பக்கங்கள்

15 ஆகஸ்ட் 2016

சிங்களத்திற்கு பணிந்து தமிழீழம் என்ற சொல்லை அவுஸ்திரேலியா நீக்கியதாம்!

அவுஸ்ரேலியாவில் நடத்தப்படும் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில்,பிறந்த நாடு என்ற கேள்விக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழீழம் என்ற தெரிவு விடை, இலங்கை தூதரகத்தின் அழுத்தத்தின் பேரில் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிறந்த நாடு என்ற கேள்விக்கான பதில்களில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அதில் தமிழீழமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனால் அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழீழம் என்று தமது பிறந்த இடத்தை குறிப்பிடத் தொடங்கினர். இதையடுத்து, கடந்த 6ஆம் ,7ஆம் நாள்களில், கன்பராவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு பெருமளவு தொலைபேசி அழைப்புகளும், மின்னஞ்சல்களும் வரத் தொடங்கின. வாரஇறுதி விடுமுறைக்குப் பின்னர், முதலாவது வேலை நாளான கடந்த 9ஆம் நாள், கன்பராவில் உள்ள இலங்கைத் தூதரகம் துரித நடவடிக்கையில் இறங்கியது. அவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்திடமும், அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவிடமும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவுஸ்ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஸ்கந்தகுமார் அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவுடன் நேரடியாகப் பேசினார். விடுதலைப் புலிகள் அமைப்பு அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழீழம் என்ற தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என்று அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவிடம் அவர்கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழம் என்ற பதம், அவுஸ்ரேலிய அரசின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இடம்பெற்றிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தமிழீழத்தை நீக்குவதாக கடந்த 9ஆம் திகதி இலங்கை தூதுவருக்கு உறுதி அளித்தது, இதற்கமைய அன்று பிற்பகல் 2.30 மணியளவில், தமிழீழம் நீக்கப்பட்டது.இவ்வாறு செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 ஆகஸ்ட் 2016

போராளிகளின் மர்ம மரணங்களுக்கு சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள டவுனிங் வீதியில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இறுதிப் போரில் பொதுமக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இறுதிப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் போராளிகள் பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 104 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல போராளிகள் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இவை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன எனவே, குறித்த விடயம் தொடர்பில் நீதியான முறையில் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

10 ஆகஸ்ட் 2016

மது,புகைப்பழக்கம் இல்லாத போராளிகளுக்கு எவ்வாறு புற்றுநோய் ஏற்படுகிறது?

துப்புரவுப்பணியில் போராளிகள்
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது, புகைத்தல் மற்றும் மதுபான பழக்கங்களுக்கு உட்படாதவர்கள் எவ்வாறு புனர்வாழ்வின் பின்னர் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இந்த சந்தேகத்தை வெளியிட்டார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளில் 107பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர். மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்திருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொற்றாநோயான புற்றுநோய்க்கு எவ்வாறு ஆளானார்கள்? போராளிகளின் மரணம் தொடர்பாக சர்வதேச மருத்துவ நிபுணத்துவத்துடனான விசாரணை அவசியம். இதற்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தற்போது சமுகத்தில் உள்ள பல போராளிகள் வெவ்வேறு நோய்களுக்குள்ளாகின்றனர். இவை எவ்வகையான நோய்கள் என்று இனங்காணப்படவில்லை. எனவே அனைத்து போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தாது இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அது மாத்திரமன்றி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு கூட ஊசிகள் ஏற்றப்பட்டதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையிலும் அரசியல் கைதியொருவர் தடுப்பூசி ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். அவர் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகக்குறைந்தது அவர்களின் வழக்குகளை தமிழ்ப்பகுதிகளுக்கு மாற்றவேண்டுமென கைதிகள் என்னிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நடடிவக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கேட்டுக்கொண்டார்.

07 ஆகஸ்ட் 2016

போராளிகளின் மரணங்கள் இன அழிப்பின் அடையாளமே!

அரசியல் மகளிரணிப் பொறுப்பாளர்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் திடீரென மரணிக்கின்றனர். இவர்களின் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது. எனவே, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொடர்ச்சியான உயிரிழப்பு பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. கடந்த காலத்தில் அரசால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுள் சிலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் புற்றுநோய் காரணமாகவே உயிரிழப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே, தமக்கு இரசாயன உணவும் சந்தேகத்துக்கிடமான மருந்தும் ஏற்றியதாக புனர்வாழ்வில் இருந்து விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் பகிரங்கமாகவே மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியிடம் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம் பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் மிக மோசமான அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு இவ்வாறான மரண பயம் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, இவர்களுடைய அச்சத்தைப் போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுத்த தரம் வாய்ந்த மருத்துவப்  பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்களின் தார்மீகக் கடமையும் பொறுப்பும் ஆகும். ஆனால், வழமைப்போல் இதனையும் அரசியலாக புறந்தள்ளி விடாதீர்கள். எனவே, இவ்வாறான நிலை கட்டமைக்கப்பட இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது. வெறுமனே நல்லாட்சி அரசு என நீங்களே உங்களுக்கு கூறிக்கொள்வதை விடுங்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய வகையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நல்லெண்ண முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திலும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே, மனங்கள் வெல்லப்படாத வரை நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. சிங்கள மேட்டிமை வாதப் போக்கு உள்ளவரை நல்லிணக்கம் என்பது கானல் நீர்தான். இவற்றை ஏன் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் இல்லை என்பதே வேதனையாகவுள்ளது. எனவே, முன்னாள் போராளிகளின் அச்சத்தைப் போக்க வழிவகுப்பீர்கள் என நம்புகின்றோம்" - என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதிகள் ஜ.நா. தூதரகம், அமெரிக்கத் தூதரகம், இந்தியத் தூதரகம், சுவிஸ்சர்லாந்து தூதரகம், பிரிட்டன் தூதரகம் ஆகியவற்றின் தூதுவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

04 ஆகஸ்ட் 2016

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை சுட்டுக்கொன்று எரித்தனர்!மக்கள் கண்ணீர்!

"இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் வந்து படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில் ஏனையோருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இது தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்." - இவ்வாறு நல்லிணக்க செயலணி முன் கதறியழுது வலியுறுத்தியுள்ளனர் இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைப்பது என்பன தொடர்பில் நல்லிணக்க செயலணியால் வடக்கில் மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை இழுத்தடிக்கப்படுகின்றது. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்டுபிடித்துத் தருவோம் என்று கூறிக்கொண்டிருப்பதை ஏமாற்றும் செயலாகவே நாம் கருதுகின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக் கப்பட்ட குழு விசாரணை நடத்தவேண்டும். இது தொடர்பில் இராணுவத்தினர் யாராவது தகவல் தெரிவிக்க முன்வந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண் டும். தகவல்களை மறைப்பவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும். இதேவேளை, இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு கூறுகின்றது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு இவ்வாறு கூறுவதே பெரும் குற்றம். இதை எப்படி நல்லாட்சி என்பது? வடக்கில் பலர் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இராணுவம் சுட்டுக் கொன்றது உண்மை. விரும்பியோ, விரும்பாமலோ இந்த அரசு குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்காது. அதனால் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்"என்றனர்.

03 ஆகஸ்ட் 2016

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்!

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், அவரின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாய ராஜபக்‌ஷவும் போர்க்குற்றவாளிகள். இறுதிப் போரில் அரச படைகள் குறிவைத்து ஏவிய கொத்துக்குண்டுகளினாலும், ஏனைய வெடிகுண்டுகளினாலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் செத்துமடிவதற்கு இவர்கள் இருவருமே முக்கிய காரணமானவர்கள். இவர்களுக்குத் தண்டனை வழங்க சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும். இவர்களுக்குத் தண்டனை வழங்கினால்தான் நாட்டில் இனவாதம் ஒழிந்து உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.'' - இவ்வாறு மீண்டும் ஆணித்தரமாகத் தெரிவித்தனர் வடக்கு மாகாண மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எவ்வாறு அமைப்பது என்பன தொடர்பில் நல்லிணக்கச் செயலணியால் வடக்கு மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: - "இறுதிக்கட்டப் போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? இது தொடர்பில் முழுமையான நம்பகமான விசாரணை நடத்தப்படவேண்டும். இதுவரையில் அவ்வாறான ஒரு விசாரணை நடக்கவில்லை. காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணை பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படவேண்டும். இதில் சர்வதேச பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவேண்டும். அதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் வடபகுதியில் அமைக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் சர்வதேச விசாரணை மூலம் தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தத் தண்டனை வழங்கப்படுவதன் ஊடாகவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும். எமக்கும் பாதுகாப்பு இருக்கும். உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளில் நாம் நம்பிக்கை வைக்க முடியாது. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணைக் குழுவே அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உருவாகும். நாங்கள் சலுகைகளையோ, சன்மானங்களையோ எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். அதற்காகத்தான் எல்லா இடங்களுக்கும் அலைகின்றோம். நாங்கள் கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவற்றைச் செயற்படுத்தவேண்டும்'' இவ்வாறு மக்கள் தெரிவித்துள்ளனர்.

02 ஆகஸ்ட் 2016

மகிந்தவை தூக்கிலிடுமாறு மக்கள் கோரிக்கை!

தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர். போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் கண்காணிப்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சாட்சியமளித்த மக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பொது மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தகுதி, தராதரம் பாராது உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். மக்கள் கொல்லப்பட்டமைக்கு நியாயம் வழங்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களுக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வை எந்தவொரு இடையூறுமின்றி அனுஸ்டிப்பதற்கு வழியேற்படுத்தி தரவேண்டும். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்கு இராணுவத்தின் தலையீடு இருக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை செயலணி நடைபெறும் குறித்த பகுதியில் இன்று காலை இராணுவத்தினரின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் எனினும் மனித உரிமை ஆணைக்குழுவினரின் வருகையை அடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

01 ஆகஸ்ட் 2016

முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனை தேவை!

முன்னாள் போராளிகளை சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் உரையாற்றியபோதே வடக்கு முதலமைச்சரிடம் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: ஒட்டுசுட்டானில் நல்லிணக்க பொறிமுறை செயலணியின் அமர்வின் போது கருத்துக்களை பகிர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தமக்கு கட்டாயப்படுத்தி ஊசி ஏற்றப்பட்டது எனத் தெரிவித்தார். இதனை கவனத்தில் எடுத்து முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். எமது மக்களின் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களே முன்னாள் போராளிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.