பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2013

நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தி!

மேர்வின் சில்வா 
மேர்வின் சில்வாவின் கருத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். இந்த கருத்து அடங்கிய வீடியோ காட்சி அண்மையில், நவனீதம்பிள்ளைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த கருத்து தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நவனீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஹில்டன் ஹோட்டலில் வைத்து நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு மன்னிப்பு கோரியதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டுக்கு விஜயம் செய்துள்ள உயர் ஐக்கிய நாடுகள் அதிகாரிக்கு எதிராக இவ்வாறு அமைச்சர் ஒருவரை கருத்து வெளியிட அனுமதித்தமை கண்டிக்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

28 ஆகஸ்ட் 2013

அபிவிருத்தியை மதிப்பிட நான் வரவில்லை-நவ­நீ­தம்­பிள்ளை

வட­ மா­காண பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கட்­டு­மா­னப்­ப­ணிகள் மகிழ்ச்சி அளித்­தாலும் அதனை மதிப்­பீடு செய்­வ­தற்­காக நான் இலங்கை வர­வில்லை. உள்­நாட்டில் மனித உரி­மை­களின் தற்போ­தைய நிலை­வ­ரத்தை மதிப்­பீடு செய்­வதே இலங்­கைக்­கான எனது பயணத்தின் நோக்­கமும் கட­மையும் ஆகும் என்று ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.நூல­கத்­திற்கு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை (27.08.13) காலை சென்ற ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை நூல­கத்தை பார்­வை­யிட்­ட­துடன் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்­தி­ரசிறி மற்றும் பிரதி செய­லாளர் விஜ­ய­லட்­சுமி ரமேஷ் ஆகி­யோரின் தலை­மையில் வட மாகா­ணத்தின் அனைத்து மாவட்ட செய­லா­ளர்கள் வடக்கில் மேற்­ கொள்­ளப்­பட்­டுள்ள அபி­வி­ருத்தி பணிகள் தொடர்பில் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு விளக்­க­ம­ளித்­தார்கள். இதன் போது உரை­யாற்­று­கை­யி­லேயே மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்தும் அங்கு உரை­ஆற்­றிய அவர் இலங்­கையின் வட­ப­கு­தி­களில் பல்­வேறு அபி­வி­ருத்தி பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு உள்­ள­மையை உங்­களின் விளக்­க­ம­ளிப்­பு­க­ளூ­டாக அறிந்து கொள்­கின்றேன். குறிப்­பாக ஐ.நா. இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற மக்கள் மேம்­பாட்டுத் திட்­டங்­க­ளையும் ஐ. நா. கொள்­கை­க­ளையும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. மீள் குடி­யேற்றம் மற்றும் அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­களும் மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. எனினும் “இலங்­கைக்­கான எனது பயணத்தின் நோக்கம் வடக்கின் அபி­வி­ருத்­தி­களை மதிப்­பீடு செய்­வ­தில்லை. இலங்­கையின் மனித உரி­மைகள் நிலைவரத்தை முழுமையாக மதிப்பீடு செய்வதும் குறிப்பிட்ட சில தரப்புக்களையும் பொது மக்களையும் சந்தித்து உண்மை நிலைவரத்தை கண்டறிய வேண்டியதும் எனது கடமையாகும்” எனக் கூறியுள்ளார்.

27 ஆகஸ்ட் 2013

நவிபிள்ளை - அனந்தி சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள யு.என்.சி.எச்.ஆர் காரியாலயத்தில் வைத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.வடமாகாண பிரஜைகள் குழுவுடன் சென்றே அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காரியாலயத்தில் வைத்து பல்வேறு சிவில் சமூக பிரதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன் காணாமல் போன தங்களுடைய உறவுகளை தேடிதருமாறு தாயொருவர் கண்ணீருடன் மன்றாடியுள்ளார். அவரை கட்டியணைத்த நவீபிள்ளை உங்களுடைய நிலைமைகளை நானறிவேன் என்று தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

26 ஆகஸ்ட் 2013

சுயநிர்ணய உரிமையை அடைந்து தீருவோம்!

நம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணயஉரிமை என்ற தூரநோக்கு இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின முதல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்த உரையாற்றிய அவர், “தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான், வருவது வரட்டும் என முன்னேறுவோம். புதிய பரிணாமத்தில் எங்கள் போராட்டத்தை நடத்த வல்லவர்கள் நாங்கள் என்பதை உலகத்திற்கு சொல்ல நாங்கள் முயற்சிக்கிறோம். பிரிந்து நின்ற தமிழ்பேசும் மக்கள் வடக்குமாகாணசபை என்ற அலகின் கீழ் எமது ஒற்றுமையை உலகறியச் செய்வோம். அதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் அமைந்துள்ளது. எங்கள் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களே. தேர்தல் காலத்தில் மட்டும் தேனாகப் பேசி, தேர்ந்தெடுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசதரப்பினர் முன்வருகிறார்கள். அதன்பின் எங்களை மறந்து விடுகிறார்கள். வாக்குரிமை என்பது அவர்களுக்கு ஒருவித பண்டமாற்றாகி விட்டது. நாங்கள் இதைத் தருகின்றோம். நீங்கள் அதைத் தாருங்கள் என்கிறார்கள். ஆனால் தருவது அவர்களா? ஒரு போதும் இல்லை. இந்த நாட்டு மக்களை எதிரிகளாகக் கருதி கொடும் போரை நடத்தி, எமது மக்களின் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி, எமது மக்களின் உயிர்களை கொய்தெறிந்து, உடல்களைச் சின்னா பின்னமாக்கி விட்டு தற்பொழுது இராணுவத்தை வைத்து எம்மை அடக்குமுறைக்குள் அகப்படுத்தியிருக்கும் அரசின் தூதர்களே இத்தகைய பண்டமாற்றில் ஈடுபட்டுள்ளார்கள். உங்களுக்குத் தெருக்கள் தந்தோம், வீதிகள் தந்தோம், இன்னும் தருவோம் உங்கள் வாக்குகளை எமக்குத் தாருங்கள் என்கிறார்கள். தெருக்கள் போட்டார்களே, அதுவும் அவசர அவசரமாகப் போட்டார்களே, அது யார் பணத்தில்? பாதிக்கப்பட்ட எமது மக்களின் இன்னல்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அண்டை நாடுகள் எமக்கனுப்பிய பணத்தைக் கொண்டு தான் தெருக்கள் போடப்பட்டன. இதில் வேலை வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது? எமது மக்களுக்கா அல்லது தெற்கில் இருந்து வந்த சிங்கள மக்களுக்கா? 1956 ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு வரை இந்தப் பக்கம் தலை வைத்தும் பார்க்காத ஆட்சியாளர்கள், ஏன் தெருக்களைப் போட்டார்கள்? வீடிழந்து, வேலையிழந்து, உற்றார் உறவினரைப் பறிகொடுத்து தமது பாரம்பரிய காணிகளுக்குள் செல்ல முடியாது இராணுவக் கெடுபிடிக்குள் அல்லலுறும் எமது மக்களுக்காகவா இந்த தெருக்கள் அமைக்கப்பட்டன? இராணுவம் வடமாகாணத்தின் எந்தப் பகுதியையும் உடனேயே சென்றடைய வேண்டும், தமிழ் பேசும் மக்களை அடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல,வடமாகாண விவசாயி வியர்வை சிந்திப்பெறும் விளைச்சல்களை எல்லாம் நேரடியாக விவசாயிகளிடம் இந்த வீதி வழி சென்று குறைந்த பணம் கொடுத்து வாங்கிப் போய் கூடிய விலையில் தெற்கில் விற்கவும் தான் அவை அமைக்கப்பட்டன. எமது தமிழ்பேசும் அமைச்சர்களை தன்னிடம் வைத்துக் கொண்டே, எமக்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எம்மை கொண்டே, எமக்கு குழிபறிக்க பெரும்பான்மையின அரசு பின் நின்றதில்லை. டக்ளஸ் தேவானந்தா, தவராசா, அங்கஜன் ஆகிய மூவரும் தமிழ் பேசும் சகோதரர்கள். அவர்கள் போகும் பாதை தவறு என்பது எங்கள் கருத்து. எங்கள் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால், எங்களை வைத்துக் கொண்டு எங்களை அழித்தார்கள். மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு துயரம். 2009ம் ஆண்டு நடந்த துயரம் என முக்கியமான சம்பவங்கள் பலவற்றின் போது அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்கள் அங்கம் வகித்திருந்தார்கள். எம்மவர்களைக் கொண்டே எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பண்டமாற்று அடிப்படையிலான அரசியல் செய்ய விரும்பவில்லை. எங்கள் அரசியலும், நிர்வாகமும் மக்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஊழலற்ற உயிருள்ள நிர்வாகம். அதன்மூலம் சட்டத்தின், நீதியின், ஆட்சியை நிலை நிறுத்துவோம். அதிகார துஸ்பிரயோகத்திற்கு இடமில்லை. உலகத்தின் உதவிகளுடன் ஜனநாயக வழியில் சென்று எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகவும் இந்தத் தேர்தல் அமைகிறது. நாம் எமக்கென ஒரு அரசை நிறுவி எம்மவரை இணைத்து முன்னேறுவதே காலத்தின் தேவையாக இருக்கிறது. எமது வடமாகாணத்துக்கு தமிழ் பேசும் எம்மால் அரசு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்காளிகள், போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும். நாம் இருநோக்குகளைக் கொண்டிருக்கின்றோம். ஒன்று தூரநோக்கு, மற்றயது கிட்டிய நோக்கு. தூரநோக்கு என்பது தமிழ் மக்கள் பாராம்பரியமாக வாழ்ந்த அவர்களது பூர்வீகமான வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் ஒரு தேசிய அலகு என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணய உரிமை எமக்குரித்தாகிறது என்பதே அந்தத் தூரநோக்கு, அதனை நாம் அடைந்தே தீருவோம். கிட்டிய நோக்கை பொறுத்தவரையில் உடனடித் தேவைகளை கருத்தில் கொண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன் சார்ந்த நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்வோம், காணாமல்போனோர் பிரச்சினை, நிலப்பறிப்பு பிரச்சினைகள் போன்றவற்றுடன், இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவது. படிப்படியாக எங்கள் மண்ணிலிருந்து முழுமையாக இராணுவத்தை அகற்றுவது போன்றவற்றிலும் நாம் கவனம் செலுத்துவோம். அதற்காக மத்திய அரசுடன் நம்பிக்கை அடிப்படையில் புரிந்துணர்வை வளர்க்க வேண்டும். அதேபோன்று இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வு போன்றவற்றுடன் கல்வி, பொருளாதாரம் என சகல துறைகளிலும் எங்கள் சமுகத்தை வளர்த்தெடுக்கப் உழைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையை எதிர்த்து சிங்களவர்கள் போராட்டம்!

