பக்கங்கள்

30 ஏப்ரல் 2011

அனலைதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் உடலம்.

அனலைதீவுப்பகுதியில் 25 வயது யுவதி கால்கள் இரண்டும் நிலத்தில் முட்டும் வகையில் தூக்கில் தொங்கியபடி நேற்று வெள்ளி மாலை சடலமாக மீட்கப்ட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் சிறய தீவான அனலைதீவுப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யுவதி தாயாருடன் வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றதாகவும் குளித்துவிட்டு யுவதி மட்டும் தனியே வீடு திரும்பியதாகவும் யுவதியின் தாயினால் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தாயார் குளித்து விட்டு வீட்டினுள் வரும் போது யுவதி வீட்டின் வளையில் கயிறு மாட்டி தூக்கில் தொங்கியபடி இருந்ததாகத் தெரியவருகின்றது.
யுவதியின் காதலன் கைது:
யுவதியை காதலித்து பின்னர் ஏமாற்றிய காதலன் தற்போது இது தொடர்பாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த காதலன் யுவதியை பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் திருமணம் செய்யாது ஏமாற்றியதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வருவதாகவும் தெரியவருகின்றது.
காதலன் தப்பி ஓட எத்தனிப்பு:
யுவதி தூக்கில் தொங்கியதை அடுத்து யுவதியை காதலித்து ஏமாற்றிய காதலன் பொதுமக்களின் தாக்குதல் பயத்தின் காரணமாக அனலைதீவில் இருந்து தப்பிஓட முற்பட்டபோது பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் யுவதி கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் காணப்படவில்லை எனவும் பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தூதரகத்தில் நடந்த இரகசியப்பேச்சு.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரீசியா புட்டினாசின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அமெரிக்கத் தூதுவரினால் இந்த சந்திப்பிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
கொள்கை அடிப்படையில் தூதுவரின் சந்திப்புக்கள் மற்றும் பேச்சுவார்த்தை விவகாரங்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை என தூதரகம் அறிவித்துள்ளது.
புட்டினாசின் அழைப்பின் அடிப்படையில் இவ்வாறான ஓர் சந்திப்பு நடைபெற்றதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு காத்திரமாக பயன்படுத்த முடியும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை பிரிவினையை ஏற்படுத்தும் கருவியாக பயன்படுத்திக்கொள்ளாது அதன் பரிந்துரைகளை எவ்வாறு ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, சிரானி சேவியர், ஜே.சீ. வெலியமுன, சுதர்சன குணவர்தன, சுனிலா அபேசேகர மற்றும் இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், நோர்வே, தென் ஆபிரிக்கா, தென் கொரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய இராஜதந்திரிகளும், ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

கிருபாகரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய புள்ளிகளிடம் விசேடமாக மனித உரிமை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் எதற்காக ஐ. நா. சபை உலகில் உள்ள வேறுபட்ட விடயங்களில் மௌனம் காக்கிறது என்ற கேள்விகளை நாம் தொடுக்கும் ஒவ்வொரு வேளையும், அவர்கள் கூறும் பதில் (Mills of UN grind slow, but sure) அதாவது ஐ. நா. சபை நடவடிக்கையை தாமதித்தாலும் நிட்சயமாக நடவடிக்கை எடுத்தே தீரும் என்பார்கள்.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களாகிய நாம் பல தடவை ஐ. நா. விடயங்களில் ஏமாற்றங்களை சந்தித்துள்ளோம். ஐ. நாவை பொறுத்தவரையில் அதாவது 192 அங்கத்துவ நாடுகளுக்கும் முன்னுரிமை வழங்குவது வழமையானதும் அவர்களது புரிந்துணர்வும்.
முள்ளிவாய்கால் யுத்தத்தை சிறீலங்கா, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் தான் வெற்றிகரமாக நடத்தி முடித்தது என்று பலர் நம்பினார்கள். இதே வேளை இன்று சர்வதேச சமுதாயம், ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் வெட்கத்தில் தலைகுனிந்து மௌனிகளாகிவிட்டனர்.
முள்ளிவாய்கால் வெற்றிக் களிப்பில் தெருப் பொங்கல், பால் பொங்கல், பிரித் ஓதியவர்கள் தமது கபட நாடகங்கள் வெளியாகி உள்ளதே என்று ஓடி ஒழிக்கின்றனர்.
பல சர்வதேச ஊடகங்கள், நிறுவனங்கள், உலகின் முக்கிய புள்ளிகள், ஈழத்தமிழர் மீதான சிறீலங்காவின் யுத்தம் ஓர் போக்கிலித்தனமான முறையில் நடைபெற்றுள்ளது என்பதை கண்டு, இதுதானா சிறீலங்கா கூறிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமென வியப்படைகின்றனர்.
ஐ. நா. வின் அறிக்கை:
ஐ. நா. வின் அறிக்கை 214 பக்கங்களை உள்ளடக்கியதுடன், மூவர் கொண்ட நிபுணர் குழு எந்த ஒழிப்பு மறைப்புமின்றி சிறீலங்கா அரசின் பிரதிநிதிகளுடன் தமக்கு இருந்த கடிதப் பரிமாற்றங்கள்களையும் வெளியிட்டுள்ளனர்.
இக்குழு சிறீலங்காவுக்கு செல்ல இருந்ததாக கூறப்பட்ட செய்திகளின் உண்மையான விபரங்களையும், சிறீலங்கா இக்குழு மீது சவாரி செய்ய முயற்சித்ததையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது.
இவ் அறிக்கை இறுதிநேர யுத்தத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், சர்வதேச மனித உரிமை, மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் சிறீலங்காவில் இடம்பெற்ற முழு யுத்தத்தையும் அலசி ஆராயுமாறு கூறுகின்றது.
இக்குழு தகவல் சேகரிப்பு, அறிக்கை தயாரிப்பை ஆரம்பித்தவேளையில், இவர்கள் நிட்சயம் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சாடுவார்கள் என்பதை எனது முன்னைய கட்டுரைகளில் கூறியிருந்தேன்.
அதேபோல் சிறுபிள்ளைகளை இராணுவத்தில் சேர்த்தமை, பொதுமக்களை மனித கேடயமாக பாவித்தமை, போர் நடைபெறாத இடங்களில் குண்டுகள் வைத்தமை, தற்கொலைத் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டும் இதில் கூறப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசைப் பொறுத்தவரையில் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல் மூலம் பொதுமக்களை கொலை செய்தமை, வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மறுத்தமை, மோசமான மனித உரிமை மீறல்களை பொதுமக்கள், விடுதலைப் புலி போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மீது மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை, யுத்தப் பிரதேசத்திற்கு வெளியில் அரசிற்கு எதிரானவர்கள், ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவை போன்ற குற்றச் சாட்டுக்கள் அடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சிறீலங்கா அரசு உடனடியாக, ஒரு சர்வதேச தரத்திற்கு ஏற்ற முறையில் ஒரு விசாரணையை ஆரம்பிக்க வேண்டுமென்றும், அவ் விசாரணைக் குழு காலத்திற்கு காலம் ஐ. நா. செயலாளர் நாயகத்திற்கு தமது விசாரணைகளின் முன்னேற்றங்களை அறிவிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது.
அதேவேளை சிறீலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு எனக் கூறப்படும் நலிந்த குழு, சர்வதேச தரம் அற்றது மட்டுமல்லாது, இக் குழு இன்றுவரை இறுதி யுத்தத்தில் நடந்த எந்த நிகழ்வுகள் பற்றி விசாரிக்க முன்வரவில்லையெனவும் அறிக்கை கூறுகிறது.
வேறு விடயங்கள்:
சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமென்றுகூறி யுத்தத்தின் வெற்றியை கொண்டாடியதன் மூலம் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை மறுத்ததுடன், தமிழ் மக்களின் அரசியல் விடயத்திற்கு இராணுவத் தீர்வே வழியெனக் கூறியுள்ளது ஏற்கமுடியாத ஒன்று என அறிக்கை கூறுகிறது.
அத்துடன் தொடர்ச்சியாக யுத்தம் நடந்த இடங்களை இராணுவமயப்படுத்தல், ஒட்டுக் குழுக்களை பாவித்தல், ஊடக அடக்குமுறை ஆகியவற்றுடன,; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுத்தகாலத்தில் புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் உதவினார்கள் என்பதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டை புலம் பெயர் வாழ் தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் ஏற்க மறுப்பதாக அறிக்கை கூறுகின்றது.
இவ் அறிக்கையின் வேண்டுகோள்களில், முக்கியமாக தடுப்புகாவலில் உள்ளவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதுடன், சிறீலங்கா அரசு தனது மோசமான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் எனவும் கூறுகிறது.
அறிக்கையின் விசேட தன்மை என்னவெனில், யுத்தம் முடிந்தவுடன், 2009ம் ஆண்டு மே மாதம் ஐ. நா. மனித உரிமைச் சபையில,; சிறீலங்காவிற்கான விசேட அமர்வில,; நிறைவேற்றப்பட்ட சிறீலங்காவிற்கு சார்பான தீர்மானத்தை ஐ. நா. மனித உரிமைச் சபை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளது. இத் தீர்மானம் அவ்வேளையில,; எவ்வித உண்மைத் தகவலும் அற்ற நிலையிலேயே ஐ. நா மனித உரிமைச் சபையினால் நிறைவேற்றப்பட்டதாக இவ் மூவர் குழுவின் அறிக்கை கூறுகிறது.
இவற்றுடன் இறுதி நேர யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர், பெண்கள் மற்றவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கூறுகிறது.
முக்கிய குறிப்பு:
இவ் அறிக்கை முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட இறுதி நேர யுத்தத்தை முக்கியமாகக் கருத்தில் கொண்டிருந்தாலும், இவ்யுத்தத்திற்கான முக்கிய காரணிகளை மனதில்கொண்டு, அவற்றின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு அங்கு உருவாக்கப்பட வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
அத்துடன் நியாயமான முறையில் சர்வதேச தரத்திற்கு ஏற்றவகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விரும்பம் மட்டுமல்லாது, சர்வதேச சமூகத்தின் விருப்பமாகவும் உள்ளது.
இவ் அடிப்படையில் இவ் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கும்வேளையில் ஒரு மறைந்துள்ள உண்மை வெளியாகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பல நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு, இன்று வரையில் யாரும் தடைக்கு எதிராக சர்வதேச ரீதியாக வழக்குத் தாக்கல் செய்யவில்லை. இவ் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி இவ் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையினாலும் சர்வதேச சமூகத்தினாலும் எப்படியாக பார்க்கப்படும் என்பதை தமிழீழ மக்கள,; விசேடமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், சங்கங்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ் அறிக்கையில் சிறீலங்கா அரசிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு புலம்பெயர் வாழ் தமிழர் நீதி கேட்கும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதனால், புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், சங்கங்களும் தமது சகல செயற்பாடுகளிலும் ‘‘முன் எச்சரிக்கையாக’’ நடப்பது புத்திசாலித்தனமானது.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
நன்றி: ஈழமுரசு.

