பக்கங்கள்

31 மே 2014

'புகை சுகத்தின் பகை,யாழில் பேரணி!

யாழில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 'புகை சுகத்தின் பகை,புகைத்தலில் செலவிடுதலை உன் பிள்ளையின் படிப்பில் முதலிடு ' போன்ற பதாகைகளைத் தாங்கியவாறு இந்த விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது. இன்று காலை 8மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி மு.ப 11மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்பத்தில் நிறைவு பெற்றது. இந்த விழிப்புணர்வுப் பேரணியை யாழ்.பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையுடன் இணைந்து யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் மருத்துவ விஞ்ஞான பிரிவு,யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் மற்றும் சமூக நிறுவனங்கள் என்பன இணைந்தே இந்த புகையிலை விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

22 மே 2014

வயோதிபப் பெண் கொலை!

கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் தங்க நகையும் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்.அரியாலை இளையதம்பி வீதியிலுள்ள வீட்டிலேயே நேற்றுக் காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டினில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணான சோமசுந்தரம் இராசம்மா என்ற 72 வயதுடையவரே இவ்வாறு திருட்டுக்கு சென்றவர்களினால் கட்டி வைக்கப்பட்ட நிலையில் கழுத்து நெரியுண்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் மகள் வெளியில் சென்றிருந்த தருணம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தவர்கள் தங்க நகைகளை திருடியதோடு வயோதிபப் பெண்ணின் காதினையும் அறுத்து தோட்டினை அபகரித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அயலவர்கள் யாழ்ப்பாணம் சிறீலங்கா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு வந்த பொலிசார்
சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

18 மே 2014

இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் உயிருடன் கைதுசெய்த புதிய ஆதாரம்!

2009ம் ஆண்டிற்குப்பின் தொடர்ச்சியாக எமது உறவுகள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்ட பல ஆதாரங்களை பிரித்தானிய தமிழர் பேரவை.சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வந்த வண்ணம் உள்ளது , அவ்வாறான ஆதாரங்களை பல்வேறு பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தி அதன் நம்பகத் தன்மையை நிரூபித்த பின்னர் அவற்றை பெரும்பாலும் பிரித்தானியாவின் புகழ் பெற்ற ஊடகங்கள் உலகிற்கு வெளிக் கொண்டு வந்த வண்னம் உள்ளன. இவ்வாறான சாட்சிகளும் காட்சிப்பதிவுகளும் உலகின் மனச்சாட்சியை உலுப்ப ஆரம்பித்த பின்னனியில் இலங்கை மீது ஓர் சர்வதேச விசாரணையை ஆரம்பிப்பதற்கான அடித்தளம் இப்போது இடப்பட்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று , முள்ளிவாய்க்கால் அவலத்தின் 5ம் ஆண்டை நினைவு கூறும் தருணத்தில் , இறுதியுத்தத்தில் உயிருடன் பிடிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா, மற்றும் அவரது தோழி உட்பட பலர் உயிருடன் பிடிக்கப்பட்டு கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்கள் தமிழர் பேரவைக்கு கிடைத்திருக்கின்றதன. இவர்கள் இலங்கை இராணுவக் காவலரணுக்கு அருகாமையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படமும், இசைப்பிரியா தனிமையில் இருத்தப்பட்டு அவரைச்சுற்றிலும் பல இலங்கை இராணுவத்தினர் வேடிக்கை பார்க்கும் புகைப்படமும் , இவருடன் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படமும் கிடைக்கப்பட்டிருக்கின்றது. இக் கைதுகளில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முகங்கள் மிகத்தெளிவாக அடையாளம் காணக்கூடியதக உள்ளது, அதேவேளை இப் புகைப்படங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று சர்வதேச மட்டத்தில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான தருணத்தில் , தாயகத்தில் இழந்த உறவுகளை நினைவு கூறும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்ட நிலையில் எமது உறவுகள் வாழ்கின்றனர். எனவே இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இங்கே லண்டனில் Trafalgar Square ல் இன்று பிற்பகல் 4 மணிக்கு நீதி கேட்டு ஓர் கவண ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணிகள் , போராட்டங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் அலை அலையாக கலந்து கொண்டமைதான் பிரித்தானிய பிரதமரை யாழ்ப்பானம் வரை கொண்டு சென்றது. மக்கள் சக்திக்கு அவ்வாறான ஒரு பலம் உண்டு என்பதை லன்டன் பேரணிகள் ஏலவே நிரூபித்துள்ளது இவ்வாறான பின்னனியில் இன்று நடைபெறும் கவண ஈர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைக்கின்றது.

