பக்கங்கள்

31 டிசம்பர் 2011

பலாலி ஆசிரியர் கலாசாலையை கையகப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்!

பலாலி ஆசிரியர் கலாசாலையைப் பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்தால் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு கல்வியியலாளர்களும், ஆசிரியர் தொழிற்ச் சங்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பலாலி ஆசிரியர் கலாசாலைக் காணியும் கட்டடத் தொகுதியும் உள்ளடங்கிய வளாகம் கல்வி அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியாகத் தமிழ், முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இந்தக் கலாசாலை விசேட பயிற்சியளித்து வந்தது. தற்போது பலாலி ஆசிரியர் கலாசாலை அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் திருநெல்வேலியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கிவருகிறது.
போர் நிறைவுக்கு வந்த பின்னராவது கலாசாலை சொந்த இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கை கல்விச் சமூகத்திடம் இருந்தது.
இந்த நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கும் வகையில் பலாலி கலாசாலையை கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கவுள்ளது. இதனை எமது சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது. கலாசாலையை மீண்டும் சொந்த இடத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர் தொழிற் சங்கங்கள், ஆசிரியர்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும்.
இதனைப் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளித்தால் நாடு முழுவதும் கல்வியாளர்களை ஒன்று திரட்டிப் பெரும் போராட்டம் செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டது.

30 டிசம்பர் 2011

யாழ்,மாநகரசபை கூட்டத் தொடரில் மோதல்.

யாழ்,மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தொடர் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கைலப்பு இடம்பெற்றுள்ளது.
ஆளும்கட்சி உறுப்பினர்களான மங்கள நேசன், நிஷாந்தன், விஜயகாந் ஆகியோரே மோதலில் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து விசேட பொலிஸ் உத்தரவிற்கமைய மேற்படி உறுப்பினர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பதினொருபேர் காணாமல் போனதாக கூறப்படுவதில் உண்மையில்லை என பொலிசார் மறுப்பு.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சடலத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பதினோரு பேர் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார் மறுத்துள்ளனர்.
கடந்த 19ம் திகதி இந்தியாவில் இருந்து எடுத்துவரப்பட்ட சடலத்துடன் கட்டுநாயக்காவில் இருந்து சென்ற பதினொரு பேர் மாங்குளத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் காணாமல் போனதாக பேரின்பராசா நளாயினி என்பவர் யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட தவபாலன் தனஞ்செயன் என்பவர் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் இத்தகைய சம்பவம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறிப்பிட்ட ஒரு சம்பவம் நடைபெறவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி.

இவ்வாண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்டையில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சித்தியடைந்தவர்களில் 3 ஆயிரத்து 687 பேர் மூன்று பாடங்களிலும் 'A" தர சித்திகளை பெற்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தப் பரீட்சையில் பாடசாலை ரீதியில் இரண்டு இலட்சத்து 3 ஆயிரத்து 823 பேரும் தனிப்பட்ட முறையில் 35 ஆயிரத்து 801 பேருமாக மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 624 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
சித்தி பெற்றோரின் அடிப்படையில், விஞ்ஞான பிரிவில் 422 பேரும், கணித பிரிவில் 310 பேரும், வணிக பிரிவில் 800 பேரும், கலைப் பிரிவில் 2 ஆயிரத்து 146 பேரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவில் 2 பேரும் மூன்று பாடங்களிலும் 'A" தர சித்திகளை பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

29 டிசம்பர் 2011

சடலத்துடன் ஏழாலை சென்ற 11பேர் காணாமற் போயுள்ளனர்!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சடலம் ஒன்றுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணம் செய்த 11பேர் காணாமற் போயுள்ளனர்.
இந்திய மருத்துவமனை ஒன்றில் கடந்த 18ம் நாள் மரணமான 38 வயதான தனஞ்சயன் என்பவரின் சடலம், கடந்த 19ம் நாள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டிருந்தது.
அங்கிருந்து வாகனம் ஒன்றின் மூலம் சடலம் யாழ்ப்பாணம், ஏழாலை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தில் இறந்தவரின் உறவினர்கள் 11 பேர் பயணம் செய்திருந்தனர்.
கடந்த 20ம் நாள் அதிகாலை 1 மணியளவில் சடலத்துடன் தாங்கள் ஓமந்தைக்கு வந்து விட்டதாக, இறந்தவரின் சகோதரியான கொழும்பு ஜெயவர்த்தனபுர மருத்துவமனை மருத்துவர் விமலச்சந்திரா குமுதா தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார்.
பின்னர் காலை 11 மணியளவில் பனிக்கன்குளத்தில் நிற்பதாகவும், சடலத்தை எடுத்து வந்த வாகனத்தின் சக்கரங்களின் காற்றுப் போய்விட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
மீண்டும் மாலை 5 மணியளவில் வாகனம் இயங்கவில்லை என்றும் திருத்தியதும் புறப்படுவதாக கூறியிருந்தார்.
எனினும் இரவு வரை சடலமோ அதனுடன் பயணம் செய்தவர்களோ ஏழாலைக்கு வந்து சேரவில்லை. அவர்களுடனான தொலைபேசித் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 21ம் நாள் காலை தம்மை யாரோ சடலத்துடன் கடத்திச் சென்று காட்டில் வைத்திருப்பதாக உறவினர்களில் ஒருவர் தகவல் தெரிவித்ததுடன், தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பணியகத்திலும், புளியங்குளம் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட வாகனத்தில் இறந்தவரின் மனைவி, மூன்று பிள்ளைகள், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் நிகொட் திட்ட அதிகாரி நிரஞ்சன் மற்றும் அவரது மனைவி, அவர்களின் மூன்று பிள்ளைகள், சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்களுடன் வாகனத்தின் சாரதியும் காணாமற் போயுள்ளார்.

இலங்கையின் கொலைக்களம்"ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்த்தாராம்.

இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.
இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். பான் கீ மூன் இலங்கையின் கொலைக்களம் காணொளியை பார்த்தாரா? இல்லையா? என்பதற்கு ஆம் அல்லது இல்லை என்பதையாவது குறிப்பிடுமாறு நேற்று (28) மின்னஞ்சல் மூலம் இன்ன சிட்டி பிரஸ் மார்டின் நெசர்க்கியிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இக்கேள்விக்கு நான்கு மணித்தியாலங்கள் கழித்து பதிலளித்துள்ள மார்ட்டின், ஆம் என கூறியுள்ளதாக இன்ன சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின் கொலைக்களம் காணொளியை பான் கீ மூன் எப்போது பார்வையிட்டார். அது தொடர்பாக அவரின் நிலைப்பாடு என்ன என்றும் இன்ன சிட்டி பிரஸ் மின்னஞ்சல் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் தொடர்கிறது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும் பான் கீ மூன் ஆராய்கிறார். பின்னர் இது குறித்தும் கருத்துக்கள் வெளியிடப்படும். என மார்டின் நெசர்கி அக்கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

28 டிசம்பர் 2011

ஸ்ரீலங்காவில் அர்த்தமுள்ள எந்த நல்லிணக்கமும் காணப்படவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிக்கட்டப் போரின்போது சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமானளவு விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது குறித்து தாம் பெருமைப்படுவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.
ஆறு பத்தாண்டுகளைக் கொண்ட ஐ.நா வரலாற்றில், பாதுகாப்புசபையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் முதல்முறையாக கடந்த ஆண்டு கனடா தோல்வியைச் சந்தித்தது குறித்தும், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்தும் நேற்று கனடிய ஊடகங்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஆபிரிக்காவில் ஒரு பாலுறவில் ஈடுபடுவோரின் உரிமைகள் குறித்து பேசாதிருந்திருந்தாலோ, சிறிலங்கா தொடர்பான எமது கவலைகளை வெளிப்படுத்தாமல் மெளனமாக இருந்திருந்தாலோ, ஈரானின் மனிதஉரிமை மீறல்கள் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்திருந்தாலோ, ஐ.நா பாதுகாப்புச்சபை உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் எமக்கு வாக்குகள் கிடைத்திருக்கும்.
ஆனால் நாம் அப்படி செய்யவில்லை. நாம் எதைப் பற்றியும் வருந்துவதாக நான் நினைக்கவில்லை. எமக்கு எதிராக ஈரான் வாக்களித்திருக்கலாம். வடகொரியாவோ கடாபியோ எமக்கு எதிராக வாக்களித்திருக்கலாம்.
அவையனைத்தும் எமக்கு வழங்கப்பட்ட கௌரவ விருதுகளாகவே நினைக்கிறேன்.
குறிப்பாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமானளவு விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசுக்கு எதிரான கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நாங்கள் திகைப்படைந்துள்ளோம்.
யாராவது ஒருவர் எழுந்து போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படவில்லை, அர்த்தமுள்ள எந்தவொரு நல்லிணக்கமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூற வேண்டும்.
அது மிகவும் பிரபலமாகாது போகலாம். ஆனால் யாரோ ஒருவர் இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வரவேண்டும். இது மிகவும் முக்கியமானதென்று நான் நினைக்கிறேன்.
புதிதாக வந்த பெருமளவு கனேடியர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக - புலம்பெயர் அரசியல்- நடத்துவதாக விமர்சகர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தவறானது.
தேர்தலுக்கு முன்னர் அதை நாங்கள் செய்யவில்லை“ என்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் கடும் குளிர்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு வெப்பநிலை ஆகக்குறைந்தளவை எட்டியுள்ளது.
கொழும்பில் இன்று வெப்பநிலை 18.2 பாகை செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.
இது 1951ம் ஆண்டுக்குப் பின்னர் பதிவாகியுள்ள ஆகக் குறைந்த வெப்பநிலையாகும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் லா-நினா காலநிலை தாக்கத்தினால் ஜனவரி மாதம் வீசிய குளிர் அலையின் போது கொழும்பில் ஆகக் குறைந்த வெப்பநிலை 18.8 பாகை செல்சியசாகப் பதிவாகியிருந்தது.
அதைவிடக் குளிரான காலநிலை இன்று காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 டிசம்பர் 2011

ஊருக்குள் புகுந்தது கடல் நீர்!

