பக்கங்கள்

25 டிசம்பர் 2019

சிங்கள சிப்பாயின் துப்பாக்கி அபகரிப்பு!

வவுனியா போகஸ்வெவ படை முகாமில் கடமையில் இருந்த சிங்கள சிப்பாய் ஒருவரை தாக்கி காயப்படுத்தி அவரது துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா படைகளின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் கழுத்து பகுதியில் காயமடைந்த படையினன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் படுகின்றது.

17 டிசம்பர் 2019

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் தொடர்பில் சிறீலங்காவிற்கு எச்சரிக்கை!


கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பாக, சுவிஸ் மத்திய வெளிவிவகார திணைக்களம் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பாக, சுவிஸ் மத்திய வெளிவிவகார திணைக்களம் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை (எஃப்.டி.எஃப்.ஏ) பணியாளர் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச தரங்களுக்கு அமைய தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க உறுதி செய்யுமாறு இலங்கை நீதித்துறை அதிகாரிகளிடம் அழைப்பு விடுத்துள்ளது. வெளியுறவுத் துறை மற்றும் கொழும்பு சுவிஸ் தூதரகம் தங்கள் பொறுப்புகளை தொடர்ந்து பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு உதவ தங்கள் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்யும். நவம்பர் 25, 2019 அன்று, சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் ஊழியர் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு கட்டாயப்படுத்தி கொழும்பில் கடத்தப்பட்டதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பணியாளர் மற்றும் சுவிஸ் தூதரகம் இருவரும் இந்த நடவடிக்கைகளின் போது இலங்கை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்தனர். எஃப்.டி.எஃப்.ஏ பலமுறை உரிய செயல்முறை பின்பற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோதும், மூன்று நாட்களுக்கு மேலாக ஊழியர் 30 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும், விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னர் இலங்கையின் மூத்த அதிகாரிகள் அவரது கணக்கை கேள்விக்குட்படுத்தியதன் பொது அறிக்கைகளையும் எஃப்.டி.எஃப்.ஏ விமர்சித்துள்ளது. தமது ஊழியர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதித் தரங்களுக்கு இணங்க வேண்டும் என்றும் பணியாளரின் உரிமைகள் இப்போது சிறப்பாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் FDFA எதிர்பார்க்கிறது. பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை பூர்த்திசெய்யவும், பணியாளரின் மோசமான உடல்நிலைக்கு உரிய கவனம் செலுத்தவும் இலங்கை அதிகாரிகளை எஃப்.டி.எஃப்.ஏ அழைப்பு விடுக்கிறது. இந்த உயர் வழக்கில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஒரு நாடு என்ற இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வலியுறுத்த விரும்புகிறது. கொழும்பில் உள்ள எஃப்.டி.எஃப்.ஏ மற்றும் சுவிஸ் தூதரகம் முடிந்தவரை தங்கள் ஊழியருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். பாதுகாப்பு சம்பவத்தை தீர்க்க ஒரு பொதுவான மற்றும் ஆக்கபூர்வமான வழியை நாடுகிறோம் என்று இலங்கை அதிகாரிகளுக்கு எஃப்.டி.எஃப்.ஏ மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 16 டிசம்பர் 2019 அன்று, கொழும்பில் உள்ள சுவிஸ் தூதர் இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான நேருக்கு நேர் சந்திப்பில் இதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 டிசம்பர் 2019

மண்கும்பானில் மணல் கடத்தல்காரர் மீது தாக்குதல் சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை!


தீவகம், சாட்டி மண்கும்பான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களுடன் பிரதேச மக்கள் முரண்பட்டதனால் மூவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும் பிரதேச மக்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றும் இதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்யுமாறும், அதிகளவு மணல் குவியல்கள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்துக்கிடமானோரை மன்றில் முற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மண்கும்பானில் மணல் அகழ்வில் ஈடுபட்டோரைத் தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் இருவேறு வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளின் விசாரணையின் போதே ஊர்காவற்றுறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. தீவகம் மண்கும்பானில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பலை விரட்டிய ஊர் மக்கள், கும்பல் கைவிட்டுச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த நிலையில் மண்கும்பானைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆறு பேரை கைது செய்ய ஊர்காவற்றுறை பொலிஸார் முற்ப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் உள்பட 8 பேருக்கு எதிராக இருவேறு அறிக்கைகளை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். மேலும் 6 பேர் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக மன்றில் சரணடைந்தனர். வழக்குகள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. “மணல் லோட்டுகளை ஏற்றியோர் மீது சந்தேகநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காணி உரிமையாளர்களின் அனுமதியுடனேயே மணல் அகழ்வு இடம்பெற்றது. பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. சட்டவிரோத செயற்பாடு நடந்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும். சந்தேகநபர்கள் அதனைச் செய்யாமல், சட்டத்தில் கையில் எடுத்து மணல் ஏற்றிச் சென்றோர் மீது தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்துள்ளனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர். “அரசு மணலை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை மாத்திரமே ரத்துச் செய்துள்ளது. ஆனால் மணல் அகழ்வுக்கு அனுமதி தேவை. எனவேதான் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்பில் ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் இரண்டு நாட்களுக்கும்  மேலாகியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் ஊர்மக்கள் மணல் கடத்தலைத் தடுக்க கும்பலை விரட்டினர். வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. அவர்களுக்கு பிணை வழங்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றுரைத்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். அத்துடன், ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று காணிகளுக்குள் பள்ளம் காணப்பட்டால் அதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வேண்டும். அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து இடமானோரை மன்றில் முற்படுத்த உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

06 டிசம்பர் 2019

நடராசா சிறிரஞ்சனின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி வெளியீட்டு விழா!

புளியங்கூடல் மண்ணின் மறைந்த மதிப்பிற்குரிய நடராசா ஆசிரியர் அவர்களின் புதல்வர் பெருமைக்குரிய நடராசா சிறிரஞ்சன் அவர்களின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழா 11.12.2019 புதன்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் கைலாசபதி கலையரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி எனும் முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகி அதைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்தும் இடம்பெறும்.

வரவேற்புரை:
த.மயூரநாதன் அவர்கள்

ஆசியுரை:
பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள்

வாழ்த்துரை:பேராசிரியர் ஏ.என்.கிருஷ்ணவேணி அவர்கள்

தலைமையுரை:பேராசிரியர் சுபத்தினி ரமேஸ் அவர்கள்

பிரதம விருந்தினர் உரை:கலாநிதி சி.பத்மநாதன் அவர்கள்

தொடர்ந்து அகராதி வெளியீடும் சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் வெளியீட்டாளர் உரையும் இடம்பெறும்.ஏற்புரையை நடராசா சிறிரஞ்சன் நிகழ்த்துவார்.இவ்விழா சிறப்புற புளியங்கூடல்.கொம் குழுமம் வாழ்த்தி மகிழ்கின்றது.