17 மே 2014

கஜேந்திரன் வீட்டருகில் நிலைகொண்டது படை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரனின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிவசக்தி சனசமூக நிலையத்தில் இன்று மாலை 5.00 மணி தொடக்கம் இராணுவம் நிலைகொண்டுள்ளது. குறித்த சனசமூக நிலையம் கந்தா்மடத்திலுள்ள சிவன் -அம்மன் கோவிலின் தெற்குப்புற வீதியில் அமைந்துள்ளது. இன்று பிற்பகல் 4.00மணியளவில் அப்பகுதிக்கு இராணுவத்தினா் வந்துள்ளனா். அருகில் உள்ள வீடுகளில் குறித்த சனசமூக நிலையத்தின் தலைவா் யார் என்று விசாரித்துள்ளனா். நிர்வாக உறுப்பினர் ஒருவரை கண்டுபிடித்து அவாிடம் குறித்த சனசமூக நிலையத்தின் திறப்பினை பெற்றுக் கொண்ட பின்னர் தாம் இரண்டுநாட்கள் அங்கு தங்கப் போவதாக கூறியுள்ளனா். குறித்த நிர்வாக உறுப்பினரும் அச்சம் காரணமாக மறுபேச்சுப் பேசமுடியாத நிலையில் சம்மதித்துள்ளாா். நாளைய தினம் மே 18ம் திகதி இலங்கை அரசாங்கம் யுத்த வெற்றி விழாவினைக் கொண்டாடவுள்ள நிலையில் அந்த நாளை இன அழிப்பு நாள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரகடனம் செய்துள்ளது. நாளைய தினம் நாடு முழுவதும் போா்வெற்றியை கொண்டாடுவதற்கு சிறீலங்கா அரசும் அதன் இராணுவமும் தயாராகி வரும் நிலையில் அந்நாளில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்வை நடாத்த தாயகத்திலும், புலம்பெயா் தேசங்களிலும், தமிழகத்திலும் தன்மானம் உள்ள தமிழா்கள் தயாராகி வருகின்றனா். இந் நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன் வீட்டிலிருந்து 50 மீற்றா் தூரத்தில் அமைந்துள்ள குறித்த சனசமூக நிலையத்தில் இராணுவம் குடிகொண்டுள்ளமை அப்பகுதியில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

16 மே 2014

வடமாகாணசபையினில் தீபம்! காலால் மிதித்து அணைத்தனர் பொலிஸார்!