முல்லைத்தீவில் கடல்நீர் பெருக்கெடுத்து குடிமனைகளுக்குள் புகுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவை அண்டிய கரையோரக் கிராமங்களிலேயே நேற்றிரவு 9 மணியளவில் கடல் நீர் திடீரென குடிமனைகளுக்குள் புகுந்தது.
செம்மலை, கள்ளப்பாடு, அளம்பில், சிலாவத்தை, முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகள், உப்புக்குளம் போன்ற பகுதிகளுக்குள்ளேயே, கடல்நீர் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2004ம் ஆண்டு இதேநாளில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு கடல்நீர் குடிமனைகளுக்குள் பெருக்கெடுத்துப் பாய்ந்ததால், மீண்டும் சுனாமி வந்து விட்டதோ என்று அஞ்சிய மக்கள் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
கடல் பெருக்கெடுத்ததால், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் பலவும் குடிமனைகளுக்குள் இழுத்து வரப்பட்டன.
பல இடங்களில் இரண்டு அடிக்கும் மேலாக கடல்நீர் குடிமனைகளுக்குள் புகுந்துள்ளதாகவும், இன்று அதிகாலை வரை வற்றாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மல்லாகத்தில் இளம்பெண் கிணற்றில் வீழ்ந்து மரணம்!

மல்லாகத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீட்டின் கிணற்றிலிருந்தே இவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
கிணற்றில் நீர் அள்ளச்சென்ற வேளையிலேயே இவர் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

26 டிசம்பர் 2011

அது கருணா குழுவின் விழாவல்ல"என சங்கீதா மறுப்பு.

இலங்கை தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கருணா கோஷ்டி நடத்தும் விழா அல்ல," என்று நடிகை சங்கீதாவும் அவர் கணவர் கிரீஷும் கூறியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் தமிழ் அமைப்புகள் நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகரும் சங்கீதாவின் கணவருமான கிரிஷ் ஆகியோர் பங்கேற்க திடீர் எதிர்ப்பு கிளம்பியது. விடுதலைப்புலி எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் இவ்விழாவை நடத்துவதாகவும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது.
இதையடுத்து ஜீவா அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்றுஅறிவித்து விட்டார்.
எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன். எனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டேன் என்று அவர் அறிக்கை விடுத்தார்.
ஆனால் சங்கீதா, கிரிஷ் இருவரும் அந்த விழாவை விடுதலைப்புலி எதிர்ப்பாளர்கள் நடத்தவில்லை என்று மறுத்துள்ளனர்.
இது குறித்து சங்கீதா கூறும்போது, "புத்தாண்டு விழாவை சுவிட்சர்லாந்தில் உள்ள உள்ளூர் தமிழர்கள்தான் ஏற்பாடு செய்துள்ளனர். கிரிஷ்க்கு பாராட்டு விழா நடத்துவதாக சொல்லி அழைத்தனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க மனோ, கிரிஷ், சுசித்ரா, உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.
இலங்கை அரசு பின்னணியில் அவ்விழா நடப்பதாகவும் அதில் பங்கேற்கக் கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் நாடு திரும்பினர். இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததை பாராட்டத்தான் இவ்விழாவை நடத்துவதாக அழைப்பிதழ் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்," என்றார்.
புத்தாண்டு நிகழ்ச்சியை நடத்தும் சுவிட்சர்லாந்து தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசு பின்னணியில் நடந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததற்காகவே கிரிஷ்க்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். எங்களை ராஜபக்சேவின் கைக்கூலிகள் என்று கூறுவது வேதனையளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரியாலையை சேர்ந்தவர் கிளிநொச்சியில் தூக்கில் தொங்கினார்!

கிளிநொச்சி திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையை சொந்த இடமாகக் கொண்ட இ.இரவீந்திரன் வயது 49 என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார்.
திருமணம் செய்து குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (25) குறித்த வியாபார நிலையத்தினர் நெருங்கிய உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று மறுநாள் காலை (26) வியாபார நிலையத்திற்கு திரும்பிய போது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். உரிய இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மருதானையில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவர் பலி!

மருதானை டி.பி.ஜயா மாவத்தையில் இரு இழைஞர் தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற கோஹ்டிமோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் நேற்றிரவு 9.40 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மோதலில் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சிராஸ் என்ற இளைஞரே பலியாகியுள்ளார். குறித்த இளைஞன் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேற்படி மோதலில் காயமடைந்த மேலும் நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத்தெரிவித்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 டிசம்பர் 2011

படையதிகாரி தப்பிச்சென்றதை ஒப்புக்கொள்கிறது ஸ்ரீலங்கா!

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடையும் விடுதலைப் புலிகளை கொன்று விடுமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஒருவர் அளித்துள்ள சாட்சியம் 'அற்பத்தனமான' நோக்கம் கொண்டது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உயர்அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
"அந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டவர்.
அவரது கவலைகள் என்னவென்று நாம் அறிவோம். அவரது நோக்கம் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெறுவது தான்.
அவர் இராணுவத்தில் இருந்த காலத்தில், அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்ததால், எமது கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்." என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கூறியுள்ளார்.
எனினும் அந்த மேஜர் ஜெனரலின் பெயரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உயர்அதிகாரி வெளியிடவில்லை.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடையும் விடுதலைப் புலிகளைக் கொன்று விடும் படி கோத்தாபய ராஜபக்சவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக, அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல் சாட்சியம் அளித்துள்ளதாக பிரித்தானியாவின் 'ரெலிகிராப்' நாளேடு கடந்தவாரம் தகவல் வெளியிட்டிருந்தது.
முன்னதாக இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானபோது, 58வது டிவிசனைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் எவரும் படையை விட்டு விலகி வெளிநாட்டில் தஞ்சமடையவில்லை என்று ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித்தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 டிசம்பர் 2011

ஐ.நாவிடமிருந்து ராஜபக்சவை பாதுகாக்கவே ஆணைக்குழு முயன்றுள்ளது.

சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு ஐ.நாவுக்கு எதிராக ராஜபக்சவைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டுள்ளதாக ஏசியன் நியூஸ் இணையத்தளம் விமர்சித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்ழுவின் அறிக்கை தொடர்பாக ஏசியன் நியூஸ் இணைத்தளத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள, கொழும்பு மறைமாவட்ட முதல்வர் வணபிதா றெய்ட் செல்டன், இந்த அறிக்கை இனப்பிரச்சினையை நீடிப்பதற்கு உதவுமே தவிர, தீர்ப்பதற்கு உதவாது“ என்று தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவில் நீதி மீள்நிலைப்படுத்தப்பட வேண்டும், அதாவது சட்டத்தின் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும், வடக்கு,கிழக்கில் இருந்து படைகள் விலக்கப்பட வேண்டும், காவல்துறையில் தமிழர்கள் இணைக்கப்பட வேண்டும்“என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை ஏசியன் நியூஸ் இணையத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆர்வலர் ஜெகான் பெரேரா,
“அனைத்துலக மனிதஉரிமைகள் நிலைப்பாட்டில் இருந்த பார்க்கும்போது, சிறிலங்கா எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சினை மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா அரச தலைமையே பொறுப்பேற்க வேண்டும் என்பதாக உள்ளது.
ஆனால், சிறிலங்கா அரசோ, போருக்கான அடிப்படைக் காரணத்துக்குப் பதிலளித்தல், நல்லாட்சி விவகாரம் ஆகியவற்றையே முக்கியமானவையாக கருதுகிறது.
இந்த குறைகளுக்கு பதிலளிக்கப்படாமல் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இது துரதிஸ்டவசமானது.“ என்று கூறியுள்ளார்.

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

சம்மாந்துறை, மல்கம்பிட்டி வீதியில் கைகாட்டி சந்தியிலுள்ள வீடொன்றிலிருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை இரவு சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியின் தந்தை மற்றும் அவரது தாய் மாமனார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அடக்குமுறை அரசுக்கெதிராக மாணவர்கள் மாபெரும் பேரணி!