29 ஏப்ரல் 2011

பான் கீ மூன் பாதுகாப்புச்சபையில் நடவடிக்கை எடுக்க கோரவில்லை.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாகாப்பு பேரவையிடமோ அல்லது பொதுச் சபையிடமோ கோரவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தற்போதைய தலைவர் நெஸ்டர் ஒஸ்டரியோ, நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இது ஓர் வழயைமான நடவடிக்கை எனவும், நடவடிக்கை எடுக்குமாறு எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசு மனிதாபிமான உதவிகளை தடுத்தது உறுதியாகியுள்ளது.

இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டத்தில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளதை ஐ.நா.நிபுணர் குழு உறுதி செய்துள்ள நிலையில், அதன் பரிந்துரையின்படி பன்னாட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்துமாறு ஐ.நா.பொதுச் செயலருக்கு சர்வதேச பொது மன்னிப்புச் சபை (அம்னெஸ்டி) கோரிக்கை விடுத்துள்ளது.
சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தி அறிக்கை விடுத்துள்ள சர்வதேச பொது மன்னிப்பு சபையின் ஆசியா - பசிபிக் இயக்குனர் சாம் ஜாரிஃபி, "போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதை தடுத்து வந்த சிறிலங்க அரசின் மறைக்கும் முயற்சிகளை முறியடிக்கும் வண்ணம், அந்த போரின் உண்மை நிலையை ஐ.நா.நிபுணர் குழு வெளிப்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
"இலங்கை போரில் இரு தரப்பினரும் செய்த குற்றங்களை வெளிக்கொணர, யாருக்கு எதிராக யார் தீங்கு செய்தனர், அதற்கு யார் பொறுப்பு என்பதை உறுதி செய்ய சுதந்திரமான விசாரணை ஆணையத்தை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைக்க வேண்டும்" என்று கோரியுள்ள ஜாரிஃபி, போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை திட்டமிட்டே சிறிலங்க அரசு குறைத்துக் காட்டியது என்பதும், அவர்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகளை சிறிலங்க அரசு தடுத்துள்ளது என்பதும் ஐ.நா.நிபுணர் குழு ஆய்வில் உறுதியாகிவுள்ளது என்று கூறியுள்ளார்.
"போரின் இறுதி கட்டத்தில் சிக்கியிருந்த மக்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை பார்த்த சாட்சிகளின் வார்த்தைகள் கலங்கடிக்கிறது. அவர்கள் மரண பயத்தில் இருந்திருக்கிறார்கள், மரணமும், காயமும் அவர்களை பாதித்துள்ளது, உண்ண உணவு, குடிக்க நீர், மருத்துவ வசதி என்று எதுவும் அவர்களுக்கு கிட்டவில்லை. போர் நடந்த பகுதியில் இருந்த தப்பி வந்தவர்களை இராணுவம் சிறைபிடித்து மோசமான நிலையில் வைத்திருந்தது. விசாரணை ஏதுமின்றி பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு நியாயம் கிடைப்பது தடுப்பது நியாயமாகுமா?" என்று ஜாரிஃபி கேட்டுள்ளார்.

28 ஏப்ரல் 2011

பான் கீ மூன் ஒரு கிரிமினல்.

தவறிழைக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தான் அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தானே நிராகரிப்பதன் மூலம் தொடர்ச்சியாக கிரிமினல் நடத்தையில் ஈடுபட்டு வருகிறார் என்று சர்வதேசச் சட்ட நிபுணரும், இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியருமான பிரான்ஸிஸ் போய்ல் அவர்கள் கூறினார்.
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித விரோதக்குற்றங்களை ஆராய ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்த பின்னும் பான் அதனை நிராகரித்து வருவது கிரிமினல் நடத்தை என்றார் போய்ல். தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் ஐ.நா. சாசனத்திற்கும் ஐ.நா. மனித உரிமை சாசனத்திற்கும் பான் கி மூன் பான் மிகப்பெரும் இழுக்கு என்று கூறிய போய்ல், பான் மீண்டும் ஐ.நா. செயலாளர் ஆவதைத் தடுக்க வேண்டும் என்றார்.
தன்னுடைய நுலான ‘சிறீலங்காவில் தமிழினப்படுகொலை’ என்ற நூலில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் அவரது ஊழியர்களுக்கும் வன்னியில் இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த சண்டையில் 50,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு உடந்தையாக இருந்து உதவிச் செயல்படுத்தினர் என்றார் போய்ல் அவர்கள். இது செர்பெனிகாவில் நடந்த இனப்படுகொலையை விட ஆறு மடங்கு அதிகம் என்றார் போய்ல்.
இப்போது ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தமிழர்களுக்கெதிரான இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித விரோதக்குற்றங்களை ஆராய ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்த பின்னும் பான் அதனை நிராகரித்து தனது தனக்கேயுரிய கிரிமினல் பாணியைத் தொடர்ந்து வருகிறார். எனவே எல்லா தமிழர்களும் இந்திய அரசும் முயற்சி மேற்கொண்டு பான் கி மூன் மீண்டும் ஐ.நா. செய்லாளர் ஆவதைத் தடுக்க வேண்டும் என்றார் பேராசிரியர் போய்ல்.
தமிழர்களுக்கெதிரான சிறீலங்காவின் இனப்படுகொலைக் குற்றங்களை ஆராய்ந்து தீர்ப்பளிக்க நிபுணர்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும் ஒரு பொதுச்செயலாளர் அதிகாரத்திற்கு வர நாம் முயலவேண்டும் என்று பேராசிரியர் போய்ல் மேலும் தெரிவித்தார்.
News: www.tamilnet.com
மொழிபெயர்ப்பு:ஈழதேசத்தின் விசேட செய்தியாளர் நிலவரசு கண்ணன்.