வடமாகாணசபையின் கைதடியிலுள்ள பேரவை கட்டிடம் முன்பதாக இன்று ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரினை ஒரு சில வினாடிகளினில் காலால் மிதித்து அணைத்தனர் இலங்கைப்பொலிஸார். அறிவிக்கப்பட்ட படி வடமாகாணசபையின் உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் வடமாகாணசபையினுள் நினைவேந்தல் நிகழ்வினை நடத்த உள்ளே செல்ல முற்பட்டனர். எனினும் அதனை தடுக்கும் வகையினில் பிரதான நுழைவாயில்கள் பூட்டப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து.அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.எனினும் தாம் மாகாணசபை உறுப்பினர்கள் என அடையாளப்படுத்தி அவர்கள் உள்ளே செல்ல முற்பட்டனர்.அதற்கும் அனுமதி வழங்கப்படாது இன்று மாகாணசபைக்கு விடுமுறையென தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க முற்பட்டனர். இந்நிலையினில் தம்மால் எடுத்துவரப்பட்ட சுடரினை பேரவைக்கு முன்னதாக சிவாஜிலிங்கம் ஏற்ற முற்பட்டார்.எனினும் சுடரை ஏற்றிய சில வினாடிகளினில் அங்கு பாய்ந்து வந்த பொலிஸ் உயரதிகாரியொருவரை அதனை தள்ளிவீழ்த்தி கால்களினால் மிதித்தார்.அவருடன் இணைந்து ஏனைய பொலிஸாரும் தீபத்தை கால்களால் மிதித்து அணைத்தனர். எனினும் இவை எதனையும் பொருட்படுத்தாது பீறிட்டு வந்த கண்ணீருடனேயே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கு மௌன அஞ்சலியை அவர்கள் செலுத்தினர்.அங்கு அஞ்சலி நினைவுரைகளை ஆற்றிய கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் இங்கு நிலவும் அராஜகங்களை சர்வதேசமும் புலம்பெயர் உறவுகளும் புரிந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். இதனிடையே வடமாகாணசபையின் மற்றொரு பெண் உறுப்பினர் மேரிகமலா முல்லைத்தீவிலிருந்து வருகை தந்து அஞ்சலியினில் கலந்து கொண்டார்.எனினும் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் விடுமறையென வீட்டினில் இருந்து கொண்டதாக பணியாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டது. ஏனைய அமைச்சர்களோ உறுப்பினர்களோ கலந்து கொள்ளாமை பங்கெடுத்த பொதுமக்களிடையே கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.வலி.வடக்கு பிரதேச சபைதலைவர் ச.சஜீவன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் ந.சதீஸ் ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

10 மே 2014

ஊடகவியலாளரை தாக்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்!

யாழ். ஊடகவியலாளர்கள் மீது வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் வைத்து இனம்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். கோவில் வீதியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்திய வெளிவிவகார உயரதிகாரி சுஜித்ரா துரை உள்ளிட்ட அந்நாட்டு உயரதிகாரிகள் குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். இந்தச்சந்திப்பு குறித்து செய்தி சேகரிக்க யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கொழும்பைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் அங்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் முதலமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அதிகாரிகள் குழுவினருக்குமான சந்திப்பு முடிவுற்றதும் முதலமைச்சரின் வாசஸ்தலத்திலிருந்து வெளியில் வந்த குழுவினரை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது அங்கு சிவில் உடையில் திடீரென பிரசன்னமான நபர் ஒருவர் பொலிஸார் முன்னிலையில் ஊடகவியலாளர்களை மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தியதோடு அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார். இதேவேளை ஊடகவியலாளர் ஒருவரின் புகைப்படக்கருவியும் சேதத்திற்குள்ளானது. அத்தோடு ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்த குறித்த ஊடகவியலாளர்களை திடீரென தள்ளியதில் அவர்கள் நிலைகுலைந்து போனர்கள். இதேவேளை மேற்படிச் சம்பவமானது சாதாரணமானது (சின்னப் பிரச்சினை) என்றும் ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்து அநாகரிகமாக நடந்து கொண்டநபர் முதலமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்றும் கொழும்பிலிருந்து தற்போதுதான் வந்துள்ளார் என்றும் முதலமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் மன்மதராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதேவேளை மேற்படிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் சார்பில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

09 மே 2014

சிறுபான்மையின வேட்பாளரை சிங்களம் ஏற்கப்போவதில்லை!

