பக்கங்கள்

31 மே 2016

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர். 20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், ‘நெல்லை நடேசன்’ என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டு இயங்கிவரும் ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.மட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர். இனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார். எதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன். மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தல் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்ரங்களையும் வெளிக்கொண்டு வந்தவர். பல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது.நாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும். ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர். இவர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை.

28 மே 2016

வசதியான நாளில் சந்திக்கலாம் என ஜெயலலிதா பதில்!

ஜெயலலிதா ஜெயராம்
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு - கிழக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ் மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து சி.வி. விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியிருக்கும் விக்னேஸ்வரன், தமது நாட்டின் தமிழ் பேசும் மக்களின் வருங்காலம் பற்றியும், உரிமைகள் பற்றியும் ஜெயலலிதா வெகுவாக சிந்தித்து, செயலாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வாழும் தமது மக்களின் குறைகளைத் தீர்க்க எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகவும், ஜெயலலிதாவைச் சந்தித்து தமது நாடுகளின் பரஸ்பர உரிமைகள், தேவைகள் குறித்து ஆராய ஆவலாக உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.போரினால் பாதிக்கப்பட்ட தங்களது பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தும் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆராய விரும்புவதாகவும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பதில் கடிதம் விக்னேஸ்வரனின் இந்தக் கடிதத்திற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து பதில் எழுதியுள்ளார்.இலங்கைத் தமிழர் நலன் காக்க அவர்கள் உரிய நீதியைப் பெற தன்னால் இயன்ற நடவடிக்கைகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் எடுத்துள்ளதாகவும் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியுள்ளார். இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம் என்றும் ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

25 மே 2016

பண்ணைக் கடலுக்குள் பாய்ந்தது பயணிகள் ஊர்தி!

மண்டைதீவுக் கடலில் பாய்ந்து இ.போ.ச.பஸ் விபத்து! 16 பேருக்கு காயம்!!அல்லைப்பிட்டிச் சந்திக்கும் மண்டைதீவுச் சந்திக்கும் இடையே பண்ணை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் ஊர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இன்று புதன்கிழமை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை  ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என 16 பேர் காயமடைந்தனர்.ஊர்தியின் ரயர் வெடித்ததில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி,வீதி எல்லைக் கற்களை உடைத்துக் கொண்டு கடலில் பாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்த ஊர்தியில் 45 பயணிகள் வரை பயணித்தனர் எனவும் காயமடைந்த அனைவரும் யாழ்,போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

21 மே 2016

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் கொடியேற்றம்!

புளியங்கூடல் செருத்தனைப்பதி ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 10.06.2016 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி பதினெட்டு தினங்கள் விழா பெரும் பக்தி நயத்துடன் இடம்பெறவுள்ளது.கொடியேற்றத்திற்கு முதல் தினமான 09.06.2016 வியாழக்கிழமை விநாயகர் வழிபாடும்,கிராமசாந்தியும் இடம் பெறும்.அதைத்தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை 10.06.2016 அன்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 தினங்கள் விழா சிறப்புற நடைபெறும்.14ம் திருவிழாவாகிய 23.06.2016 வியாழக்கிழமை வேட்டைத்திருவிழாவும்,16ம் திருவிழாவாகிய 25.06.2016 சனிக்கிழமை காலை 08:00 மணிக்கு இரதபவனியும்,26.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 18ம் திருவிழாவாகிய மறுநாள் 27.06.2016 திங்கட்கிழமை பூங்காவனத்திருவிழாவுடன் ஆலய வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவுறும்.

14 மே 2016

சந்திரிகா விசாரணைக்கு தயாரா என சிவாஜிலிங்கம் கேள்வி!

