பக்கங்கள்

09 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா தரைப்படைக்குள் அதிகரித்துள்ள பிளவுகள்!

சிறீலங்கா இராணுவத்திற்குள் தீவிரமடைந்துள்ள அதிகாரப் போட்டியினால் பாதுகாப்புச் செயலாளரிடம் நல்லபெயர் பெற்று இராணுவத் தளபதி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள ஜெனரல் ஜெகத் ஜயசூரிய கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது எந்தவொரு முக்கியமான பங்களிப்பையும் ஆற்றவில்லை என சிறீலங்காவின் மூத்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துவருகின்றனர். அவருக்கடுத்த நிலையில் இராணுவத் தளபதியாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் நிலையும் அதுதான். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அவர் நாட்டில் இருக்கவில்லை என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் கிழக்கில் படை நடவடிக்கை மேற்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் தளபதி தயா ரத்நாயக்க இராணுவ அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக விளங்குகின்றார். அத்துடன் அவருக்கு இராணுவத் தளபதி பதவிக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இராணுவத்தினர் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதன் காரணமாக தன் பதவியைப் பாதுகாத்துக் கொள்ளவும், தயா ரத்நாயக்கவின் செல்வாக்கைக் குறைக்கவும் அவருக்கெதிராக பாதுகாப்புச் செயலாளரிடம் தகவல்களை சொல்லும் பணியில் இராணுவத் தளபதி ஜெனரல் ஜயசூரிய ஈடுபட்டுள்ளார். தயா ரத்நாயக்க முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் நம்பிக்கைக்குரியவர் என அவர் கூறியதை நம்பிய சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும் தயா ரத்நாயக்கவை ஓரங்கட்டும் பிரயத்தனங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன் காரணமாக சிறீலங்கா இராணுவத்திற்குள் இரண்டு அணிகளாகப் பிளவு ஏற்பட்டுள்ளதுடன், அதிகாரப் போட்டியும் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.