பான் கீ மூன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்து.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப் பட்ட போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய மனிதவுரிமை அமைப்புக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில் இவ் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வன்னிப் போரின்போது இலங்கைப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தன்னால் எவ்வித விசாரணைகளுக்கும் உத்தரவிட முடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருந்தார்.
பான் கீ முனின் இந் நிலைப் பாடு தொடர்பாக சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளதுடன் இப் போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற் கொள்வதற்கு ஏனைய நாடுகள் பான் கீ முனிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளன. அதேவேளை பான் கீ மூன் தனது அதிகார வரையறை குறித்து கூறியுள்ளதை ஆய்வாளர்கள் முற் றாக நிராகரித்துள்ளனர்.
இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு களைக் கொண்டுள்ள சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை எதிர்த்து நிற்பதை பான் கீ மூன் விரும்பவில்லை என சனல்4 தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக தான் 2-வது தடவையும் தெரிவுசெய்யப்படுவதற்காகவே இப் போர்க் குற்றங்கள் குறித்து மென்போக்கை பான் கீ மூன் கடைப்பிடிப்பதாக நியூயோர்க் சென்.ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றும் ஜோன் மெற்ஸ்லர் கூறியிருப்பதாகவும் இத் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் வன்னிப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போVக்குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள தன்னிடத்தில் அதிகாரமில்லை என பான் கீ மூன் கூறுவது, நிபுணர்கள் குழுவின் பெறுமதியை குறைத்துக் காட்டுவ தாகவே அமையும் என அரசியல் விமர்சகர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இப் போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசார ணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் கோரிக்கை விடுக்கவேண்டும் என பான் கீ மூன் தெரிவித்திருந்த நிலையில், பான் கீ மூன் மீது இது தொடர்பன சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருவதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.
வன்னிப் போரின்போது போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் சர்வதேசப் போர் நியமங்களுக்கு மாறாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர் குழு உறுதிப்படுத்தியிருந்ததுடன் போர்ப் பிரதேசத்தில் பொது மக்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இப் போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் சுயாதீனமான, காத்திரமான விசாரணைகளை முன் னெடுக்காத இடத்தில் ஐக்கிய நாடுகள் சபை சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் குழு பரிந்து ரைத்திருந்தது.
இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பிலான புலனாய்வில் இது வரை ஒளிபரப்பியதை விட மிகப் பயங்கரமான காணொளிக் காட்சிகளை சனல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளதாக பிரித்தானிய ஊட கங்கள் தெரிவித்துள்ளன.
சனல்4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள இந்தக் காணொளிக் காட் சிகள் பயங்கரமாக இருப்பதால், இக் காணொளி நள்ளிரவிலேயே ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

27 ஏப்ரல் 2011

ராஜபக்ஷ,மன்மோகன்,சோனியா போர்க்குற்றவாளிகள்!

ராஜபக்சே, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை போர் குற்றவாளியாக அறிவித்து ஐ.நா சபை மூலம் தண்டனை வழங்கக் கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரால் 26-04-2011 காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் தென்கனல் தலைமை வகித்தார்,தோழர் மார்க்ஸ் சிறப்புரையாற்றினார்.
ஐ.நா.சபையே! உலகநாடுகளே!
இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இந்திய அரசின் போர்குற்றத்தை மூடி மறைக்காதே!
இலங்கையும் – இந்தியாவும் போர்குற்றம் புரிந்த நாடுகள் என அறிவிப்பு செய்!
தேசிய விடுதலை இயக்கத்தையும் இனப்படுகொலை இலங்கை அரசையும் சமப்படுத்தி நாடகமாடதே!
ஈழத் தமிழின அழிப்பு போரை நடத்திய ராஜபக்சே – சோனியா – மன்மோகன்சிங் கும்பலை போர்குற்றவாளிகள் என அறிவித்து தண்டனை வழங்கு!
என்ற முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி ஆய்வு நடத்த ஐ.நா சபையில் வந்த கோரிக்கையை முறியடித்து இந்திய அரசு தமிழக மீனவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டும் தற்போது 4 மீனவர்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்டும் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய அரசு.
இவை இந்திய அரசின் விரிவாதிக்க நலனும் தமிழின அழிப்பு கொள்கையுமே காரணம்.
டெல்லியின் எடுபிடி கருணாநிதியோ தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக நாடகமாடுகிறார்
பாசிச ஜெயலலிதாவோ நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என அம்பலப்படுத்தி பேசினார்கள்.

ஸ்ரீலங்காவிற்கு ஆயுதம் வழங்கிய நாடுகளையும் விசாரிக்க வேண்டும்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஸ்ரீலங்காவிற்கு ஆயுதங்களை விநியோகம் செய்த நாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்பதனை அறிந்து கொண்டே ஆயுதங்களை விநியோகம் செய்த நாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்;டுள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இந்தியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்வேறு ஆயுதங்களை விநியோகம் செய்துள்ளன.
2009 மே இறுதிக் கட்ட போரின் போது படையினர் புலிகளின் நிலைகள் மீது முன்நகர்ந்த வேளையில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகஅவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் உயிரிழப்புக்கள் தொடர்பில் பல நாடுகள் அறிந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டுமென்பதே எமது இலக்கு!

ஐ.நா அறிக்கையில் தெரிவித்தபடி போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்களும் இனங்காணப்படவேண்டும் என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கம் சிறீலங்கா அரசுக்கு கிடையாது. ஆனால் விசாரணை நடத்துவதாக சிறீலங்கா அரசு முன்னர் உறுதி அளித்திருந்தது.
படை நடவடிக்கையில் ஒரு பொதுமகன் கூட கொல்லப்படவில்லை என சிறீலங்கா அரசு தொடர்ந்து தெரிவித்துவருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போரின் இறுதி நாட்களில் ஏற்பட்ட பெருமளவான பொதுமக்களின் இழப்புக்கள் சிறீலங்கா அரச படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் இடம்பெற்றதாக நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.
சிறீலங்காவில் நீதி விசாரணைகள் இடம்பெறவில்லை என்பதையும், போரில் என்ன நடைபெற்றுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாகக் காண்பித்துள்ளது. சிறீலங்கா மக்கள் பார்க்கவேண்டிய விடயங்கள் அதில் உள்ளன. ஆனால் அதனை மறைப்பதற்கு சிறீலங்கா அரசு முற்பட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவித்தபடி போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது தான் எமது இலக்கு. அந்த அறிக்கையில் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் விசாரணையில் அவர்கள் இனங்காணப்படலாம். அதன் பின்னர் அவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

26 ஏப்ரல் 2011

ஊர்காவற்றுறையில் யுவதியொருவரின் உடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

யாழ். ஊர்காவற்துறை 3 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டிலிருந்து இளம் யுவதி ஒருவருடைய சடலத்தை ஊர்காவற்துறைப் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக ஊர்காவற்துறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலமானது மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன தருமன் விதுலா (வயது 24) என்ற இளம் யுவதியுடையதென அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இச்சடலம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்களவர்கள் மேதினத்தில் அணி திரள்கிறார்கள்!

மே,தினத்தன்று ஐ.நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, கொழும்பில் நான்கு இடங்களில் இருந்து அரசதரப்பின் பேரணிகள் வந்து தலைநகரையே அதிரவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மருதானை, மாளிகாகந்தவில் இருந்து வீரவன்ஸவின் தலைமையில் இடம் பெறவுள்ள பேரணி ஐ.நாவுக்கு எதிரான முழக்கங்களுடன் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் வலிமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைய வேண்டும் என்றும் மகிந்த கேட்டிருந்தார். மகிந்தவின் ஆணையின்படி ஆளும்தரப்புச் சார்பாக நவசமாஜக் கட்சியின் ஏற்பாட்டில் ராஜகிரியவில் இருந்தும், தினேஸ் குணவர்த்தனவின் ஏற்பாட்டில் நாரஹேன்பிட்டியில் இருந்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் கம்பல் பார்க்கில் இருந்தும் பேரணிகள் இடம்பெறவுள்ளன.
இந்தப் பேரணிகள் அனைத்தும் அந்த அந்தக் கட்சிகளின் தொழில் சங்கங்களின் உறுப்பினர்களை இணைத்தே நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர் பிரச்சினைக்கு இந்தப் பேரணிகளில் முக்கிய இடம் வழங்கப்படும். அதேசமயம் ஐ.நாவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்படும். விமல் வீரவன்ஸ ஏற்பாடு செய்யும் பேரணியில் ஐ.நாவுக்கு எதிரான பான் கீ மூனுக்கு எதிரான கோஷங்கள் சுலோகங்கள் மற்றும் ஊர்திகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய தண்டனை வழங்கப்பட வேண்டும்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஹோவார்ட் பெர்மன் தெரிவித்துள்ளார்.
ஹோவார்ட் பெர்மன் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக நம்பகமான முறையில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை எதிர்ப்பதனை விடவும் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பிர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் நியாயமான நல்லிணக்கம் நாட்டில் ஏற்படும் என்பதனை எதிர்பார்க்க முடியாது என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
ஹோவார்ட், கலிபோர்னியா மாநில பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

25 ஏப்ரல் 2011

பான் கீ மூனை சந்தித்த உலகத்தமிழர் பேரவை.

