பக்கங்கள்

24 ஏப்ரல் 2017

ஊர்காவற்றுறையில் யுவதி மீது மயக்க மருந்து தூவிய மட்டக்களப்பு நபர்!

ஊர்காவற்றுறை பகுதியில் வீட்டில் தனித்திருந்த இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து தூவி வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர், அங்கு தனித்து இருந்த 18 வயதுடைய யுவதி தூக்கத்தில் இருந்த போது, அவரது வாயை கைகளினால் பொத்தியவாறு அவர் மீது மயக்க மருந்தை விசிறியுள்ளார்.எனினும் சுதாகரித்துக்கொண்ட  கொண்ட யுவதி கூக்குரல் இட்டுள்ளார். இதனையடுத்து, அங்கு திரண்ட அயலவர்கள், சந்தேக நபரை மடக்கி பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த சந்தேக நபர் (35 வயது) பொலிஸில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த குறித்த நபர், தற்போது ஊர்காவற்றுறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.இவ்வாறு இணையமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 ஏப்ரல் 2017

கடத்தப்பட்ட சிறுமியை மீட்க உதவி கோரப்படுகிறது!

கிளிநொச்சியில் 15 வயதுடைய தர்சினா என்ற சிறுமி மோட்டார் சைக்கிளில் வந்த பலரால் கதறக் கதற இழுத்துச் செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி 20.04.2017 காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே இக் கொடுரம் நிகழ்ந்துள்ளது. இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்த வேளையே கடத்தப் பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மோட்டார் ஊர்திகளில் வந்தவர்கள் அனைவரும் தம் முகங்களுக்கு துணி கட்டியிருந்ததால் அடையாளம் காணப்படவில்லை. இவரின் குடும்பத்தினர் தர்மபுரம் காவல் நிலையம் சென்று முறையிட்ட போதும் காவல்துறையினர் எந்த நடவிடிக்கையும் எடுக்காதது கவலைக்குரியது. இவ்வாறான பாதுகாப்பற்ற சூழ்நிலையில் எம் சிறுமிகள், பெண்கள் எப்படி நடமாடுவது? இவரின் குடும்பத்தினர் செய்வதறியாது மக்கள் உதவியை நாடியுள்ளனர். இந்த செய்தியை முடிந்த வரை அனைவருக்கும் தெரியப் படுத்துவதோடு சிறுமியை கண்டு பிடித்து பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிடுங்கள். விபரம் தெரிந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 0775376875 செல்வி (தாயார்) 0776436034 கவிராஜ் (சகோதரன்)

03 ஏப்ரல் 2017

வேலணையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

வேலணை துறையூரை சேர்ந்த மாணவி ஒருவர் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீட்டினர் ஆலயத் திருவிழாவிற்கு சென்றிருந்த வேளை,தனிமையில் இருந்த மாணவி வீட்டின் அறையினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பல்கலைக்கழகம் சென்று வீடு திரும்பிய சகோதரி ஒருவர் மூலமாக குறிப்பிட்ட மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்தது.எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.கல்விப் பொது தராதர பரீட்சை பெறுபேறுகள் கடந்தவாரம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.உயிரிழந்த மாணவி பதினாறு வயதுடைய அருட்பிரகாசம் ரேணுகா என அறியவந்திருக்கின்றது.இவர் 1A 7B 1S என்ற பெறுபேற்றை பெற்றுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

01 ஏப்ரல் 2017

தமிழ் எழுத்தை கணினியில் தந்த விஜயகுமார் கனடாவில் மறைவு!

தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும். இவரது உடல், நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையிலும், திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம், 11 மணி வரையிலும், Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave., Markham, ON, Canada என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.இந்தியாவின் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதலில், கணினியில் பயன்படுத்தப்பட்டது. அப்போது கலாநிதி விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டன. கம்யூட்டர் தமிழில் 'ரெமிங்ரன்' முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கணினியில் உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்களாவர்.கணினி எழுத்துக்களை அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ச் ஹார்ட் மூலம் உலகம் கண்டிருந்தாலும், அவற்றினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் கலாநிதி விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் அக வணக்கத்தை செலுத்திக்கொள்கின்றது.