பக்கங்கள்

25 செப்டம்பர் 2016

வடக்கு முதல்வரின் உரை நல்லிணக்கத்திற்கு பாதகம் என்கிறார் சுமந்திரன்!

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடைபெற்றிருந்தது. பேரணியின் இறுதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, நாம் அதில் கலந்துகொள்ளவில்லை. இங்கு வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது. நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

24 செப்டம்பர் 2016

யாழில் மிக எழுச்சியுடன் எழுக தமிழ் பேரணி!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண முதலமைச்சர் தலைமையில்,பாராளமன்ற உறுப்பினர்கள், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, பலாயிரகணக்கான மக்கள், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்குபேருந்துகளில் வருகைதந்த வண்ணமே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

20 செப்டம்பர் 2016

நல்லாட்சி அரசின் மூன்று முகத்தை வெளிக்காட்டவே எழுக தமிழ் பேரணி!


நல்லாட்சி அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. இதனை உலகுக்கு வெளிப்படுத்தவே எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளதாக யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு மங்களராஜா தெரிவித்தார். 
நல்லாட்சி அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. இதனை உலகுக்கு வெளிப்படுத்தவே எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளதாக யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு மங்களராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கலைத்தூது மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், நல்லாட்சி அரசாங்கம், காணிகள் விடுவிக்கப்படும், மீள்குடியேற்றம் நடைபெறும், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், தீர்வு எட்டப்படும் என வடபகுதிக்கு ஒரு முகத்தையும், தமிழர்களுக்கு தீர்வை கொடுக்கமாட்டோம், இராணுவத்தினரை குற்றவாளிகளாக நிறுத்தமாட்டோம் என தென்னிலங்கை இனவாதிகளுக்கு ஒரு முகத்தையும், வாக்குறுதிகளை அள்ளி வீசிச் செயலில் காட்டாமல் ஜெனீவாவுக்கு ஒரு முகத்தையும் காட்டுகின்றது. இந்த வருடத்துக்குள் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்தப் பேரணி நடத்தப்படுகின்றது என்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இங்கு கருத்து வெளியிடுகையில், இந்தப் பேரணி ,சுமார் 40 அமைப்புக்களுடன் கலந்துரையாடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரணி நடைபெறாவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தின் கபட நாடகம் வெளியில் வராமல் போய்விடும். இந்தப் பேரணி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்ற அளவுக்கு பேரணி முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு பேரணியும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஒரு பேரணியும் ஆரம்பித்து, இரண்டும் இலுப்பையடிச் சந்தியில் சந்தித்து, தொடர்ந்து யாழ். திறந்தவெளி அரங்கைச் சென்றடையவுள்ளது.

17 செப்டம்பர் 2016

அரசியலுக்காகவே முஸ்லீம்கள் மதம் சார்ந்தவர்களாக காட்டிக்கொள்கிறார்கள்!

விக்கினேஸ்வரன்இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும் அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி .விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு நகரில் நடைபெறுகின்ற தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் ''எந்தவொரு இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் கலை, கலாசாரம், இலக்கியம் அனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவது அவர்களின் தாய்மொழிதான். தமிழர் என்றாலும் சரி, சிங்களவர்கள் என்றாலும் சரி, மொழிதான் அந்த இனங்களின் பாரம்பரிய வடிவமாக அமைகிறது.முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது அடையாளம் மதம் சார்ந்தது, மொழி சார்ந்தது அல்ல என்று கூறி வருகின்றனர். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசும் போதும், தமிழ் மொழியில் கவிதைகள் எழுதி பாடும் போதும் அவர்களின் கலை அடையாளமும் மொழி சார்ந்தது என்று சொல்லத் தோன்றுகின்றது. மொழி பேச கற்றுக் கொண்ட பின்னர்தான் மதத்தை அறிந்து கொண்டோம். இந்நிலையில் முஸ்லிம் சகோதரர்களும் அடிப்படையில் தமிழ் மொழி சார்புள்ளவர்கள்தான். தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்'' என்றார்.தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராக தான் செயல்படுவது தொடர்பாகவும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார். ''தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான பரிந்துரைகளை முன் வைப்பதையும் நோக்கமாக கொண்டுதான் பல்வேறு தரப்பின் வேண்டுகோளின் பேரில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.இந்த உருவாக்கத்திற்கு காரணமாக செயல்பட்டவர்களிடம் தெளிவுத்தன்மை காணப்படுகிறது . அதன் காரணமாகவே தமிழ் மக்கள் பேரவையின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக எக்காலத்திலும் மாற்றம் பெறக் கூடாது என்ற நிபந்தனையை ஏற்கெனவே முன் வைத்துத் தான் இந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றேன்" எனக் குறிப்பிட்டார் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன்.