நியூயோர்க் சென்றிருந்த உலகத்தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் சிறீலங்கா அரசு விசனம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த அரசையும் சாராத ஒரு அமைப்பின் உறுப்பினர் ஐ.நாவின் செயலாளர் நாயகத்தை சந்தித்தது தொடர்பில் ஆச்சரியம் வெளியிட்டுள்ள கொழும்பு ஊடகம், இந்த சந்திப்பின் பின்னனியில் சக்திவாய்ந்த நாடு ஒன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசமயம், ஐ.நாவின் அறிக்கையை தொடர்ந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிறீலங்காவுக்கு எதிரான பரப்புரைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் முழுவதும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம், அல்ஜசீரா செய்தி நிறுவனம் மற்றும் இந்திய ருடே நிறுவனத்தின் தொலைக்காட்சி நிறுவனம் என்பன சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன.
இதனிடையே, தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் சிங்கப்பூருக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுக்கள் தொடர்பில் அனைத்துலக அமைப்புக்களுடன் பேச்சுக்களை மேற்கொள்வதற்கே அவர்கள் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ஏப்ரல் 2011

யாழில் கத்திக்குத்து சம்பவம்!

இரு வேறு சம்பவங்களில் கத்தி, வாழ் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் ஐவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் உட்பட இளைஞர் ஒருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் யாழ். கொய்யாத்தோட்டம் புதுவீதியைச் சேர்ந்த இன்பநாதன் கபிரியேற்பிள்ளை வயது 59 என்பவரே வாழ் வெட்டுக்கு இலக்கானவர்.
இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில் வீட்டினுள் நான்கு, ஐந்து பேர் சென்று வெட்டியதாக வைத்தியசாலைப் பொலிசாருக்கு வயோதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் ஆனைக்கோட்டை வீதியில் சென்றுகொண்டிருந்தவர் மீது மதுபோதையில் வந்தவர் கத்தியால் குத்தியதில் அதே இடத்தைச் சேர்ந்த ஏ. தயாபரன் வயது 28 என்பவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரொபேர்ட் ஓ பிளக்கை மகிந்த சந்திக்க மாட்டாராம்.

அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஒ பிளக்கை மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி பிளக் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட மனித உரிமை அறிக்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் யுத்தக் குற்றச்செய்லகள் மற்றும் உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விடயங்கள் குறித்து பிளக் ஸ்ரீலங்கா இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்காவின்
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் பிளக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் பிளக் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் சிரேஸ்ட அமைச்சர்கள் கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 ஏப்ரல் 2011

அரியாலையில் மரணித்த சிங்கள சிப்பாயின் மரணத்தில் சந்தேகம்!

அரியாலை, மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள காவலரண் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு பணியில் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்காயத்துக்குள்ளான சிப்பாய் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தற்கொலையாக இருக்கவேண்டும் எனப் படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு ஏற்பட்ட காயத்தின் அடிப்படையில் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்தன.
மகியங்கணையைச் சேர்ந்த 25 வயதான சமரக்கோன் ரவீந்திரகுமார என்ற சிப்பாயின் மரணத்திலேயே சந்தேகம் எழுந்துள்ளது.யாழ்.பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு சம்பவ இடத்திலும் யாழ். போதனா வைத்தியசாலையிலும் விசாரணைகளை நடத்தினார்.
பிரஸ்தாப சிப்பாய் காவலரண் ஒன்றில் பணியாற்றினார். அந்தக் காவலரணில் இருவர் மட்டுமே தங்க வசதியுண்டு. நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை இரு வரும் பரிமாறிக்கொண்டனர். பின்னர் காவலரணுக்கு முன்பாக உள்ள வாழை இலையில் காதலிக்கு கடிதம் எழுதியுள்ளார். இவரின் மரணம் தற்கொலையாகவே இருக்க வேண்டும் என படைத்தரப்பினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
ரி56 ரகத் துப்பாக்கி மூலமே தற்கொலை செய்துள்ளார் எனவும் படையினர் கூறியுள்ளனர்.அங்குள்ள சூழலைக் கருத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் ரி56 ரகத் துப்பாக்கி மூலம் அவர் தன்னைத் தானே சுடக் கூடிய நிலை காணவில்லை. அவரது முதுகுப் பக்கத்தின் ஊடாகச் சென்ற சன்னம் வயிற்றுப் பகுதி ஊடாக வெளி வந்துள்ளது என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். விசாரணை செய்த நீதிவான் குடும்பத்தவர் வந்தபின் பிரேத பரிசோதனை செய்யும்படியும் காவலரணில் உள்ள ரி56 ரகத்துப் பாக்கியிலுள்ள கைவிரல் அடையாளங்களைச் சோதனை செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.அதுவரை தீர்ப்பை பதில் நீதிவான் ஒத்திவைத்தார்.

நாம் பதிலளிக்கப்போவதில்லை.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் பங்கேற்கப் போவதில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்கு அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் உறுப்பினர் எச்.எம் பலிஹக்கார, நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கும் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதிலளிப்பது பொருத்தமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமான செயற்பட்டு வருவதாகவும், அதன் உறுப்பினர்கள் வேறும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பது பொருத்தமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

22 ஏப்ரல் 2011

வீட்டைப்பார்த்த அதிர்ச்சியில் மரணம்!

15 வருடங்களின் பின்னர் தனது சொந்த வீட்டை பார்வையிடுவதற்காக வந்த ஒருவர் வீடு சின்னாபின்னமாக உடைவடைந்திருப்பதைக் கண்டு அதே இடத்தில் வீழ்ந்து மரணமான சம்பவமொன்று யாழ்.வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி நபர் திருகோணமலையில் தங்கியிருந்து விட்டு 15 வருடங்களின் பின்னர் வடமராட்சியிலுள்ள தனது சொந்த வீட்டை பார்வையிடுவதற்காக வந்துள்ளார்.இந்த நிலையில்,அவரது வீடு சின்னாபின்னமாக உடைவடைந்திருப்பதை கண்டு அதே இடத்தில் வீழ்ந்து அவர் அதிர்ச்சியில் மரணமானார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வடமராட்சி, அல்வாய் வடக்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் வல்லிபுரம் (வயது 80) என்பவரே இவ்வாறு மரணமானவர் ஆவர்.இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

த.தே.கூட்டமைப்பினர் தன்னை புறக்கணித்துள்ளதாக யோகேஸ்வரன் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு சிங்கப்பூர் சென்ற விடயம் எனக்குத் தெரியாது. எனக்கு அறிவிக்கவும் இல்லை.மேற் கண்டவாறு,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிங்கப்பூர் விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு எம்.பிக்கள் கூட எனக்குக் கூறவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என பொதுமக்கள் கேட்கின்றனர்.அவர்கள் கேட்பது சரி.ஆனால்,நான் அன்றும் சேவை செய்தவன் இன்றும் சேவை செய்கின்றேன்.நாளையும் சேவை செய்வேன்.
வெள்ள அனர்த்தத்தின் போது கிராமம் கிராமமாகச் சென்று உலர் உணவுப் பொருட்கள்,உடு துணிகள் ஆயிரக் கணக்கானோருக்கு வழங்கினேன்.இது ஊடகவியலாளர்களுக்கு நன்கு தெரியும்.புதுவருடத்திற்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் பலவற்றிற்கு புத்தாடைகள் வழங்கினேன்.பல்கலைக்கழகம் தெரிவான,பெற்றோரை இழந்த மாணவர்களையும் பராமரித்து வருகின்றேன்.
இதுதான் மக்கள் சேவை.எனது எம்.பி.சம்பளத்தையும் முற்றாக பொது மக்களுக்காகவே பயன்படுத்துகின்றேன்,நான் கெளரவப் பிச்சை எடுத்து பொதுமக்களுக்கு சேவை செய்கின்றேன்.இது போன்று ஏன் மற்றைய தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு முடியாது.
தங்களை வளப்படுத்த,செல்வாக்கு உள்ளவர்களை நிராகரித்துவிட்டு,தொடர்ந்தும் தாங்கள் எம்.பியாக இருக்க சில எம்.பிக்கள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.திட்டமிட்ட சதிதான் சிங்கப்பூர் விடயம் தொடர்பாக எனக்கு அறிவிக்கவில்லை.அவர்கள் சிங்கப்பூர் செல்லட்டும். பேசட்டும் ஏன் எனக்கு மட்டு.தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்களாவது கூறவில்லை.

நிபுணர் குழு அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்கிறது ஸ்ரீலங்கா.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்பித்துள்ள அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாம் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் உள்ள அனைத்துலக தூதுவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பை தொடர்ந்து சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐ.நாவின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஐ.நா பகிரங்கப்படுத்துவது சிறீலங்கா அரசு மே;றகொண்டுவரும் நல்லிணக்கப்பாட்டு நடவடிக்கைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
அது ஐ.நாவுக்கும் பாதகமானதே. நிபுணர்களின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளக்கூடாது. அது ஒரு தவறான அறிக்கை. அறிக்கையை பகிரங்கப்படுத்துவதை எதிர்க்கும் நாம் எவ்வாறு அதனை ஊடகங்களுக்கு இரகசியமாக வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

21 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!