மாணவர்களை அடக்கி ஒடுக்கும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சகல பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொழும்பு நோக்கி பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக அணைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் இன்று தெரிவித்தது.
30 மாணவர் சங்கங்களை அரசாங்கம் இடை நிறுத்தியுள்ளது. இது ஒரு ஜனநாயக நாடென்றால் நாம் எமது கருத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டிருப்போம். ஆனால் இது ஜனநாயக நாடு அல்ல' என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கூறினார்.
எமது கருத்தை வெளிப்படுத்தவும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கவும் எமக்கு சங்கம் தேவையில்லை. அரசாங்கத்தை எதிர்த்த பல மாணவர்கள் பயமுறுத்தப்படுகின்றனர்' என பண்டார கூறினார்.
அடுத்த வருடம் நாட்டின் கல்வி முறைமை முற்றாக மாறிவிடும். தனியார் கல்வி சட்டம் அமுலாகியவுடன் இலங்கையில் இலவச கல்வி முறை அழியத் தொடங்கும். பல்கலைக்கழக கல்வி விவசாயிகளின் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு கட்டுப்படியாகாத விடயமாகிவிடும். பிள்ளையின் கல்வித்தகைமை பல்கலைக்கழக அனுமதியை தீர்மானிக்காது. ஒருவரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதைப் பொறுத்தே பல்கலைக்கழத்தில் இடம் கிடைக்கும்.
முடியுமாயின் அரசாங்கம் எம்மை தடுத்துப்பார்க்கட்டும். நாம் பொலிஸுக்கும் இராணுவத்துக்கும் சவால் விடுக்கின்றோம். அவர்களால் எம்மை தடுத்து நிறுத்த முடியாது. அரசாங்கம் பல்கலைக்கழக விடயங்களில் தலையிட நாம் அனுமதிக்க மாட்டோம்' என அவர் கூறினார்.
இதேவேளை பேராதனையிலிருந்து கொழும்புக்கு பேரணி நடத்தும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அடுத்த வாரம் நாம் இதை நடத்தவுள்ளோம்' என பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் மகேஷ் பிரபாஷ்வர லங்கா கூறினார்.

23 டிசம்பர் 2011

ஜெர்மன் திரையரங்குகளில் உச்சிதனை முகர்ந்தால்.

ஈழத்தமிழர்கள் அனுபவித்த ,அனுபவிக்கும் தாங்கொணா அதி உச்ச துன்பங்களின் வடிவம் தான் "உச்சிதனை முகர்ந்தால்". தமிழினத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்தால் ஒரு 13 வயது சிறுமி சிங்கள இனவெறி அரசின் ராணுவத்தால் படு மோசமான நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் விளைவில் சிக்கி தவிக்கும் அந்த சிறுமியின் கொடூர வாழ்க்கை அனைத்து ஈழத்து உறவுகளுக்கும் பொருந்தும்.
இலங்கை ராணுவத்தின் கொலை வெறி கொண்ட இறுதி யுத்தத்தில் உயிருடன் தப்பிய எம் உறவுகள் பலரின் கதை தான் புனிதவதியின் குருதி உறைந்த உண்மை சம்பவம் .இது வெறும் கதை அல்ல , நியம் . எம்மவர்களின் இவ் வரலாற்று ஆவணப் படத்தை நிச்சயமாக அனைத்து தமிழர்களும் பார்க்கவேண்டும் .
தற்சமயம் யேர்மனியில் அனைத்து நகரங்களிலும் திரையிடப்படும் இத் திரைக்காவியத்தை அனைத்து எம் உறவுகளும் தமது நண்பர்களுடன் இணைந்து பார்வையிட்டு எமது அனைவரின் இதயத்திலும் ஆறாப் புண்ணாக இருக்கும் அந்த வலியை மீண்டும் உணரவேண்டும்.தமிழக மற்றும் புலம்பெயர் உறவுகளாலும் உணர்வோடு பார்வையிடப்படும் "உச்சிதனை முகர்ந்தால்" ஒவ்வொரு கணங்களும் புல்லரிக்கும் காட்சிகளையும் கட்டங்களையும் கொண்டது .அற்புதமான இந்த படைப்பை மிக உணர்வோடு உண்மையை அழிய விடமால் ஆவணமாக்கிய எம் தமிழக மற்றும் புலம்பெயர் தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .
"எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள் , அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள் ???" சுதந்திரம் நோக்கி தொடர்ந்து உறுதியோடு பயணிப்போம்!

சிறுபான்மை இனத்தவர் ஆட்சிக்கு வர முடியாத நிலை கவலையளிக்கிறது என்கிறார் திசாநாயக்க.

நூற்றுக்கு ஒரு சதவீதம் மட்டுமாக இருக்கின்ற சீக்கியர் ஒருவர் இந்தியாவில் பிரதமராக பதவி வகிக்க முடிந்த போதும் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இலங்கையின் தலைமைத்துவத்திற்கு வர முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டி மடவளை வை.எம்.எம்.ஏ. இயக்கத்தினர் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றில் மடவளை வை.எம்.எம்.ஏ. இயக்கத்தினர் நடத்தும் பாலர் பாடசாலைகளில் வருடாந்த கலைவிழா நேற்று வியாழக்கிழமை மாலை மடவளை மதீனா தேசிய பாடசாலையின் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில்:
'நாங்கள் எமது நாட்டை இன மத பேதமற்ற நாடாக மாற்ற வேண்டும். ஆசியாவில் மிகவும் கூடிய கல்வி தரத்தை கொண்ட ஒரு நாடாக மாற்ற முடிந்த எமக்கு இது கடினமான விடயம் அல்ல.
இந்தியாவில் 274 மதங்கள் இருக்கின்றன. பிரதான மதங்கள் 72 இருக்கின்றன. இன்றும் இந்தியாவின் ஆட்சி புரியும் கட்சியின் தலைவியாக இருப்பவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர். இந்தியாவின் பிரதமர் நாட்டின் ஒரு சதவீதம் மட்டும் இருக்கின்ற சீக்கிய இனத்தவர் ஒருவர். ஆனால் இது எதுவும் இந்திய மக்களுக்கு பிரச்சினை அல்ல.
ஆனாலும் இலங்கையில் சிங்களவர் அல்லாத ஒருவருக்கு தலமைத்துவத்திற்கு வர முடியுமா என்று கேட்டால் அது இயலாதது என்று தான் பதில் கூற வேண்டும் இது கவலைக்குரிய விடயமாகும்.
நாங்கள் பல்கலைக்கழகங்களை ஒரு போதும் இன மத அடிப்படையில் பிரிக்க மாட்டோம். ஆனாலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கு 90 சத வீதமான மாணவர்கள் முஸ்லிம்களாவர். மட்டகளப்பு பல்கலைக்கழகத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம் மாணவர்கள். நாட்டின் மற்றைய பல்கலைக்கழகங்களில் சன விகிதாசாரத்திற்கும் சிறிதளவு அதிகமான முஸ்லிம் மாணவர்கள் இருக்கின்றார்கள்.
இன்று கூடுதலான அபிவிருத்தி நடப்பது வட கிழக்கு மாகாணங்களுக்கே. நாட்டின் அபிவிருத்தி வேகம் எட்டு சதவீதம். வட கிழக்கில் அபிவிருத்தி வேகம் 24 சத வீதம். நாங்கள் வரலாற்றில் தவறிழைத்து விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்ய கூடாது' எனவும் கூறினார்.

22 டிசம்பர் 2011

பசிலின் ஆணவப்பேச்சுக்கு சம்பந்தன் பதிலடி.

கோப்புகளைத் தூக்கிக் கொண்டு தங்களின் பின்னால் திரிகின்ற ஒத்துழைப்பையா பசில் ராஜபக்ச எதிர்பார்க்கிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்துத் தொடர்பாகவே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
“தீர்வுப் பேச்சு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்தே செயற்பட்டு வருகிறோம்.
இப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச கூறுகின்ற ஒத்துழைப்பு எந்த அடிப்படையைக் கொண்டது? கோப்புகளைத் தூக்கிக்கொண்டு அமைச்சுகளைப் பெற்று, உங்கள் பின்னால் நிற்பதையா எதிர்பார்க்கிறீர்கள்?
தீர்வுப் பேச்சின் போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பிலான எமது நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி விட்டோம்.
பேச்சுக்களின் போது பொறுமையாக, சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியே வருகிறோம்.
அவர்கள் கூறும் ஒத்துழைப்பு எந்த அடிப்படையிலானது என்று கேட்க விரும்புகிறேன்.
கோப்புகளைத் தூக்கிக் கொண்டு அமைச்சுகளைப் பெற்று தங்களின் பின்னால் நிற்பதையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?“ என்று இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

காணி,காவல்துறை அதிகாரங்கள் வழங்க முடியாது"கெகலிய.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இவ்வித பிரயோசனமும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமாறு அவர்கள் கோருவதாகவும் அவ்வாறு வழங்க அரசாங்கம் ஒருபோதும் இணங்காது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
இருந்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அவற்றை வழங்க முன்வராது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவது காலத்தை கடத்தும் செயல் என கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் சோனியா காந்தி வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் மாநில ஆட்சியாளரிடம் அனுமதி கோர வேண்டி இருப்பதாகவும் அவ்வாறு இருக்க இலங்கை மக்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய விசாரணை முடிவுகள் தரப்படவில்லை என்று கனடா தெரிவித்துள்ளது. எனினும் ஆணைக்குழு அறிக்கையில் மேற்கொண்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கனேடிய உயர்ஸ்தானிகர் Bruce Levy கோரியுள்ளார்.
இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக சர்வதேசம் சுமத்தி வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆணைக்குழுவின் அறிக்கையில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. அது அறிக்கையின் பாரியகுறைபாடாக உள்ளது.
எனவே குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆணைக்குழுவினால் பரிந்துரைகளை மேற்கொண்டிருக்க முடியும் என்றும் Bruce Levy கருத்து வெளியிட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கவேண்டும்.
எனினும் அறிக்கையை பார்க்கும் போது இலங்கைப்படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே ஆணைக்குழுவின் அறிக்கைக்கு உரிய மதிப்பை அரசாங்கம் கொடுக்கவேண்டும்.
அதேநேரம் முக்கிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதனை வெளிப்படுத்தும் போதே இலங்கையில் நீண்டகால சமாதானத்துக்கு அது அத்திவாரமாக அமையும் என்றும் Bruce Levy சுட்டிக்காட்டியுள்ளார்.