11 செப்டம்பர் 2016

எமக்கும் கோபம் வரலாம்..நாமும் போட்டுத் தாக்கலாம்..!சீமான் ஆவேசம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிடுவதற்கு கர்நாடகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சில கன்னட வெறியர்கள் அங்குள்ள தமிழரை அடித்து, உதைத்து, மண்டிய வைத்து, கன்னடம் வாழ்க என்று சொல்ல வைத்துள்ளார். இது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’நாங்கள் எதைச்செய்தாலும் தமிழக இனவெறியர்கள். தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசி பழி சுமத்தினீர்கள். காவிரியில் தண்ணீர் கேட்கும்போது எங்கள் பேருந்துகளை பிடித்து வைத்துக்கொள்வது, எங்கள் படங்கள் ஓடின திரையரங்குகளை அடித்து நொறுக்குவது, எங்கள் மக்களுக்கு உயிர் பயத்தைக்காட்சி அச்சுறுத்தலை கொடுப்பது, அடிப்பது, தண்ணீர் எதுக்கு சிறுநீர் தருகிறோம் என்று எழுதி அனுப்புவது என்று கொடுமைகள் நடக்கின்றன. எல்லா பக்கமும் எங்களை அடிக்கிறார்கள்; ஆனால் இந்த நிலத்தில் அது நடக்குதா பாருங்க. எவ்வளவு மாண்புக்க ஜனநாயகவாதிகள் தமிழர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தில் லட்சக்கணக்கில் எம் மக்கள் செத்து விழுந்தபோது கூட என் தம்பி முத்துக்குமார், தன் ஆழ் மனதில் எழுந்த ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் தன் உடலில் நெருப்பை வைத்துக்கொண்டு செத்தான். ஒரு சிங்களர் கூட இங்கு தாக்கப்படவில்லை. எவ்வளவு நேரம் ஆகிவிடும் நாங்கள் இங்குள்ள கன்னடர்களை விரட்டுவதற்கு. அதைச்செய்யாமல் இருக்கிறோம். தமிழர்கள் ஒன்னேகால் கோடி மக்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனித்த அரசியல் என்று எதுவுமில்லை. அந்த மண்ணின் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதன்படிதான் வாழ்கிறார்கள். ஆனால் இங்கு எங்களுக்கு அப்படிப்பட்ட அதிகாரம் இல்லை. அடிமைகளாக நாங்கள் இருக்கிறோம். போராடுகிற மக்களை கர்நாடக அரசு ஆதரித்து ஊக்கப்படுத்துகிறது. போலீசார் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். நான் கோயம்பேட்டில் கர்நாடக பேருந்தை தடுத்து நிறுத்தினால் நாளைக்கு இந்த அரசு என் மேல் குண்டாசை போட்டு உள்ளே தூக்கிப்போடும். ஆனால் என் பிள்ளைகளை அடிக்கிறான்; பேருந்துகளை உடைக்கிறான். அந்த அரசு யாரையாவது கைது செய்திருக்கிறதா பாருங்க. தமிழர்களுக்கு மொழிப்பற்று இனப்பற்று கிடையாது. சாதிப்பற்று, மதப்பற்றுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக இதை சகித்துக்கொண்டே இருப்போம் என்று எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய தவறு. எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாமல் ஒரு நியாயமான முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும். நான்கு மாநில முதல்வரையும் அழைத்து பேசவேண்டும் என்று சித்தாராமைய்யா பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். நியாயமாக பார்த்தால் அம்மையார் ஜெயலலிதானே கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஏன் எழுதவில்லை. அங்கே அடிக்க அடிக்க இங்குள்ள உணர்வுள்ளவர்கள் பொறுத்துக்கொண்டே இருப்பார்களா? பதிலுக்கு அடித்தால் இவர்கள் வன்முறையாளர்கள்; இனவெறியர்கள் என்றால் இதை எப்படி ஏற்பது? தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா? கையை கட்டிக்கிட்டு நிற்போம் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே காவிரி விவகாரத்தில் சும்மா இருக்கிறார்கள். மக்களை மகிழ்விக்கிற கலைஞர்களை ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும். இருந்தாலும் கர்நாடகாவில் நடிகர், நடிகைகள் போராடியதுபோல இங்கேயும் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். அங்கே உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும். அது நடக்கலாம்’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.

08 செப்டம்பர் 2016

ஸ்னோவ்டனுக்கு இலங்கை அகதிகள் அடைக்கலம்!


அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை விக்கிலீக்ஸ் மூலம் வௌியிட்ட எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்தவராவார். 
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை விக்கிலீக்ஸ் மூலம் வௌியிட்ட எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்தவராவார். 2013ம் ஆண்டு ஹொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் தலைமறைவாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகளை, அமெரிக்க ஊடகங்கள் நேர்காணல் செய்து வௌியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.