சிறீலங்கா அரசினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை தண்டிக்கும் நோக்கோடும், அதற்கு காரணமாக இருந்தவர்களை சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்கள் அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை ஜ.நா மனித உரிமை அமைப்புக்களுக்கு வழங்கியது போன்ற செயற்பாடுகளுக்கு இசைவாக ஜ.நா சபையின் நிபுணர் குழு அறிக்கை அமைந்துள்ளது.
ஜ.நா சபையின் இந்த நகர்விற்கும் அதனூடாக சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேசத்தின் முன் நிறுத்தி தண்டனைக்கு உட்படுத்த ஜ.நா அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக்களும் முயற்சி எடுத்துவருகின்றன. இந்தவேளையில் இந்தியா, சீனா ரஷ்சியா போன்ற நாடுகளினூடாக சிறீலங்கா அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவது ஜ.நா வின் முயற்சியை தடுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ முனைவதாகவே தெரிகிறது.
சிறீலங்கா அரசினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட போரிற்கும், அக்காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கும் சிறீலங்கா அரசிற்கு உறுதுணையாக நின்ற இந்தியா, சீனா போன்ற நாடுகள் எதிர்ப்பை தெரிவிப்பது யதார்த்தமானதே. பூகோள அரசியலில் இன்று ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினூடாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் ரஷ்சியா போன்ற நாடுகளின் செயற்பாட்டால் இந்த அரிய சந்தர்ப்பமும் கைநழுவிப் போகும் வாய்ப்பு உள்ளது.
எனவே பிரித்தானியா வாழ் தமிழர்கள் மட்டுமன்றி புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அனைவரும் தமது கருத்துக்களை ரஷ்சிய அரசிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களையும் ஜ.நா வின் சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படவைக்கவும் முடியும் என நம்புகிறோம்.
ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக்கு உத்தரவிட்டவரும் முப்படைகளின் தலைமை பொறுப்பில் உள்ளவருமான சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ அவர்களை போர்க்குற்றவாளியாக்க சர்வதேச சட்டத்திற்கு அமைவாக ஜ.நா அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக்களும் எடுக்கும் முயற்சிக்கு ரஷ்சிய அரசு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். எனும் கருத்துக்களை பிரதிபலிக்கும் வண்ணம் ரஷ்சிய அரசிற்கு forighnpolicy@resump.org.uk எனும் மின்னஞ்சல் ஊடாக தெரிவிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்.
0044 (0) 208 133 3225
britishtamilsunion@gmail.com

புலிகளை அழித்த மகிந்த கட்டாக்காலி மாடுகளையும் பிடிப்பாராம்!

புலிகளை அழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு பெரும் தலையிடி கொடுக்கும் கட்டாக்காலி மாடுகளையும் பிடிக்கும் என்று ஸ்ரீலங்கா இனவாத அரசில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தென்மராட்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்டாக் காலிகளாகத் திரியும் மாடுகளால் தென்மராட்சிப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் பலர் இந்தக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டினார்கள் இதற்கு உடன் தீர்வு காணப்படவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய டக்ளஸ் தேவானந்தாஒரு சில மாதங்கள் பொறுங்கள் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகளைப் பிடிக்க முடியும். 30 ஆண்டுகளாக யுத்தத்தினால் தென்மராட்சிப் பிரதேச நாய்களுக்கு ஒரு வித நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் மக்களுக்குப் பரவக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது. விடுதலைப் புலிகளைப் பிடித்து அழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கட்டாக்காலி மாடு களையும் பிடிப்பார் என கூறியுள்ளார்.

20 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கெதிரான சூழ்ச்சியாம்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டமாக கருதப்பட வேண்டுமென கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் வயிறு பிழைக்க முடியாத நபர்களே இவ்வாறு இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சதிகாரர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி;த் திட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

(இவர்கள் எல்லாம் வணக்கத்திற்குரியவர்கள் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.)

இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும்!

இலங்கை மீதான யுத்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
உலகின் பலம்பொருந்திய நாடுகளில் ஒன்றாக உருவாக வேண்டுமானால் இந்தியா மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்காக இந்தியா முயற்சித்து வருகின்ற சந்தர்ப்பத்தில், பிராந்திய நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகளின் ஆரம்ப கட்டத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும், இடைநடுவில் நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழக தமிழர்கள் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்காவிற்கு எதிரான விசாரணைகள் விரைவில் நடத்தப்பட வேண்டும்!

இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள போர்குற்றச்சாட்டுக்கள் குறித்து தாமதமின்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மீண்டும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சனல் 4 தொலைக்காட்சிகாட்சி வெளியிட்டுள்ள புதிய ஆதாரங்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது போர் குற்றங்களும், மனிதாபிமானத்திற்கு எதிரான யுத்தமும் இடம்பெற்றதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சனல்4 தொலைக்காட்சி கடந்த சனிக்கிழமை செய்தி அறிக்கையில் விரிவான ஆய்வுத் தொகுப்பொன்றை வெளியிட்டது.
இதில் முன்னர் வெளியிடப்பட்ட ஆதாரங்களையும், ஐ.நா அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டுக் கூறிய அந்தத் தொகுப்பில் புதிய ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டன. இறுதிக்கட்ட போர் இடம்பெறுவதற்கு முன்னர் குறிப்பாக 2008ஆம் ஆண்டு வன்னியைச் சேர்ந்த அரச அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்டு இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகளுக்கமைய வன்னியில் நான்கு லட்சத்து 30 ஆயிரம் பேர் இருந்த போதிலும், இறுதிக்கட்ட போர் முடிந்த நிலையில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் மக்களே இடம்பெயர்ந்து, வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் தகவல்களின் அடிப்படையிலேயே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பிய செனல் 4 தொலைக்காட்சி, அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டது. அதேவேளை இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் பேச்சாளராக கடமையாற்றிய கோட்டன் வைசும், இறுதிக்கட்ட போரின் போது நாற்பதாயிரம் வரை மக்கள் கொல்லப்பட்டிருக்கதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் செனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இந்த புதிய ஆதாரங்கள் குறித்தும் ஆராயும் வகையில், சர்வதேசமட்டத்திலான சுயாதீன விசாரணைகளுக்கு ஐ.நா உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

18 ஏப்ரல் 2011

இனப்பிரச்சனை தீர்வில் அரச தரப்புக்கு அக்கறையில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இன விவகாரத்தீர்வு தொடர்பாக நடைபெறும் பேச்சு மிகவும் சுமுகமாக நடைபெறுவதாகக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பேச்சில் கலந்துகொள்ளும் அரசாங்கத் தரப்பினர் இனவிவகாரத்தீர்வில் எவ்வித அக்கறையும் இன்றியே பேச்சில் கலந்துகொள்கின்றனர். அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன விவகாரத் தீர்வு விடயத்தில் தீர்வு குறித்த எவ்வித சிந்தனையும் இன்றி இருப்பதையே இது காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வையே நாம் நாடி நிற்கின்றோம். ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைத் தர அரசாங்கம் தயாரா என்பது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள் இல்லை. பேச்சுவார்த்தையின் போக்கையும் அரசாங்கத்தரப்பினரின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது இழுத்தடிப்பை மேற்கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. தொடர்ந்தும் இழுத்தடிப்பதில் பிரயோசனம் இல்லை. அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவை முன்வைக்க வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் பேச்சு நடத்துவதில் பயனில்லை'' எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

வன்னிப்போரில் ஐ.நா.ஏற்படுத்திய குருதிக்கறை!