21 டிசம்பர் 2011

படையினர் ஏவிய எறிகணை வேலணையில் வீழ்ந்தது!

வேலணைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் வீடொன்றின் முன்னால் திடீரென வானிலிருந்து கூவிக்கொண்டு வந்து வீழ்ந்த மர்மப்பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலணை மேற்கு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கவிதாசன் என்பவரது வீட்டில் இந்த மர்மப்பொருள் வீழ்ந்ததால் வீட்டு முற்றத்தில் பெரும் குழி ஒன்று உருவாகி உள்ளதாகவும் எனினும் வேறெந்தச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
குறித்த வீட்டில் நேற்று மாலை பெரியவர்கள் எவரும் இருக்கவில்லை. பத்து வயதுடைய சிறுவன் ஒருவன் வீட்டில் படித்துக்கொண்டிருந்த போது, பிற்பகல் 3.30 மணியளவில் கிழக்குப் பக்கமாக பெரும் வெடியோசை ஒன்றை அவன் கேட்க நேர்ந்தது.
அதன் பின்னர் கூவிக்கொண்டு விரைந்து வந்த பொருள் ஒன்று அவர்களின் வீட்டு முற்றத்தில் பலத்த சத்தத்துடன் வீழ்ந்தது. குறித்த பகுதியில் குடியிருப்புகள் குறைவு என்பதால் ஏனையோருக்கு இந்தச் சத்தம் பெரிதாகக் கேட்கவில்லை.
பின்னர் தன்னுடைய பெற்றோர் வீடு திரும்பியதும் சிறுவன் நடந்ததைக் கூறினான். சிறுவன் காட்டிய இடத்தில் பெரும் குழி ஒன்று ஏற்பட்டிருந்ததுடன் அதனுள் கலங்கிய நிலையில் நீரும் தேங்கி இருந்தது.
உடனேயே இது குறித்து கிராம சேவகருக்கும், பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் குழியை ஆராய்ந்த பின்னர், அதனுள் ஆபத்தான வெடிபொருள் இருக்கக் கூடும் என்பதால் யாரும் அதனருகே செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர்.
அத்துடன் இரவு வேளையில் அதனை மீட்க முடியாது என்பதால் இன்று காலை அதனை மீட்பதாகக் கூறிச் சென்றுள்ளனர். தங்கள் வீட்டின் முன்னால் வீழ்ந்தது எறிகணையாகத் தான் இருக்கும் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மர்மப்பொருள் வீழ்ந்துள்ள வீட்டின் அண்மையில் கிழக்குப் புறமாக கடற்படை முகாம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் மண்டைதீவுப் பகுதி சிறிலங்காக் கடற்படைத்தளத்தில் இருந்து ஏவப்பட்ட எறிகணையே வேலணைப் பகுதியில் நேற்று மாலை வீழ்ந்து வெடித்துள்ளது.
இன்று காலை எறிகணை வீழ்ந்த வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினரும், கடற்படையினரும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளனர்.
நேற்று மாலை வேலணை 7ம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் மர்மப் பொருள் ஒன்று வீழ்ந்ததில் பெரிய குழி ஒன்று உருவாகியிருந்தது.
இது குறித்து ஊர்காவற்றுறைப் காவற்றுறையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சென்ற காவற்றுறையினர் அதனுள் ஆபத்தான வெடிபொருள் இருக்கலாம் எனவும், அந்தக் குழி அருகே செல்ல வேண்டாம் எனவும், இன்று காலை அதை வந்து மீட்பதாகவும் கூறி சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குறித்த வீட்டுக்கு இராணுவத்தினரும், கடற்படையினரும் சென்றனர். அதன்போது மண்டைத்தீவுக் கடற்படைத்தளத்தில் இருந்து பயிற்சியின் போது ஏவப்பட்ட பிளாஸ்ரிக் எறிகணையே தவறுதலாக வந்து வீழ்ந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அத்துடன், குழியினுள் நீர் நிறைந்திருந்ததால், நீர் வற்றிய பின்னரே குழியினுள் இருக்கும் எறிகணையை மீட்க முடியும் என்றும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் தங்களுக்கே தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.



எம்மை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தி, அடிபணியச் செய்து தீர்வைத் திணிப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முயற்சிக்கின்றார்.
ஆனால் அந்த முயற்சிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாளான இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்கா அரசாங்கம் முழு நாட்டையுமே சிங்கள, பௌத்த, இராணுவ மயமாக்குவதற்கு முயற்சிக்கிறது.
முழு நாட்டையுமே நாம் ஆள வேண்டும் என்று கேட்கவில்லை. எமது பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழவே நாம் விரும்புகின்றோம்.
அத்தகையதொரு நிலை தோற்றுவிக்கப்படாது போனால், எம்மை நாமே ஆள்வதற்காக நாங்கள் போராடுவோம்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் கிழக்கில் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பிற்போட்டுள்ளதற்கும் மாவை சேனாதிராசா சிறிலங்கா அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

20 டிசம்பர் 2011

அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணைக்கு பதிலளிக்க அவகாசம் கேட்கிறார் ஸ்ரீலங்கா அதிபர்.

போர்க்குற்றங்களிற்கு எதிராக நட்டஈடு கோரி அமெரிக்காவின் வொசிங்ரன் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சார்பில் பதில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் நாள் இந்த மனு வை சிறிலங்கா அதிபரின் சார்பில் Patton Boggs என்ற சட்ட அமைப்பு சமர்ப்பித்துள்ளது.
முன்னதாக சிறிலங்கா அதிபர் அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணையை ஏற்க மறுத்திருந்தார்.
இதையடுத்து, வாதிகளான மனோகரன் மற்றும் ஏனையோரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நீதிமன்ற அழைப்பாணையை வெளியீடுகள் மூலமோ மாற்றுவழியிலோ வழங்குவதற்கு அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த அழைப்பாணை தமிழ்நெற் இணையத்தளம் மூலமும், சிறிலங்காவில் அதிகம் விற்பனையாகும் இரண்டு நாளிதழ்கள் மூலமும் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக நீதிபதி கொலின் கொலர்-கொற்றெலி தெரிவித்தார்.
இந்தநிலையிலேயே, கடந்த 16ம்நாள் ராஜபக்சவின் சார்பில் Patton Boggs நிறுவனத்தினால் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அழைப்பாணையை ராஜபக்சவின் சட்டவாளர்கள் ஏற்றுக் கொண்டு அதுதொடர்பாக தமது மனுவை முன்வைத்துள்ளதானது மிக முக்கிய விடயம் என்று நட்டஈடு கோரி ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கைத் தாக்கல் செய்திருந்தவர்களின் சட்டவாளரான புறூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
கடந்த 16ம் நாள் சிறிலங்கா அதிபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் போர்க்குற்ற வழக்குத் தொடர்பாகத் தனது கருத்தை வெளிப்படுத்தும் வரை, அழைப்பாணைக்குப் பதில் வழங்குவதற்கான காலக்கெடுவை 20 வேலை நாட்களுக்குப் பிற்போடுமாறு கேட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சட்ட ரீதியான அபிப்பிராயங்களுக்கு அமைவாகச் செயற்படாவிட்டால், இந்த விடயம் மிகத் தீவிரமாக ஆராயப்படும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தில் அமெரிக்க இராஜாங்கச் திணைக்களம் சாதகமான பதிலை எடுக்க வேண்டும் என்று ராஜபக்ச தரப்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.
Patton Boggs இன் விநோதா பஸ்நாயக்கே, சிறிலங்கா அதிபரின் மைத்துனரும், அமெரிக்காவில் உள்ள சிறிலங்காத் தூதுவருமான ஜாலியா விக்கிரமசூரியவுடன் தொடர்பைப் பேணுபவர் ஆவார்.
இந்தச்சட்ட அமைப்புக்கு அமெரிக்காவில் உள்ள சிறிலங்கர்கள் பெருமளவிலான நிதியை கட்டணமாக வழங்கி வருகின்றனர்.
அதேவேளை, அமெரிக்க அரசாங்கம் மற்றும் வொசிங்ரனிலுள்ள அதிகாரம்மிக்க ஏனைய அமைப்புக்களுடன் தாம் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவதாகவும், தனது பங்காளிகள் அமெரிக்க அரசியலில் ஈடுபட்டுள்ள இரு பிரதான கட்சிகளுடனும் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகவும் Patton Boggs தெரிவித்துள்ளது.

கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார் அன்ரனி ராஜா!

திரைப்பட இறக்குமதியாளரும் விநியோகஸ்தருமான வேலுபிள்ளை அன்ரனி ராஜா, இனந்தெரியாதோர் சிலரால் காலணி நாடா (லேஸ்) ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன – தெரிவித்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் அந்தனி ராஜா, மட்டக்குளி, காக்கைதீவு பகுதியிலுள்ள தனது மற்றுமொரு வீட்டின் திருத்தப் பணிகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த போதே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைகளை அடுத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

19 டிசம்பர் 2011

கோத்தபாயவின் உத்தரவுக்கமையவே சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டனர்.

சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்று விடும்படி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா இராணுவத்தின் களமுனைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள சிறிலங்காவின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே என்றும் ‘ரெலிகிராப்‘ கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நபர்கள் சிலருக்கும் சிறிலங்கா இராணுரவ அதிகாரிகள் சிலருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகவும், அவர்களுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த மேஜர் ஜெனரல் கூறியுள்ளார்.
இவரது இந்தச் சாட்சியம், சிறிலங்காப் படையினர் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக இருப்பதாகவும் ‘ரெலிகிராப்‘ குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காப் படையினரால் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்ட சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையில், உயர்மட்ட கட்டளையை பின்பற்றாத படையினர் சிலராலேயே இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல், களமுனைத் தளபதி ஒருவருக்கு சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சில கட்டளைகளை பிறப்பித்ததாகவும், சரணடையும் புலிகளை வழக்கமான நடைமுறைகள் எதுமின்றி கொன்று விடுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
"சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அந்த உத்தரவு வந்தபோதிலும், அதில் சிறிலங்கா அதிபரும் தொடர்புபட்டிருக்க வேண்டும். அவரும் அதுபற்றி அறிந்திருந்தார். தளபதிகளால் அந்த முடிவை எடுக்க முடியாது." என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது பாதுகாப்புக் கருதி பெயரை வெளியிட விரும்பாத அந்த மேஜர் ஜெனரல், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
இது சிறிலங்கா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு அழுத்தங்களை கொடுக்கும் என்று தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த மேஜர் ஜெனரல் தனது முதலாவது சாட்சியத்தை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புலனாய்வு இணையம் ஒன்றுக்கு வழங்கியிருந்தார்.
2005 ல் பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் கொழும்பு நகர வீதிகளில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோர் என்று சந்தேகிக்கப்படுவோரை களையெடுக்க வெள்ளை வான் 'தாக்குதல் அணி' யொன்றை உருவாக்கினார் என்றும் அந்த மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிடுள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகார ஆய்வாளர் யொலன்ட் போஸ்டர், சிறிலங்கா அரசாங்கம் குற்றவாளிகளை நீதியின் நிறுத்தும் என்பது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார்.
ஆனால் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறியுள்ளது.

எகிப்தைப்போல் எமது ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது.

மனிதஉரிமைகள் மீறப்படுவதாகக் கூறி எகிப்தைப் போல, சிறிலங்காவிலும் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. வெறும் பகல்கனவாகவே முடியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமைச்சரவையின் முடிவுகளில் நம்பிக்கை வைக்காது, வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்திய காலம் மாறிவிட்டது. அந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாட்டைப் பிரித்து ஒரு துண்டைக் கொடுப்பது தான் தீர்வு என்று வெள்ளைக்காரர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் நாம் நாட்டைப் பிரிக்காமலேயே தீவிரவாதத்துக்கு முடிவு கட்டியுள்ளோம்.
சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடப் பலரும் முனைகின்றனர். அவர்கள் எதற்கு இதைச் செய்கின்றனர் என்று மக்களுக்குத் தெரியும். வதந்தி, சூழ்ச்சிகளுக்கு மக்கள் அகப்படக் கூடாது. ஒருபோதும் பின்னோக்கித் திரும்பிவிடக் கூடாது. நாட்டுக்காக தீர்மானங்களை எடுப்பதில் நாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை. என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அரச புலனாய்வாளர்கள் ஊடகர் போர்வையில் புலம்பெயர் தேசத்தில் அரசியல் தஞ்சம்!

வன்னி ஊடகங்களில் பணியாற்றியதாகத் தெரிவித்து அரச புலனாய்வாளர்கள் புலம்பெயர் நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதுடன் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றமைக்கான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னிப் போரின் பின்னர் புலம்பெயர் தளத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கென அரச புலனாய்வாளர்கள் பெருமளவானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவருகின்றனர். அவ்வாறானவர்கள் வன்னியில் தாம் ஊடகங்களில் பணி செய்ததாக நீதிமன்றில் பொய்யான தகவல்களை வழங்கி தமக்கான வதிவிட அனுமதியினையும் பெற்றுக்கொள்கின்றனர். இதனூடாக புலம்பெயர் தளத்தில் செயற்படும் மக்களைக் கண்காணிப்பதற்கான சந்தர்ப்பமாகவும் அவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வதிவிட அனுமதி வன்னி ஊடகர்கள் என்ற அடிப்படையில் கிடைக்கப்பெற்றதை அறிந்து கொள்கின்ற புலத்தில் உள்ள தேசியச் செயற்பாட்டாளர்கள் முண்டியடித்து குறித்த நபர்களை தமது நெருக்கமானவர்களாகக் காட்டிக்கொள்ளவும் அவர்களுடன் முக்கியவிடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முற்படுகின்றமை குறித்த தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
தஞ்சம் கோருகின்ற அரச புலனாய்வாளர்கள் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்டு புலம்பெயர் தளத்தில் தேசியத்திற்காக பாடுபடுகின்ற நபர்களின் விபரங்களைச் சேகரித்து அரசாங்கத்திற்கு அனுப்பிவருவதாகவும், அந்தத் தகவல்களின் அடிப்படையில் தாயகம் திரும்பும் புலம்பெயர் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
அண்மையில் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி வதிவிட உரிமையினைப் பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ள நபர் ஒருவர் தான் புலிகளின்குரல் வானொலியில் பணியாற்றியதாகத் தெரிவித்திருக்கின்றார். வானொலியில் இசைப்பிரியாவுடனும் தான் பணியாற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டுவருகின்றார்.
இசைப்பிரியா புலிகளின்குரல் வானொலியில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பணியாற்றவில்லை என்பதுடன் அவர் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியிலேயே பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 டிசம்பர் 2011

ஒழுக்கம் கெட்ட பாராளுமன்றை சரி செய்ய தெரிவுக்குழு.

நாடாளுமன்றத்தின் இறைமை, மரபு, ஒழுக்கம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பரிந்துரைகளை வழங்குவதற்கும், கண்காணிப்பதற்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
21-11-2011 அன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த வேளையில் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் நாடாளுமன்றத்தின் கறை படிந்த வரலாறாகி விட்டது.
எதிர்காலத்திலும் இப்படியான அசம்பாவிதங்கள் இடம் பெறுவதைத் தடுக்கும் வகையில் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கமைய அமைச்சர் டி.யூ. குணசேகர தலைமையில் அமைச்சர்களான பி.தயந்தன, அநுரபிரிய தர்ஷன யாப்பா, ரவூப்ஹக்கீம் மற்றும் கருஜயசூரிய, விஜய தாசராஜ பக்ஷ, இரா. சம்பந்தன் ஆகியோர் உள்ளடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு சபாநாயகரால் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் அதன் விவரங்களை அறிவித்தார்.

வவுனியாவில் இளைஞரை அடித்துக் கொன்றனர் ஈ.பி.டி.பியினர்!

வவுனியா பொதுமருத்துவமனைப் பணியாளர் ஒருவர் ஈபிடிபியினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பொதுமருத்துவமனைப் பணியாளரான திருச்செல்வம் என்பவர் மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த பெரியவன் என்பவர் தலைமையிலான ஈபிடிபியினர் அவரை வலிந்து சண்டைக்கு இழுத்து அடித்துப் படுகொலை செய்திருக்கின்றனர்.

17 டிசம்பர் 2011

சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை.

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தகோ சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. சுதந்திரமான அனைத்துலக விசாரணக்குழுவின் தேவையை இது உணர்த்துவதாக நியுயோர்க்கை தளமாக கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. “சிறிலங்காப் படைகளால் புரியப்பட்ட மோசமான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறியுள்ளது. மோசமான மீறல்களில் தொடர்புடைய அரச மற்றும் இராணுவ அதிகாரிகளை பொறுப்புக் கூறவைப்பதற்கான யதார்த்தமான பாதையை நல்லிணக்க ஆணைக்குழு வழங்கத் தவறிவிட்டது. மீறல்கள் குறித்த விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பாக ஒரு பாதையை சுட்டிக்காட்ட ஆணைக்குழு தவறியுள்ளதால், சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்குழு அவசியமாகிறது. பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்த, பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் மீது நடத்தப்பட்ட ஆட்டிலறித் தாக்குதல்கள் குறித்து எந்தக் குற்ற விசாரணைகளுக்கும் அழைப்பு விட ஆணைக்குழு தவறியுள்ளது. அத்துடன் போர்ச்சட்டங்களை மீறும் வகையில் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது கனரக ஆட்டிலறிகளைப் பயன்படுத்தியது குறித்தும் ஆணைக்குழு ஆய்வு செய்யவில்லை. அரசபடையினர் தொடர்புபட்ட ஐந்து எறிகணைத் தாக்குதல் சம்பவங்களை மட்டும் பட்டியலிட்டுள்ள ஆணைக்குழு அவை குறித்தே மேலதிக விசாரணைகளை நடத்தக் கோரியுள்ளது. போரின் இறுதி நாட்களில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆராயப்படவில்லை. பாலியல் வன்முறைகள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் கைதிகள் மீதான சித்திரவதை மற்றும் முறையற்றவிதத்தில் நடத்துவது குறித்தும், போரினால் இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்களை பல மாதங்களாக அடைத்து வைத்தது குறித்தும் இந்த அறிக்கையில் ஒன்றுமே கூறப்படவில்லை. இதிலிருந்து மோதல்களுடன் தொடர்புபட்ட மீறல்களுக்கு சிறிலங்காவின் உள்ளக நிறுவனங்களின் மூலம் நீதி கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவை வைத்து சிறிலங்கா அரசாங்கம் ஆடிய ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்து விட்டது“ என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

16 டிசம்பர் 2011

உண்மையை பேசுபவன் தான் உண்மை தலைவன்.

யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளர்கள். அந்த இருவரும் முன்னமே நடந்துள்ள கடத்தல்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை தினத்திலேயே அவர்கள் கடத்தப்பட்டுள்ளர்கள்.
இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்யும் இராணுவம் சொல்கிறது. கடத்தப்பட்டவர்கள் எங்கேயாவது தடுத்து வைக்கபற்றிருக்கலாம் என அரசாங்க ஊடக பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல்ல சொல்கிறார். உண்மையில் இது இவ்வருட இறுதியில் இந்நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள மாபெரும் சாதனை.
இலங்கையில் நிலைமை வழமைக்கு திருப்பிவிட்டது என சொல்பவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரு வார கால இந்திய விஜயத்தை முடித்து நாடு திரும்பிய மனோ கணேசன் தமது அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில் மேலும் தெரிவித்ததாவது:
நாளை என் பிறந்த தினம். பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் நான் இல்லை. கொழும்பில் ஏழை மக்கள் வாழும் ஊரில் போய் சிரமதானம் செய்வோம். அத்துடன் மக்களுக்கு உண்மையை எடுத்து கூறுவோம். அரசாங்கம் எதுவும் சொல்லலாம். ஆனால் உண்மைகளை உலகிற்கு எடுத்து சொல்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் ஊடகங்களும் பின்னிற்க முடியாது. நெருக்கடிமிக்க வேளையில் உண்மையை பேசுபவன் தான் உண்மை தலைவன். உண்மையை துணிந்து எழுதுபவன்தான் உண்மை ஊடகவியலாளன். நாளைய வரலாறு இதை பதிவு செய்யும்.
கடந்த கால வெள்ளை வேன் கடத்தல்கள் மீண்டும் ஆரம்பித்து விட்டன. அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் குறி வைக்கப்பட்டு கடத்தப்படுவது நாடு முழுக்க நடை பெறுகிறது.
இன்று பெருந்தொகையான பெரும்பான்மை இனத்தவர்களும் கடத்தப்படுகின்றார்கள். கடந்த காலங்களில் கொழும்பில் தமிழர்கள் கடத்தப்பட்டபோது அவற்றிற்கு எதிராக நாம் போராடினோம். எமது உறவுகள் கடத்தப்பட்ட போது அது எமக்குத்தான்வலித்தது. அன்று நாம் தனித்து நின்று போராடினோம். நாங்கள் பார்க்காத கடத்தல்கள், கைதுகள், வல்லுறவுகள், படுகொலைகளா?
அன்று எம்மை எதிரிகளாய் பார்த்து தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கடத்தல்களை ஆதரித்தவர்கள் கொழும்பில் இருந்தார்கள். அவர்களும் இன்று எம்முடன் கை கோர்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இதைதான் காலத்தின் கோலம் என நம் முன்னோர்கள் சொல்வார்கள். இந்நிலையில் அரசாங்கம் மனித உரிமை தொடர்பில் புதிய நிறுவனம் ஒன்றை அமைக்க போவதாக இன்று அறிவித்துள்ளது. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமனான வேடிக்கை ஆகும். இந்த மாதிரி எத்தனையோ அரசாங்க மனித உரிமை நிறுவனங்களை நாம் பார்த்துகளைத்துவிட்டோம்.
இன்று எல்லா மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நாம் எவருடனும் இணைந்து போராட தயார். ஆனால் எம்மவர் பிரச்சனைகளையும் சேர்த்து போராட பெரும்பான்மை கட்சிகள் தயாராக வேண்டும். இது எமது நிபந்தனை. தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் இனி சும்மா கூலிக்கு மாரடிக்க கூடாது. எமது வலியை புரிந்துகொள்ள முடியாதவர்களுடன் கைகுலுக்க நாம் தயாரில்லை. புதிய வருடத்தில் இந்த புதிய அடிப்படைகளில் ஒரு புதிய தேசிய அரசியல் கூட்டணியை நாம் உருவாக்குவோம்.

கடத்தப்பட்ட லலித்குமார் சித்திரவதை முகாமில் வைத்து கொல்லப்பட்டாரா!?

ஜே.வி.பியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளரும் மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான வீரராஜ் லலித்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் மீட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்களை மீட்கும் போராட்டத்தை நடத்தி விட்டு பத்திரிகைகாளர் மாநாட்டை நடத்த புறப்பட்ட வேளையில் இவர் காணாமல் போயிருந்தார். பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் லலித் கட்சிப் பணிகளை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மேற்க்கொண்டு வந்தார்.
இவருடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகானந்தம் குகன் என்ற கட்சி ஆதரவாளர் ஒருவரும் சென்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியினுள் இயங்கி வருவதாக கூறப்படும் விசேட சித்திரவதை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்?
கடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியினுள் இயங்கி வருவதாக கூறப்படும் விசேட சித்திரவதை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியின் நுழை வாயிற்பகுதியாக உள்ள அச்சுவேலிப்பகுதியினில் கடத்தபட்ட உறுப்பினர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்தே இச்சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் போராட்ட இயக்க தரப்புகள் கூறுகின்றன.
கடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்க யாழ்மாவட்ட அமைப்பாளரான லலித்குமார் வீரராஜ் பல தடைவ படை அதிகாரிகளால் நேரடியாகவே அச்சுறுத்தப்பட்டிருந்தார். இவ்வாறான அரியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கொல்லப்படுவாயெனவும் காணாமல் போகவேண்டியிருக்குமெனவும் மிரட்டப்பட்டதாக இத்தரப்புகள் மேலும் கூறுகின்றன. உயர்பாதுகாப்பு வலய நுழை வாயிலில் இராணுவ பொலிஸார் கடமையினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சகிதம் அவர்களை உள்ளே கொண்டு செல்வது சிரமமாக இருந்திருக்கலாம். இதனாலேயே உயர்காதுகாப்பு வலய எல்லையான அச்சுவேலியில் அதனை கைவிட்டு சென்றிருக்கலாமென அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் தமிழ் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்ட பாணியிலேயே இக்கடத்தலும் நடந்துள்ளதை அவர்கள் நினைவு கூருகின்றனர்.கடத்தல் நடந்த பின்னர் ஆவரங்கால் பகுதிகளெங்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக நடமாடியதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நன்றி – உலகத்தமிழ் செய்திகள்

15 டிசம்பர் 2011

யாழில் மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

யாழ். நகரில் நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் பிரபல வர்த்தகரின் மகன் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். அத்தியடியைச் சேர்ந்த, பாக்கியராசா தனுஜன் என்ற 18 வயது மாணவனே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள தனது தந்தையின் வியாபார நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த உணவகத்திற்கு சாப்பிடச் சென்ற குறித்த மாணவன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை என யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

தமிழ்த் தேசிய நாடாளுமன்றத்திற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட திரு.சுமந்திரன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டினை செய்து வருகின்றார்.
ஏற்கனவே இலண்டனில் நடந்த கூட்டத்தில் புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளை மோசமாக விமர்சித்து புலம்பெயர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர், இப்போது பேரினவாதியோடு மட்டையாட்டம் ஆடி தமிழர்களின் இரத்தத்தை பேரினவாதி மகிந்தவுடன் பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் இளையோர்கள் சிங்கள அணியின் மட்டையாட்டத்தை புறக்கணிக்க இவர் அவர்களுடன் ஆடியது உலகத் தமிழர்களை பெரும் அவமானத்திற்குள் தள்ளியுள்ளது. திரு.சுமந்திரன் பொறுப்போடு தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லாவிட்டால் த.தே.கூட்டமைப்பு அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
த.தே.கூட்டமைப்பு பொறுப்பற்றவர்களையும், சிங்களத்திடம் கொஞ்சி விளையாடுபவர்களையும் ஒதிக்கி வைக்க வேண்டு என்பதோடு திரு.சுமந்திரனுக்கு எமது கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இது தொடர்பாக சுமந்திரனிடன் விளக்கம் கோர வேண்டும் எனவும் கூட்டடைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக மௌனம் சாதிப்பது அவர்கள் மீதும் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் தமிழீழ புரட்சிகர மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா படைகளால் துன்புறுத்தப்படுவர் என்று தெரிந்தும் தமிழர்களை திருப்பி அனுப்புகிறது பிரித்தானியா!

