பக்கங்கள்

30 ஏப்ரல் 2014

திருமலைக் கூட்டத்தில் அனந்தியை தாக்கிய சம்பந்தன்,சுமந்திரன் கூட்டணி!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இன்று காலை திருகோணமலைக் கூட்டம் தொடங்கியதில் இருந்து ,கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கட்சித் தலைமையின் அனுமதியின்றி அனந்தி ஜெனீவா சென்றமை மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் தொடர்பாக, திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அனந்தி விளக்க அறிக்கை ஒன்றை வாசிக்க முற்பட்டார். அவ்வேளையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுதி தந்தவற்றை இங்கு வாசிக்க வேண்டாமென தெரிவித்தார். அதனை பொருட்படுத்தாமல் அனந்தி தொடர்ந்தும் வாசிக்க முற்பட மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவனும் அங்கு சுமந்திரனுடன் இணைந்து கொண்டு அனந்திக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அனந்தி ஜெனிவா விவகாரம் உங்களிற்கு அரசியலாகலாம். எனக்கோ அதுவே வாழ்க்கைப் பிரச்சினை. காணாமல் போன எனது கணவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையுடனேயே அங்கு போனேன் என கூறிய அழுதவாறு உரையினை நிறுத்தி அமர்ந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அனந்தி சசிதரன் 12மணிக்கு சபையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை விடயம் தொடர்பாக அனந்தி சசிதரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, என்னுடைய ஜெனீவா பயணம் குறித்து விமர்சிப்பதற்கான கூட்டம்போன்றே இன்றைய கூட்டம் நடைபெற்றது.நான் கட்சியின் ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என கேட்கப்பட்டிருக்கின்றேன்.மேலும் இன்றைய தினம் சபையில் நடைபெற்ற விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றேன். ஆனால் மிக விரைவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி வெளிப்படுத்துவேன் என்றார்.

மாணவிகளை இம்சை செய்யும் படையினர்!

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் உள்ள தெருவோரமாக முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அந்த வழியால் போய்வரும் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அங்கிருந்து மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் குறித்த வழியால் பயணம் செய்யும் மாணவிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி முறிப்பு,கோணாவில் முதலிய பகுதிகளை அண்டி இராணுவத்தினர் காவலரண்களை அமைத்துள்ளனர். இந்த வழி மக்கள் போக்குவரத்து குறைவாக காணப்படும் பகுதி. இதனைப் பயன்படுத்தி இந்த வழியால் வெள்ளைச் சீருடைகளுடன் போய் வரும் பாடசாலை மாணவிகளுக்கு இராணுவத்தினர் தொல்லை புரிகின்றனர். இந்த வழியால் கோணாவில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளையும் அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்திற்கு செல்லும் மாணவிகளுக்கும் இராணுவத்தினர் தொல்லை கொடுக்கின்றனர். பாலியல் வார்த்தைகளை பிரயோகம் செய்வது, காதலிக்குமாறு கேட்பது என்று மாணவிகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவிக்கின்றனர். காவலரண்களில் உள்ள சில இராணுவத்தினர் பாடசாலை மாணவிகளைக் கண்டதும் தமது கீழாடைகளை கழற்றிவிட்டு நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாணவிகள் அந்த வழியால் போக்குவரத்தை மேறகொள்ள முடியாத நிலமை காணப்படுவதுதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சிப் பகுதிக்கும் அக்கராயன் கோணாவில் பகுதிக்குள் உள்ள ஒரே மார்க்கம் அதுவென்பதால் வேறு பாதைகளைப் பயன்படுத்தியும் மாணவர்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலமை காணப்படுகிறது. இதனால் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் இராணுவத்தினரின் பாலியல் தொல்லைகளை தாண்டியே பயணம் செய்ய வேண்டியுள்ளது.

நன்றி:குளோபல் தமிழ் 

தேவிகனுடன் யார் தொடர்பு?விசாரிக்கவேண்டும் என்கிறார் றொகான்!

றொகான் 
முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தை கோபி முன்னெடுத்திருந்தார் என்று பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்கும் நோக்கில் செயற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட கோபி உள்ளிட்ட மூன்று பேர் அண்மையில் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் கோபி என்பவர் முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்தார் என பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவிற்கு அமைய தேவிகன் என்பவர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் ஓர் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் எனவும், விமானங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவு கொண்டவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேவிகன் தமிழகத்தில் யார் யாருடன் தொடர்புகளைப் பேணினார் என்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டியது அவசியமானது என ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

28 ஏப்ரல் 2014

நாரந்தனை வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

யாழ். ஊர்காவற்துறை, நாரந்தனைப் பகுதியில் கடந்த மாதம், இளைஞர்(18 வயது) ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் அதேயிடத்தைச் சேர்ந்த இருவரை இன்று திங்கட்கிழமை(28)கைதுசெய்யதுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் பிரான்சிஸ் டயஸ் மற்றும் அவரது மகன் டயஸ் ரமன்சன் ஆகிய இருவரையும் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மக்களிடம் சுருட்டும் ஈ.பி.டி.பி.எப்படி புனிதர்களாக முடியும்?

வன்னியிலிருந்து அகதிகளான எமது மக்களது படகுகளை பறித்து இலங்கை இராணுவம் ஈபிடிபியிடமே கையளித்துள்ளது. இவ்வாறு யுத்த அவலங்களை தாங்கி நிற்கும் மீனவர்களது படகுகளையே சுருட்டும் ஈபிடிபி பின்னர் எவ்வாறு புனிதர்களாக கதைக்கின்றதென கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான கமலேந்திரன் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் புதிதாக பதவி ஏற்றுள்ள எஸ்.தவராசா வடக்கு மாகாண சபையின் அமர்வில் பங்கு கொண்டு தனது ஆரம்ப உரையினை ஆற்றியிருந்தார். இந்நிலையில்; முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவருக்கு வரவேற்புத் தெரிவித்து உரையாற்றியிருந்தார். க.கமலேந்திரன் தற்போதும் சந்தேக நபராகவே வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரை எதற்காக கட்சி நீக்கியது என்பது தெரியாது என்று தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், எஸ்.தவராசா அனுபம் மிக்கவர் என்றும் எதிர்வரும் காலங்களில் சபை அமர்வுகள் காரசாரம் மிக்கவையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆந்த வகையில் வடக்கு மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு வரவேற்புத் தெரிவிப்பதாகவும் அவர் சபை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ஈபிடிபியின் மற்iறைய உறுப்பினரான தவநாதன் தேர்தல் ஆணையாளரே தவராசாவை நியமித்ததுடன் குறித்த படகுகளை யாரிடம் கையளித்தார்கள் என்பதை பகிரங்கப்படுத்தினால் உரிய பதிலை அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அப்படகுகள் ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளர் சிறீரங்கேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

27 ஏப்ரல் 2014

கருணாவின் முகத்தை சேதமாக்கிய இனந்தெரியாதோர்!

கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரனின்(கருணா) பதாதை ஒன்று இனந்தெரியாதவர்களால் கிழித்து சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாதையில் 'சரித்திர நாயகனே, சமாதான கர்த்தாவே ,தொடரட்டும் உன் அரசியல் பணி' என குறிப்பிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கருணாவுக்கு கைலாகு கொடுக்கும் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் கருணாவின் முகம் உள்ள பகுதி இனந்தெரியாதவர்களால் கிழித்துச் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 ஏப்ரல் 2014

ஆபிரிக்கர் இனி கறுப்புப் புலியாகலாம்!