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிக்க எந்தவித தேவையும் இல்லை. அவசியமிருப்பின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் விக்னேஸ்வரனை நியமிப்பதில் தவறில்லை. எனினும் பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரின் தேவையுள்ளது என்று ஜே.வி.பி. தெரிவித்தது.ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர். இது குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் வினவிய போதே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்.
கயந்த கருணாதிலக:இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பிலோ அல்லது வேறு ஒருவரை பொது வேட்பாளராக நியமிப்பதா என்பது குறித்து நாம் இதுவரையில் முடிவெடுக்கவில்லை. அதற்கான அவசியம் இப்போதைக்கு இல்லையென்றே நாம் நினைக்கின்றோம். அரசாங்கம் எவ்விதமானதொரு தேர்தலை நடாத்தும் என்பது இன்னமும் முடிவான நிலையில் இவ்வாறான கேள்வி எழுவது பொருத்தமற்றதொன்றாகும். விக்னேஸ்வரன் மட்டுமல்ல யார் வேண்டுமென்றாலும் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படலாம். ஆனால் தெரிவு செய்யப்படுபவர் பெரும்பான்மை இன சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வெறுமனே சிறுபான்மை தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் வைத்து வெற்றி பெற முடியாது. எனவே காலத்தின் தேவைக்கேற்ப நாம் தீர்மானங்களை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா: இது தொடர்பில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவிக்கையில்,ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனைய தேர்தல்களைப் போல் அல்ல ஜனாதிபதி தேர்தலென்பது நாட்டின் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலே இது. இதன்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பொது வேட்பாளருக்கான தேவை இருக்கும். எனவே ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் எம்முடன் இணைய விரும்பும் சிறு கட்சிகள் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய பின்னரே சரியானதும் உறுதியானதுமொரு வேட்பாளரை நியமிக்க முடியும். எனவே இது தொடர்பில் முடிவுகளை எடுக்க காலம் உள்ளது. விக்னேஸ்வரன் அவர்களை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் வந்துள்ளதே தவிர சரியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. அனைத்து இன மக்களையும் கவரக்கூடிய வகையில் ஒருவரை நியமிப்பதே சரியானதாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். ரில்வின் சில்வா: இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நியமிப்பது தவறில்லை. அவருக்கு அதற்கான உரிமையும் தகுதியும் உள்ளது. ஆயினும் மூவின மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலின் போது அவசியமானது எனவே தமிழர்களின் முழுமையான வாக்குகள் அவசியம் என்பதைப் போலவே சிங்கள மக்களின் வாக்குகளும் அவசியம். பிரதான எதிர்க்கட்சியாகவோ அல்லது பொது எதிர்க்கட்சியாகவோ இணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறவேண்டியதொரு தேவை உள்ளது. எனவே அதற்கு ஏற்றாற் போலவே வேட்பாளரையும் நியமிக்க வேண்டும். எனினும் மக்கள் விடுதலை முன்னணியினரைப் பொறுத்த மட்டில் பொது வேட்பாளராக நியமிக்கப்படுபவர் அரசியல் கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தாதவராகவே இருக்க வேண்டும். எந்தவொரு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டாலும் அதற்கு நாம் ஆதரவு தெரிவிக்கமாட்டோம். மேலும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைத்தாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் யாரும் ஆட்சியமைப்பதனாலோ நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்பட போவதில்லை. தத்தமது சுயநலத்திற்காகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தவுமே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது என்றார்.

08 மே 2014

யாழ்.பல்கலையில் நாளை அமைதிப் போராட்டம்!

யாழ். பல்கலைக் கழகத்தின் பேராசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நாளை அமைதிப்போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. யாழ்.பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பல்லைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டும், வீசப்பட்டும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டு இந்த அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் நேற்றுமுன்தினம் பல்கலைக்கழக சூழலில் வீசப்பட்டிருந்தன. கலைப்பீட பீடாதிபதி வி.பி.சிவநாதன் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன், மாணவர் ஒன்றியத் தலைவர் சுபாபர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கோமேஸ், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவர் வேணுகோபன் ஆகியோர் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அந்த துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஆட்சேபித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தாங்கள் அமைதிப்போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள் என அறிவித்துள்ளனர்.

