு 1.30 மணியளவில்தான் குண்டு வெடித்த இடத்தை கடந்து செல்லும். எனவே ப.சிதம்பரத்துக்கு குறிவைக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

11 ஜூன் 2010

பார்வதி அம்மா மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம்,ஆனால் அரசியல்வாதிகள் சந்திக்கக் கூடாதாம்!


தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் அவரது மகளின் வீட்டில் தங்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற வேண்டுமானால், மருத்துவமனையில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருந்தது. இதன் பின்னர் பார்வதி அம்மாள் சென்னை வராமல் இலங்கை சென்று விட்டார். அவர் தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பது தெரிய வந்தது. எனவே நிபந்தனைகளை தளர்த்தலாமா என்று கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. அதற்கு பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கியிருக்க ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள புதிய கடிதம் ஒன்றில், பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கலாம். நண்பர்கள், உறவினர்கள் சந்திக்கலாம். ஆனால் அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சந்திக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பார்வதி அம்மாள் நிலை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா காட்டிக்கொடுக்க முனைந்தால்,அவரையும் கொன்று நானும் தற்கொலை செய்வேன்-மேர்வின்.



பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தரப்பு முக்கியஸ்தர்களைக் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் சரத் பொன்சேகா இறங்கினால் அவரைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்யப் போவதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற சரத் பொன்சேகாவிற்கு எதிரான ஆரப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
சர்வதேச நீதிமன்றத்தில் எமது நாட்டைக் காத்த வீரர்களை காட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் இரகசியமான முறையில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய மேர்வின் சில்வா இதனைப் பார்த்துக் கொண்டு தாம் சும்மா இருக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
கமல் குணரட்ன, சவேந்திர சில்வா, ஜகத் டயஸ் உள்ளிட்ட படை அதிகாரிகளை யுத்தக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதற்கு சரத் பொன்சேகா முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலாவின் பேத்தி கார் விபத்தில் மரணம்!


முன்னாள் தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பேத்தி இன்று இடம்பெற்ற கார் விபத்து ஒன்றில் மரணமாகியுள்ளார் என அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 13 வயதான செனானி மண்டேலா என்பவரே இவ்வாறு மரணமானார். இவர் நெல்சன் மண்டேலா-வின்னி மண்டேலாவின் புதல்வியான ஸிண்ட்ஸி மண்டேலாவின் புதல்வியாவார். தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளின் நேற்றைய ஆரம்ப நாள் நிகழ்வில் கலந்து கொண்டு திரும்புகையிலேயே செனானி பயணித்த கார் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விபத்தில் இவர் மரணமான தகவலை நெல்சன் மண்டேலா ஸ்தாபனம் உறுதிபடுத்தியுள்ளது.செனானியின் காரை ஓட்டிச்சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தென்னாபிரிக்க பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். செஷானி கடந்த இரு தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.