வன்னிப் போரில் 20,000 மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள், ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாருக்கு தெரிவித்திருந்தனர். எனினும் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த நம்பியார் விரும்பவில்லை. எனவே போரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை அதன் அறிக்கை அழித்துவிடாது என த ரைம்ஸ் நாளேடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐக்கிய நாடுகள் சபை சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, சிறீலங்காவில் இடம்பெற்ற போர் தொடர்பில் ஒரு அனைத்துலக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அழுத்தத்தை சிறீலங்கா அரசுக்கு ஏற்படுத்தப்போகின்றது. ஐ.நாவின் அறிக்கை ஆதாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது. அவற்றில் காணப்படும் ஆதாரங்களில் சில ரைம்ஸ் நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டவை. சிறீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்களினால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறுதி ஐந்து மாதங்களில் எறிகணைத் தாக்குதல்களில் 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக த ரைம்ஸ் நாளேடு முதலில் தெரிவித்திருந்தது. மனித உரிமை அமைப்புக்களும் பல ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளன. இரு தரப்பினரும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் அதில் உள்ளன. மனிதக் கேடையங்களாக மக்களை பயன்படுத்தியமை, சிறார் படைச்சேர்ப்பு போன்ற குற்றங்கள் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டாலும், சிறீலங்கா அரசின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை தடுத்தமை போன்றவற்றினால் தான் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நடைபெற்ற வடகிழக்கு பகுதியில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகின்றது. வெளிநாட்டு அவதானிப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மக்களின் மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதை சிறீலங்கா அரசும் விரும்பவில்லை. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூவர் கொண்ட ஆலோசனைக்குழு ஒன்றை கடந்த வருடம் அமைத்திருந்தார். சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதே அதன் பணி. மேற்குல நாடுகளினதும், மனித உரிமை அமைப்புக்களினதும் அழுத்தங்களை தொடர்ந்தே அவர் அதனை மேற்கொண்டிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா வெள்ளைச்சாயம் பூச முற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். வன்னிப் போரில் 20,000 மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள், ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியருக்கு தெரிவித்திருந்ததாக ஐ.நா அதிகாரிகள் எமது ஊடக்திற்கு தெரிவித்துள்ளனர். எனினும் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த நம்பியார் விரும்பவில்லை. அதற்கு காரணம் நம்பியாரின் சகோதரர் சதீஸ் நம்பியார் என்பவரே சிறீலங்கா இராணுவத்திற்கு பணத்திற்காக ஆலோசனைகளை வழங்கி வந்திருந்தார். சதீஸ் நம்பியார் இந்திய இராணுவத்தின் முன்னாள் ஜெனரல். ஐ.நாவின் ஆலோசனைக்குழு சிறீலங்கா சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கவில்லை. எனினும் அவர்கள் புகைப்படங்கள், காணொளிகள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெற்றிருந்தனர். ஐ.நாவின் அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்துள்ளது. ஆய்வு செய்யப்படாது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிக்கை ஐ.நாவின் மேலதிக நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளதுடன், சிறீலங்காவுக்கும் – அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் இடையில் மோதல்களையும் உருவாக்கியுள்ளதாக மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அமெரிக்காவும் கடந்த மாதம் தீர்மானத்தை கொண்டுவந்திருந்தது. ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு மூலம் பான் கீ மூன் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்காவை கொண்டு செல்வது கடினமானது, ஏனெனில் சீனா போன்ற எதிர்த்தரப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக உள்ளன. லிபியா மீது நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் ஐ.நா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. லிபியா மீதான தாக்குதலுக்கு முன்னர் கேணல் கடாபியை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது தொடர்பில் பாதுகாப்புச்சபை ஓப்புக்கொண்டிருந்தது. சரணடைந்த விடுதலைப்புலிகளை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் உத்தரவின் பேரில் சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்ததாக தற்போது சிறையில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ஸ்ரீலங்கா பிரச்சாரம்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரியளவிலான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது. நிபுணர் குழு அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையில் ராஜதந்திர ரீதியிலான தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என சிங்கள அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட அணிசேரா நாடுகள் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் எதற்காக அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது என்பதனை தெளிவுபடுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியான தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலான ஆவணமொன்று தயாரிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலும், தாக்குதல்களுக்கான இன்றியமையா அவசியம் தொடர்பிலும் இந்த ஆவணத்தில் தெளிவுபடுத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள், பயங்கரவாத இல்லாதொழிப்பின் மூலம் வடக்கு தெற்கு மக்கள் அடைந்த நன்மைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட உள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கப் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு இராஜதந்திர ரீதியிலான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையிலான ஆவணமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டமா அதிபர், முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்களான நிஹால் ரொட்ரிகோ, எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார மற்றும் பெர்னாட் குணதிலக்க ஆகியோர் இந்த ஆவணத் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மின்சாரக்கதிரையில் இருத்தினாலும் கவலையில்லை என்கிறார் மகிந்த!

தேசத்திற்காக மின்சார நாற்காலி தண்டனையை தந்தால்கூட சந்தோசமாக எற்றுக்கொள்வேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததனை தாங்கிக்கொள்ள முடியாத சில தரப்பினர் சர்வதேச ரீதியில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான போலிப் பிரச்சாரங்களுக்கு பதிலளிப்பதற்கு தாம் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட போது மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தில் மக்கள் தமது வேலைகளை சுதந்திரமான முறையில் மேற்கொண்டதனை அவதானித்ததாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே தினத்தன்று இலங்கையில் காணப்படும் சுதந்திரத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறுகிய அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு சில தரப்பினர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடிக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

16 ஏப்ரல் 2011

கருணாநிதிக்கு நெடுமாறன் ஐயா கண்டனம்!

தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் எந்த விதமான அசம்பாவிதங்கள் இல்லாமல் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையத்தின் சிறப்புதான். தமிழக முதல்வர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை குறை கூறி வருகிறார். ஆனால் மக்களும் எதிர்க்கட்சிகளூம் பாராட்டுகின்றன. தேர்தல் ஆணையைத்தை கலைஞர் குறை சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமங்கலத்தை போல தில்லுமுல்லு செய்யமுடியாததாலும் முறைகேடுகள் செய்ய முடியாததாலும் தான் குறை கூறி வருகிறார்கள். மே- 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதை கலைஞர் குறை கூறியுள்ளார். இந்த ஒரு மாத கால இடைவெளியில் அரசு நிர்வாகம் ஸ்தபித்துவிட்டது என்று சொல்கிறார். இது தவறான குற்றச்சாட்டு. 5ஆண்டுகாலம் முதல்வராக இருந்தவருக்கு இது தெரியாதது அல்ல. ஊழல் முறைகேடுகளை அழிக்க தேர்தல் ஆணையைம் தடையாக இருக்கிறது என்பதால்தான் குற்றம் கூறிக்கொண்டிருக்கின்றார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று கூறினார்.

தமிழ் நாட்டில் உதை வாங்கியவர் பிரான்சில் தஞ்சம்!

பிரபாகரன் என்ற சிங்களப்படத்தை இயக்கிய துசார பீரிஸ் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். சிறீலங்கா இராணுவத்தினரால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியே அவர் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விமர்சித்து தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை கொச்சபை;படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் புலிகளின் பெண் தற்கொலை போராளி ஒருவரின் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைத்திருந்த போதிலும் தமிழக திரைப்பட தணிக்கை குழு இன்னும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஜெமனி வர்ண ஆய்வுக் கூடம் இந்த திரைப்படத்தை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

15 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கையை ஸ்ரீலங்கா பயன்படுத்த வேண்டும்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கையின் போது நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும் இலங்கை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மார்ச் சீ டோனர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை மற்றும் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சில பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நிபுணர் குழுவின் அறிக்கை பக்கச்சார்பானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்றவாளிதான்!

சிறீலங்கா அரச தலைவர்கள் போர்க்குற்றங்களை மேற்கொண்ட குற்றவாளிகள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்காவின் மேரிலான்ட் இல் உள்ள பல்ரிமோர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் சட்டத்துறை மாணவன் ரஜீவ் சிறீதரன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின்; சகோதரர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் போர்க்குற்றவாளிகள் என தெரிவித்துள்ள சிறீதரன் அவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்கு பதில் தரும்போதே சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நூரெம்பேர்க் தொடக்கம் டாபர் பகுதி வரையிலுமான வரலாற்றை பார்த்தால் தெரிவுசெய்யப்பட்ட சில மக்களுக்கே நீதி கிடைத்துள்ளது. அவர்களுக்கே வரலாற்றை எழுதும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது கல்வியை தொடர்ந்தவாறே அவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்புடனும் இணைந்து பணியாற்றிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

14 ஏப்ரல் 2011

பான் கீ மூனின் உத்தியோகபூர்வ தளத்தில் நிபுணர் குழு அறிக்கை!

2009ஆம் ஆண்டு மே மாதமளவில் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை பான்கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனுடைய பிரதி ஒன்றும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த அறிக்கையை இலங்கை அரசு கடுமையாக விமர்சித்துமிருக்கின்றமை தெரிந்ததே. இந்நிலையில் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சமாக சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை பான்கீ மூன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபாரிசு செய்திருப்பதாக நம்பத்தகுந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிபுணர் குழுவின் அறிக்கை இன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனின் உத்தியோகபூர்வ தளத்தில் வெளியிடப்படும் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வறிக்கை இலங்கை நேரப்படி இன்று இரவு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர் குழு அறிக்கை பக்கச்சார்பானது என்கிறது ஸ்ரீலங்கா!