07 மே 2014

கனடிய பாராளுமன்றில் போர்க்குற்ற நாள் நினைவேந்தல்!

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது.2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட சகலரையும், அப் போரினால் அநாதரவாக்கப்பட்டவர்களிற்கான விடிவு வேண்டியும் பாராளுமன்றத்தின் மத்திய கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சகல அரசியற் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். மே மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக இருக்கின்ற காரணத்தால் அன்று பாராளுமன்றம் மூடப்பட்டிருக்கும். எனவே அதற்கு முற்கூட்டி, மே மாதம் 14ம் திகதி புதன்கிழமை நன்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறும் எனவும் கனடிய மனிதவுரிமை மையம் தெரிவித்துள்ளது. கனடியப் பாராளுமன்றத்தினுள் அமைந்துள்ள பிரபல்யமான “பொதுநலவாய நாடுகள் அறை”யில் அமர்வு இடம்பெறுமெனவும், மதிய உணவு நேர இடைவேளையின் போது இந் நிகழ்வு இடம்பெறுவதால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவார்கள் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் கட்டமைப்பின் கணிப்பீட்டின் பிரகாரம் இறுதிப் போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதோடு போரின் போதான தர்மங்கள் ஏதும் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை அனுசரணையாக வைத்து மேற்கொள்ளப்படும் இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பை அனைத்து கனடாவாழ் தமிழர்களுக்கும் விடுத்துள்ள கனடிய மனிதவுரிமை மையமானது, தற்போதைய கனடிய அரசின் முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக கனடாவிலுள்ள இதர தமிழ் அமைப்புக்களையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் contact@chrv.ca மூலமாகவோ அல்லது 416-644-7287 என்ற தொலைபேசி இலக்கத்தின மூலமாகவோ தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

06 மே 2014

யாழ்,பல்கலைக்கழகம் மூடப்படுகிறது!

யாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். மூடப்படுவதற்கான உண்மையான காரணம் தெரிவிக்கப்படாதபோதும் மாணவர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கற்றல் செயற்பாடுகள் குறிப்பிடப்படும் திகதிவரை நிறுத்தப்படுகின்றன என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார் என்று மாணவர் ஒன்றியத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுதியைவிட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர்,விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கென அவர்களைப் பலாலி படைத்தளத்துக்கு வருமாறு யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதயபெரேரா அழைப்புவிடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இறுதிப்போர் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் மே 17,18 ஆம் திகதிகளில் போரில் இறந்தவர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்திவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழகத்தை மூட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாணவர்கள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதமும் இவ்வாறு காரணம் இன்றி பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

05 மே 2014

வீட்டைக்கேட்ட மூதாட்டி மீது தாக்குதல்!