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கைத் தலைமைக் காரியாலயத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இந்தக் காரியாலயத்திற்கு எதிரில் ரவனா பலய அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது. நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்திருக்கக் கூடாது என ரவனா பலய வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும், நவனீதம்பிள்ளைக்கும் எதிராக பதாகைகள் காண்பித்தும் கோஷங்களை எழுப்பியும் ரவான பலாய அமைப்பின் பௌத்த பிக்களும் ஏனைய உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக பௌத்தலாகோ மாவத்தையின் போக்கவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

25 ஆகஸ்ட் 2013

கொழும்பு வந்தார் நவநீதம்பிள்ளை!

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேர்மனியின் பிராங்போட்டில் இருந்து நவநீதம்பிள்ளை பயணம் செய்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம்,இன்று காலை சுமார் 9.45 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அவருடன் ஐ.நா மனிதஉரிமை ஆணையத்தை சேர்ந்த 5 உயரதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர். நவநீதம்பிள்ளையை, ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அழைத்து வந்துள்ளார்.

சில சண்டியர்கள் எதிரிகளை கண்டால் மறைந்துகொள்வர்!

ஐநா மீது ஜேவிபி பாய்ச்சல்: சண்டியர்கள் எதிரிகளை கண்டதும் ஒழிந்து கொள்வராம்ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு பக்கச்சார்பான நிறுவனம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பத்தரமுள்ளை, பெலவத்த கட்சி அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் கட்சி அலுவலகத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், "நவனீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையின் காரணமாக இன்று இலங்கையில் ஒரு விவாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனோடு இணைந்த அனைத்து உலக அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கொள்ளையை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாக செயற்படுகிறது. இதனையே நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் ஐநா சபை செய்யும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. தங்களுடைய அதிகாரத்தை பெற்றுக் கொண்டு அதற்காக மனித உரிமை, ஜனநாயகம் போன்றவற்றிற்கு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தல் என்பன நடைபெறுகின்றன. கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு, ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீது கத்தி வெட்டு நடத்தப்பட்டு, பல அச்சுறுத்தல் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் அதனுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டவோ தண்டிக்கப்படவோ இல்லை. அதற்கான காரணம் அரசாங்கத்தின் பின்புல ஆலோசனையிலேயே இவைகள் இடம்பெறுதல் ஆகும். அரசியல்வாதிகளுக்கு அழுத்தம், எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. வடக்கிற்கு சென்று அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் செய்த லலித், குகன் கடத்தப்பட்டனர். இரண்டு வருடங்களாகியும் இதுவரை தகவல்கள் இல்லை. அசாத்சாலி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியிலும் அரசாங்கத்தின் அரசியல் தேவை உள்ளது. அதுமட்டுமல்லாது ஜனநாயக ரீதியில் நாட்டில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கூட இடமில்லை. இராணுவத்தினர், பொலிஸார் தாக்குகின்றனர். துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். இந்த அரசாங்கம் மனித உரிமை, ஜனநாயகம் என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு பதிலாக ஏகாதிபத்திய ஆட்சியை நடத்துகிறது. தன்னை ஏகாதிபதி என சொல்வது ஏன் என மஹீந்த ராஜபக்ஷ கேட்கிறார். நல்ல குழந்தை போல அவர் பேசுகிறார். ஊடகங்களுக்கு தீ வைப்பதென்றால் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால், மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்றால், சிவில் செயற்பட்டாளர்கள் கடத்தப்படுகிறார்கள் என்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்றால், கனவு அமைச்சரவை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் ஊடகவியலாளர்கள் எழுத முடியாதளவிற்கு பயப்பட்டுள்ளனர் என்றால் இங்கு நடப்பது ஏகாதிபத்திய ஆட்சி தான். ஊடகவியலாளர் மந்தனா ஸ்மைல் வீட்டின் மீது இடம்பெற்றது கொள்ளைச் சம்பவமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரும் கொள்ளைச்சம்பவம் இடம்பெறும் போதும் அங்கு நடைபெற்ற விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை ஆகும். நவனீதம்பிள்ளை இலங்கை வரும்போது மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளார். இதன்மூலம் அரசாங்கம் பயாஸ்கோப் காட்டுகிறது. சில சண்டியர்கள் எதிரிகள் வரும்பொது மறைந்திருப்பர். பின்னர் முகங் காட்டுவர். இது ராஜதந்திர நடவடிக்கை அல்ல. மெதமுலன நபரின் வைராக்கியத்தை போன்ற பயாஸ்கோப். அதனை மக்கள் விளங்கிக் கொள்வர். நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என நாங்கள் நினைக்கிறோம். அரசாங்கம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எடுத்த சில நடவடிக்கைகள் மூலம் அது நடந்துள்ளது. நவனீதம்பிள்ளை இலங்கைக்கு வந்து அனைத்து தகவல்களையும் திரட்டிச் செல்வார் என நினைத்தால் அது தவறு. இலங்கை வர முன்பே அவரிடம் பல தகவல்கள் உள்ளன. தகவல் பெற்றுக் கொள்ளும் வலையமப்பு அவரிடம் உள்ளது. அங்கிருந்து மட்டுமல்ல இங்கு வந்தும் தகவல் சேகரிப்போம் என்பதை காட்டுவதற்கே அவர் இங்கு வந்துள்ளார். ரத்துபஸ்வல சம்பவம் ஊடகவியலாளர் தாக்கப்படுவது வடக்கு நிலமை என அனைத்து தகவல்களையும் ஒரு வாரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. இலங்கை நிறுவனங்களிடம் உள்ள தகவல்களை விடவும் அதிகமான தகவல்களை அவர் வைத்திருக்கிறார். என அநுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

24 ஆகஸ்ட் 2013

பகிரங்கமாகிறது இராணுவ அறிக்கை!

வெலிவேரிய, ரதுபஸ்வலவில் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக விசாரித்த, இராணுவ நீதிமன்றத்தின் முடிவுகள், வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான இராணுவ நீதிமன்றம், வெலிவேரிய சம்பவம் தொடர்பான அறிக்கையை, கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கையளித்திருந்தது. இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்ட முடிவுகள், இராணுவப் பேச்சாளர் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை, இராணுவ சட்டப்பிரிவிடம், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க கையளித்துள்ளார். இராணுவ சட்டப்பிரிவு, மேல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்தவாரம் அவருக்குப் பதிலளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

23 ஆகஸ்ட் 2013

தீவகத்தில் சுவரொட்டி ஒட்டுகிறது படைத்தரப்பு!