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை எமக்கு கிடைத்துள்ளது. அது ஒருபக்கச்சார்பானது, அறிக்கை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் நேற்று (13) தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை. பல விடயங்களில் அடிப்படைத் தவறுகள் காணப்படுகின்றன.
அறிக்கை ஒருபக்கச்சார்பானதாக கணப்படுகின்றது. எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாது பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கை தொடர்பில் நாம் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றோம். விரைவில் சிறீலங்கா அரசு தனது கருத்தை வெளியிடும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐ.நாவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு முன்வைக்கப்பட வேண்டும் எனவும், அதனை அடிப்படையாகக் கொண்டு சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுத்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

13 ஏப்ரல் 2011

புலிகளை காட்டித்தருமாறு சிங்களப்படைகள் மிரட்டல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி பிரதேச தமிழ் வர்த்தகர்கள் மீது சிறீலங்கா இராணுவமும், துணைஇராணுவக்குழுவினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: வடமுனை, பெண்டுகள்சேனை, ஊற்றுச்சேனை, போத்தனை, தரவை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழ் வர்த்தகர்கள் பால் கொள்வனவுக்காக படுவான்கரையில் உள்ள பால் பண்ணைக்கு சென்ற சமயம், அவர்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரும், துணைஇராணுவக்குழுவினரும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்களின் பகுதிகளில் மறைந்திருக்கும் விடுதலைப்புலிகளை காட்டித்தரும்படி கேட்டே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இடைமறித்து சோதனைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். மட்டக்களப்பு – பதுளை (ஏ-5) வீதியில் வீதித்தடைகளும் கடந்தவாரம் போடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு – கொழும்பு (ஏ-4) மற்றும் திருமலை – மட்டக்களப்பு (ஏ-15) ஆகிய நெடுஞ்சாலைகளிலும் வீதித்தடைகளும், சோதனை நிலையங்களும் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வீடு வீடாகவும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை, முதலிக்குடா, மகிழடித்தீவு, கரடியனாறு, வடமுனை, ஊற்றுச்சேனை, புனானை, வாகரை, வெருகல் மற்றும் படுவாங்கரை ஆகிய பகுதிகளில் புதிய காவலரன்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மனைவிக்கு நாடுகடத்தல் உத்தரவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் அமரர் ஜோஸப் பரராஜசிங்கத்தின் மனைவியான திருமதி சுகுணம் பரராஜசிங்கத்தின் அகதி மனுவை நிராகரித்த கனடிய கன்சவேட்டிவ் அரசாங்கம் அவரை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது.
2005ம் ஆண்டு நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தினுள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது ஜோஸப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இடம்பெற்ற போது அவருடன் கூடவிருந்த திருமதி சுகுணம் பரராஜசிங்கம் படுகாயமடைந்திருந்தார்.
இதேவேளை, திருமதி ஜோசேப் பரராஜசிங்கத்தின் நாடுகடந்தல் கோரிக்கையை எதிர்த்து மனுச் செய்யப் போவதாக அவரது சட்டத்தரணி ராகுல் பௌலாக்கியா தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களின் பார்வைக்கு முனைவைக்கவேண்டும் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையை எல்லா சிறீலங்கா மக்களும் பார்க்கவேண்டும். சிறீலங்காவில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான இந்த அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு முன்வைப்பதே சிறந்தது என அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரிபி தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறலகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதே அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கான வழி என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எனவே அவர் தனது வார்த்தைகளை காப்பாற்ற வேண்டும்.
போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் இந்த அறிக்கையானது சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணைகளின் ஆரம்பமே தவிர முடிவல்ல. சிறீலங்காவின் வரலாற்றில் வன்முறைகள் என்பது ஒரு தொடர்கதை, எனவே புதிய வரலாற்றை உருவாக்குவதற்கு இந்த வன்முறைகள் தொடர்பில் நீதி கிடைக்கவேண்டும்.
பொதுமக்களின் பார்வைக்கு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் ஒரு சுயாதீன அனைத்துலக விசாரணைக்கான ஏதுநிலைகளை உருவாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

12 ஏப்ரல் 2011

சரணடைவது பற்றி அறிந்திருந்தும் ஐ.நா.அலட்சியம் செய்தது!

வன்னியில் நடைபெற்றபோரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு பா.நடேசன் உட்பட முக்கியமானவர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணிநேரங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு தெரியும் என ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ்நெற் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் நடைபெற்றபோரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு பா.நடேசன் உட்பட முக்கியமானவர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணிநேரங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு தெரியும். ஆனால் சரணடைந்தவர்களை சிறீலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர். சரணடைபவர்களின் விபரங்களும் ஐ.நாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அவர்களை வரவேற்பதற்கு கொழும்பில் பணியாற்றிய ஐ.நா அதிகாரிகள் வவுனியாவுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தனர். அப்போது கொழும்பில் பணியாற்றிய ஐ.நா அதிகாரிகளில் பலர் தற்போது பணியில் இருந்து விலகியுள்ளனர் அல்லது சிறீலங்காவை விட்டு வெளியேறியுள்ளனர். சரணடைவது தொடர்பான மாயைகளை உருவாக்கி விடுதலைப்புலிகளை படுகொலை செய்யவே கொழும்பும், கொழும்புக்கு ஆதரவான ஐ.நா அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். அந்த சமயம், ஐ.நா செயலாளர் நாயகம் பான கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் கொழும்பில் தங்கியிருந்தார். இரு ஐ.நா அதிகாரிகளே ஒமந்தையில் உள்ள சிறீலங்கா சோதனைநிலையத்திற்கு இரகசியமாக அனுப்பப்பட்டபோதும், ஏனையவர்கள் தாண்டிக்குளத்தை தாண்டுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பில் அனைத்துலக விசாரணைகளின்போது சாட்சியமளிக்க தான் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு எதிராக கலிபோர்னியாவில் போராட்டம்!

சிறீலங்கா அரசு மிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) நடைப்பயணம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மைல் தூரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்தில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களை சந்திக்கவும், அவர்களின் கதைகளை கேட்பதற்குமான ஏற்பாடுகளையும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் மேற்கொண்டிருந்தனர். டாபர் பகுதிக்கான கூட்டமைப்பு, போதும் திட்ட அமைப்பு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்திருந்தன. புதிய அமெரிக்க அமைப்பை சேர்ந்த றெபேக்கா ஹமில்ட்டன், போதும் திட்டஅமைப்பின் ஆலோசகர் ஓமார் இஸ்மயில் ஆகியோர் அங்கு முக்கிய உரையாற்றியிருந்தனர். டாபர், சிறீலங்கா, சாட் ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள் தொடர்பில் அதிக கவனங்கள் செலுத்தவேண்டும் என ஹமில்ட்டன் தனது உரையில் தெரிவித்துள்ளார். இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் சார்பாக 25 தமிழ் மக்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். சிறீலங்காவின் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் காங்கிரஸ் சபை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரி நடைப்பயணத்தின்போது கையெழுத்துக்களும் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 ஏப்ரல் 2011

கனடிய மனித உரிமை அமைப்பு புது உத்வேகம் பெறுகிறது!

கனடிய மனித உரிமை அமைப்பின் ஆலோசகர் குழுவின் தலைவராக கனடாவின் பிரபல சட்டத்தரணியும், துப்பறியும் ஊடகவியலாளருமான திரு.பீற்றர் சில்வர்மான் இணைந்துள்ளதை மேற்படி அமைப்பு வரவேற்றுள்ளது. சிறீலங்காவின் யுத்தக் குற்றவிசாரணைகளை முன்னெடுக்கும் கனடிய மனித உரிமை அமைப்புடனான இந்தப் பிரபல சட்டத்தரணியின் இணைவு யுத்தக் குற்றவிசாரணையை விரைவாக முன்னெடுக்க உதவும் என்றே கருதப்படுகிறது. பீற்றர் சில்வமானின் இணைவு தங்களது அமைப்பின் திடகாத்திரமான செயற்பாட்டிற்கும் மனித உரிமைகள் சம்பந்தமான கருத்தூட்டத்திற்கும் இன்றியமையாததாக இருக்கும் என்று தெரிவித்த கனடிய மனித உரிமை அமைப்பின் தலைவரான திரு. பாபு நாகலிங்கம் அவர்கள், திரு. பீற்றர் சில்வமானின் காத்திரமான பங்களிப்பை தாங்கள் கனடிய மனித உரிமை அமைப்பினூடாக எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த பீற்றர் சில்வமான் அவர்கள், கனடிய மனித உரிமை அமைப்பினூடாக தான் மனித உரிமை சார்ந்த விடயங்களிற்கு திடமான பங்கை வழங்கவிருப்பதாகவும், மனித உரிமைகள் சம்பந்தமான விவகாரங்களிலான பங்களிப்பை கனடா மண்ணிலேயே வழங்க ஆரம்பித்து அதனை உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த தான் கனடிய மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

10 ஏப்ரல் 2011

தனது நலனுக்காக கூட்டணியை பயன்படுத்துகிறது ஸ்ரீலங்கா?