கனடாவிலிருந்து வந்து தனது சொந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற மூதாட்டி ஒருவரை வீட்டில் குடியிருப்பவர்கள் தாக்கி காயப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ள சம்பவமொன்று சாவகச்சேரி, நுணாவில் மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த, குணாநந்தன் தயாளசோதி (வயது 78) என்ற மூதாட்டி சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது, நுணாவில் மேற்கைச் சேர்ந்த குறித்த மூதாட்டி, தான் கனடாவுக்குச் செல்வதற்கு முன்னர், வீடில்லாமல் தவித்த ஒரு குடும்பத்தினரை தனது வீட்டில் குடியிருக்க அனுமதித்து, வாடகை ஒப்பந்தமும் செய்துவிட்டுச் சென்றுள்ளார். கனடாவிலிருந்து அண்மையில் திரும்பி வந்த மூதாட்டி, இருபகுதியினரும் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியேறுமாறு குடியிருந்தவர்களைக் கேட்டுள்ளார். வீட்டிலிருந்தவர்கள், தாம் வெளியேறுவதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டபோது, அதற்குச் சம்மதித்து விட்டுச் சென்ற மூதாட்டி, ஒரு மாதத்தின் பின்னர் திரும்ப வந்து, கடந்த ஏப்ரல் 12ம் திகதி வீட்டை விடுவிக்குமாறு கேட்ட போது, குடியிருந்தவர்கள் மீணடும் அவகாசம் கேட்டுள்ளனர். இதனையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். வீட்டில் குடியிருந்தவர்களை அழைத்து சாவகச்சேர் பொலிஸார் விசாரித்த போது, இரு நாட்களில் வீட்டிலிருந்து தாம் வெளியேறி விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறாததால், நேற்று பகல் வீட்டிற்குச் சென்ற மூதாட்டி வீட்டினை விடுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்ட போது, வீட்டிலிருந்தவர்கள் மூதாட்டியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அத்துடன், ‘வீட்டுக்கு இனிமேல் திரும்ப வந்தால், கனடாவுக்கு பெட்டிக்குள் வைத்து அனுப்பி விடுவோம்’ என கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். காயமடைந்த மூதாட்டி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூதாட்டியைத் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

04 மே 2014

இன்றைய அச்சுவேலி படுகொலை தொடர்பில் இருவர் கைது!

யாழ்.அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைதுசெய்யப்படுள்ளனர் என அச்சுவேலிப் பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் இரத்தக்கறைகளுடன் நவக்கிரிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள தர்மிகா என்பவரது கணவரான தனஞ்செயன் என்பவரும் மற்றுமொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இந்த பயங்கர சம்பவத்தில் ஒரே குடும்பத்கைந் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகிய மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை அமெரிக்காவில் செல்லாது!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடைப்பட்டியலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறித்த அமைப்புக்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.எனினும், இந்த தடையை தமது நாட்டில் அமுல்படுத்தப் போவதில்லை என பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தலமையிலான கனேடிய அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. இதே நிலைப்பாட்டை தற்போது அமெரிக்காவும் வெளிப்படுத்தியுள்ளது. புலம்பெயர் அமைப்பு தடையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களிடம் புலிகள் தொடர்ந்தும் நிதி திரட்டி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில் அறிவித்த போதிலும், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பட்டியலை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கவில்லை. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், தடையை அமுல்படுத்தப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

03 மே 2014

தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துவரும் கூட்டமைப்பை அகற்ற வேண்டும்!