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவை தலையிடுமாறு கோரிய இலங்கை அரசு தற்போது அதனைக் குழப்பும் வகையிலேயே தெரிவுக்குழு விடயத்தினை கையிலெடுத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தெரிவுக்குழுவின் மூலமே இறுதித் தீர்வு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள கருத்துக் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட போதே சுரேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இறுதியாக நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி, தென்னாபிரிக்கா இலங்கை விடயத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முன்வரவேண்டும் எனக் கோரியதன் அடிப்படையிலேயே தென்னாபிரிக்கா இந்த விடயத்தில் தலையிட்டது. இதன் தொடராக அரச பிரநிதிகளும் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் தென்னாபிரிக்கா சென்றிருந்தனர். இலங்கை விடயங்களைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்க ஜனாதிபதியால் சிறப்பு பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார். எதிர்வரும் மாதங்களில் அவர் இலங்கை வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தெரிவுக்குழுவின் மூலமே இறுதித்தீர்வு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை, தென்னாபிரிக்காவின் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பும் ஒரு செயற்பாடாகும். கடந்த காலங்களில் வெள்ளை இனத்தவர்களை வெள்ளைப்புலி எனத் தெரிவித்து வந்த அரசாங்கம் இனிவரும் காலங்களில் கறுப்பினத்தவர்களையும் கறுப்புப் புலிகளாக அழைக்கும் எனவும் சுரேஷ் பிறேமச்சந்திரன் எதிர்வுகூறியுள்ளார்.

25 ஏப்ரல் 2014

நன்றி தெரிவிக்கும் பிரேரணையை நிராகரித்த சி.வி.கே.சிவஞானம்!

தமிழ் இளைஞர் யுவதிகளைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்துக் கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரும் பிரேரணையை வடமாகாண சபையின் தவிசாளர் சிவஞானம் நிராகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் தினமும் இடம்பெறும் தேடுதல் சோதனை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை உட்பட நான்கு பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றன. மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன்- கலாநிதி சர்வவேஸ்வரன்- சிவாஜிலிங்கம் ஆகியோரால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளே நிராகரிக்கப்பட்டதாக வடமாகாண சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 28ஆம் திகதி மாகாண சபை மீண்டும் கூடவுள்ள நிலையில் இந்த பிரேரணைகள் முன்மொழியப்பட்டு உறுப்பினர்களால் பேரவைச் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவற்றை பரிசீலனை செய்த சிவஞானம் அந்த பிரேரணைகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவாஜிலிங்கத்தால் முன்மொழியப்பட்ட ஜெனிவா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை- சர்வேஸ்வரனால் முன்மொழியப்பட்ட வைத்தியசாலைகளுக்கு உணவு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்கான பிரேரணை- இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ரவிகரனால் முன்மொழியப்பட்ட பிரேரணை போன்றவை நிராகரிக்கப்பட்டதாகவும் அதற்கான காரணங்களை சிவஞானம் கூறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் சில பிரேரணைகள் அரசுக்கும் இராணுவத்திற்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஆனால் அதனை கவனத்தில் கொள்ளாது அப் பிரேரணைகளை தவிசாளர் சிவஞானம் நீக்கியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுபலசேனா மனிதத் தன்மையற்ற செயல்களில் ஈடுபடுகிறது!

'மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கின்றது. இது குறித்து கருத்து வெளியிட்ட மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், அவர்களுடைய கூற்று அர்த்தமற்ற கூற்று என்று நிராகரித்திருக்கின்றார். பொதுபலசேனா எல்லா விடயங்களிலும் தலையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நாடு என்று சொன்னால், நாட்டு பிரசைகள் அனைவருக்கும் சொந்தமானது. அதைவிடுத்து, சிங்களம் பேசுபவர்களுக்கு மாத்திரம்தான் அது சொந்தம், பௌத்தர்களுக்குத்தான் அது இன்னும் கூட சொந்தம் என்று சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் மனிதத் தன்மைக்கு ஒவ்வாத காரியமாகும்' என மன்னார் ஆயர் கூறியுள்ளார். தங்களைப் பொறுத்த வரையில் தாங்கள் மக்களுக்குத் தலைவர்களாக இருப்பதுடன், கத்தோலிக்க சமயத்தில் சமயம் வேறு, சமூகம் வேறு என்று பார்ப்பதில்லை என்றும் அவர் கூறினார். அரசியல் என்பது மக்களுடைய வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றது எனவே அரசியலில் மக்களுக்கு சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு வழிகாட்ட வேண்டியது தமது கடமையென்றும் அவர் குறிப்பிட்டார். 'இருப்பினும் நாங்கள் பொது அரசியலில் ஈடுபடுவோமே தவிர, கட்சி அரசியலில் ஈடுபடுவதில்லை. ஈடுபடவும் மாட்டோம். சமயம் சமூகம் என்ற வகையில் நாங்கள் எங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்' என்றும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.

24 ஏப்ரல் 2014

இரணைமடு கமக்காரர் ஒன்றியம் சந்திப்பைப் புறக்கணித்தது.

இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல் என்ற பெயரில் கொழும்பில் இன்று நடைபெறவிருந்த கூட்டத்தை கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் புறக்கணித்துள்ளது. இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்வதற்கு வடக்கு மாகாண சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் குறித்த திட்டதை முன்னெடுப்பதற்கு மத்திய அரசு தீவிர முனைப்புக்களை மேற்கொண்டுவருகிறது. இதன் தொடராக இன்று இரணைமடு நீர் வழங்கல் நடவடிக்கை தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் கொழும்பில் நடைபெறும் என்றும் அதில் பங்கேற்குமாறும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், விவசாயிகள் கொழும்பு செல்வதற்கு தயாராகியிருந்த நிலையில், விவசாயிகள் என்ற பெயரில் இன்னொரு தரப்பும் கொழும்பு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்து கொண்ட இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினர் கொழும்புக் கூட்டத்தினைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்து கிளிநொச்சி அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:- யாழ்ப்பாணம் - இரணைமடு நீர்விநியோகத்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் திரு.பி.பி.ஜயசுந்தர அவர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைத் தாங்கள் செய்திருந்தீர்கள். இதில் நாமும் கலந்து கொள்ள ஆவலாய் இருந்தோம். ஆனால் திரு.சு.மனோகரன் அவர்கள் தலைமையிலான ஒரு குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளமையால் இதனை ஆட்சேபித்து இச் சந்திப்பில் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளோம். எமது சம்மேளனப் பிரதிநிதிகளை கிளிநொச்சியில் வைத்து சந்தித்து கலந்துரையாடி நேரடியாக வந்து பிரச்சினைகளைக் கண்டறிந்து கொள்வதற்கு தாங்கள் ஆவன செய்து தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம். மேலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட திரு.சு.மனோகரனை இதில் முதன்மைப்படுத்துவதில் உள்நோக்கம் இருப்பதாக நாம் உணர்கிறோம். எனவே இச் சந்திப்பின் போது மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கும் வடமாகாண சபையின் நிபுணர்குழு அறிக்கையையும் கவனத்தில் எடுப்பதற்கும் ஆவன செய்து தருமாறும் வேண்டுகிறோம். 2014.04.21ம் திகதி யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் 2014.04.22ம் திகதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இரணைமடு நீர் யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கான திட்டம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தும் திட்டமிட்டே அது குறித்துஆராயப்படவில்லை என்று நாங்கள் உணர்கிறோம். எனவே இச் சந்திப்பினை அவசியம் ஏற்படுத்தித் தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம் என்று அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 ஏப்ரல் 2014

தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நெறி!

யாழ்ப்பாணம் சைவ மகா சபையில் நடத்தப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நெறிக்காக இந்தியா-தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பே.சத்தியவேல் முருகனார் கடந்த இரண்டு தினங்களாக கந்தர்மடத்தில் அமைந்துள்ள சிவகுருநாதபீடம் என்ற வேதாந்தமடத்தில் சைவ சித்தாந்தம் தொடர்பான விளக்கவுரையை நடத்தி வருகின்றார். சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற இந்த விளக்கவுரையின் இறுதி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இன்று மாலை 6.30 மணி தொடக்கம் 8 மணிவரை திருவள்ளுவரும் சைவ சித்தாந்தமும் என்ற தலைப்பில் இவர் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களும் நலன் விரும்பிகளும் ஆசார சீலர்களாகப் பங்குபற்றி பயன்பெற முடியுமென்று சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