சந்திரிகா
நவாலி, செம்மணி, நாகர்கோவில் படுகொலைகள் குறித்த விசாரணைகளுக்குத் தயாரா என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் சவால் விடுத்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.தமிழினப் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானோருக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையிலே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இத்தகைய நிலையில் நான் அவரிடம் நேரடியாகவே கேட்கிறேன், நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது இடம்பெற்ற போர்க்குற்றங்களை இனப்படுகொலையை விசாரிக்க முடியுமா? குறிப்பாக நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதல், செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகள், நாகர் கோவிலில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்கள் மீதான படுகொலை போன்ற படுகொலை சம்பவங்கள் நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றவையே. இவற்றை உங்களால் விசாரணை செய்ய முடியுமா? ஆகவே போர்க்குற்றங்களை விசாரிப்போம், விசாரிக்கின்றோம் என ஐக்கிய நாடுகள் சபைக்கு பூச்சுற்றுகின்ற நடவடிக்கைகளையே மேற்கொள்கிறீர்கள். மேலும் நாம் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளையும் அத்துடன் எமது விடுதலைக்காக போரிட்டு உயிர்நீத்த போராளிகளையும் தளபதிகளையும் நாம் நினைவு கூருவோம். ஏனெனில் புலித்தேவன், நடேசன் போன்றோர் இறுதி நேரத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போது அவர்களை இலங்கைப் படைகள் படுகொலை செய்திருந்தனர். எனவே படுகொலைசெய்யப்பட்ட அனைவரையும் நாம் நினைவுகூருவோம். நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் அஞ்சலி செலுத்திய போது பொலிஸார் அங்கிருந்த மக்களையும் பாடசாலை அதிபரையும் மிரட்டியிருந்தனர். தற்போதும் கூட நாம் இந்த நினைவஞ்சலியை புலனாய்வாளர்கள் சூழவே நடத்தி வருகின்றோம். ஆகவே நினைவஞ்சலி நடாத்துவதற்கு எத்தகைய தடங்கல் வரினும் அவற்றை கடந்து நாம் இதனை நடத்துவோம். ஏனெனில் படுகொலை செய்யப்பட்ட எமக்காக மரணித்த எம் உறவுகளை நினைவு கூருவதனுடாகவே எமக்கான தீர்வும் நீதியும் கிடைக்கும் என்றார்.

12 மே 2016

மைத்திரிக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் நேற்று பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. லண்டனில் அமைந்துள்ள பொதுநலவாய அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இந்த போராட்டம் நடைபெற்றது. இறுதிக்கட்ட போரின் இறுதி ஐந்து மாதங்களில் 70 ஆயிரம் தமிழ் மக்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் மஹிந்த ராஜபக்ச மாத்திரமன்றி போரின் இறுதி நாட்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பொறுப்புக்கூற வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை கூறுகிறது. யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய அரசாங்கமும், தமிழர்களுக்கான உரிய தீர்வுத் திட்டங்களையோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியையோ வழங்க மறுத்துவருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. புதிய அரசாங்கமும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை அதனாலேயே அவற்றுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

11 மே 2016

ஊர்காவற்றுறையில் பெண்ணுடன் சேஷ்டை மூவர் கைது!

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியருடன் சேஷ்டை விட்ட மூவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- வழமைபோன்று வீதியால் கடமைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஊழியருடன் மதுபோதையில் வந்த மூவர் சேஷ்டை விட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாகவே வைத்தியசாலைப் பணிப்பாளரூடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.இது தொடர்பில் அந்தப் பெண் ஊழியரை அழைத்துக்கொண்டு அவர்கள் தப்பிச்சென்ற வழியால் விரைந்த பொலிஸார், அங்குள்ள ஆலய அன்னதான மண்டபத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவர்களை பெண் ஊழியர் அடையாளம் காட்டியதை அடுத்து கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 போத்தல் கள்ளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

10 மே 2016

சுவிஸ் குமார் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு நீதிபதி கடும் உத்தரவு!

