பக்கங்கள்

23 மே 2015

காணவில்லையென தேடப்படும் இளம்பெண் இவர்தான்!

யாழ்ப்பாணம், வேலணை கிழக்கு, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் விமலினி (வயது 20) என்ற யுவதியை வியாழக்கிழமை (21) முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள நண்டு பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தச் யுவதி, வியாழக்கிழமை (21) காலை வேலைக்குச் சென்று, இதுவரையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.முன்னர் நாரந்தனையை சேர்ந்தவர் என செய்திகள் வந்திருந்தமையால் நாமும் அதை பிரசுரித்திருந்தோம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

22 மே 2015

நாரந்தனையை சேர்ந்த இளம்பெண்ணை காணவில்லை!

நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரோஜினி (20) என்பவரே காணாமல் போயுள்ளார். இவரது தாயார் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கடந்த 11ம் திகதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். முல்லைத்தீவில் உள்ள தனது கணவரை பார்ப்பதற்காக செல்வதாக கூறி, இரண்டரை வயதான தனது குழந்தையை தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர் முல்லைத்தீவிற்கும் வந்து சேரவில்லையென அவரது கணவர் கூறியுள்ளார். ஏற்கனவே தீவகத்தில் வித்தியா காணாமல் போய், பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கொந்தளிப்பு அடங்குவதற்கு முன்னர் மீண்டும் அந்த பகுதியில் இளம்பெண்ணொருவர் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 மே 2015

வித்தியா கொலையாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும்!

புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு, படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். புலிகளின் காலத்தில் இத்தகைய பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றதில்லை. அப்படி நடந்தால் 24 மணித்தியாலத்தில் தண்டனை வழங்கிவிடுவர் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இந்த நாடாளுமன்றத்தில் எனது துக்கத்தை வெளிப்படுத்துகிறேன். மேற்படி மாணவி படுகொலை செய்யப்பட்டு ஏழு தினங்களாகின்றன. இதனால் இன்று வட மாகாணம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, யாழ்ப்பாணத்தின் இயல்புநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி கடத்தப்பட்ட மறுதினம் அதிகாலை 6 மணியளவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் 9 மணிக்கே வருகை தந்தனர். முன்னதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற தாயார் நான்கு மணித்தியாலங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது தேவையற்ற விடயமாகும். அதுமாத்திரமன்றி, குறித்த மாணவி சிநேகிதனுடன் சென்றிருக்கலாம் எனக் கூறியுள்ளதுடன், மறுநாள் வந்து முறையிடுமாறு பொறுப்பின்றிய நிலையில் அசட்டையாகச் செயற்பட்டுள்ளனர். மாணவி மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை ஆகியவற்றுடன் 10 பேருக்கு தொடர்புள்ளது. இதில் வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் அடங்குகிறார். கடந்த காலங்களிலும் இப்பிரதேசங்களில் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள், சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தல் போன்ற குற்றச்செயல்கள் இடம்பெற்றன. அங்கு இயங்கி வருகின்ற ஆயுதக்குழுக்களாலேயே இந்தக் குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறுமிகளை, யுவதிகளை, பெண்களை படுகொலை செய்து கிணறுகளில் போட்டு புதைத்ததும் இந்த ஆயுதக்குழுக்களே ஆகும். இன்று வடக்கில் குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அங்கு இயங்குகின்ற ஆயுதக்குழுவே இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் அசட்டையாக இருக்கின்றனர். மேற்படி ஆயுதக்குழுக்கள் இன்று பலவந்தமாக பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகளையும், உடைகளையும் பறித்து அலுவலகங்களை நடத்திவருகின்றன. எனவே, வடக்கில் இருக்கின்ற ஆயுதக்குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சகலரையும் பொதுமக்களின் முன்னிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்தவேண்டும். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக பதவி விலக்கவேண்டும்'' என்றார்.