22 ஏப்ரல் 2014

வரணி மனிதப் புதைகுழி!அகற்றிய படை

இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாகவும், முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. குறிப்பாக 1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில் வறணியில் பெருமளவு நிலப்பரப்பினை ஆக்கிரமித்து 522 வது படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரதான வீதியும் துண்டிக்கப்பட்டதுடன் அங்கிருந்த பெருமளவு பொதுமக்களது வீடுகளும் சுவீகரிக்கப்பட்டிருந்தன. யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்டது முதல் தென்மராட்சிப்பகுதியில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் காணமல் போதல்களது மையமாக இப்படைத்தளமே இருந்தது. குறிப்பாக ஆலயமொன்றில் தங்கியிருந்த எட்டு இளைஞர்கள் காணாமல் போயிருந்தமை தொடர்பிலும் இப்படை தளமே குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில் சுமார் 18 வருடங்களின் பின்னர் குறித்த படைமுகாம் மூடப்பட்டு காணிகள் மற்றும் வீடுகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அருகாகவுள்ள மிருசுவில் பகுதிக்கு இப்படைத்தளம் நகர்த்தப்பட்டு இருந்ததுடன் ஏ-9 வீதியோரம் நகர்த்தப்பட்டு அமைக்கப்பட்டிருந்த குறித்த படைத்தளத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவே திறந்தும் வைத்திருந்தார். எனினும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வறணி படைத்தளம் சுமார் இரண்டு மாதங்களின் பின்னதாக நேற்றே முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக இரவு வேளைகளில் கனரக வாகனங்கள் சகிதம் அப்பகுதியில் பாரிய குழிகள் அகழப்பட்டதுடன் அங்கிருந்து அவசர அவசரமாக அடையாளம் தெரியாத பொருட்கள் அகற்றப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 ஏப்ரல் 2014

புலி தப்பியோட்டமாம்!போட்டுத்தள்ளும் திட்டமா?

வவுனியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதாக குறிப்பிடப்பட்டு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் இருந்து குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.இந்த அறிவிப்பானது ஒரு அப்பாவியின் உயிரை பறிக்க சிங்களம் திட்டம் போடுகின்றதா என்ற அச்ச நிலையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

20 ஏப்ரல் 2014

மாணவி பாலியல் வல்லுறவு!

தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் வலி.மேற்கு சுழிபுரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவியை வீடொன்றுக்கு அழைத்துச் சென்ற மூவர் அவரைத் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினர். இது தொடர்பாக வட்டுக்கோட்டையில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளை மேற்கொண்டு சிறீலங்கா காவல்துறையினர் கடந்த 9 ஆம் திகதி ஒரு இளைஞரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் மல்லாகம் சிறீலங்கா நீதிமன்றில் நீதியாளர் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு நபர் தலைமறைவாகியிருப்பதாக தெரியவருகின்றது. அவரைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உண்மை இல்லாத இடத்தில் நல்லிணக்கம் ஏற்படாது!

பொய் உள்ள இடத்தில் உண்மையான அமைதி பிறக்காது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலியினை ஒப்புக்கொடுத்த போது சனிக்கிழமை (19) தெரிவித்தார். நீதி இல்லாத இடத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்படும்,உண்மை ஏற்கப்பட்டு நடந்த விடயங்களுக்கு எல்லாம் பொறுப்பு கூறப்படும் பட்சத்திலேயே உண்மையான சமாதானம் பிறந்து நல்லிணக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஒற்றுமை, நல்லிணக்கம் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் எவ்வித பலனும் இல்லை. எமது நாட்டிற்கு மாற்றம் தேவை, அதை உலக நாடுகள் அறிந்திருக்கின்றது. எமக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.ஆனால் அவற்றை எமது நாடு ஏற்றுக்கொள்ளுவதாக இல்லை. இதனால் பல ஆண்டுகளுக்கு பின் நீதி இல்லாமல், உண்மை இல்லாமல் சமாதானம் இன்றி தவித்த மக்களாக எமது இலங்கை நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை நீதியுடன் கூடிய சமாதானமான இந்த செல்வத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வீதி அமைக்கப்படலாம், கட்டடங்கள் கட்டப்படலாம் அவை எங்களுக்குத்தேவை அல்ல. எங்களது உண்மையான தேவை உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் உண்மையான சமாதானத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதேயாகும். கவலைகள், கஸ்டங்கள், வறுமைகள் இருக்கலாம் ஆனால் உண்மையான நீதியுடன் கூடிய சமாதானமே இந்த தவித்த மக்களுக்குத்தேவையாகும்.1920 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இப்படியான ஒரு போராட்டம் இடம் பெற்று வருகின்றது. இதற்கு ஒரு உரிய பதிலை கொடுப்பதற்காக இந்த நாடுகள் எங்களுடன் சேர்நது குரல் கொடுத்து வருகின்றன. சமாதானம் என்பது கடவுளின் உண்மையான கொடை இந்த நாட்டின் சமாதானத்திற்காகவும், எங்களுக்காகவும் கேட்கப்படுகின்ற இந்த மன்றாட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என மன்னார் ஆயர் தனது உரையில் தெரிவித்தார். இதே வேளை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்காகவும்,குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் திருப்பலி ஒப்புக்ககொடுக்கப்பட்டது.

19 ஏப்ரல் 2014

கிளிநொச்சியில் 64 வயதுடைய தாய் கைது!

திருமதி பத்மாவதி எனும் 64 வயதுடைய தாய் இன்று காலை கிளிநொச்சியில் சிங்கள அரசின் குற்றப்புலனாய்வுப்பிரிவினால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.சில வாரங்களாக இலங்கை அரசால் நடத்தப்பட்ட புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சியின் நடவடிக்கையே திருமதி பத்மாவதி கைதின் காரணம் என அறிய முடிகின்றது . தற்பொழுது புலிகள் கதை கூறி அவர்களுடன் தொடர்ப்பு என்று பல அப்பாவி மக்களை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைக்க சிங்கள பேரினவாத அரசு பெரும் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது .

18 ஏப்ரல் 2014

தொண்டைமானாறில் கரையொதுங்கிய இலட்சக்கணக்கான மீன்கள்!

தொண்டைமானாறு கடல்நீரேரியின் இரு மருங்கிலும் இறந்த நிலையில் லட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்கியுள்ளன. தொண்டைமானாறு பிரதான பாலத்துக்கும் சந்நிதி கோயிலின் தெற்குப் பக்கத்திலுள்ள வெளிக்கள நிலையத்துக்கும் இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியின் இரு மருங்கிலும் இவை கரையொதுங்கியுள்ளன. கரவெட்டி பிரதேச செயலர் சிவஸ்ரீ, வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் ந.அனந்தராஜ் மற்றும் படையினர் ஆகியோர் இப்பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். இந்த மீன்கள் இறந்த கரையொதுங்கியைமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

17 ஏப்ரல் 2014

யாழ்ப்பாணத்தில் சுத்தத் தமிழர்கள் இல்லை என்கிறார் ஹத்துருசிங்க!

யாழ்பாணத்தின் 52 ஆவது படையணியை மிருசுவில் பிரதேசத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது. யாழ்பாணத்தின் 52 ஆவது படையணி கடந்த காலத்தில் வறணி பிரதேசத்தில் நிலைக் கொண்டிருந்தது. யுத்தத்தின் பின்னர் பொது மக்களை மீள் குடியமர்த்துவதற்காக இந்த காணியை மீண்டும் வழங்கியதாக யாழ். பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். குறித்த காணியில் இதுவரையில் 39 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 41 காணிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ். வைத்தியசாலைக்கு தேவைப்படும் இரத்தத்தை இராணுவமே வழங்குவதாக குறிப்பிட்ட மஹிந்த ஹத்துருசிங்க, எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. இனி இவர்களால் ஒரு போதும் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூற முடியாது. சிங்களவர்களின், எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அவர்களிடம் உள்ளது. அந்தளவிற்கு இங்கு நாங்கள் கடமையாற்றியுள்ளோம். எனக் குறிப்பிட்டார். இதன் மூலம் சிங்கள படையதிகாரி தமிழர்களுக்கு ஆழமான கருத்து ஒன்றினை சொல்லி விட்டு சென்றுள்ளார். நீர்கொழும்பு புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழர்கள் இன்று தமிழர்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு கலாச்சார ரீதியாக மாறியுள்ளார்கள் . அதனைப்போல நிலைமை வராமல் பாதுகாப்பது தமிழர்களின் கடமை.

16 ஏப்ரல் 2014

இல்லறம் வேண்டுமாயின் துறவறத்தை துற-ஆயர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்!