யாழ்.மாவட்டத்தில்; வடக்கு மாகணசபை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஆளும் தரப்பினை சேர்ந்தவர்களை வெற்றி பெறச்செய்ய கிழக்கிலிருந்து ஒரு தொகுதி போராளிகள் தருவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரியாலையிலுள்ள இராணுவ முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களே அண்மையில் கூட்டமைப்பு வேட்பாளர் அனந்திக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடுத்தப்பட்டுமிருந்தனர். இதனிடையே ஆளும் தரப்பை சேர்ந்தவர்களை வெற்றியடையச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் இராணுவமும் முன்னெடுத்துவருகின்றது. வடக்கு தேர்தலில் றெமீடியஸ், சீராஸ், உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களை யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலமையகம் தெரிவு செய்து தேர்தலில் களமிறக்கியுள்ளது. இவர்களை வெல்ல வைப்பதற்கான முயற்சிகளிலும் இராணுவம் கடும் முனைப்புடன் செயற்படுகின்றது. குறிப்பாக தீவுப்பகுதியில் றெமீடியஸின், விளம்பர சுவரொட்டிகளை சிவில் உடையில் இராணுவத்தினரே ஒட்டி வருவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளது. மேலும் வீதிகள் முழுவதும் குறித்த வேட்பாளரின் பெயரை நள்ளிரவு 12மணி முதல் அதிகாலை வரை இராணுவமே எழுதி வருகின்றது. இதனை பலர் அவதானித்திருக்கின்றனர். இதனைவிட றெமீடியஸிற்கு வாக்களிக்குமாறு சகல முன்னாள் போராளிகளுக்கும் படைமுகாம்களிற்கு அழைக்கப்பட்டு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கிழக்கிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள போராளிகள் தேர்தல் முடியும் வரை தம்மை வீடு திரும்ப படையினர் அனுமதிக்கப் போவதில்லையென கூறியிருப்பதாக தத்தம் குடும்பங்களிற்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.

22 ஆகஸ்ட் 2013

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலயத்தில் கொள்ளையர் கைவரிசை!

ஊர்காவற்றுறை புளியங்கூடல் செருத்தனைப்பதி சிறீ மகாமாரி அம்பாள் ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.ஆலயத்தின் முற்பகுதியில் சிறிய அம்பாள் அமைவிடம் ஒன்றை அமைப்பதற்காக முன்பக்க சுவர் உடைக்கப்பட்டிருந்ததாகவும் இதனை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர் அதனூடாக ஆலயத்தினுள் நுழைந்து மூலஸ்தானத்தில் இருந்த அம்பாள் விக்கிரகத்தை  நகர்த்தி விட்டு இயந்திரத்தகட்டை கொள்ளையிட்டதுடன் பின்னர் பற்றுச்சீட்டு வழங்கும் பகுதியையும் உடைத்து அங்கிருந்த நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றையும் வெள்ளி பாத்திரங்களையும் கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தால் அம்பாள் பக்தர்கள் மிகுந்த விசனமடைந்து காணப்படுகின்றனர்.
 இந்த கொள்ளை  சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர்த்தடயங்கள் அழிப்பு முள்ளிவாய்க்காலில் அரங்கேறுகிறது!

இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களாகக் கிடந்த வாகனங்கள் மற்றும் பொருள்கள் கடந்த சில நாள்களாக வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன என்று வன்னிப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையின் (நவநீதம் பிள்ளை) வருகைக்கு முன்பாக இவை அகற்றப்படுகின்றனவா என்ற அச்சத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இராணுவத்தினர் போன்று உடையணிந்தவர்களே போர் எச்சங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அதனை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.பணிகள் மிக வேகமாக மேற் கொள்ளப்படுகின்றன என்றும் அப்பகுதியால் செல்லும் மக்கள் இதனை ஒளிப்படம் எடுக்க முற்பட்டால் விரட்டப்படுகின்றனர் என்றும் அவர்கள் கூறினர்.இறுதிப் போரில் கைவிடப்பட்ட பல நூற்றுக் கணக்கான வாகனங்களின் சிதைந்த பகுதிகள் போர் எச்சங்களாக கரையாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதியோரமாகக் குவிக்கப்பட்டிருந்தது.இவற்றி பெரும் பகுதி திங்கட்கிழமை இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.கனரக வாகனங்களின் உதவியுடன் போர் எச்சங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் போன்று தோற்றமளித்தவர்களே ஈடுபட்டனர்'' என்று மக்கள் தெரிவித்தனர்.இது தவிர புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானம்,சதந்திரபுரம் விளையாட்டுக் கழகமைதானம் ஆகியவற்றிலும் போரில் சிதைந்த வாகனங்களின் பாகங்கள் குவிக்கப்பட்டிருந்தன. இவை வெளியே தெரியாதவாறு மூடி பெரிய மறைப்புக்களை இராணுவத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் கூறினர்.இலங்கைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வருகை தரும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை 27 ஆம் திகதி வடக்குக்கான தனது பயணத்தை ஆரம்பிப்பார். முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.தனது பயணக் காலத்தில் பெரும் பகுதியை அவர் வடக்கிலேயே செலவிடுவார் என்று அரசு கூறியிருக்கிறது.

21 ஆகஸ்ட் 2013

சாவகச்சேரியில் பெண் சடலமாக மீட்பு!

newsதனித்து வாழ்ந்த பெண் மர்மமான முறையில் வீட்டு விறாந்தையில் சடலமாகக் காணப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை சாவச்சேரி கல்வயல் சண்முகானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்றது.திருமணமாகாத இந்தப் பெண் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் நேற்றுக் காலை வீதியில் சென்றவர்கள் வீட்டு விறாந்தையில் நிர்வாணமாக சடலமாக கிடந்ததைக் கண்டு கிராம அலுவலர் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்தனர். வீட்டுப் பொருள்கள் விறாந்தையில் சிதறிக் காணப்பட்டுள்ளன. திருட வந்தவர்கள் இவரைக் கொலை செய்து விட்டு நகைகளை அபகரித்துச் சென்றிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது சடலம் பொலிஸாரால் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இதே இடத்தைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை நந்தாயினி (வயது-62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.இந்தப் பெண் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் சாரத்திய பயிற்சிப் பாடசாலையில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் இயக்கத்தை சேர்ந்த தம்பதிகள் கைதாம்!

இந்திய மீனவர்கள் போல், இலங்கையின் வடக்கு கடற்பரப்பிற்குள் சென்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களான கணவன், மனைவி மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகளை கடற்படையினர் நேற்று கைதுசெய்து, அவர்களை தலைமன்னார் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இவர்களிடம் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய இந்த கணவனும் மனைவியும் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து, அங்கு அகதி முகாம் ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாறு இந்தியாவுக்கு சென்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலர் மீனவர்களை போல் மீண்டும் இலங்கைக்குள் வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது. இந்தியாவில் அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் புலிகளின் உறுப்பினர்கள் பலர், மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி இவ்வாறு இலங்கைக்குள் வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆகஸ்ட் 2013

அமோக வெற்றி எமக்கே-சம்பந்தன்

news"வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிவாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.''இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தார்."வடமாகாணசபையைக் கைப்பற்றுவது அரசா, கூட்டமைப்பா என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக ஐந்து தேர்தல் தொகுதிகள் திகழ்கின்றன. 14 தேர்தல் தொகுதிகளில் ஐந்தில் கூட்டமைப்புக்கும், நான்கில் அரசுக்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது'' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்திருந்தார்.இதுகுறித்து சம்பந்தன் எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்."வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் மாபெரும் வெற்றியை வடக்கு மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். இந்நிலையில் அரச அமைச்சர்கள் வெளியிடும் முட்டாள்தனமான - பொய்யான கருத்துகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. மக்களே இதற்கான பதிலை தேர்தலில் வழங்குவார்கள்.அரசானது தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அதை விடுத்து, ஆளுக்கு ஆள் மாறி மாறி கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்தல் வேண்டும்''என்றார்.

நன்றி:உதயன் 

19 ஆகஸ்ட் 2013

யாரும் காணாமல் போகவில்லை வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டார்கள்-கோத்தபாய

சிறிலங்காவில் போரின்போது காணாமற்போனவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள பலர் வெளிநாடுகளில் புதிய அடையாளத்துடன் வாழ்வதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவ்வாறு காணாமற்போனதாக பட்டியலிடப்பட்ட ஒருவரை கனடா நாடுகடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “முன்னதாக நாடுகடத்தப்பட்டவரின் தாயார், போர் முடிவுக்கு வந்த பின்னர் தனது மகன் எங்கே என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறியிருந்தார். இது ஒன்றும் தனித்ததான ஒரு சம்பவம் அல்ல. இங்கே காணாமற்போனதாக அறிவிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையானவர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் இங்கு தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள். சில வெளிநாட்டு அரசாங்கங்கள், எம்முடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. போதிய பாதுகாப்பின்மையால், வெளிநாடுகளில் அரசியல் அடைக்கலம் தேடியவர்கள் பொய்யான பெயர்களில் புதிய கடவுச்சீட்டுகளைப் பெற முடிகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், ஒருகாலத்தில் ஜேவிபி முன்னணி உறுப்பினராக இருந்த பிறேம்குமார் குணரட்ணத்துக்கு வேறோரு பெயரில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். வவுனியா மருத்துவமனையில் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வந்த போது சிலர், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தவுடன் நிலவிய குழப்பமான சூழலைப் பயன்படுத்தி, வவுனியா மருத்துவமனையில் இருந்து புலிகள் தப்பிச் சென்றுள்ளனர்.இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் முக்கியமான போராளிகள். வெளிநாடுகளில் தங்கியுள்ள அவர்களிடம் விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான விசாரணை நடத்த பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அரசாங்கம் கோரழிக்கைகளை விடுத்த போதிலும், அதற்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் ஒத்தழைக்க மறுத்து விட்டன” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முகநூல் நிருவனருக்கே ஆப்பு!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹேக்கர் ஹேக் செய்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார். அதாவது ஃபேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஃபேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக ஃபேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை(bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதனால் கடுப்பான கலீல் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் புகாரை தெரிவித்துள்ளார். ஜக்கர்பர்கின் பக்கத்தில்(wall) கலீல் கூறியிருப்பதாவது, என் பெயர் கலீல் ஷ்ரியாதே. நான் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸில் பி.ஏ. முடித்துள்ளேன். உங்களின்(www.facebook.com) இணையதளத்தில் ஒரு பக்கை(bug) கண்டுபிடித்துள்ளேன். அது குறித்து உங்களிடம் புகார் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பக்(bug) மூலம் ஒரு ஃபேஸ்புக் யூசர் மற்றொரு யூசரின் பக்கத்தில்(wall) எழுத முடிகிறது. நான் சாரா. குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர்பர்க்குடன் ஹார்வர்டில் படித்த சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