19 மே 2015

சுவிசிற்கு தப்பிச்செல்ல முயன்ற மகாலிங்கம் சிவகுமார் கைது!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேகநபர் இன்று பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுவிஸிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், சந்தேகநபரான மகாலிங்கம் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சுவிஸிலிருந்து இலங்கை வந்திருந்த மகாலிங்கம் சிவகுமார் என்பவருக்கு வித்யா கொலையுடன் நேரடித்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த புங்குடுதீவு பிரதேச மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முற்பட்டனர்.அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்குச் சென்ற சட்டத்தரணி வி.ரி.தமிழ்மாறன் பொதுமக்களுடன் கலந்துரையாடி குறித்த நபரை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அவரைத் தான் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாகவும் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் பிரதேசமக்கள் குறித்த சந்தேகநபரை சட்டத்தரணியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், வித்தியாவின் கொலை தொடர்பில் வடமாகாண பொலிஸ் மாஅதிபருடன், சட்டத்தரணி தமிழ்மாறன் குறித்த பகுதிக்கு இன்று காலை மீண்டும் சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையில், சந்தேகநபர் மகாலிங்கம் சிவகுமார் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ளதாகவும், அவர் சுவிஸ்ஸிற்கு இன்று பிற்பகல் தப்பிச் செல்லவுள்ளதாகவும் பிரதேச மக்களுக்கு கிடைத்த செய்தியினை அடுத்து அவர்கள் சட்டத்தரணியிடம் கேள்வியெழுப்பியதுடன், சந்தேகநபரை ஒப்படைக்குமாறும் கோரினர். இதனையடுத்து, இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், வி.ரி.தமிழ்மாறனின் வாகனத்தை முற்றுகையிட்டு பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17 மே 2015

புங்குடுதீவில் மாணவி படுகொலை!மேலும் ஐவர் கைது!

நல்லூரில் போராட்டம்
புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவி வித்யாவின் கொடூரமான கொலைக்கும், பாலியல் பலாத்காரத்துக்கும் இவர்களே காரணம் என கண்டறிந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஐந்து பேரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்துள்ளதாகவும், காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்த ஊர் மக்கள், அவர்களை காவல்துறையினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக காவல்துறையினருடைய வாகனத்தைச் செல்லவிடாமல் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களைப் பாதுகாப்பாக குறிகட்டுவான் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, அந்த காவல் நிலையத்தையும் ஊர் மக்கள் சூழ்ந்து கொண்டதாகவும், இதனால் அங்கும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊர் மக்கள் திரண்டு கைது செய்யப்பட்டவர்களைக் கைப்பற்ற மேற்கொண்டுள்ள முயற்சியையடுத்து, புங்குடுதீவுக்கு மேலதிக காவல்துறையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அறிந்து அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புங்குடுதீவு மாணவி வித்யா பாடசாலைக்குச் சென்றபோது கடத்தப்பட்டு மறுநாள் காலை காட்டுப்பாங்கான பகுதியில் கோரமாகக் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ஏற்கனவே மூன்று பேரைக் கைது செய்திருந்தனர். அவர்களை மே மாதம் 28ஆம் தேதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இந்த ஐந்து பேர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கையின் வடபகுதியில் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்கக் கோரியும் பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

15 மே 2015

புலிகளின் காலத்தில் பெண்களால் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது!

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்தனமானது என்று சிலர் குறிப்பிட்டார்கள். நான் அவ்வாறு சொல்லமாட்டேன். மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத கொடுஞ்செயல் இது. இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்தப் பிறவியிலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. போருக்குப் பிறகு இதுபோன்ற கொலைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகிரித்துள்ளன. இவற்றின் பின்னணியில் போதைப்பழக்கம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. என்றும் இல்லாத வகையில் இளைய தலைமுறையிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. எமது இளைய தலைமுறையைத் தவறான பாதையில் வழிநடத்துவதன்மூலம் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்கிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது. இப்போது கடும்குற்றவாளிகள்கூட சுதந்திரமாக நடமாடக்கூடியதாக உள்ளது. எனவே, எமது இளைய தலைமுறையின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் குறித்துப் நாம் விழிப்பாயிருக்க வேண்டும். வடக்கு மாகாண சபையும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீர்க்கமான வழிமுறைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ்வஞ்சலி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.

14 மே 2015

புங்குடுதீவில் பாழடைந்த வீட்டிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை புங்குடுதீவினில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படடுள்ளார். நேற்றுப்புதன்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி பற்றி தகவல் கிடைத்திராத நிலையினில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர். அவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைத்துள்ளனர்.