யாழ்.குருநகர்ப் பகுதியில் காணமல் போயிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி-கொன்சறிற்றாவின் மரணத்திற்கு நீதிவழங்கக் கோரி இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தத யுவதியின் சடலத்தினை அவருடைய வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக நின்றே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் உயிரிழந்த யுவதியின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இருப்பினும் மேற்படி ஆர்ப்பாட்டத்தினை அடுத்து ஆயர் இல்லத்தின் நுழைவாயில் அடைக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல எவரும் ஆயர் இல்லத்தில் இருந்து வெளிவரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த யுவதியின் பெற்றோர்கள் ஆயர் இல்லத்தின் வாயிலில் நின்று ஆழுது புலம்பினர்.இல்லறம் வேண்டுமானால் துறவறத்தை விட்டுப்போ, பாவமன்னிப்புக் கொடுக்கும் உனக்கு யார் மன்னிப்புக் கொடுப்பது, வேதத்தை போதிக்க வந்த உனக்கு பெண்துனை தேவையா? என்ற பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பினை காட்டியிருந்தனர். இதன் பின்னர் யாழில் இருந்து உயிரிழந்த யுவதியின் சடலம் அடக்கம் செய்வதற்காக அவருடைய சொந்த இடமான மண்டைதீவிற்கு தற்போது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

15 ஏப்ரல் 2014

சிறீலங்காவில் இந்தியப்படைகள்-விசாரணை கோரி மனு!

சிறிலங்காவில் நடந்த இறுதிக்கட்டப் போரில், இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய நாடாளுமன்றத்தினதோ, குடியரசுத் தலைவரினதோ ஒப்புதலின்றி இந்தியப் படையினர் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து சிறப்பு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த, டெல்லி தமிழ் சட்டவாளர் சங்கத்தின் செயலாளரான ராம்சங்கர் என்ற சட்டவாளரே இந்த மனுவைச் சமர்ப்பித்துள்ளார். கடந்தவாரம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனு மீதான விசாரணை வரும் நாளை மறுநாள் நடத்தப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சீக்கிய அதிகாரி ஒருவரே தலைமை தாங்கியதாகவும், இந்தியப் படையினர் சிலர் போரில் காயமடைந்ததாகவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட உள்நாட்டுப் போரில், சிறிலங்கா படைகளுக்கு உதவுவதற்காக 2008 ம், 2009 ம் ஆண்டுகளில் இந்திய இராணுவ, கடற்படை, மற்றும் விமானப்படையினர் சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. போர்ப் பிரகடனம் ஒன்று செய்யப்படாமல்- இந்திய ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல்- அரசியலமைப்பின் 246வது பிரிவுக்கு அமைய, நாடாளுமன்ற அனுமதி பெறப்படாமலேயே இவர்கள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்துலக மனிதாபிமான முன்னெடுப்புகளுக்காக தாம் பல முறை சிறிலங்காவுக்குச் சென்று வந்துள்ளதாக சட்டவாளர் ராம் சங்கர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மீதான தாக்குதலின் போது தலைப்பாகை கட்டிய இந்திய அதிகாரி ஒருவர் ஆயுதப்படைகளுக்கு தலைமை தாங்குவதை தாம் கண்டதாக, புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைத்துலக விசாரணையில் சாட்சியமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போர்ப் பிரகடனம் செய்யப்படாமலேயே, சிறிலங்கா படைகளுக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், இந்தியப் படையினரை சிறிலங்காவில் நிறுத்தியுள்ளனர். இராணுவ விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்துக்கும் இது வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு தவிர, வேறு எந்தக் காரணத்துக்காகவும் இந்திய ஆயுதப்படைகளை பயன்படுத்த இந்திய அரசியலமைப்பில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. உள்நாட்டு போரில், தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக, சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு உதவியாக, இந்திய ஆயுதப்படைகள் 2008, 2009 காலப்பகுதியில் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த சுதந்திர அனைத்துலக நிபுணர் குழுவின் அறிக்கையில் 56வது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 2011 மார்ச் 31ம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.” என்றும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான இந்திய ஆயுதப்படைகளின் கூட்டுப் பங்கு தொடர்பாக, விசாரிக்க இந்திய உயர்நீதிமன்றம் தனது கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்றும், அது சுயாதீனமாக நடத்தப்படுவதை கண்காணிக்குமாறும், சட்டவாளர் ராம் சங்கர் தனது மனுவில் கோரியுள்ளார். சிறிலங்காவில் தமிழ் சிறுபான்மையினரின் உயிர்கள், உடமைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விசாரித்து, அதில் சம்பந்தப்பட்டவர்களை சிறப்புத் தீர்ப்பாயம் முன்பாக நிறுத்தி விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவில், பாதுகாப்பு, வெளிவிவகார, மற்றும் உள்துறை அமைச்சுக்களை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

14 ஏப்ரல் 2014

மினிபஸ் உரிமையாளர் ஒருவர் மீது தாக்குதல்!

நேற்று இரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக மினிபஸ் உரிமையாளர் ஒருவர் மீதுஇராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் துரைராசா மகேந்திரராசா என்னும் மினிபஸ் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக் கிழமை குறித்த நபர் மினிபஸ்ஸை யாழ்.பிரதான தபால்கந்தோர் முன்பாக செலுத்திய வேளை மதுபோதையில் நின்ற இருவர் வாகனத்தை செலுத்த இடைஞ்சல் ஏற்படுத்தியதுடன்; வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது. குறித்த கைகலப்பில் ஈடுபட்டவர்கள் சிவில் உடையில் நின்ற இராணுவத்தை சேர்ந்தவர்கள் என மினிபஸ் உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்று இரவு பண்ணை மினிபஸ் நிலையத்திற்கு முன்பாக கைகலப்பில் ஈடுபட்ட நபர் உட்பட 10 சிப்பாய்கள் இராணுவ உடையில் சென்று மகேந்திரராசாவை தனியாக அழைத்தனர். பின்னர் அவரிடம் எவ்வித கேள்விகளுமின்றி கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு சென்றனர்;. இதனால் அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ். பொலிஸாரால் ஒரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

13 ஏப்ரல் 2014

மான் வேட்டையை, புலி வேட்டையாகக் காண்பிக்கின்றது சிங்கள அரசு!