18 ஆகஸ்ட் 2013

ஆயுதக்குழுவின் அராஜகத்தை தீவகத்தில் தடுத்து நிறுத்துக!

newsதீவகத்தில் அரசின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவின் அராஜகத்தை உடன் தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நெடுந்தீவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது கடந்த வியாழக்கிழமை கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூவர் காயமடைந்தனர். ஒரு வர் தொடர்ந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடமும் முறையிட்டுள்ளது. "அரசின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களே இந்தக் கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளனர். தீவகத்தில் குறித்த கட்சியினரின் அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடுகின்றன'' என்று தெரிவித்தார் சுமந்திரன். "இந்தப் பகுதியில் சுதந்திரமான நீதியான தேர்தல்கள் இதுவரை நடைபெறவில்லை. கடந்த காலங்களில் அங்கு தேர்தல் பரப்புரைக்காகச் சென்ற கூட்டமைப்பின் பிரமுகர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், ஈ.பி.டி.பி. கட்சியினரின் தாக்குதல்களுக்கு இலக்காகினர். வடமாகாணசபைத் தேர்தலிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க அரச சார்பு ஆயுதக் குழுக்கட்சியினர் தயாராகிவிட்டனர் என்பதையே நெடுந்தீவுத் தாக்குதல் எடுத்துக்காட்டுகின்றது என்று குற்றஞ்சாட்டினார் சுமந்திரன். "இந்த அராஜகத்தை அனுமதிக்க முடியாது. எமது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டார்கள். இதனைத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

17 ஆகஸ்ட் 2013

நெடுந்தீவுக்குள் சிறிதரன்!

ஈ.பி.டி.பியின் கோட்டை என வர்ணிக்கப்படும் நெடுந்தீவுக்குள் நுழைவதற்காக நேற்று காலை கூட்டமைப்பு
எம்.பி சிறிதரன் தன்னுடன் 40 பேர் கொண்ட படையணியுடன் நெடுந்தீவுக்கு சென்றுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் அங்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஈ.பி.டி.பியால் தாக்கப்பட்டதன் பின் இவ்வாறு சிறிதரன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு காலடி வைத்துள்ளதால் அப் பகுதியில் பதற்றம் ஏற்படும் ஆபத்து உள்ளதாகத் தெரியவருகின்றது.

16 ஆகஸ்ட் 2013

நெடுந்தீவில் ஆளும்தரப்பு தாக்குதல்!

நெடுந்தீவில் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஆளும்தரப்பு மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவில் மிக அண்மையில் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாகாண சபை பிரசாரப் பணிகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்தனர். ஆளும்தரப்பின் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் பிரதேச சபை வாகனத்தில் சென்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இச்சம்பவத்தில் நெடுந்தீவில் திருமணம் செய்து வசித்து வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரும் கூட்டமைப்பின் ஆதரவாளருமான ரணசிங்க ஆரியசேன (வயது 40), சைமன் யேசுதாஸன், யேசுதாஸன் அன்ரனிற்றா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வருகிறார் நவநீதம்பிள்ளை!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று செல்லும் நவநீதம் பிள்ளை ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு வரும் நவநீதம்பிள்ளை இலங்கை நீதித்துறை சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன்,மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நீதித்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள், மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான தேசிய செயற்றிட்டக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோரையும் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார். இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவையும் நவநீதம்பிள்ளை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆகஸ்ட் 2013

கொலையாளி ராஜ பக்­ஷவை விரட்டியடிக்க வேண்டும்!

வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பொது எதிரணி நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து இதில் பங்கேற்று அரசுக்கு எதிராகக் கோ­ஷங்களை எழுப்பினர். ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன், சுமந்திரன், விக்கிரமபாகு, சிறிதுங்க ஜயசூரிய, சரத் மனமேந்திரா, ஹேமகுமார நாணயக்கார ஆகியோர் உட்படப் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.அத்துடன்,தொழிற்சங்கங்கள்,ஊடக அமைப்புகள் ஆகியனவும் ஆர்ப்பாட்டத்துக்குத் தமது ஆதரவை வழங்கும் வகையில் பங்கேற்றிருந்தன.பல அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிற்பகல் 3 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றஆர்ப்பாட்டக்காரர்கள், "கொலையாளி ராஜபக்­ஷவை விரட்டியடிக்க வேண்டும்'', "தண்ணீருக்கு குண்டு தான் பரிசா?'' என்றெல்லாம் கோ­ஷமெழுப்பினர்.பஸ் மீது ஐ.தே.க. எம்.பிக்கள்.ஐ.தே.கவின் எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இருந்த பஸ் ஒன்றின் மீது ஏறி கோ­ மெழுப்பினர். இதனால் அவ்விடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செயலகத்தை சூழப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும், கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளை, நேற்றைய ஆர்ப்பாட்டத்தால் காலி வீதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வீதியூடாக நடந்துசென்ற மக்களும் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

14 ஆகஸ்ட் 2013

விழிப்புணர்வு சுவரொட்டிகள்!

நல்லூர் ஆலய சுற்றாடல், திருவிழா காலத்தில் புனிதமாக பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கில்சில அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந் நிலையில் ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களில் அதிகரித்துள்ள மதுபானப் பாவனை மற்றும் புகைத்தல் ஆகியவறைத் தடுககும் நோக்குடன் சோஷலிச இளைஞர் சங்கத்தால் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனை கடைப்பிடிப்பது ஆலய சுற்றாடலில் உள்ள அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், இந்து அமைப்புக்களும் வேண்டி நிற்கின்றன.

13 ஆகஸ்ட் 2013

யாழில் புலம்பெயர்ந்த பெண்களால் கலாச்சார சீரழிவாம்!

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருப்போர் கோடை கால விடுமுறையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கிற்கு சென்று வருகின்றனர். அங்கு செல்பவர்கள் அரைகுறை ஆடைகளுடன் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் வர வேண்டாம் என அங்குள்ள உள்ளுர் மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள் என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வெளிநாடுகளிலிருந்து இங்கு வரும் பல பெண்கள் உள்ளாடையான யங்கியுடனும், மார்பகத்தை மறைக்கும் மார்பு கச்சையுடனும் வருகிறார்கள். சில பெண்கள் மார்பு கச்சை கூட அரைகுறையாக அணிந்து வருகிறார்கள். இதனால் பண்பாட்டு சீரழிவுகள் பல நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார். அண்மையில் சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பெற்றோர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். 20 வயது மதிக்க தக்க மகளுடன் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெயர்பலகைக்கு முன்னால் நின்று படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டிருந்தார்கள். அந்த பெற்றோரின் மகள் மிக மோசமான மிக மிக சிறிய யங்கியுடன் சிறிய மார்பு கச்சையுடன் படம் எடுத்து போட்டிருந்தார்.இது பெரும்பாலானவர்களை முகம் சுழிக்க வைத்தது. இதேவேளை இப்படி அரைகுறை ஆடையுடன் யாழ்ப்பாணம் வருபவர்களிடம் ஒழுங்கான ஆடைகளை அணியுங்கள் என கேட்டால் நாங்கள் இந்த ஆடைகளை அணிவதை யார் கேட்க முடியும் என புலம்பெயர்ந்ததுகள் கேட்குதுகள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது. பெருந்தொகையான புலம்பெயர்ந்ததுகள் நல்லூர் வீதிகளில் அலைந்து திரியுதுகள் என்றும் அவர் தெரிவித்தார். நல்லூர் கோவிலுக்கு வருபவர்கள் ஆலயத்திற்கு வருபவர்களை போல ஒழுங்கான உடைகளை அணிந்து வருமாறு ஆலய நிர்வாகம் அறிவித்த போதிலும் புலம்பெயர்ந்ததுகள் அரைகுறை ஆடையுடன் தான் திரிகின்றன என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.இப்படி ஒரு இணையம் செய்தி வெளியிட்டு புலம்பெயர் தமிழரின் மானத்தை வாங்கியுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வெட்கம் இல்லையா?