09 மே 2015

ஊர்காவற்றுறையில் இளைஞர் தற்கொலை!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்குளி வீதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 37 வயதுடைய வில்யம் விமலசிறி என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் தன் மனைவியுடன் இடம்பெற்ற குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

08 மே 2015

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் நாளை கொடியேற்றம்!

ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை (09.05.2015)சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் திருவிழா நடைபெறும்.எட்டாம் திருவிழாவான (16.05.2015)சனிக்கிழமை வேட்டைத் திருவிழாவும்,(17.05.2015)ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்,(18.05.2015)திங்கள்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.அதைத் தொடர்ந்து (19.05.2015)செவ்வாய்க்கிழமை வைரவர் பொங்கல் இடம்பெறும்.

07 மே 2015

ஐ.எஸ் பாணியில் யாழில் புதிய இயக்கம்!

மத்தியகிழக்கு நாடுகளில் கடும் தண்டனைகளின் மூலம் புகழ்பெற்ற ஐ.எஸ் இயக்கத்தின் பாணியிலான இயக்கமொன்று யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரௌடித்தனம், புகைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் செய்யும் வாலிபர்கள் மற்றும் குட்டையான கவர்ச்சியான ஆடைகள் அணியும் பெண்களின் கைகளை வெட்டவுள்ளதாக எச்சரிக்கைவிட்டு அனாமதேய சுவரொட்டிகள் குடாநாட்டின் பல இடங்களிலும் நேற்று ஒட்டப்பட்டிருந்தது. யாழ்க்குடாவில் ரௌடித்தனங்கள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய குற்றங்களிற்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர், யுவதிகள் எல்லைமீறி சென்றால் எப்படியான தண்டனைகள் வழங்கப்படும் என அதில் விபரிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் பொதுமக்களிற்கு இடையூறு விளைவித்தல், வாள்வெட்டில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களிற்கு கை துண்டிக்கப்படும் என்றும் மாலை 6 மணிக்கு பின்னர் சந்திகளில் மூன்றுபேருக்கு மேல் கூடி நின்றால், பொது இடத்தில் கும்பலாக சிகரெட் புகைத்தால் தண்டனை வழங்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெண்களிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரைகுறை ஆடையணிந்து சென்றால் அவர்களிற்கும் தண்டனை வழங்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எம்.கே.ஓ என்ற அமைப்பு அதற்கு உரிமை கோரியுள்ளது.

05 மே 2015

39-வது அகவையில் கால் பதிக்கிறது தமிழீழ விடுதலைப்புலிகள்!

தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 39-வது அகவையில் கால் பதிக்கிறது.1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.ரி.ரி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார். தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின் போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள். உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள். அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர். இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர். குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது. போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள். ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்று உறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:
 01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அன்ரணி. சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு. 02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி 03. வான்படை 04. கரும்புலிகள் 05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு. 06. புலனாய்வுத்துறை 07. வேவுப்பிரிவு 08. ஒளிப்பதிவுப் பிரிவு 09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு 10. கணணிப் பிரிவு 11. மாணவர் அமைப்பு 12. தமிழீழ வைப்பகம் 13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 14. அனைத்துலகச் செயலகம் 15. சுங்கவரித் துறை 16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் 17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி 18. அரசறிவியற் கல்லூரி 19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு 20. வன வளத்துறை 21. தமிழீழ நிதித்துறை 22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் 23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள் 24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை 25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்) 26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்) 27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்) 28. வெற்றிமனை (வலுவிழந்தோர்) 29. அன்பு இல்லம் (முதியோர்) 30. பொத்தகசாலை 31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ் 32. ஈழநாதம் செய்தி இதழ் 33. வெளிச்சம் செய்தி இதழ் 34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை 35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி 36. நிதர்சனம் 37. புலிகளின் குரல் வானொலி 38. மாவீரர் பணிமனை 39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான) 40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது) 41. சேரன் வாணிபம் 42. சேரன் சுவையகம் 43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு 44. பாண்டியன் வாணிபம் 45. பாண்டியன் சுவையூற்று 46. சோழன் தயாரிப்புகள் 47. வழங்கற் பிரிவு 48. சூழல் நல்லாட்சி ஆணையகம் 49. நிர்வாக சேவை 50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு 51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு 52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு 53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம் 54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை 55. தமிழீழ விளையாட்டுத்துறை 56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்