இப்போது, இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்படும் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக அழுவதா? அல்லது ஆத்திரம் கொள்வதா? என்ற அங்கலாய்ப்பு மட்டுமே ஒவ்வொரு தமிழனிடமும் எஞ்சி இருக்க முடியும். கடத்தல்கள், காணாமல் ஆக்குதல், ஆதாரமற்ற வகையிலான படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகளாக ஆக்கப்படும் தமிழ்ப் பெண்களது மரணங்கள், கலாச்சாரச் சீரழிவு ஊக்குவிப்பு, போதைப் பொருள் விநியோகம், அச்சுறுத்தல்கள், கட்டாய கருக்கலைப்புக்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், நிலப் பறிப்புக்கள் என அத்தனை கொடூரங்களும் ஈழத் தமிழர்கள்மீது நடாத்தப்படுகின்றன. அதற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றவர்கள்மீது விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டுக்களும், கைதுகளும், துப்பாக்கிச் சூடுகளும், மரணங்களும் நடாத்தப்படுகின்றன. ஆனாலும், உலகின் எந்தத் திசையிலிருந்தும் அதற்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுப்பப்படாமல், அத்தனையும் ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சிங்கள தேசம் அடக்கி வைத்துள்ளது. விரிந்து செல்லப்போகும் தமிழின அழிப்புக்கு முன்னெச்சரிக்கையாக, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்மீதும், அதன் செயற்பாட்டாளர்கள்மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய, சிங்கள அரச தரப்புச் செய்திகளின்படி, விடுதலைப் புலிகள் அமைபைச் செர்ந்த மூவர் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள்தானா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தமிழர்களது இன்றைய நிலையில் சாத்தியப்படாத விடயம். ஆனாலும், அவர்கள் சிங்களப் படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பதனால், அவர்கள் சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏதோ வகையில் இடைஞ்சலாக இருந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. சிங்கள இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டுள்ள தமிழர் தாயக பிரதேசத்தில் ஒரு ஆயுத போராட்டமோ, விடுதலைப் புலிகளது மீள் எழுச்சியோ சாத்தியமானது அல்ல. சிங்கள ஆட்சியாளர்களோ, அவர்களது படையினரோ தெரிவித்துவரும் கதைகளும், அதன் தொடர்ச்சியான சம்பவங்களும், படுகொலைகளும் இன்னொரு செய்தியை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்த முயல்கின்றது. அதாவது, சிங்கள தேசத்தின்மீது நீதி விசாரணை என்ற கோரிக்கையூடாக அழுத்தங்கள் கொடுக்க முற்பட்டால், ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் செல்லைக் கவசமாக்கி, எஞ்சியுள்ள உணர்வுள்ள தமிழர்களையும் அழித்து விடுவோம் என்பதுதான் அந்தச் செய்தி. காணாமல் போன தனது மகனைத் தேடி, போராட்டம் நடாத்திய ஒரு தாயின் போராட்டமும், ஒரு தங்கையின் கண்ணீரும் சர்வதேச கவனத்தை ஈர்த்தபோது, விடுதலைப் புலிகள் மீண்டும் சிங்களப் படைகளால் களத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். கோபி, அப்பன், தேவியன் என்ற பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஏராளமான தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள். விடுதலைப் புலிகளது புதிய தலைவர் என்று இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட கோபி கைது செய்யப்பட்டதாக சிங்களப் படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் மூவரும் இராணுவத்தின் தேடுதல், சுற்றிவளைப்பின்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு தற்போது அறிவித்துள்ளது. ஒரு குறுகிய பிரதேசத்தில், பல ஆயிரம் சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில், தப்பிச் செல்ல முற்பட்டதால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற சிங்கள அரசின் கூற்று நம்பும்படியாக அமையவில்லை. சர்வதேச நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டு, போர்க் குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ள சிறிலங்கா அரசுக்கு விடுதலைப் புலிகளது மீள் எழுச்சி என்பது, அவர்களது நிலைக்கு ஆதரவான பலமான செய்தி. அதற்குக் காரணமானவர்களில் ஒருவரையாவது உயிரோடு பிடித்திருந்தால், சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு இலகுவான ஆயுதமாகியிருக்கும். அதை விடுத்து, அவர்கள் அவசியமற்ற வகையில், போலிக் காரணங்களுடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவே, சிங்கள அரசின்மீதான சந்தேகத்தை மேலும் வலுவடைய வைத்துள்ளது. தன்மீது ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பினால் மேற்கொள்ளப்படவுள்ள போர்க் குற்ற விசாரணையைக் குழப்பும் நோக்கத்துடனும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தடுக்கும் விதமான அச்சுறுத்தலுக்கும் இந்த ஓரங்க நாடகமும், கைதுகளும், தடுப்புக்களும், படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதையும் மீறி, தமிழர்கள் ஐ.நா. நோக்கி வாய் திறக்க முற்பட்டால், இதையும்விடப் பூதாகரமான காட்சிகள் அரங்கேற்றப்படும். தெற்கே, சில குண்டு வெடிப்புக்களும், அதில் சில அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புக்களும்கூட எதிர்பார்க்கப்படலாம். அதனைத் தொடர்ந்து பாரிய படை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம். 2009 மே மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் காலத்தில், தமிழீழ மண்ணில் ஒரு இன அழிப்புப் போர் நிகழத்தப்பட்டது. ஐந்து வருடங்களின் பின்னரான, 2014 மே மாதத்தில் மீண்டும் ஒரு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாட்களில், ஈழத் தமிழர்கள் மீது இன்னொரு இனப் படுகொலை நிகழத்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அதனை, ஜெனிவாவில் அமெரிக்காவின் தலைமையில் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய காங்கிரஸ் அரசு எதிர்த்தபோதே நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

- கதிரவன்

12 ஏப்ரல் 2014

படுகொலையான தேவிகன் வான்புலிகளின் விமானி!

நெடுங்கேணியில் நேற்று நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக சிறிலங்காப் படையினரால் அறிவிக்கப்பட்ட மூன்று பேரில், தேவிகன் என்பவர், விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பின் முக்கியமான விமானி என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். நெடுங்கேணிக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற இடத்தில், நேற்று அதிகாலையில். நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறி, கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரையும் சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வான்புலிகளின் விமானியான தேவிகன், 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட அனுராதபுர வான்படைத்தளம் மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் குதம் என்பனவற்றின் மீதான வான் தாக்குதல்களில் பங்கெடுத்தவர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். 1995ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட ராதா படையணியைச் சேர்ந்த கரும்புலியான தேவிகன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இருந்தவர். போரின் முடிவில் இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற இவர், பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து அண்மையில் சிறிலங்கா திரும்பியிருந்த்தாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய இருவரான கோபி மற்றும் அப்பன் ஆகியொர், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கோபி போரின் முடிவில் சிறிலங்காப் படையினரால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர், சவூதி அரேபியாவுக்குச் சென்று சாரதியாகப் பணியாற்றியவர் என்றும், அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றைய தேடுதல் நடவடிக்கைக்காக சுமார் 2000 சிறிலங்காப் படையினர் நெடுங்கேணிக்குத் தெற்கிலுள்ள காட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எப்பக்கமிருந்தாலும் தமிழர்களை அழிப்பதே சிங்களத்தின் திட்டம்!

கோத்தாவின் புலித் திரைப்படத்தில் விடுதலைப்புலிகள் தரப்பு மட்டுமல்ல அரச தரப்பிலும் கொல்லப்படுபவர்கள் தமிழர்களாகவே இருக்கவேன்டும் என்பது கோத்தாவின் திட்டம்.ஆகவேதான் கோபி குழுவினை பிடிக்கும் முயற்சியில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ராணுவ அதிகாரியும் ஒரு தமிழர்தான். முதலில் கோபி குழுவை சுற்றிவளைக்கும்போது ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் எனக் கூறிய ராணுவம், கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியும் தமிழர்தான் என்றால் தமது நாடகத்தில் சந்தேகம் வரலாம் என்பதால் உடனடியாகவே ராணுவம் கொல்லப்பட்ட அதிகாரி கோபி குழுவின் சுற்றிவளைப்பில் கொல்லப்படவில்லை என மறுத்தது. ஆனால் இப்போதுதான் உண்மை கசிந்துள்ளது. தற்போதைய ராணுவத்தின் அறிக்கையில் வவுனியா வடக்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த இராணுவப் பயிற்சியின் போது தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இராணுவ அதிகாரி ஒருவர்தான் உயிரிழந்துள்ளார். இராணுவத்தின் 7 ஆவது இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.கமல்ராஜா என்ற தமிழ் இராணுவ அதிகாரியே உயிரிழந்துள்ளார். பதவியா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நேற்று முன்தினம் இரவே அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படையினரின் குழுவொன்று, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சகபடைச்சிப்பாய் ஒருவர்தான் சுட்டுள்ளார். கொல்லபப்ட்ட குறித்த இராணுவ அதிகாரி கோபி, தேவிகன் ஆகியோர் தொடர்பான விசாரணைகளில் பங்குபற்றியிருந்தவராவார். இந்த தமிழ் இராணுவ அதிகாரியே இது தொடர்பான விசாரணைகளின் போது மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். ஆகவே கோத்தாவின் நாடகம் முடிந்தவுடன் குறித்த ராணுவ அதிகாரியும் கொல்லப்படவேன்டும் இல்லையேல் சிலவேலைகளில் தமது நாடகம் உலகிற்கு கசிந்துவிடும். ஆகவேதான் குறித்த அதிகாரியையும் தமிழராக நியமித்து அவரையும் போட்டுத்தள்ளியுள்ளது கோத்தா கும்பல்.

11 ஏப்ரல் 2014

கோபி உட்பட மூவர் கொல்லப்பட்டதாக படைகள் அறிவிப்பு!