முஸ்லிம்களுக்கு எதிராக மதத்துக்கு எதிராக பௌத்த இனவாத காடையர் குழுக்கள் தாக்குதலை மேற்கொள்கின்றபோது அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்து சுகபோகங்களை அனுபவிப்பது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வெட்கம் இல்லையா? இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், இந்தத் தாக்குதலை அரசின் அனுமதியுடன் பௌத்த இனவாத காடையர் குழுவே நடத்தியது என்றும் தெரிவித்தார். அரசின் இத்தகைய அராஜகங்களைத் தடுத்துநிறுத்த தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்கள் அணிதிரண்டு போராட முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: அரச தரப்பும் அதன் காடையர் குழுவும் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு எதிராக தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன் ஒரு கட்டமாகத்தான் கிராண்ட்பாஸ் முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது அரசின் மறைமுக அனுமதியுடன் அராஜகங்கள் தொடர்கின்றன.ஆனால், முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனங்களை மட்டும் வெளியிட்டு விட்டு அரசுடன் சேர்ந்திருக்கின்றார்கள். எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் மக்களும் சிந்தித்து ஒரு தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றார்.

12 ஆகஸ்ட் 2013

யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்ல முடியாது-சிங்கப்பூர் பிரதமர்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி, அவரை திருத்தவே முடியாது என சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ தெரிவித்துள்ளார். “லீ குவான் யூ உடனான உரையாடல்கள்“ என்ற தலைப்பில், லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட், லீயிடம் செவ்வி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். முன்னணி பத்திரிகையாளரான பேராசிரியர் ரொம் பிளேட், எழுதியுள்ள இந்த நூலில்தான் மகிந்த ராஜபக்ச குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவின் தற்போதைய நிலவரம் குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது. சிறிலங்காவில் சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. சிறிலங்கா ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. சிறிலங்காவில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன்மூலம் சிறிலங்கா இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று சிறிலங்காஅதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிப் போகமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது.சிறிலங்கா இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர் என்பது உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முனைகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்துவிட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். சிறிலங்காவில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்டகாலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்றபடி தான் சிறிலங்கா அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத் தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும்.அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள் தான். மலேசியா, சிங்கப்பூரில் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும் தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம் தான் இருக்கப் போகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

11 ஆகஸ்ட் 2013

தமிழர்களிடமும் பொதுமன்னிப்பு கோருமா அரசு?சுரேஷ் பிரேமச்சந்திரன்

"வெலிவேரியாவில் மூன்று உயிர்கள் இராணுவத்தினரால் காவுகொள்ளப்பட்டதற்கு உடனடியாகவே பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ள அரசு, முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட போரை நடத்தியதற்காக இதுவரை மன்னிப்புக் கோரவில்லை. இதிலிருந்தே தமிழர்களுக்கு இந்நாட்டில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேச சமூகம் அறிந்துகொள்ளவேண்டும்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வெலிவேரிய சிங்கள மக்கள்விவகாரம்,முள்ளிவாய்க்காலோ தமிழ் மக்கள் விவகாரம் என்றபடியால்தான் அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சுத்தமான குடிதண்ணீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியமைக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் ஊடகங்கள் மூலமாக மன்னிப்புக் கோரியுள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிர்களையும், உடமைகளையும் இழந்தவர்களுக்கு முழு மனதுடன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துத்துக்கொள்வதாக அமைச்சர் பஸில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்தக் கூற்றுத்தொடர்பில் நேற்று கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு, கிழக்கில் அரச படைகளின் திட்டமிட்ட தாக்குதலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் மட்டும் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன. சர்வதேச சமூகத்தினர் மட்டுமல்ல இலங்கை அரச தரப்பினர் கூட அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இதற்கு இலங்கை அரசு இதுவரை மன்னிப்புக் கோரவில்லை. தமிழருக்கு நியாயம் கிடைக்கவில்லை; தீர்வு எட்டப்படவில்லை. இந்தநிலையில் வெலிவேரியா ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு அரசு பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், வடக்கு, கிழக்கில் படையினரின் தாக்குதலால் உயிரிழந்த பாதிக்கப்பட்ட தமிழருக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என்றார் பாராளுமன்ற உறுப்பினர்
சுரேஷ் பிரேமச்சந்திரன்.

10 ஆகஸ்ட் 2013

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக்கொன்றாள்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாய் கணவன் இருந்ததால் அவரை கொலை செய்தோம் என்று நாம் தமிழர் கட்சி பிரமுகர் பசும்பொன் ராஜாவின் மனைவி சரண்யா விசாரணையில் தெரிவித்துள்ளார். திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் இரவு பசும்பொன்ராஜா திருத்தணி நகர எல்லையில் சித்தூர் சாலையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் அவரது மோட்டார்சைக்கிளும், செல்போனும் கிடந்தது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பசும்பொன் ராஜா உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மதியம் பசும் பொன்ராஜா உடல் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது மனைவி சரண்யாவின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நெருங்கி பழகி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சரண்யாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திருத்தணியில் வசிக்கும் கள்ளக்காதலன் சசிக்குமாருடன் சேர்ந்து கூலிப் படையினரை ஏவி கணவரை தீர்த்து கட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சரண்யா, கள்ளக்காதலன் சசிக்குமார், கூலிப்படையைச் சேர்ந்த திருத்தணி இந்திராநகரைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கூலிப்படையைச் சேர்ந்த அதே பகுதியில் வசிக்கும் சுகுமாரை தேடி வருகின்றனர். பசும்பொன்ராஜா, அகூர் பகுதியில் கோணிப்பை தைக்கும் கடை நடத்தி வந்தார். அங்கு கொரியர் கலெக்ஷன் சென்டரும் வைத்திருந்தார். இதில் சசிக்குமாரும், சரண்யாவும் வேலை பார்த்தனர். அப்போது பசும் பொன்ராஜாவுக்கும், சரண்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனாலும் வேலை பார்த்த போது சசிக்குமாருடன் கிடைத்த நட்பை சரண்யா தொடர்ந்தார். பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. சசிக்குமார் அடிக்கடி சரண்யாவை சந்திக்க வீட்டிற்கு வந்தார். கடையில் வேலை பார்த்தவர் என்பதால் பசும்பொன்ராஜாவுக்கு சந்தேகம் வர வில்லை. இதனை சாதகமாக பயன் படுத்திய கள்ளக்காதலர்கள் தனிமையில் ஜாலியாக இருந்தனர். 4 வருடத்திற்கும் மேலாக அவர்கள் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தனர். இதற்கிடையே மனைவியின் தொடர்பு குறித்து அக்கம் பக்கத்தினர் பசும் பொன் ராஜாவிடம் தெரிவித்தனர். இதனால் அவர்களை கண்காணிக்க தொடங்கினார். சில நாட்களுக்கு முன்பு சசிக்குமாரும், சரண்யாவும் ஒன்றாக இருப்பதை பசும் பொன்ராஜா பார்த்து விட்டார். அவர்கள் 2 பேரையும் கடுமையாக திட்டி கண்டித்தார். மேலும் மனைவி சரண்யா வெளியில் செல்ல கட்டுப்பாடுகள் விதித்தார். கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் சரண்யா தவித்தார். கணவர் இருக்கும் வரை ஜாலியாக இருக்க முடியாது என நினைத்த அவர் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார். திட்டம் குறித்து கள்ளக்காலன் சசிக்குமாரிடம் கூறினார். அவரும் கொலை செய்ய ஒப்புக் கொண்டார். இதுபற்றி அவர் அதே பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினர் சுகுமார், நாகராஜிடம் தெரிவித்து கொலை திட்டங்களை வகுத்தனர். நேற்று முன்தினம் வியாபாரம் சம்பந்தமாக வெளியில் செல்வதாக பசும் பொன்ராஜா மனைவி சரண்யாவுக்கு தகவல் கொடுத்து உள்ளார். கணவரை தீர்த்து கட்ட இதுதான் சரியான நேரம் என நினைத்த அவர் இதுபற்றி கள்ளக்காதலன் சசிக்குமார், கூலிப்படையினருக்கு தெரிவித்தார். அவர்கள் பசும்பொன் ராஜாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று வெட்டிக் கொலை செய்து உள்ளனர். மேற்கண்ட தகவல் சரண்யாவிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சுகுமாரும், நாகராஜும் திருநின்றவூரில் ஆட்டோ ஓட்டி கூலிப்படையினராக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கணவரை மனைவியே கள்ளக்காதலனை ஏவி கொன்ற சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் காட்டாட்சி மாநிலத்தில் சுத்துமாத்து ஆட்சி!