“அரசாங்கம் எங்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றது. அது தான் விரும்பி இப்பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இது நடைபெறுகிறது. இப்படியான ஒரு பேச்சுவார்த்தையில் அரச தரப்பு எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கும். எவ்வளவு தூரம் பிரச்சினைகளைத் தீர்க்க ஆவல் கொள்ளும் என்பது கேள்விக்குரியதே.’ இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, இதுவரை நாங்கள் மூன்று முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பான பல விடயங்களை எடுத்துக் கூறியிருக்கின்றோம். பேச்சுவார்த்தை என்பது ஒரு குறுகிய நாட்களுக்குள் நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் மாதத்தில் இரண்டு தடவை பேச்சுவார்த்தை நடைபெறும் என ஒத்துக்கொள்ளப்பட்டது. அது சில சமயங்களில் ஒருமாதத்திற்கு மேலாக இழுபறி ஏற்பட்ட நிலைமைகளும் உண்டு. இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்த அளவில் அதுவொரு அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினையாகப் பார்க்கின்ற ஒரு கண்ணோட்டமாகவே இருக்கின்றது. ஆகவே இந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை என்பது இழுபட்டுப் போகக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாங்கள் அரசியல் மாற்றங்கள் பற்றி எதுவுமே பேச முடியாத நிலையில் உள்ளோம். நாம் பேச முடியாத நிலையில் உள்ளபோது ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, “நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். அரசியல் மாற்றங்கள் தொடர்பாக பேசுகின்றோம்’ என்பது உள்ளிட்ட பல விடயங்களைக் கூறியிருக்கிறார். இந்நிலையில் பேச்சுவார்த்தை என்பது எம்மை தமது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளதா? எனச் சிந்திக்க வைக்கிறது என்றார்.

மக்கள் காணாமல் போதல் தொடர்கிறது!

சிறீலங்காவில் பெருமளவான தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் சிறீலங்கா அரசு தடுத்துவைத்துள்ள அதேசமயம், அங்கு தொடர்ந்தும் மக்கள் காணாமல்போவதாக அமெரிக்க கடந்த வெள்ளிக்கிழமை (08) வெளியிட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா அரசு எண்ணிக்கை தெரியாத விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை தடுத்து வைத்துள்ளது. 1,200 இற்கு மேற்பட்டவர்கள் சிறீலங்கா காவல்நிலையங்களிலும், குற்றப்புலானாய்வு அலுவலகங்களிலும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களிலும், சிறிலங்கா இராணுவ முகாம் மற்றும் துணைஇராணுவக்குழுவினரின் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,400 என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அங்கு வெளியார் செல்வதற்கு சிறீலங்கா அரசு அனுமதிகளை மறுப்பதால் அவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர் என்பது தொடர்பில் அறிவது கடினம். பொதுமக்களை சாதாரணமாக கைது செய்யும் அதிகாரங்களை சிறீலங்கா படையினருக்கு வழங்கும் அவசரகாலச்சட்டத்தை சிறீலங்கா அரசு தொடர்ந்து வருகின்றது. சிறீலங்கா படையினரின் முகாம்களிலும், காவல்நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மரணமடைகின்றனர். இது நீதிக்குப்புறம்பான படுகொலையாகும். அங்கு இடம்பெறும் படுகொலைகள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 ஏப்ரல் 2011

அனலைதீவில் குடும்பஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் அனலைதீவுப் பகுதியில் கடந்த 6ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு முன்னதாக கண்டியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற படுகொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் இச் சம்பவத்தில் அங்கு நிலை கொண்டுள்ள ஈபிடிபி அமைப்பின் அங்கத்தவர் தொடர்பு பட்டிருந்ததாகவும் குறித்த நபர் இவரது வீட்டில் தங்கியிருந்ததாகவும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்த முற்பட்ட வேளை இவரது வீட்டில் தங்கியிருந்த குறித்த கட்சியின் நபர் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இந்த ஆயுதம் கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இந்த நிலையிலேயே வீட்டின் உரிமையாளரை புலனாய்வுத்துறையினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர். குறித்த ஈபிடிபி அமைப்பின் உறுப்பினர் சரணடைந்தால் மட்டுமே கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்போம் எனவும் புலனாய்வுத்துறையினர் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

டக்ளசை மிரட்டிய மகிந்த!

ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு மஹிந்தராஜபக்சவினால் மிரட்டல் விடுக்கப்பட்ட விடயத்தினை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வாய் தடுமாறி வெளிப்படுத்தியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும் தெரிவு செய்யப்பட் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன. அங்கு உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, ஏ-9 வீதி, ஏ-23 வீதி என்பன 3 மாதம் தொடக்கம் ஒரு வருடத்திற்குள் திருத்தி அமைக்கப்படும். அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த போது யாழ்.மாவட்டத்திலுள்ள வீதிகளை துரிதமாக திருத்தி அமைக்க வேண்டும். இல்லையேல் பதவியில் இருந்து கலைத்துவிடுவேன் என்று தனக்கு ஜனாதிபதி எச்சரித்ததாக உரையாற்றினார். சம்பவத்தை அடுத்து திடுக்குற்ற யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உடனடியாக சிறு ஒற்றையில் குறிப்பு ஒன்றை எழுதி உரையாற்றிக் கொண்டிருந்த டக்ளசிடம் வழங்கினார். இதனை அடுத்துச் சுதாகரித்துக் கொண்ட டக்ளஸ், வீதியைத் திருத்தாவிடின் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளை பணியில் வைத்திருக்க மாட்டேன் என்று ஜனாதிபதி எச்சரித்தார் என்று தடுமாறியபடி உரையாற்றியிருக்கின்றார்.

ஸ்ரீலங்கா தரைப்படைக்குள் அதிகரித்துள்ள பிளவுகள்!

சிறீலங்கா இராணுவத்திற்குள் தீவிரமடைந்துள்ள அதிகாரப் போட்டியினால் பாதுகாப்புச் செயலாளரிடம் நல்லபெயர் பெற்று இராணுவத் தளபதி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள ஜெனரல் ஜெகத் ஜயசூரிய கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது எந்தவொரு முக்கியமான பங்களிப்பையும் ஆற்றவில்லை என சிறீலங்காவின் மூத்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துவருகின்றனர். அவருக்கடுத்த நிலையில் இராணுவத் தளபதியாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் நிலையும் அதுதான். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அவர் நாட்டில் இருக்கவில்லை என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் கிழக்கில் படை நடவடிக்கை மேற்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் தளபதி தயா ரத்நாயக்க இராணுவ அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக விளங்குகின்றார். அத்துடன் அவருக்கு இராணுவத் தளபதி பதவிக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இராணுவத்தினர் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதன் காரணமாக தன் பதவியைப் பாதுகாத்துக் கொள்ளவும், தயா ரத்நாயக்கவின் செல்வாக்கைக் குறைக்கவும் அவருக்கெதிராக பாதுகாப்புச் செயலாளரிடம் தகவல்களை சொல்லும் பணியில் இராணுவத் தளபதி ஜெனரல் ஜயசூரிய ஈடுபட்டுள்ளார். தயா ரத்நாயக்க முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் நம்பிக்கைக்குரியவர் என அவர் கூறியதை நம்பிய சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும் தயா ரத்நாயக்கவை ஓரங்கட்டும் பிரயத்தனங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன் காரணமாக சிறீலங்கா இராணுவத்திற்குள் இரண்டு அணிகளாகப் பிளவு ஏற்பட்டுள்ளதுடன், அதிகாரப் போட்டியும் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

08 ஏப்ரல் 2011

காணாமல் போனோர் பற்றிய விபரம் வெளியிடப்படவேண்டும்!

காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வெறுமனே நிராகரிக்காமல், அவற்றுக்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட சகலர் தொடர்பிலும் தரவுகளை வெளியிட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

படைச்சிப்பாயின் சடலம் காட்டுக்குள்ளிருந்து மீட்பு!

சிறீலங்கா இராணுவக் காவல்துறையினருக்கு பயந்து காட்டுக்குள் ஒளிந்துகொண்ட சிறீலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடிய சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுர மாவட்டத்தில் உள்ள கலன்பின்துனுவேவா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறீலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடிய சிப்பாயை தேடி தினமும் இராணுவக் காவல்துறையினர் அவரின் வீட்டுக்கு செல்வதால். இரவு வேளைகளில் தினமும் காட்டுக்குள் தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார் குறிப்பிட்ட சிப்பாய். ஆனால் அவர் காட்டுக்குள் ஒளிந்துகொள்ளும் இடம் அவரின் தாயாருக்கு மட்டுமே தெரியும். வழமைபோல கடந்த புதன்கிழமை (06) இரவும் காட்டுக்குள் ஒளிந்துகொள்ளச் சென்ற சிப்பாய் காலை வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அவரின் மறைவிடத்தை தேடிச் சென்ற தாயார் சிப்பாய் சடலமாக கிடப்பதை கண்டுள்ளார். அனில் சுதர்சனா (25) என்ற சிப்பாயே இறந்துள்ளார். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.