இலங்கை பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த கோபி என்றழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம், மற்றும் தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் ஆகிய இருவர் உட்பட, மூன்றுபேர் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது. விடுதலைப்புலிகளின் இப்போதைய உயர் மட்ட உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட இவர்கள் இராணுவத்தினர் மேற்கொண்டிருந்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையொன்றில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்திலேயே கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை அரச தகவல் திணைக்களமும் உறுதி செய்திருக்கின்றது. கொல்லப்பட்டவர்களில் மூன்றாவது நபர் அப்பன் என்றழைக்கப்படும் விடுதலைப்புலி சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் இரவு இடம்பெற்ற சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாக முன்னர் வெளியாகிய தகவல் தவறானது என்றும் அந்த இராணுவ சிப்பாய் வேறு ஓரிடத்தில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போதே உயிரிழந்ததாக இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் கோபி என்பவர் ஈடுபட்டிருந்ததாகவும், இவர் தன்னைத் தேடிச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரை கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி காயப்படுத்திவிட்டு தப்பியோடியதாகவும் முன்னர் அரசாங்கம் தெரிவித்திருந்தது. தேடப்பட்டு வந்த கோபிக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தர்மபுரம் பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் பகுதியில் தனது வீட்டிலிருந்த ஜெயக்குமாரி என்ற பெண்ணும் அவருடைய 14 வயது மகளும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதச் செயலில் ஈடுபடுபவர்கள் அல்லது, விடுதலைப்புலிகளை மீளவும் ஒன்றிணைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவிகள் வழங்கியதாகக் கூறி, 65 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருந்தார். இவர்களில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும், மிஞ்சிய 60 பேரில் பத்துப் பேர் பெண்கள் என்றும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

10 ஏப்ரல் 2014

ஆஸியில் இலங்கையர் தற்கொலை முயற்சி!

அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்த சம்பவம் ஒன்று சிட்னியில் உள்ள ஹோம்புஸ் நைட் வீதியில் இடம் பெற்றுள்ளது . மேற்படி நபர் 60வீத எரி காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொன்கோர்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.; தற்போது கோமா நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன இலங்கை வட மாகாணத்தை சேர்ந்த ஜனர்தணன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரே இவ்வாறு தீ வைத்துள்ளார் . நேற்றைய தினம் குடிவரவு திணைக்களத்தால் இவருடைய அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டதும் இவர் தீ வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

09 ஏப்ரல் 2014

மண்டைதீவில் நடந்த கடத்தல் சம்பவம்!

மண்டைதீவிலிருந்து இளம்பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை பொதுமக்களின் சமயோசிதத்தினால் காவல்த்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கடத்தல் நடந்த அடுத்த சில நிமிடங்களில் கடத்தல்க்காரர்களின் வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு 6ம் வட்டாரத்தில் J-08 கிராமசேவையாளர் வீட்டிற்கு சற்று தொலைவில், சமுர்த்தி உத்தியோகத்தரின் அலுவலகம் உள்ளது. அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் 12.30 அளவில் ஹை-ஏஸ் வாகனத்தில் வந்திறங்கிய ஐந்து பேரடங்கிய கும்பல் வீட்டிலிருந்த இளம்பெண்ணை கடத்திச் செல்ல முற்பட்டது. வீட்டிலிருந்தவர்களிற்கும் கடத்தல்காரர்களிற்குமிடையிலான இழுபறியை தொடர்ந்து கடத்தல்க்காரர்கள் வீட்டில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். வீட்டிலுள்ளவர்கள் அலறவே, சமுர்த்தி அலுவலகத்தில் இருந்த உத்தியோகத்தர் அங்கு ஓடிச் சென்றுள்ளார். ஆனால் அவரையும் தாக்கி நிலத்தில் விழுத்திவிட்டு, இளம்பெண்ணை வாகனத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு இளைஞர்குழு யாழ்ப்பாண நகரத்திற்கு பறந்தது. நிலத்தில் விழுந்த சமுர்த்தி உத்தியோகத்தர் துரிதகதியில் செயற்பட்டு, விடயத்தை கிராமசேவையாளரிற்கு அறிவித்தார். உடனடியாக தகவல் கிராமசேவகரிடமிருந்து மணடைதீவு சந்தியில் உள்ள காவல்த்துறையினரிற்கு பறந்தது. செய்தி அங்கு செல்லவும், வாகனம் அங்கு வரவும் சரியாக இருந்தது. உடனடியாக வாகனத்தை மடக்கிப்பிடித்த காவல்த்துறையினர், அனைவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்தனர். குறித்த கடத்தல்க்காரர்களின் ஒருவனை தான் காதலிப்பதாகவும், அதற்கு வீட்டில் சம்மதம் கிடைக்காததையடுத்தே அவர்களுடன் செல்ல முடிவெடுத்ததாகவும் கடத்தப்பட்ட பெண் வாக்குமூலமளித்தார். இதனையடுத்து எச்சரிக்கை செய்யப்பட்டவர், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து வாள்கள், பொல்லுகள், சைக்கிள் செயின்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. கடத்தல்காரக்ள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

08 ஏப்ரல் 2014

காவலூரில் இளைஞர் கைது!

ஊர்காவற்றுறை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 11.15 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். 2 பிள்ளைகளின் தந்தையான ஊர்காவற்றுறை அயித்தாம்புலத்தைச் சேர்ந்த அந்தோனிசாமி வசந்தரூபன் (வயது 29) என்பவரே கைதுசெய்யப்பட்டவராவார். ஊர்காவற்றுறையில் இரும்புக் கடை நடத்திவரும் இவரை இன்று அவரது கடைக்கு வந்த குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கைதுசெய்து யாழ்ப்பாணத்துக்குக் கூட்டிச் சென்றனர். கூடவே இவரது மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய உதவியுடன் நந்தகோபன் கைதாம்!

வெளிநாடுகளில் இயங்கும்,விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில் இரண்டாம் நிலை தலைவரான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரான நந்தகோபன் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். நெடியவனின் கட்டுப்பாட்டிலுள்ள வெளிநாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வலையமைப்பின் பிரதி தலைவர்களில் ஒருவராக நந்தகோபன் செயற்பட்டு வந்தார். தென் கிழக்காசியாவை தளமாக கொண்டு இவர் இயங்கினார். இவரது போலி கடவுச்சீட்டுடன் மலேசியாவிலிருந்து புறப்பட்டு தெஹ்ரான் வழியாக லண்டனுக்கு செல்லவிருந்தார். நந்தகோபன் தெஹ்ரானில் இருப்பதை தென்கிழக்காசிய தகவல் வாட்டாரமொன்று இலங்கைக்கு தெரியப்படுத்தியது. இலங்கை கேட்டுகொண்டதால் ஈரானிய அதிகாரிகள் நந்தகோபனை தெஹ்ரான் விமான நிலையத்தில் தடுத்தனர். தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படாததனால் இவர் மலேஷியாவிலிருந்து திரும்பிப்போனார். கோலாலம்பூர் விமானநிலையத்தில் வந்து இறங்கிய இவரை மலேஷிய அதிகாரிகள் தடுத்து வைத்தனர். இதே சமயம் இலங்கை அதிகாரிகளின் நந்தகோபன் தொடர்பாக மலேஷியா சென்று நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் நந்தகோபனை கைதுசெய்து இலங்கைக்கு மார்ச்சு மாதம் 6 ஆம் திகதி கொண்டு வந்தனர்.ஷெல் வீச்சினால் காயமடைந்த நந்தகோபான் ஊன்று கோல் உதவியுடன் நடக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

07 ஏப்ரல் 2014

ராஜபக்சே நண்பர் படத்தில் விஜய் நடிப்பதா?