வெலிவேரியா சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோரும் ஐக்கிய தேசியக் கட்சி எதற்காக முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையைக் கோரவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் வடமகாண சபைத் தேர்தலில் எல்லா சிங்கள இனவாதக் கட்சிகளையும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார் அவர் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாணையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு ஓங்கி அறையும் சந்தர்ப்பமாக வடமாகாண சபைத் தேர்தலை மக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கேள்வியினை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படியே 40 ஆயிரம் பேர் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வகையில் வெலிவேரியா சம்பவத்தில் சிங்கள மக்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதற்காக இதற்கு சர்வதேச விசாரணையைக் கோரவில்லை. வலி.வடக்கிலும் இன்று சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளது. இவை தொடர்பில் அரசோடு சேர்நதுள்ள ஈ.பி.டி.பி ஏனையவர்களும் மௌனமாக இருக்கின்றனர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று சொன்னார்கள். ஆனால் இன்று மத்தியில் காட்டாட்சி மாநிலத்தில் சுத்துமாத்து ஆட்சி தான் நடக்கின்றது. இலங்கை இந்திய ஒப்பந்ததின் அடிப்படையில் உருவான மாகாண சபை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராக நாங்கள் போட்டியிடுவது இந்த தேர்தலில் போட்டியிடாது விட்டால் அரசிற்கு வேண்டிய அடிவருடிகள் மாகாண சபையைக் கைபற்றி தவறாக செய்திகளை உலகிற்கு சொல்லி விடுவார்கள் என்பதாலேயோகும். கூட்டமைப்பினரின் வெற்றிக்கு அஞ்சியே தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சுயட்சைக் குழக்களையும் களமிறக்கியுள்ளது. அற்ப சொற்ப விடங்களுக்காக மாகாண சபை ஆளும் கட்சியினருக்கு செல்லக் கூடாது. மாகாண சபையைக் கைப்பற்றியதும். நாம் அனைவரும் ஒன்றாக இராஜினமா? கூட செய்யலாம். ஆனால் நடப்பது என்னவென்று தெரியாது. கிழக்கில் 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவினை அடுத்து வடக்கு கிழக்கு பிரிந்தது. இதன் பின்னர் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மாகாண சபைகளின் பிரிப்பினை எதிர்த்து கூட்டமைப்பினர் போட்டியிடவில்லை. இதனால் பிள்ளையான போன்றவர்கள் முதமைச்சராகிய விருப்பதாகாத சம்பவங்கள் நடைபெற்றன. எனவே 2012ஆம் ஆண்டு மாகாண சபைத் தோத்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவினை கூட்டமைப்பு பரீசிலனை செய்து மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது. மாகாண சபை மூலம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஆனால் அதில் இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேசத்திற்கு செய்திகளை கூறுவோம். இலங்கை இந்திய ஒப்பந்த்தில் உருவான மாகாண சபை தமிழர்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வல்ல. இதனை ஒரு ஆரம்ப புள்ளியாகவே எடுத்துக் கொள்ள முடியும். உயிர்நீத்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீர்கள் மற்றும் லட்சக்காணக்கான போராளிகளின் உயிர்த் தியாகங்களுக்கு மாகாண சபை ஒரு தீர்வல்ல. இந்த தேர்தலில் தமிழின அழிப்பு செய்தோரை தோற்கடியுங்கள். தமிழர்களுக்கு நீதி வழங்க வாக்களியுங்கள் என்று தான் கோருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையென்றையே நாம் கோருக்கின்றோம். அதற்கான செய்தியை உலகிற்கு சொல்லும் விதமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஓங்கி அறையும் சந்தர்ப்பமாக வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

09 ஆகஸ்ட் 2013

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அஸ்வர்!

கொழும்பில் இருந்து தமிழ் மக்களை கைது செய்து பஸ் வண்டிகளில் ஏற்றி அனுப்பிய பொது பாராளுமன்றத்தில் தான் மட்டுமே அதற்கு எதிராக குரல் கொடுத்ததாக அஸ்வர் எம்பி ஊடகங்களில் கூறியுள்ளது அப்பட்டமான உண்மைக்கு புறம்பான கருத்தாகும். இலங்கை வரலாற்றில் கருப்பு மையினால் எழுதப்பட்ட இந்த சம்பவம் 2007ம் வருடம் ஜூன் மாதம் 7ம் திகதி நடைபெற்றது. அன்றைய தினத்தில் கொழும்பில் வாழ்ந்திருந்த தமிழர்களை அதிகாலை வேளையில் தட்டி எழுப்பி பஸ் வண்டிகளில் ஏற்றி வடக்கு, கிழக்கு, மலையக நகரங்களுக்கு இந்த அரசாங்கம் அனுப்பி வைத்தது. 2007ம் வருடம் அஸ்வர் எம்பி பாராளுமன்ற அங்கத்தவராக இருக்கவில்லை. அவரது ஐதேக தேசிய பட்டியல் எம்பி பதவி 2004ம் வருடத்துடன் முடிந்துவிட்டது. தற்போது அவர் இன்றைய அரசாங்க எம்பியாக 2010ம் வருடம் மீண்டும் பதவி ஏற்றுள்ளார். இந்நிலை 2007ம் வருடம் பாராளுமன்றத்தில் இல்லாத அவர் எப்படி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்க முடியும்? கொழும்பில் வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் எழுப்பி போராடியவர் எமது தலைவர் மனோ கணேசன் என்பது உலகறிந்த உண்மை. நமது தலைவருடன் இணைந்து, அவ்வேளையில் மகேஸ்வரன் எம்பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில எம்பீக்களும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர். பாராளுமன்றத்தில் அன்றைய நிகழ்வுகளை இடை நிறுத்தி, விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்ததை கூட்ட செய்து நமது தலைவர் இது தொடர்பாக நமது தலைவர் பாரிய பங்காற்றியிருந்தார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் அவ்வேளையில் அங்கத்தவராகவே இருந்திருக்காத அஸ்வர், தமிழர்கள் வெளியேற்றப்பட்ட போது தான் மாத்திரமே பாராளுமன்றத்தில் இருந்து குரல் எழுப்பியதாக இன்று தமிழ் ஊடகங்களில் கூறியிருப்பது பச்சை பொய். இதன்மூலம், அஸ்வர் எம்பி உண்மைக்கு புறம்பாக கருத்து கூறி தமிழ் பேசும் மக்களையும், தமிழ் ஊடகங்களையும் அவமானப்படுத்தியுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவி பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் குகவரதன் மேலும் கூறியுள்ளதாவது, அரசாங்கத்தின் தேவைகளுக்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களுக்குமே அஸ்வர் எம்.பி. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றாரே தவிர தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒருபோதும் அவர் குரல் கொடுத்ததில்லை. கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றபட்ட போது, அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் எமது தலைவர் மனோ கணேசனே தவிர, அன்று அஸ்வர் எம். பி பாராளுமன்றத்திலும் இருக்கவில்லை. தன்னை தமிழர் நலன்விரும்பியாக அஸ்வர் திட்டமிட்டு காட்டிக்கொள்கிறார். இதற்கு பினால் ஒரு சதி இருப்பதாக நாம் சந்தேகப்படுகிம்ன்றோம். இன்று பாராளுமன்றத்தில் எம்பியாக அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தமிழர் எதிர்ப்பு விடயங்களுக்கு ஒத்து ஊதுகின்றார். அது மட்டுமல்ல வடக்கு தமிழ் மக்களின் காணி பறிப்பு விவகாரத்தை சபையில் சம்பந்தன் எம்பி முன்வைத்த போது சட்டப் பிரச்சினையைக் கிளப்பி பாராளுமன்ற சம்பிரதாயங்கள் எனக் கூறி அதை தடுக்க முனைந்தார். பத்திரிகைகளில் அவரது பாராளுமன்ற உரைகளின் உண்மைகளை எழுதினால் அதனை மறுக்கின்றார். அவரது சமீபத்து உரையில் தமிழ் பெண்களை மலினப்படுத்தும் விதமாக அவர் தெரிவித்த கருத்தை நாம் ஆட்சேபித்திருந்தோம். இப்போது தான் அப்படி பேசவில்லை என அவர் கூறுவது வியப்பாக உள்ளது. அவரது பாராளுமன்ற உரையை வெளியிட்ட அனைத்து தமிழ் ஊடகங்களின் சபை நிருபர்களும் ஒரே மாதிரியாக அஸ்வரின் உரையை பதிவு செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்போது தான் அவ்விதமாக உரையாற்றவில்லை என அஸ்வர் பழியை தமிழ் ஊடக சபை நிருபர்களின் தலைகளில் தூக்கி போடுகின்றார். பாராளுமன்றத்துக்கு இருக்கின்ற சிறப்புரிமைகள் காரணமாக தமிழ் ஊடகங்கள் அவரது மறுப்பை பிரசுரித்துள்ளன. ஆனால், இப்போது தான் பாராளுமன்ற உயர்ப்பினராக இல்லாத வேளையில், தான் பாராளுமன்றத்தில் இருந்து குரல் கொடுத்தாகவும், அதுவும் எமது தலைவர் மனோ கணேசன் உட்பட தமிழ் எம்பீக்கள் சும்மா இருந்தார்கள் போன்று அர்த்தப்படும் விதமாக தான் மாத்திரம் குரல் கொடுத்ததாகவும் ஊடகங்களுக்கு கூறுவது பாராளுமன்ற மற்றும் பொது சம்பிரதாயங்களை மீறும் செயல் இல்லையா என அஸ்வர் எம்பீயிடம் நான் வினவ விரும்புகின்றேன். அஸ்வர் எம்.பியவர் பாராளுமன்றத்தில் யாருக்காக குரல் கொடுக்கின்றார் என்பதையெல்லாம் தமிழ் சமூகமும், அவர் சார்ந்த முஸ்லிம் சகோதர சமூகமும் நன்கறியும். தாம் சார்ந்த சமூகத்திற்கே எதுவிதமான நன்மைகளையும் செய்யாத இவர் தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்பை தமிழ் தலைவர்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கி விடுவது நல்லது.