சுமார் 50 வரையான தமிழ் அகதிகளை பிரித்தானிய அதிகாரிகள் இன்று தனி விமானம் ஒன்றின் மூலம் சிறிலங்காவுக்கு நாடு கடத்தவுள்ளதாக பிரித்தானியாவின் ‘கார்டியன்‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று பிற்பகல் 50 வரையான அகதிகளுடன் இந்த விமானம் சிறிலங்கா நோக்கிப் புறப்படவுள்ளது. ஆனால் எந்த விமான நிலையத்தில் இவர்களை ஏற்றிய விமானம் புறப்படவுள்ளது என்பதை வெளியிடாமல் பிரித்தானிய அதிகாரிகள் இரகசியமாக வைத்துள்ளனர்.
திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள் சிறிலங்கா படைகளால் துன்புறுத்தப்படுவதாக புதிய சாட்சியங்கள் கிடைதுள்ள போதிலும் பிரித்தானியாவின் எல்லை முகவரகம் இவர்களை கட்டாயமாக திருப்பி அனுப்புவதாக ‘கார்டியன்‘ குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதத்துக்குப் பின்னர் பிரித்தானியா இரண்டு பெரிய நாடுகடத்தல்களை மேற்கொண்டுள்ளது. கடைசியாக கடந்த செப்ரெம்பர் மாதம் லூற்ரன் விமான நிலையத்தில் இருந்து அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பி அனுப்ப்ப்படும் தமிழ் அகதிகள் சிறிலங்காவில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படும் ஆபத்து இருப்பதாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன எச்சரித்துள்ள போதும் இவர்களை நாடு கடத்துவதில் பிரித்தானிய அதிகாரிகள் உறுதியுடன் உள்ளனர்.
சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும், ‘சித்திரவதையில் இருந்து விடுதலை‘ என்ற லண்டனைத் தளமாகக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனம், சிறிலங்காவில் உள்நாட்டு போர் முடிந்தாலும் இந்த ஆண்டும் அங்கு சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ளது.
அண்மையில் இந்த அமைப்பு பிரித்தானிய எல்லை முகவரக அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், பிரித்தானியாவில் இருந்து சிறிலங்கா சென்ற றொகான் என்ற தமிழர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான சாட்சியங்களை அளித்துள்ளது.
மாணவர் நுழைவிசைவில் பிரித்தானியா சென்றிருந்த றொகான் சுகவீனமுற்ற உறவினரைப் பார்க்க சிறிலங்கா திரும்பிய போது, கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்த அதிகாரிகள் மூன்று நாட்கள் தடுத்து வைத்திருந்தனர்.
அப்போது அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், சூடாக்கப்பட்ட ஊலோகத்தினால் உடலில் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யபட்டுள்ளார்.
32 வயதான இந்த இளைஞரை சிறிலங்கா குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று கூறி அணுகிய இரண்டு பேர் வாகனம் ஒன்றில் கண்ணைக் கட்டி ஏற்றி சென்று, அடையாளம் தெரியாத இடம ஒன்றில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடைகளைக் களைந்து விட்டு உலோக கம்பியாலும், மரக்கட்டைகளினாலும் தாக்கியுள்ளனர்.“என்று ‘சித்திரவதைகளில் இருந்து விடுதலை‘ அமைப்பு கூறியுள்ளதாக ‘கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது.

14 டிசம்பர் 2011

மேர்வினின் இணைப்பு செயலாளரும் கடத்தப்பட்டு விடுதலை.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரான அமல் ரொத்திகோ கொழும்பு புறக்கோட்டையில் வைத்து நேற்று மாலை 2.30 க்கும் 3.00 மணிக்குமிடையிலான காலப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.
வான் ஒன்றில் வந்தவர்களே இவரைக் கடத்திச் சென்றுள்ளனர். இறுதியாகக் கிடைத்த தகவலின் அவர் நேற்றிரவு 8.00 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

13 டிசம்பர் 2011

தமிழரை கொலை செய்த பிரித்தானியர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பிள்ளைகள் கண்காணிப்பு காணொளிப் பதிவு கருவியில் பார்த்துக் கொண்டிருந்த போதே, கடை உரிமையாளரான அவர்களின் தந்தையை கொலை செய்த நான்கு பிரித்தானிய இளைஞர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுப்பையா தர்மசீலன் என்ற 48 வயதான, கடை உரிமையாளர் கடந்த ஆண்டு நவம்பர் 27ம் நாள் குத்தியும் வெட்டியும், உதைத்தும் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தத் கொலையைச் செய்த நான்கு பிரித்தானியர்களுக்கும் பேர்மிங்ஹாம் நீதிமன்றம் 20 தொடக்கம் 27 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
மற்றொருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்றதை தர்மசீலனின் நான்கு பிள்ளைகளும் கடையின் மேல் மாடியில் உள்ள கண்காணிப்பு காணொளி பதிவுக் கருவியின் மூலம் பார்த்திருந்தனர்.
4 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு பிள்ளைகளும் அதுகுறித்து தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர் யாழில் இருந்தால் பிரான்ஸ் வரலாம்.

பிரான்ஸில் சட்ட ரீதியாக புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்கள் பிரான்ஸில் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபின்சன் தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தன்னை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சமகால அரசியல் தமிழ் மக்களுக்கு விரும்பத்தக்க ஒன்றாக இருக்கிறதா எனவும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் அரசியல் வாதிகளினால் நிறைவேற்றக் கூடியதாக இருக்கிறதா என்பது தொடர்பாகவும் பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா வினவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கு பின்னர் அவர்களின் வாழ்வியல் எவ்விதம் இருக்கிறது என்பது தொடர்பாகவும் பிரான்ஸ் தூதுவர் கேள்வி எழுப்பினார். அத்தோடு இனங்களுக்கிடையில் எவ்விதமாக புரிந்துணர்வு காணப்படுகிறது எனவும் சமூகங்களுக்கிடையில் ஒன்றிணைவு தொடர்பிலும் தன்னிடம் பிரான்ஸ் தூதுவர் கேட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

12 டிசம்பர் 2011

காவலூரில் சிங்களப்படையை சேர்ந்த ஒருவன் சடலமாக மீட்பு.

விடுமுறையை முடித்துக் கொண்டு நேற்றுக் கடமைக்கு திரும்பிய படையினன் தூக்கில் தொங்திய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளயைச் சேர்ந்த 21 அகவையுடைய ரணசிங்க என்பவரே மேற்படிச் சம்பவத்தில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கடந்த 23 ஆம் திததி தனது சொந்த இடத்திற்கு விடுமுறையில் சென்ற அவர் நேற்று கடமைக்கு திரும்பியுள்ளார்.கடமைக்கு சென்ற அவர் நேற்று இரவே தூக்கு மாட்டி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.எனினும் மேற்படி படையினனின் மரணம் தொடர்பாக படையினர் எதுவித காரணங்களையும் தெரிவிக்கமறுத்துள்ளனர். உடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்கிறார் சுமந்திரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கலந்துரையாடல் ஆவணத்தை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“மூன்று விடயங்களில் சில பிரச்சினைகள் உள்ளதாக மட்டுமே சிறிலங்கா அரசதரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு,கிழக்கை இணைப்பது அதில் ஒன்று.
காவல்துறை அதிகாரங்களை பகிர்வதற்கும் அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் சமூக காவல்துறை பற்றி அவர்கள் பரிந்துரைத்தனர்.
சமூக காவல்துறையை உருவாக்குவது பற்றிய அவர்களின் எண்ணப்பாடு குறித்து நாம் கலந்துரையாட வேண்டியுள்ளது.
காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கும் அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் மாகாணசபைகளில் காணிகள் விரயம் செய்யப்படுவது ஒரு பிரச்சினையாக உள்ளது.
குறிப்பட்ட வழியில் அதை ஏன் செய்ய வேண்டும் என்று நாங்கள் விபரித்து கூறியுள்ளோம்.
எமது கலந்துரையாடல் ஆவணத்துடன் அரசாங்கம் ஏன் இணைங்கவில்லை என்பகு குறித்த காரணத்தை விளக்குமாறு கேட்டுள்ளோம். அதன் பின்னர் கலந்துரையாடல்களைத் தொடர முடியும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

11 டிசம்பர் 2011

யாழில் கடத்தப்பட்ட லலித்குமார் கொல்லப்பட்டாரா என அச்சம்!

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட ஜேவிபி மாற்றுக்குழுவான மக்கள் போராட்டக் குழுவின் மாவட்ட அமைப்பாளர் லலித்குமார் வீரராஜ் கொல்லப்பட்டு விட்டதாக தமக்கு தொலைபேசி மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாக, மக்கள் போராட்டக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சமீர கொஸ்வத்த அச்சம் வெளியிட்டுள்ளார்.
“கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடத்தப்பட்ட லலித் குமார் கொல்லப்பட்டு விட்டதாக பல தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன.
அவர் எங்கிருக்கிறார் என்பது எமக்குத் தெரியாது. இந்த தகவல்களை நாம் நம்பவில்லை. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
லலித்குமார் மற்றும் இன்னொரு செயற்பாட்டாளரான முருகநாதன் குகன் ஆகியொர் காணாமற் போயுள்ளதற்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.
லலித் குமார் வடக்கில் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைளை நிறுத்துமாறும் இல்லையேல், அவரை அரசியலில் இருந்து அகற்றுவோம் என்றும் அவரது தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.
காணாமற்போன லலித் குமார் வடக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று மரணஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துக்கும் ஜேவிபிக்கும் தொடர்புகள் இல்லை. இதனைச் செய்வதற்கு அவர்களிடம் வடக்கில் அரசியல் பலம் இல்லை.
இவர்களை விடுதலை செய்யக் கோரி விரைவில் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்.
இதுதொடர்பாக யாழ்.காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குகனின் மனைவி அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்“ என்றும் சமீர கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் மக்கள் போராட்டக் குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக, அதன் யாழ்ப்பாண அமைப்பாளர் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் ஆவரங்காலில் உள்ள குகனின் வீட்டிலிருந்து உந்துருளி ஒன்றில் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
இதன் பின்னர் இவர்கள் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
காணாமல் போயுள்ள லலித்குமார் மற்றும் குகன் ஆகியோரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சருக்கும், காவல்துறைமா அதிபருக்கும் தேசிய அமைப்பாளர் அஜித் குமார அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

கொக்குவிலில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதிப் பிள்ளையார் கோவிலுக்கு கிழக்கு பக்கமாக உள்ள காணி ஒன்றில் இருந்து நேற்றையதினம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மனித எழும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல வருடங்களாக துப்பரவு செய்யப்படாத காணி ஒன்றில் இருந்து இந்த மனித எழும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை அவதானிக்கும் போது கடந்த 2 வருடங்களுக்கு முந்தியதாக இருக்கும் எனவும் கோப்பாய் பொலிஸின் தடவையியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மனித எழும்புக் கூடுகள் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த எழும்புக் கூடுகளில் இரு மனித மண்டை ஓடு மற்றும் கை , கால் நெஞ்சுப் பகுதிகளும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவற்றை பை ஒன்றில் சுற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியேசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

10 டிசம்பர் 2011

மீள் குடியேற்றப்படாத பகுதிகளில் பொது மக்களின் சடலங்களா?