ஈழத்தமிழரைச் சித்தரிக்கும் சந்தோஷ் சிவனின் ’இனம்’ திரைப்படத்துக்கு தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க... மார்ச் 31-ம் தேதியுடன் அப்படத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார், படத்தின் தமிழக வெளியீட்டாளரான லிங்குசாமி. இந்த நிலையில், விஜய் நடிக்கும் "கத்தி' படத்தின் மூலம் இன்னொரு சர்ச்சை பெரிதாகியுள்ளது. ஈழ இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர்தான், "கத்தி' படத்தின் தயாரிப்பாளர் என்பது சர்ச்சைக்கான காரணம். பணத்துக்காக இனக் கொலையாளியின் கூட்டாளி படத்தில் விஜய் நடிக்கலாமா என பல நாடுகளிலும் தமிழின உணர் வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். "துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் முருகதாசும் விஜய்யும் இணைந்துள்ள படம் "கத்தி'. விநியோகஸ் தர்கள் மத்தியில் ஆர்வத் தைத் தூண்டிய இந்தப் படத்தை, ஈழத்தமிழர் நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல்தான் தயாரிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்கத்தாவில் "கத்தி' ஷூட்டிங்கும் தொடங்கிவிட்ட நிலையில்... இன்னொரு ஈழத்தமிழர் நிறுவனமான ’லைக்கா மொபைல்’கம்பெனியும் இந்தப் படத் தயாரிப்பில் இணைவதாக அறிவிக்கப் பட்டது. ஈழத்தமிழர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரிந்தது தான். ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருகிறார் என்றும் இதற்காக சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட இங்கிலாந்து தமிழ் மாணவர் அமைப்புகளுக்கு மாதம் 5 ஆயிரம் பவுண்டுகள் தருகிறார் என்றும் விவரங்களை அடுக்குகிறார்கள், இன உணர்வாளர்கள்.எங்கட மக்களைக் கொன்னு குவித்த ராஜபக்சேவுக்குத் துணைபோகும் சுபாஷ்கரன் அல்லிராஜா, ஒரு தமிழன். அவருடைய தந்தையார் அரிசி ஆலை வைச்சிருந்தார். அவர் எங்கட மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தை வலுப்படுத்த, நிதி திரட்ட பிரான்சுக்குப் போனார். போனவர் ஐரோப்பா முழுமைக்கும் தன்னோட வியாபாரத்தை விரிவுப்படுத்தினார். இனப்படுகொலைக்குப் பிறகே இலங்கைக்கு வந்தார். அரச பாதுகாப்போடு, இலங்கை அமைச்சர் சனத் ஜெயசூர்யாவோடு உலா வந்தார். அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. எங்களால் வாழ்வு பெற்ற ஒருவர், எங்களின் அழிவுக்குக் காரணமான ஒருவரோடு வந்தார் என்றால் அவரும் இனத்துரோகியே! பத்தாத குறைக்கு, தமிழனாகப் பிறந்து ராஜபக்சேவிற்கு ஜால்ரா அடித்து வாழும் முத்தையா முரளிதரனுக்கு பாராட்டும், பணமும் கொடுத்தவர். எங்கள் இனத்திற்கு எதிராக யார் இருந்தாலும் அவருக்கு ஆதரவு தருவது அல்லிராஜாவோட வேலை. இப்போ விஜய்யை வைத்து படம் தயாரிக்கிறார். பணத்திற்காக துரோகியானவரின் தயாரிப்பில் விஜய் நடிக்கக்கூடாது. அவரின் படத்தில் விஜய் நடித்தால் அவரும் துரோகியே! பணம் தான் வேண்டுமென்றால் சொல்லுங்கள்... பிச்சை எடுத்தாவது கொண்டுவந்து கொட்டுகிறோம் என விஜய்க்கும் கடிதம் எழுதியுள்ளோம். படத்திலிருந்து விலகாவிட்டால் விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்துவோம்'' என்றார் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கோயில் பூசகர், அம்பாறை நிரஞ்சன்.லைக்கா நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரனிடம் இதுபற்றி கேட்டதற்கு, ""எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான், இந்த படத் தயாரிப்பு நிறுவனமும். சனத் ஜெயசூர்யா எங்கள் சேர்மனின் நண்பர், அவ்வளவே. எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர்தான் சொல்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஞானம் அறக்கட்டளை மூலம் அரசு தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்துள்ளோம். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை'' என்றார், கவனமாக. நடிகர் விஜய் தரப்போ, இந்தப் பிரச்சினையில் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

நா.ஆதித்யா

06 ஏப்ரல் 2014

பிள்ளையார் ஆலயக் கதவு உடைத்து கொள்ளை!

யாழ்.குடாநாட்டில் உள்ள ஆலயங்களை இலக்குவைத்து திருட்டுக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பொன்னாலை சித்திவிநாயகர் ஆலயத்திலும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளன. ஆலயக் கேற்றை உடைத்து உள்சென்ற திருடர்கள் சுவாமி தூக்குவதற்குப் பயன்படும் வாகனங்களின் தலைகள், மற்றும் பித்தளைப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். ஆலயத்தில் வடக்கு பக்கத்தில் இருந்த கேற்றின் பூட்டை உடைத்த திருடர்கள் ஆலய வாகனசாலையின் பூட்டுக்களையும் உடைத்து உள்சென்று அங்கிருந்த குதிரை, மற்றும் யானை வாகனங்களின் தலைகளை பெயர்த்துச் சென்றுள்ளனர். கலையம்சம் பொருந்தியதாக அமைக்கப்பட்டிருந்த இந்த தலைகள் இரண்டும் வாகனத்தில் இருந்து மிகவும் நுட்பமான முறையில் பெயர்க்கப்பட்டுள்ளன.அத்துடன், மடப்பள்ளியின் கதவையும் உடைத்த திருடர்கள் அங்கிருந்த 60 செப்புச் செம்புகள், 2 குத்துவிளக்கு, 2 குடம், மற்றும் பஞ்சாராத்தி உள்ளிட்ட தீபம் காட்டுவதற்கான விளக்குகள் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். சம்பவ தினம் இரவு தாங்கள் அயலில் உள்ள வீட்டுக்குச் சென்ற பின்னர் நள்ளிரவு வேளையிலேயே இந்த திருட்டு இடம்பெற்றதாக ஆலய பிரதம அர்ச்சகர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் ஐயா தெரிவித்தார். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2 ஆம் திகதி பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 150 பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட போதிலும் இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பபடவில்லை. இந்த நிலையில் பொன்னாலை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு தொடர்பில் பிரதேச மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மன்னாரில் விநாயகர் சிலை உடைப்பு!

மன்னார், தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் (ஏ – 32) பிரதான வீதியோரத்திலிருந்த விநாயகர் சிலை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளதென்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) காலை முறைப்பாடு செய்ததாக இந்துமத பிரதம குரு ஐங்கர சர்மா தெரிவித்தார். இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டமையை மன்னார் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியோரத்தில் பல வருடங்களாக வீற்றிருக்கும் மேற்படி விநாயகப்பெருமானுக்குரிய பூஜை வழிபாடுகளை திருக்கேதீஸ்வர கிராம மக்கள் மேற்கொண்டு வந்தனர். அத்துடன், மேற்படி வீதியூடாக பயணிக்கும் மக்களும் மேற்படி விநாயகப்பெருமானை வழிபட்டுவந்தனர். இந்நிலையிலேயே சனிக்கிழமை (05) இரவு இனந்தெரியாதோரினால் மேற்படி விநாயகர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்படி வீதியூடாகச் சென்ற மக்கள் விநாயகப்பெருமான் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமையைக் கண்டு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

04 ஏப்ரல் 2014

முல்லையில் மக்களுக்கு உபதேசம் செய்தார் கோத்தபாய!