08 ஆகஸ்ட் 2013

அருட்சகோதரியை துப்பாக்கியால் மிரட்டிய சிறிலங்கா படையினர்!

வெலிவெரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கடந்த வியாழக்கிழமை சிறிலங்காப் படையினர் தாக்குதல் நடத்திய போது, அங்குள்ள அந்தோனியார் தேவாலயத்தினுள் நுழைந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக, ஆலய பங்குத் தந்தை தெரிவித்துள்ளார். தேவாலயத்தின் கொங்கிறீட் தூண் ஒன்றிலும், தேவாலய சுவரிலும் துப்பாக்கி ரவை துழைத்த அடையாளங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேவாலயத்துக்குள் ஓடிச்சென்று அடைக்கலம் தேடிய பொதுமக்களை சிறிலங்காப் படையினர் தாக்கியதுடன், பிடித்துச் சென்றதாக, வெளியான தகவல்களை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் நிராகரித்திருந்தார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, தாக்கப்பட்ட தேவாலயத்துக்கு சென்று உண்மையில் என்ன நடந்தது என்று பங்குத்தந்தை வண.லக்பிரிய நொனிசிடம் விசாரித்தார். அவரிடம்தான, தேவாலயத்துக்குள்ளேயும், அதன் சுற்றாடலிலும் அடைக்கலம் தேடி வந்த பொதுமக்கள் எவ்வாறு தாக்கப்பட்டனர் என்று விபரித்ததாக பங்குத் தந்தை தெரிவித்துள்ளார். “உண்மையான ரவைகளால் பொதுமக்கள் சுடப்பட்டனர். பொல்லுகளால் தாக்கப்பட்டனர். அந்தச் சம்பவம் நடந்த போது, அங்கிருந்த சிறிலங்காப் படையினர், உதவிப் பங்குத் தந்தையும், வேறு 5 குருமாரையும் மோசமான வார்த்தைகளால் அவமதித்தது, அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சுமார் 15 சிறிலங்காப் படையினர் துப்பாக்கிகள் மற்றும் பொல்லுகளுடன் தேவாலயத்துக்குள் நுழைந்து, அங்கு அடைக்கலம் தேடி ஒளிந்து கொண்ட பொதுமக்களை தாக்கினர். பொதுமக்களைப் பாதுகாக்க முயன்ற ஒரு அருட்சகோதரி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டார். பொதுமக்களைத் தாக்கி, இழிவான வார்த்தைகளால் மதகுருமாரை திட்டி அவமதித்த இராணுவத்தினரின் செயலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

07 ஆகஸ்ட் 2013

யாழில் மீற்றர் வட்டியால் உயிர் போகிறது!

newsயாழ்ப்பாணத்தில் காசோலை மோசடி அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தற்போது காசோலை மோசடி தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெவ்ரி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற காசோலைகள் இலங்கையின் எந்தப் பாகத்திலும் மாற்றக்கூடிய நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாற்றமடைந்து யாழ்ப்பாணத்தில் வழங்கப்படுகின்ற காசோலைகளை யாழ்ப்பாணத்திலோ அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலேயோ மாற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. முன்னர் தனியார் துறையினரால் வழங்கப்படுகின்ற காசோலைகளாக இருந்தாலும் இலங்கையின் எப்பாகத்திலும் மாற்றிக் கொள்ள முடியும். அவ்வாறானதொரு நம்பிக்கை காணப்பட்டது. ஆனாலும் இன்று காசோலையினை வாங்கவே பயப்படுகின்றனர். தற்போது காசோலையினைக் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் மிகவும் மோசமான முறையிலேயே நடந்து கொள்கின்றனர். நம்பிக்கையற்ற ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் காசோலை விடயத்தில் மிகவும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும். இதேவேளை, மீற்றர் வட்டிக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு அதனை மீள வழங்க முடியாத நிலையிலேயே அதிகமான தற்கொலைகள் இன்று யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. அதன்படி வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது வட்டிக்குப் பணத்தினை பெற்றுக் கொள்பவர்கள் அதனை மீளச் செலுத்த முடியாத வேளையிலும் அதேபோல வட்டிக்குப் பணத்தைப் பெற்று வேறு ஒருவருக்கு வழங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மீள செலுத்தாத சந்தர்ப்பங்களில் விரக்தியடைந்தும் தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் அரச வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்ளுவதன் ஊடாக பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டுக் கொள்ள முடியும் எனவும் எஸ்.எஸ்.பி மேலும் தெரிவித்தார்.

06 ஆகஸ்ட் 2013

ஜெயரட்ணத்திற்கு பதவி உயர்வு வேண்டுகிறார் அவரது மனைவி!

விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள, சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத முறியடிப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்துக்கு, மரணத்தின் பின்னரான பதவிஉயர்வை சிறிலங்கா காவல்துறை அளிக்கத் தவறிவிட்டதாக அவரது மனைவி சரளா ஜெயரட்ணம் விசனம் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறையில், விடுதலைப் புலிகளுக்கு மிகவும் சவாலாக விளங்கிய, இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், புலனாய்வு செய்வதில் நிபுணராக இருந்தவர். இவர் கல்கிசைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து 2005 ஏப்ரல் 20ம் நாள் கடத்தப்பட்டு, வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொல்லப்பட்டதாக கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தநிலையில், தமது கணவருக்கு மரணத்துக்குப் பிந்திய பதவி உயர்வை சிறிலங்கா காவல்துறை கொடுக்கத் தவறிவிட்டதாக அவரது மனைவி சரளா ஜெயரட்ணம் குற்றம்சாட்டியுள்ளார். அவருக்கு மரணத்துக்குப் பிந்திய பதவிஉயர்வு மற்றும் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தாம் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

இன்று ஆடி அமாவாசை விரதம்!

இந்துகளின் முக்கிய விரதங்களில் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் இன்றாகும். தந்தையை இழந்தவர்கள் பிதிர் கடன் செய்யும் புனித ஆடி அமாவாசை தினமாக ஆடி அமாவாசை விளங்குகிறது. பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்று இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கில் உள்ள ஆலயங்களில் ஆடி அமாவாசை விசேட பூசைகள் நடைபெறுகின்றன. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் , மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் கோவில், திருக்கோவில் முருகன் கோவில் ஆகியவற்றில் இன்று தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து தீர்த்த மாடுவார்கள். மட்டக்களப்பு வாழ் மக்கள் மாமாங்கேஸ்வரர் கோவில் தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டு அமிர்தகழி கேணியில் பிதிர் கடனை செலுத்தி தீர்த்தமாடுவர். திருகோணமலை வாழ் மக்கள் கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதிர் கடன் செலுத்துவர். இதேபோன்று கொழும்பு முகத்துவாரம் கோயிலிலும்,சிலாபம்,மாயவனாற்றங் கரையிலும், திருக்கேதீஸ்வரம் பாலாவி கரையிலும் புனித ஆறுகளிலும், நீராடி பிதிர்கடன் நிறைவேற்றுவர். இன்று புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலயம் மற்றும் இந்தன் முத்துவிநாயகர் ஆலயம் மற்றும் வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகியவற்றிலும் விசேட பூசைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.தீவக மக்கள் சாட்டி வெள்ளைக் கடற்கரையில் நீராடி தமது பிதிர் கடனை நிறைவேற்றிக்கொள்வர்.