புலம் பெயர் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளது போன்று ஈழத்தமிழர்களிடமிருந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதோடு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் கூட்டமைப்பை இந்த மண்ணிலிருந்து அகற்றவேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி-அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இணைந்து நடத்திய மே தின நிகழ்வு 01.05.2014 கரவெட்டியில் பேரணியுடன் இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவா் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி தமிழ்மக்களுக்காக செய்யும் சகல நடவடிக்கைகளும் முற்று முழுதாக மழுங்கடிக்கப்பட்டு தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன.ஆனால் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு மிக விரைவாக சென்றடைகின்றது. இணையத்தளங்களை அவர்கள் அதிகம் பார்ப்பதனாலும் இணையத்தளங்கள் எமது செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதனாலும் புலம் பெயர் தமிழர்களிடம் கூட்டமைப்பு நிதி பெற முடியாமல் திண்டாடுகிறது. இந்நிலை விரைவில் ஈழத்திலும் உருவாகும் மக்களிடம் வாக்குகளைப்பெறமுடியாமல் கூட்டமைப்பு திண்டாடும் காலம் மிகவிரைவில் உருவாகும் இந்த மண்ணிலிருந்து எமது இனத்தை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் கூட்டமைப்பு மக்களுக்கு இழைத்த துரோகங்களுக்கு மிகவிரைவில் பொறுப்புக்கூறவேண்டிவரும். கடந்த 2013 ஆம் அண்டு மேதினம் இதே மண்ணில்; நடத்தினோம். வித்தியாசமான காலகட்டத்தில் அந்த மே தினத்தை நடத்தினோம் அன்றைய தினம் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள எதிர்கால சதி முயற்சிகள் பற்றியும் கூறியிருந்தேன். மாகாணசபை முறைபற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறியிருந்தேன்.அத்தோடு செத்துப்போன, அழிந்து போன அரசியல் முறைக்கு உயிர்கொடுத்து இலங்கை அரசு முயற்சிக்கிறது அதை சர்வதேச நாடுகளும் ஏற்றுக்கொள்ளுமாறு கூறிக்கொண்டு இருக்கும் போது தான் கடந்த மே தினம் இடம்பெற்றது. ஆனால் இந்தத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருந்த கூட்டமைப்பு தாம் இதனை முழுமையாக ஏற்றும் கொண்டுள்ளோம் என்று கூற முடியாத நிலையில் உள்ளதாக கூறியிருந்தது. அதேவேளை 13 ஆவது திருத்தசட்டதிற்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபையை நாம் எடுத்த எடுப்பில் நிராகரிக்காமல் போட்டியிட்டு நிராகரிக்க வேண்டும் என்று கூறியது . இருப்பினும் எமது கட்சி இதனை முற்று முழுதாக நிராகரித்ததோடு சர்வதேச ரீதியாக 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபையை தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக திணித்து விடுவார்கள் என்றும் கட்சி அரசியலாக திட்டமிட்டு மாற்றப்படும் என்று கூறினோம். அன்று நாம் கூறியது இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. ஜ.நா. தீர்மானம் தமிழ்த்தேசத்திற்கு விடிவு கிடைத்து விட்டது அல்லது தமிழ்மக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுவிட்டது என்ற நிலையில் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான் தீர்மானம் உள்ளது. அதன் வெளிப்பாடாக தான் இன்றும் பல ஆபத்துக்களை தமிழ்மக்கள் அனுபவிக்கின்றார்கள். இந்நிலையில் ஒவ்வொரு தமிழ் மகனும் ஆவலோடு எதிர்பார்க்கும் அரங்காக மாறியுள்ள ஐ.நா மனித உரிமை அமர்வோடு எமது தமிழ்மக்களின் உரிமைகள் முடக்கப்பட்டுவிட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நாம் அதன் குறைபாடுகளை சுட்டிக்காடிய போது த.தே.கூ ஆதரித்தது அதனை மக்கள் அங்கி கரித்து விட்டதாக கருதி சர்வதேசமும் அங்கி கரித்து தீர்மானத்தை நிறைவேற்றி விட்டது. சாதகமான விளைவுகள் அத்தீர்மானம் ஊடாக ஏற்படும் என்று கூறியிருந்தனர். முதலாவது தீர்மானத்தின் பின்னர் தமிழர்பிரதேசத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதா இல்லை மாறாக பின்னடைவுகள் தான் ஏற்பட்டது. அந்தத்தீர்மானத்தின் பல முற்னேற்றகரமான அம்சங்கள் உள்ளது அதை நாம் ஆதரிக்கின்றோம் என்றனர் இப்போது மூன்றாவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்காக 47 நாடுகளுக்கு கடிதம் எழுதியதாகவும் அக் கடிதம் தான் இத்தீர்மானத்திற்கு காரணம் என்றும் கூட்டமைப்பின் தலைவர் கூறினார். மக்கள் வாக்களித்து தெரிவு செய்த கட்சி என்பதனால் கூட்டமைப்பின் கருத்தை ஏற்று தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இது அமெரிக்க தீர்மானமல்ல தமிழ்மக்களின் பெயரைப்பயன்படுத்தி கூட்டமைப்பு கொண்டுவந்த தீர்மானம். இந்தத்தீர்மானத்தில் தமிழா்கள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. தமிழ் என்ற சொல் பாவிக்கப்படவேயில்லை என்றும் அப்படிபட்ட தீர்மானத்தையே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியது என்று அரசாங்கத்துடன் இணைந்து தமிழினத்தை கூட்டமைப்பு அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறினாா்தமிழ்த்தேசத்தை இல்லாதொழிக்கும் அரசின் சகல நடவடிக்கைளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் மே தின நிகழ்வில் த.தே.ம.முன்னணி வலியுறுத்தல் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இனைந்து நடத்திய தொழிலாளர் தின நிகழ்வு 02.05.2014 பிற்பகல் கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவர் முன்றலில் இடம்பெற்றது. இதில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அக்கட்சின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லராஜா கஜேந்திரன் , அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸின் தலைவர் ஆர்.ஆனந்தராஜா மற்றும் அக்கட்சிகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலர் பங்கு கொண்டிருந்தனர். இந்த மே தின நிகழ்வில் தமிழர் தயாகப்பிரதேசங்களில் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தமிழர் தேசயத்தையும் தமிழினத்தையும் அழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சாளர்கள் வலியுறுத்தியிருந்தனர்; தமிழ்மக்கள் அடிமைகளாகவே உள்ளனர் எமது மக்களின் வாக்குகளைப்பெற்ற கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுவதோடு தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றது என்றும் குற்றச்சாட்டியிருந்தனர்.