மீண்டுமொரு யுத்தம் உரு­வா­வதை தடுப்­ப­தற்­கா­கவே வடக்கில் இரா­ணு­வத்­தினர் நிலை நிறுத்­தப்­பட்­டுள்­ளனர். தெற்கில் மூவின சமூ­கமும் ஒன்று பட்டு வாழ்­வ­தைப்­போன்று வடக்­கிலும் மூவின சமூக ஒரு­மைப்­பாட்­டினை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களை மீளவும் குடி­ய­மர்த்தும் திட்டம் வெற்­றி­பெற்­றுள்­ளது. கடந்த கால கசப்­பான அனு­ப­வங்­களை மறந்து மக்கள் மகிழ்ச்­சி­யாக வாழ­வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். முல்­லைத்­தீவு பிர­தே­சத்தில் இரா­ணு­வத்­தி­னரால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களை பொது­மக்­க­ளுக்கு கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது முப்­பது வருட காலம் இலங்­கையில் மிகக் கொடூ­ர­மா­ன­தொரு யுத்தம் இடம்­பெற்­றது. இதன்­போது வடக்கு மக்கள் மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டனர். எனினும் விடு­தலைப் புலி தீவி­ர­வா­திகள் அழிக்­கப்­பட்ட பின்னர் இன்று வடக்கில் அமை­தியும் மகிழ்ச்­சியும் நிகழ்­கின்­றது. எனினும் வடக்கில் மீண்­டு­மொரு யுத்தம் ஆரம்­ப­மாகி விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே இன்றும் நாம் இரா­ணு­வத்­தி­னரை வைத்­துள்ளோம். எனினும் இன்று மிகக் குறைந்த அள­வி­லான இரா­ணு­வத்­தி­னரே வடக்கில் உள்­ளனர். இவர்­க­ளினால் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­ட­மாட்­டாது. மக்­களின் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­கா­கவே இன்று வடக்கில் இரா­ணு­வத்­தினர் இருக்­கின்­றனர். அதேபோல் மக்­களும் ஜனா­தி­பதி மீதும் இரா­ணு­வத்­தினர் மீதும் நம்­பிக்கை வைத்து ஆத­ரிக்க வேண்டும். தெற்கில் சிங்­கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ்­வதைப் போல் வடக்­கிலும் மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும். இதுவே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் விருப்­ப­மாகும். மேலும் யுத்­தத்தின் போது இடம்­பெ­யர்ந்த மக்­களை மீளவும் குடி­ய­மர்த்தும் அர­சாங்­கத்தின் வேலைத்­திட்டம் வெற்­றி­ய­ளித்­துள்­ளது. இடம்­பெ­யர்ந்த மக்­களை குடி­ய­மர்த்தும் திட்­டத்தின் முதற் கட்­ட­மாக 50 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. தற்­போது அதன் இரண்டாம் கட்­ட­மாக 101 வீடுகள் இரா­ணு­வத்­தி­னரால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு பொது மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த கட்ட குடி­ய­மர்த்­து­வ­தற்­கான சகல செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இன்று அர­சாங்­கத்­தினால் பல வேலைத்­திட்­டங்கள் இப்­ப­கு­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் இடம் பெயர்ந்த மக்­களில் 98% மக்கள் தற்­போது அவர்­களின் சொந்த இடங்­க­ளி­லேயே குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர். தவிர்க்க முடி­யாத சில கார­ணங்­க­ளி­னா­லேயே சிலர் வேறு இடங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர். எனினும் இவையும் வெகு­வி­ரைவில் சரி செய்­யப்­பட்டு காணி­களை அவர்­க­ளி­ட­மேயே ஒப்­ப­டைக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுத்­துள்ளோம். அதே போல் கடந்த கால வடுக்கள் மக்­களின் மனதில் மறை­யாது உள்ளது. எனினும் அவை அனைத்தையும் மறந்து மகிழ்ச்சிகரமானதொரு வாழ்க்கையினை மக்கள் வாழ வேண்டும். இராணுவம் இன்று மக்களுக்கு செய்துவரும் சேவையினையும் பாதுகாப்பினையும் மேலும் தொடர்ந்து செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

03 ஏப்ரல் 2014

தீவக கரையோரங்களிலும் புதிய காவலரண்கள்!


யாழ்ப்பாணத்தில், தீவக கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் தொழில் புரியும் இடங்களுக்கு அண்மையில் அவசர அவசரமாக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தீவகத்தின் புங்குடுதீவு, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளிலேயே பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை அதிகரிக்கும் நோக்குடன் இக் காவலரண்களை அமைக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். வேலணை அராலி சந்திக்கு அருகில் பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் காவலரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான கண்காணிப்புக்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. மேற்படி செயற்பாடுகளால் தங்களின் சுதந்திரமான தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இளைஞர்கள் தொழிலில் ஈடுபடுவதற்குத் தயங்குகின்றனர் என்றும் கடற் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வடமராட்சிக் கரையோரப் பகுதிகளில் இராணுவத்தினரால் புதிதாக நூற்றுக்கணக்கான காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

02 ஏப்ரல் 2014

இலங்கை அரசின் வெட்கக்கேடான செயல்!

கோத்தாவின் படைகள் 
'உலகத் தமிழர் பேரவை' உட்பட வெளிநாட்டில் இயங்கும் பதினாறு புலம்பெயர் அமைப்புகளை தோற்கடிக்கப்பட்ட தமழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என்று தெரிவித்து, அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என்று விமர்சித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகரும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான ஜோன் ரியன். இந்த நடவடிக்கை, இலங்கையில் யுத்தத்தின் போதும், தற்போதைய மனித உரிமை மீறல், துஷ்பிரயோகங்களை ஒட்டியும் உண்மைகளைக் கண்டறிந்து, நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்போரை அச்சுறுத்தி, மௌனிக்கச் செய்யும் முயற்சியின் பிந்திய வடிவம்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கடந்த மார்ச் 27 ஆம் திகதி நிறைவேற்றிய சில தினங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. ஏதோ இந்த இரண்டு சம்பவங்களும் தற்செயலாக ஏறத்தாழ ஒரே சமயத்தில் நடைபெற்றவை அல்ல. மேற்படி ஐ.நா. தீர்மானம், யுத்தத்தின் இறுதிக் காலத்தில் இரு தரப்புகளினாலும் சர்வதேச சட்டங்கள் மோசமாக மீறப்பட்டமை தொடர்பில் பல மனித உரிமை மீறல் கேள்விகளை எழுப்பி, சர்வதேச விசாரணையை முன்னெடுக்கின்றது.தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கில் புலிகளை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை நடவடிக்கை என்கிறது அரசு. ஆனால், யாருமே மீண்டும் ஆயுதப் பிணக்குக்குச் செல்ல விரும்பவில்லை. அப்படிச் செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க மிக உண்மையான ஆதாரம் ஒன்றைக்கூட அரசினால் சமர்ப்பிக்க முடியாது. வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியதைப் போன்று இது, அரசியல் உள்நோக்கத்துக்காக நடத்தப்படும் வேட்டை என்பதோடு அப்பிரதேசத்தை இராணுவ மயப்படுத்தி, அடக்கு முறைக்குள் மூடி வைத்திருப்பதற்கான எத்தனமுமாகும். பிரதான புலம்பெயர் அமைப்புக்களை 'பயங்கரவாத அமைப்புகள்' எனக் குறியிடுவதன் மூலம் இலங்கைப் பிரஜைகள், சர்வதேச தொண்டர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்ற தரப்புகள் இந்த அமைப்புகளுடன் தொடர்பாடல் கொள்ளாது தடைசெய்யப்படுகின்றன. இந்த அறிவிப்பால் இந்த அமைப்புக்களுக்காகச் செயற்படும் பிரதிநிதிகளின் நண்பர்களும், உறவினர்களும் பெரும் ஆபத்துக்குள்ளாகின்றமையோடு, இலங்கைக்குச் செல்லும் புலம்பெயர் தேசத்தவர்கள் நுணுக்கமாக கண்காணிப்பு ஆய்வுக்கும் உட்படுத்தப்படும் நிலைமையும் நேர்ந்துள்ளத.இலங்கை அரசு புலம்பெயர் அமைப்புகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைக் கொள்வதில் சிரத்தையுடன் இல்லை. திட்டமிட்டு தமிழ் மக்களை ஒதுக்கியமையே ஆயுத மோதலுக்கு மூல வேர். அதனைக் கவனித்து சீர் செய்யவும் அரசு தயாரில்லை.அரசின் இந்த நடவடிக்கை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீதான அப்பட்டமான தாக்குதல். இது இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேலும் மிக மோசமாக்கி, பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நல்லிணக்க செயற்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த விடயங்கள் மிக முக்கியமாகக் கையாள வேண்டியவை என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மூலம் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றி, அது குறித்து நடவடிக்கை எடுக்கையில் இலங்கை அரசு இப்படி நடந்து கொள்வதை சர்வதேச சமூகம் பொறுத்துக்கொள்ளாது.இலங்கையில் தண்டனை விலக்களிப்பு முறைமை சவாலுக்கு உட்படுத்தப்படுவதும் சர்வதேச, சுயாதீன விசாரணையும் ஏன் அவசியமானவை என்பதை இலங்கை அரசின் தற்போதைய இந்த நடவடிக்கை வலியுறுத்திக் காட்டுகின்றது. - இப்படி அவர் மேலும் தெரிவித்தார்.