பக்கங்கள்

31 ஜனவரி 2016

யோஷித்த ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை பெரும் நிதிமோசடிகள் தொடர்பான சிறப்பு பொலிஸ் பிரிவினர் கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர்.மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிஎஸ்என் ஊடக நிறுவனத்தின் மூலம் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. யோஷித்த ராஜபக்ஷ கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, யோஷித்த ராஜபக்ஷவின் தந்தை மகிந்த ராஜபக்ஷ, மூத்த சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ ,முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் பலரும் அங்கு சென்றிருந்தனர்.ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் யோஷித்த ராஜபக்ஷ கடற்படை அதிகாரியாக நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது இதனிடையே, சிஎஸ்என் நிறுவனத்தின் தலைவரான ரொஹான் வெலிவிட்ட மற்றும் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிபிசியின் கொழும்பு செய்தியாளர்கள் கூறுகின்றனர். மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை கைதுசெய்வதன் மூலம் தங்களின் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்று மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 'நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தம் இருந்திருந்தால் நிதி மோசடிகளை விசாரிக்கும் பொலிஸ் குழுக்களோ ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ உருவாகியிருக்காது' என்றும் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ.

24 ஜனவரி 2016

மகா காவியம் படைக்கப்போகிறாராம் வைரமுத்து!!!

கிளிநொச்சியில் வைரமுத்து
ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை - சரித்திரம் பெறும் கதைகளை - மகா காவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற உழவர் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மண்ணை நான் தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொழுகின்றபோது எனக்கு என்ன உணர்வு வந்ததென்று ஆயிரம் சொற்களால் எழுதிவிடமுடியாது. முதன்முதலில் மண்ணில் விழும் மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வரும், மண்ணுக்கு ஒரு உயிர்ப்பு வரும். முதல் முத்தம் பெறும்போது உயிருக்குள் பூப்பூக்கும். குழந்தைக்கு முதலில் இரத்தம் சொட்டும்போது தாயின் இதயம் துடிக்கும் துடிப்பு போன்றே இந்த மண்ணை நான் தொட்டபோது உணர்ந்தேன். தமிழனின் விவசாய அறிவு மற்றும் மரபு தொழில் நுட்பங்கள் எல்லாம் மறைக்கப்பட்டமைக்குக் காரணம் வேறு நாட்டவரின் நுட்பங்களை திணிக்கப்பதற்காகவே புகுத்தப்பட்டன. யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, கிளிநொச்சி வவுனியா, போன்ற ஊர்களின் பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. அவை சரித்திரத்தில் இடம் பெறும் குறிப்புக்களாகவே இந்த உலகம் உணர்ந்திருக்கிறது.இவ்வாறு தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த பேரவலத்திற்கு கருணாநிதியும் துணை போனவர் என்பதையும்,தமிழர்களை திசை திருப்ப கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாடு எனும் நாடகத்தில் முக்கிய பங்காற்றியவர் வைரமுத்து என்பதையும் தமிழ் மக்கள் இலகுவில் மறந்து விடமாட்டார்கள்.

22 ஜனவரி 2016

வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார்!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் 'சர்வதேசத்தின் தலையீட்டை' அனுமதிக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்ளடக்குவதாக ஜனாதிபதி சிறிசேன ஜெனீவாவில் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததாகவும் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் விதத்தில் அவர் பிபிசியிடம் வெளியிட்ட கருத்து அமைந்துள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் (ஐடிஜேபி) கூறியுள்ளது.'இலங்கையில் உள்ளூர் விசாரணை பொறிமுறைகள் நீண்டகாலமாக தோல்வியடைந்த வரலாறு உள்ள நிலையில், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி நடைமுறையில் நம்பிக்கை வைப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் ஸூக்கா தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்படும் இராணுவ வீரர்களின் பெயர் விபரங்களை ஐநா வெளியிடவில்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதையும் ஸூக்காவின் அறிக்கை விமர்சித்துள்ளது. கடத்தல்களும் சித்திரவதைகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களும் புதிய ஆட்சியின் கீழும் தொடர்வதாக வெளியாகியிருந்த குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதி சிறிசேன பிபிசியிடம் மறுத்திருந்தார். அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் 'விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து' வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.ஆனால், 2015ம் ஆண்டில் நடந்த அவ்வாறான 20 சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாகவும் ஃபிரீடம் ஃப்ரம் டார்ச்சர் என்ற அமைப்பும் அவ்வாறான வேறு சில சம்பவங்களை பதிவுசெய்துள்ளதாகவும் ஐடிஜேபி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான சம்பவங்களை மறுத்துள்ள இலங்கை ஜனாதிபதியின் போக்கில் மாற்றம் வரும் என்று நம்புவதாகவும் யஸ்மின் ஸூக்கா கூறியுள்ளார். இதனிடையே, தனது ஆட்சியின் கீழ் கடத்தல்களும் சித்திரவதைகளும் நடக்கவில்லை என்ற மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை ஃப்ரீடம் ஃப்ரம் டார்ச்சர் அமைப்பும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:பிபிசி தமிழ்

14 ஜனவரி 2016

புலிகள் தடை செய்யப்பட்டமை தவறு-எரிக் சொல்கைம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது தவறானதொரு முடிவு என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதானது தவறானதொரு முடிவானதாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தின் இவ்வாறான செயற்பாடானது புலிகளுக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. இது சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கு தடையாக இருந்தது. சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிப்பதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் முக்கிய பங்காற்றியிருந்தார். கதிர்காமரின் இந்த நடவடிக்கை தவறானது என்றே கருதுகின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட வழியமைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

09 ஜனவரி 2016

ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையை வடக்கு முதல்வர் சந்தித்தார்!

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் அவர்களை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப பீடத்தை திறந்து வைத்த பின் ஆயர் இல்லம் சென்ற வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆயரை சந்தித்து சுகம் விசாரித்தார். இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஆயர் மிக விரைவில் குணமடைவார். அதன் பின் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன்வருவார், இதற்கு இறைவன் அருள் புரிவார் என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு என்றார்.சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டிருந்த இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் அண்மையில் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

07 ஜனவரி 2016

இலங்கை பெரும் அனர்த்தங்களை சந்திக்கும்!

இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது. எல் நினோ எனப்படும் இந்த காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவடைவதால் கடலின் வெப்பநிலையில் அதிகரி்ப்பு ஏற்படும் எனவும், இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.