01 மே 2014

எம் தலைவனை அவமதிப்பதா?கொதித்தெழுந்த இளைஞர்கள்!

சாவகச்சேரியில் நடைபெற்ற கூட்டமைப்பின் மேதினத்தின் போது தமிழீழத் தேசியத்தலைவரான பிரபாகரனை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவமரியாதைப்படுத்திப் பேசியதால் அங்கு நின்ற இளைஞர்கள் அவரைத் தாக்குவதற்குச் சென்றதாகத் தெரியவருகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் இருந்தாகவும் அதை மஹிந்த அறியாதவர் அல்ல என்றும் தலைவர் பிரபாகரன் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டாவது மஹிந்த திருந்த வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தியது.விக்னேஸ்வரன் உரையாற்றியதை அடுத்து அங்கு நின்றிருந்த இளைஞர்களில் பலர் ஆத்திமடைந்து கவலையடைந்தனர். அவாகளிற்சிலர் அவரை தாக்கவும் முற்ப்பட்டனர். நிலைமையை உணாந்த விக்னேஸ்வரன் வாகனத்தில் ஏறி பொலிஸ் பாதுகாப்புடன் நிகழ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்ட வேளை அவரை இடைமறித்த இறைஞர்கள், தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கதைப்பதற்கும் உமக்கு என்ன அருகதை உள்ளது? கொழும்பில் இருந்த உமக்கு எமது தலைவனைப் பற்றிக் கதைப்பதற்கு தகுதி உள்ளதா? எனக் கேட்டு விக்னேஸ்வரன் மீது தாக்குதல் நடத்த முற்பட்டிருக்கின்றனர். உடனடியாக விக்னேஸ்வரின் பாதுகாப்புப் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து அவரை மீட்டுச் சென்றதாக அங்கிருந்து தமிழ்லீடரின் செய்தியாளர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு விடையங்களில் மாகாணசபை தலையிட முடியாதாம்?

தேசிய பாதுகாப்பு விடயங்களில் வடமாகாண சபை தலையீடு செய்யக்கூடாது என அரசாங்கம் வடமாகாண சபையின் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளில் இயங்கி வரும் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்க வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்றியிருந்தார். அந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் வடமாகாண சபையின் நிர்வாகத்திடம் விளக்கம் கோரியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் சிவாஜிலிங்கம் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக இன்னமும் எதிர்ப்பு வெளியிடவில்லை என தெரியவருகிறது. வடமாகாண சபையினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் அரச திணைக்களங்கள் அரச நிறுவனங்களினால் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.