2009இல் இறுதிப் போர் இடம்பெற்ற பகுதிகளில், இதுவரை மக்கள் சென்றுவர அனுமதிக்கப்படாத இடங்களில் பல பொதுமக்களது சடலங்கள் புதைக் கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் யஹாவிட் கூறியுள்ளார்.
அந்தப் பகுதிகளுக்கு முழுமையாக சென்றுவர வசதி செய்யப்பட்டாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் நிலக்கண்ணிகள் இருப்பதன் காரணமாக அங்கு செல்ல எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது.
இந்தப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை என்பது இன்னமும் ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கிறது.
ஆட்கள் செல்வதற்கு இதுவரை அனுமதிக்கப்படாத பகுதிகளின் எல்லைகள்வரை செல்வதற்கு சோ­சலிச யூரோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பகுதிகளில்தான் போர்க் காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டதுடன் அவர்கள் மீது விடுதலைப்புலிகளுடன் போரிட்ட இலங்கை அரசாங்க படைகளின் குண்டு தாக்குதலும் நடத்தப்பட நேர்ந்ததாக கூறப்பட்டிருந்தது.
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போதைக்கு அந்தப் பகுதிகளில் மீளக்குடியமர அனுமதிக்கப்படுவார்களா என்று தெரியவில்லை. அந்தப் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள கிராமங்களில் எல்லாம் ஒருவிதமான அச்ச உணர்வு மக்கள் மத்தியில் காணப்படுகிறது என அங்கு சென்று வந்த, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்ற றிச்சர்ட் யஹாவிட் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்தப் பகுதிகளில் சில இடங்களில் நிலக்கண்ணிகள் இருப்பதனாலேயே மக்கள் இன்னமும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், அங்கு சடலங்களோ அல்லது வேறு எதுவுமோ கிடையாது என்றும் பாதுகாப்புத்துறை பேச்சாளரான கெஹகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து குறித்து மிகுந்த ஆச்சரியம் வெளியிட்டுள்ள ரம்புக்வெல, இதுவரை காலமும் போரு க்கு பின்னர் எவரும் நிலக்கண்ணிகளால் இறக்கவில்லையென்றும், அங்கு மக்களை அனுப்புவது ஆபத்து என்றும் கூறினார். அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அரசாங்கம் வேறு புதிய கிராமங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் கடலில் இருந்து இந்தப் புதிய இடம் மிகவும் தொலைவில் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
இராணுவம் பொதுவாக நன்றாக நடக்கின்றபோதிலும், வடக்கில் அவர்கள் அளவிற்கதிகமாக இருக்கிறார்கள் என்றும் றிச்சட் யஹாவிட் கூறியுள்ளார்.

பொது மக்கள் உயிரிழப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காத நவநீதம்பிள்ளை.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் வரையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையும் மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படுவதனை தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட பொது மக்கள் உயிர்ச் சேதங்கள் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு, நவனீதம்பிள்ளை பதிலளிக்க மறுத்துவிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பதவிக்காக இரண்டாது தடவையாக போட்டியிடும் திட்டம் தொடர்பான கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

09 டிசம்பர் 2011

சண்.சீ.கப்பலில் சென்ற இளைஞருக்கு கனடா அகதி அந்தஸ்து.

கனடாவிற்கு எம்.வி.சன்சியில் சென்ற ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி 492 ஈழ அகதிகளுடன் எம்.வி.சன்சி என்ற கப்பல் கனடா பிரிட்டிஸ் கொலம்பியா மகாணத்தில் உள்ள விக்ரோரியா துறைமுகத்தை சென்றடைந்தது.
தாய்லாந்தில் இருந்துபுறப்பட்ட இக்கப்பலை 2010 மே மாத முற்பகுதியில் தாய்லாந்து கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு இடைமறித்து தமது கட்டுப்பாட்டுக்குள் 20 மணித்தியாலங்களுக்கு மேல் வைத்திருந்தனர். பின்னர் ஒருவாறாக அகதிகள் கப்பலை விடுவித்திருந்தனர்.
இந்நிலையில்; சீனக்கடற்பகுதியில் இருந்து யூலை ஐந்தாம் திகதி கனடா நோக்கி புறப்பட்ட எம்வி சன்சி அகதிகள் கப்பல் ஓகஸ்ட் 13 ஆம் திகதி கனடாவைச்சென்றடைந்தது.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என 492 பேர் கனடாவை சென்றடைந்துள்ளனர். இக்கப்பலில் பயணம் செய்த நேசன் என்றழைக்கப்படுபவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
கப்பலில் சென்ற அகதிகள் அனைவரையும் கனடா அரசு சிறையில் தடுத்து வைத்திருந்தனர். இதில் பெரும்பாலானர்கள் விடுதலைப்புலிகள் என கூறி வந்த கனடிய அரசு பின்னர் பல கட்ட விசாரணைகளின் விடுதலை செய்திருந்தது.
இந்நிலையிலேயே டிசம்பர் 05 , 2011 அன்று நடைபெற்ற அகதி வழக்கிலேயே ஈழத்தமிழ் இளைஞருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கப்பலில் சென்ற பலருக்கு அகதி வழக்குக்கான அனுமதிக்கடிதங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை மனித உரிமை விடயங்களில் தற்பொழுது அதிக அக்கறை செலுத்திவரும் கனடிய அரசு கனடாவிற்கு சென்ற தமிழ் அகதிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

08 டிசம்பர் 2011

காதல் பிரச்சனையால் நிகழ்ந்த துப்பாக்கி சூடு!

ஹம்பேகமுவ – சமகிகம – கொட்டவெஹர மங்கட பிரதேசத்தில் நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு 08.30-09.30 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வரில் மூவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 55வயது ஆண், 45 வயது பெண் மற்றும் 24 வயதுடைய யுவதி ஆகியோரே உயிரிழந்துள்ளதோடு 19 வயதுடைய யுவதி படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 22 வயதுடைய இளைஞன் ஆவார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 19 வயது யவதியுடன் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட 22 வயது இளைஞன் காதல் தொடர்பை பேணி வந்துள்ளார். அதனால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த யுவதியின் தாய், தந்தை மற்றும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர். ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மங்களநேசன் ஈ.பி.டி.பியில் இருந்து நீக்கம்.

ஈபிடிபி கட்சியின் உறுப்பினரும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான மனுவல் மங்கள நேசன் தமது கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான முறையிலும் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டதற்காக அவரை ஈபிடிபியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்துவதாக ஈபிடிபி கட்சியின் உயர்மட்டம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிடிபி தலைமை செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் இதனை ஊடகவியலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
மனுவல் மங்கள நேசன் என்பவர் பெண்கள் விடயத்தில் அநாகரிகமாக முறையில் நடந்து கொண்டமையினாலும் மதுவின் பிடியில் இருப்பதன் காரணமாகவும் கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கமலேந்திரன் தெரிவித்தார்.

07 டிசம்பர் 2011

அரசியல் ஆசைகள் எதுவுமே கிடையாது என்கிறார் கே.பி.

'அரசியல் ஆசைகள் என்று எனக்கு இப்பொழுது எவையுமே கிடையாது. என் மக்களுக்கு எதாவது உதவிகளை செய்யமுடியுமாயின் அதுவே போதுமானது' என்கிறார் கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்;மநாதன். வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில்; கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மயிலிட்டி பிரதேச மக்களை அவர் சந்தித்து உரையாடிய வேளையிலேயே தனது மன உணர்வினை வெளிப்படுத்தியுள்ளார்.
இடம்பெயர்ந்த நிலையில் வடமராட்சியின் கரையோர கிராமங்களில் வாழ்ந்து வரும் மயிலிட்டி பிரதேச மக்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்து உரையாடினார். அவருடன் வடக்கு தமிழ் மக்களுக்கென உதவப்போவதாக முன்வந்திருக்கும் புலம்பெயர் தமிழர்கள் நால்வரும் பிரசன்னமாகியிருந்தனர்.
முன்னதாக கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்;மநாதன் யாழ்.மாவட்ட மீனவ அமைப்புப் பிரதிநிதிகளை தன்னுடன் இணைத்து நெய்டோ எனும் உதவி அமைப்பொன்றை உருவாக்கியிருந்தார். அவரது அரசியல் பின்னணியினை அறிந்து கொண்ட பலரும் பின்னர் அதிலிருந்து விலகிக்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் யாழ் திரும்பியிருக்கிறார்.
'நான் இன்று வரை அரசியல் கைதியாகவே உள்ளேன். என்னால் சுதந்திரமாக எதுவும் கதைக்க முடியாது. யுத்தத்தின் வடுக்களை நாம் மறந்து விட்டு நடக்கப்போவது பற்றி கதைப்பதே பொருத்தமானது. எனது உதவிகளை கூடுதலாக வன்னி மக்களுக்கே வழங்கப்போகின்றேன்' என கேபி மேலும் தெரிவித்தார்.
இயலுமான வரை அரசியல் கதைக்காது இருப்பதே பாதுகாப்பானது என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளதை காணக்கூடியதாக இருப்பதாக பேச்சுக்களில் கலந்து கொண்ட பிரதிநியொருவர் தெரிவித்தார். நெய்டோ அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் அப்பதவியை தான் இராஜினாமா செய்துவிட்டதாக கூறிய யாழ்.மாவட்ட மீனவ சமாசங்களின் சம்மேளனத்தலைவர் சி.தவரட்ணத்தையும் கேபி தனியே சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.