05 ஆகஸ்ட் 2013

தமிழனை சுடும்போது சிரித்தவர்கள் இப்போ அழுகிறார்கள்!

newsஎனது மகனை வீட்டுக்கு அருகில் சிறிலங்கா படையினர் துரத்திப் பிடித்தே சுட்டுக்கொன்றனர்.அவன் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இன்று தொடங்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அவன் தோற்றவிருந்தான். இவ்வாறு தெரிவித்துள்ளார் நேற்றுமுன்தினம் இரவு மரணமான சாமிலி ரவிசனின் தாயாரான மார்க்ரெட் லூசியன். இதுகுறித்து அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், “எனது மகன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. அவன் எமது வீட்டுக்கு அருகில் வைத்து சுடப்பட்டான். இது போராட்டம் நடந்த இடத்துக்கு அருகில் நடந்த கொலையல்ல. அவர்கள் எமது வீட்டுக்கு அருகே துரத்திப் பிடித்துச் சுட்டனர்.” என்றார். அதேவேளை, தனது பெயரை வெளியிட விரும்பாத, ஒருவர் இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிடுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்டபடி சுட்டனர். பொதுமக்கள் தமது உயிர்களை காப்பாற்ற ஓடத்தொடங்கினர். நாம் ஹெலன்வத்தையை நோக்கி ஓடினோம். எம்மை கறுப்பு சீருடையணிந்த ஏழு எட்டுப் பேர் துரத்திப் பிடித்தனர். அருகில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு ஒளிப்பதிவுக்கருவியை அடித்து நொருக்கி விட்டு அவர்கள் பொதுமக்களை சுடத் தொடங்கினர். அந்தச் சம்பவத்தில் இருவர் சுடப்பட்டனர்” என்று தெரிவித்தார்.

04 ஆகஸ்ட் 2013

புலிகளை அழித்தது அல்லா என்றால் பொதுபல சேனாவை உருவாக்கியதும் அல்லாதான்!

விடுதலைப்புலிகளையும், தமிழர்களையும் அழித்தது அல்லாதான் என்றால் பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்களை அல்லாதான் உருவாக்கினாரா என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாருக் விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என கடந்த 26ம் திகதி பாராளுமன்றத்தில் பேசியது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாருக் அவர்கள் கூறியிருப்பது அவமானமாகவுள்ளது. ஏனெனில் விடுதலைப்புலிகள் யார் அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நன்றாக தெரிந்தும் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்று கூறுவது தமிழ் மக்களை காயப்படுத்தும் விடயம் என்பதுடன் தமிழ், முஸ்லீம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் கருத்தாகவே உள்ளது. நான் கேட்கின்றேன் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்றால் அதே அல்லாதானே விடுதலைப்புலிகளை அழித்து முஸ்லீம்களுக்கு எதிரான பொதுபல சேனா போன்ற அமைப்புகளை உருவாக்கினார் அவர்களின் ஊடாக பள்ளிவாசல்களை உடைக்கச்செய்தார், பர்தா என்ற முஸ்லீம் கலாசார உடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தச்செய்தார் என்ற கேள்விகளுக்கு ஹீனைஸ் பாருக் அவர்கள் பதிலளிக்க முடியுமா? என்னைப் பொறுத்தமட்டில் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்றால் இலங்கையில் முஸ்லீம்களுக்கு நடந்துகொண்டிருக்கும் அநீதிகளையும் அல்லாதான் உருவாக்கினார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே அல்லாவின் பெயரில் அரசியல் நடத்துவதை முதலில் முஸ்லீம் தலைவர்கள் கைவிடவேண்டும். எந்தக்கடவுளும் யாரையும் அழித்து மனிதர்களுக்கு தீங்குசெய்வதில்லை அது அல்லாவாக இருந்தாலும் சரி புத்தர்,ஜெசு,இந்துக் கடவுள்களாக இருந்தாலும் சரி மனிதர்களுக்கு கடவுள் நன்மையையே செய்வார் எனவே இறைவனை வைத்து அரசியல் செய்வதை இவர்கள் கைவிட வேண்டும். அரசாங்கத்தின் வாய்ப்பாட்டை வைத்து அரசியல் செய்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது எங்களுக்கு தெரிந்தவிடயமே ஆனால் இவர்கள் இன்னும் தங்களது அரசியல் இலாபத்திற்காக தனது இனத்தையே காட்டிக்கொடுத்து வாழ்கின்றார்கள் என்பதை முஸ்லீம் மக்கள் புரிந்துகொண்டார்கள் என்றால் சரிதான் என அரியநேத்திரன் தெரிவித்தார்.

சீட்டுக்காசு கட்ட முடியாததால் பெண் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் குடும்ப பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.சுதுமலை பகுதியிலுள்ள எட்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இவ்வாறு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டுக்குச் சென்ற சீட்டுக்காரனின் அவமான பேச்சைத் தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீட்டு, மீற்றர் வட்டி, காசோலை மோசடி போன்ற செயற்பாடுகளால் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது
.

03 ஆகஸ்ட் 2013

சம்பந்தன் பிரசாரத்திற்கு வர வேண்டாம்!

வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு சம்பந்தனை அழைக்க வேண்டாம் என யாழ். தமிழரசுக்கட்சியினர் மாவை சேனாதிராசாவுக்கு தெரிவித்துள்ளனர். சம்பந்தன் மீது யாழ். மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரசார மேடைகளில் ஏறினால் பெரும்பாலான யாழ். மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். இதனால் அவரை யாழ்ப்பாணம் அழைத்து வர வேண்டாம் என யாழ். தமிழரசுக்கட்சியினர் மாவை சேனாதிராசாவுக்கு தெரிவித்துள்ளனர். சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்கு வரும் போது சிங்கள பேரினவாத கொடியான சிங்க கொடியையும் கொண்டு வந்து விடுவார் என்றும் தமிழரசுக்கட்சியில் உள்ள ஒரு சாரார் அச்சம் தெரிவித்துள்ளனர். அண்மையில் அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த மகிந்த ராசபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னை இரகசியமாக சந்தித்து வருகிறார் என்றும் அவர் அரசுக்கு ஆதரவு வழங்கி வருகிறார் என்றும் தெரிவித்திருந்தார். மகிந்த ராசபக்சவை அடிக்கடி சந்தித்து வருபவர் வேறு யாருமல்ல சம்பந்தனே என்றும் அவர் மகிந்தவை சந்தித்து இரகசிய திட்டங்களை தீட்டி வருகிறார் என்றும் யாழ். தமிழரசுக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

02 ஆகஸ்ட் 2013

முள்ளிவாய்க்கால் ஞாபகத்தில் வெலிவேரியாவில் சுட்டு விட்டனர்!

முள்ளிவாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த மக்களை சுட்ட ஞாபகத்தில் வெலிவேரியாவிலும் மக்களை சுட்டுவிட்டனர் -இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஞாபகத்தில் இராணுவத்தினர் வெலிவேரியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ருவான் விஜயரட்ன ஆகியோர் இன்று முற்பகல் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினர். காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பொதுமக்களையும் பார்வையிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் வீட்டுக்கும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் சென்று ஆறுதல் கூறினர். அங்கு நின்ற மக்களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க குழவினர் வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் செயற்பட்ட முறையை நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காண முடிந்தது என்று கூறினர். இராணுவத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் வலியுறுத்தினர் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி:குளோபல் தமிழ் செய்தி

தமிழீழ தேசியக்கொடி​யுடன் மூன்றாம் தலைமுறையின​ர்!

டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 01.08.2013 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது. இவ் சுற்றுப்போட்டியில் America, Malta, Germany, Nertheland, Norway, Sweden, Findland, Island ,Faroe, Islands, Bermuda, உடன் Tamileelam அணியும் கலந்து கொள்கின்றன. இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மதியம் 13:15 மணிக்கு அணிகளின் அணிவகுப்பு Park Alle யில் இருந்து Vildbjerg நகர் ஊடாக Sports Alle யை சென்றடைந்தது. இவ் அணிவகுப்பில் தமிழீழ அணிகள் தமிழீழம் என பொறிக்கப்பட்ட உடையுடன் தமிழீழத் தேசியக் கொடியை தாங்கியவாறு அணிவகுப்பில் வலம் வந்தனர். வேற்று இனத்தவர்கள் தமிழீழ அணியை ஒரு நாடாக அங்கிகரித்து உற்சாகத்துடன் வரவேற்றார்கள். முதல் போட்டில் வாகை சூடிய 15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் மாலை 15:30 மணிக்கு Hovme/ Tistuup அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Hovme/ Tistuup 1 இலக்கையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்றனர். போட்டின் முதல் அரைப்பகுதியில் சங்கீத் சத்தியமூர்த்தி 2 இலக்ககளையும் இரண்டாம் அரைப்பகுதியில் யுகன் பொன்னையா 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 � Mariager 2 மாலை 15:30 மணிக்கு Mariager அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Mariager அணி 2 இலக்குகளையும் தமிழீழ அணி 1 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர். இரண்டாம் அரைப்பகுதியில் ராகவ் சிவகுமார் 1 இலக்கை எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார்.

01 ஆகஸ்ட் 2013

தேர்தலைத் தடுக்க அரசு முயற்சி-விக்னேஸ்வரன்

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இதனால் இந்தத் தேர்தலை ஜனநாயக ரீதியிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமாகாண முதன்மை வேட்பாளர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்குஅவர் மேலும் தெரிவித்ததாவது: அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதையே விரும்புகின்றது. இங்கு ஆளுநரும், ஒரு சில அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளைச் சட்ட ரீதியாகக் கடமைகளைச் செய்யவிடாது தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்குதல் காரணமாகவே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். ஜனநாயக ரீதியில் கூட தடுக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்றார்.