யாழ்,புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார், யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படும் நிலையில், அவர் என்ன அடிப்படையில் கொழும்பு சென்றார்? அவர் யாருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்? என்பது பற்றியும், அவர் தொடர்பான தகவல்கள் தொடர்பிலும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன்போது சந்தேகநபர்கள் 10 பேர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் முன்னிலைகியிருந்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தனர். அங்கு சமர்ப்பணம் செய்த சட்டத்தரணி கே.சுகாஸ், "வழக்கில் சந்தேகநபராகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள 9ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் எனவும், பின்னர் கொழும்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார் எனவும் அறிந்தோம். குறித்த நபர் யாழ்.பொலிஸ் நிலையத்தல் சரணடைந்திருந்தால் பின்னர் எவ்வாறு கொழும்புக்குச் சென்றார்? கொழும்பில் எவ்வாறு கைதுசெய்யப்பட்டார்? இவை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட வேண்டும்" - என்று கோரினார். சட்டத்தரணி வி.மணிவண்ணன், "வித்தியாவின் குடும்பத்தினர் நீதிமன்றுக்கு வந்து செல்லும்போதெல்லாம் சந்தேக பர்களின் உறவினர்கள் வித்தியாவின் குடும்பத்தினரை இகழ்கின்றனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அதனால் நீதிமன்றுக்கு வருவதற்கு அச்சமாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்" - என்று கோரினார். அதன்பின்னர் நீதிவான் பல கட்டளைகளைப் பிறப்பித்தார். அதில், "சுவிஸ் குமார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் நின்றமையானது, கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா? அவர் தானாகச் சென்று சரணடைந்தாரா? அல்லது வேறு யாராவது பாரப்படுத்தினார்களா? வேறு நபர்கள் பாரப்படுத்தியிருப்பின் அவர்களின் பெயர் விவரங்கள் என்ன? வேறு நபர்கள் எனின் அவர்களுக்கும் சுவிஸ் குமாருக்கும் இடையிலான சம்பந்தம் என்ன? வேறு நபர்கள் எனின் அவர்கள் இந்த வழக்கில் அவ்வாறு செயற்பட வேண்டிய சட்ட தேவைப்பாடு அல்லது காரணம் உள்ளனவா? சுவிஸ் குமார் சம்பவ இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தால் அவர் எவ்வாறு கொழும்பு சென்றார்? அதற்கு யாராவது உதவியிருந்தால் அவர்களது பெயர் விவரங்கள் என்ன? யாழ். பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்திருந்தால் அதற்கான சட்ட ரீதியான குறிப்புக்கள் உள்ளனவா? அந்தக் குறிப்புக்கள் பேணப்பட்டனவா?சரணடைந்திருந்தால் அவர் ஏதாவது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டாரா? அவர் கொழும்புக்குச் சென்றது பொலிஸ் கட்டுக்காவலிலா அல்லது சாதாரணமாகவா? சாதாரணமாகச் சென்றிருந்தால் அவர் பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டாரா? அவர் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டால் யாரால், எந்தச் சட்டப்படி, எந்த ஏற்பாட்டில் விடுதலை செய்யப்பட்டார்? சுவிஸ் குமார் எத்தனை அலைபேசிகள் பயன்படுத்தினார்? அவரது அலைபேசிக்குரிய அறிக்கைகள் பொலிஸாரால் பேணப்பட்டுள்ளதா? சம்பவம் இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் வரையும் சம்பவம் நடந்த பின்னரான ஒரு வாரம் வரைக்கும் அவர் தொடர்பு கொண்டிருந்த அலைபேசிகளின் ஒலிப்பதிவு, ஆவணங்கள் பொலிஸாரால் திரட்டப்பட்டதா? யாராவது அவருடன் தொடர்புகள் கொண்டிருந்துள்ளனரா? அவ்வாறான தொடர்புகள் இருந்திருப்பின் சாதாரண வழக்குப் போன்று பொலிஸார் குறித்த அலைபேசி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அந்தத் தகவல்களைப் பெற்றிருந்தனரா? இந்த விடயங்கள் தொடர்பில் அதன் பின்னர் பொலிஸாரால் அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? விசாரணை செய்யப்பட்டிருப்பின் பொலிஸ் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? அவ்வாறு ஏதாவது இருப்பின் அவற்றை அடுத்த வழக்கு விசாரணையில் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தனித்தனியே பதிலளித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" - என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் உத்தரவிட்டார். தவிர வித்தியாவின் குடும்பத்தினர் அச்சுறுத்தப்படும் விடயத்துக்கு அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும். பொலிஸார் அந்த விடயத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் நீதியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிவான் அதில் தெரிவித்தார். அதனையடுத்துச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு நீடிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை, மாணவி வித்தியா படுகொலை முதலில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களினதும் விளக்கமறியலை நீடிப்பது தொடர்பான விசாரணை யாழ்.மேல்நீதிமன்றில் நாளை புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

03 மே 2016

நாம் தமிழர்,பாமக இரண்டுமே இனி பிரதான கட்சிகள்!

தமிழகத்தின் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டுமே தமிழக மக்களை ஏமாற்றி ஊழல் புரிந்து ஆட்சி செய்து வந்த கட்சிகள்.இன்றுவரை இவை இரண்டு கட்சிகளையுமே பிரதான கட்சிகள் என ஊடகங்கள் பறைசாற்றி நிற்கின்றன.ஆனாலும் இன்று தமிழக மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துவரும் கட்சிகளாக நாம் தமிழர் கட்சியும்,பாட்டாளி மக்கள் கட்சியும் நோக்கப்படுகின்றன.அதற்கான காரணம் யாதெனில்,அவை இரண்டும்தான் உண்மையான தமிழ்க்கட்சிகள் ஆகும்.திராவிடக்கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டுள்ள மற்றைய கட்சிகளை தமிழக மக்கள் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை.ஊழல் கட்சிகளான இரண்டு திராவிடக் கட்சிகளில் ஏதாவது ஒன்றை மீண்டும் ஆட்சியில் அமரவைத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில ஊடகங்கள்.உட்கட்சி மோதல்களாலும்,வாக்காளர்கள் மீதான மக்களின் எதிர்ப்பினாலும் திணறிக் கொண்டிருக்கின்ற இந்த திராவிடக்கட்சிகள் எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற அவாவில் பல வழிகளிலும் முயன்றுகொண்டிருக்க,தமிழக மக்களின் மனங்களை வென்று வருகின்ற நாம் தமிழர் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகள் என்ற இடத்தை பிடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.