பக்கங்கள்

30 ஏப்ரல் 2013

இவனை என்னவென்று சொல்வது?

மகப்பேற்றின்போது கர்ப்பிணியொருவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அரசாங்க வைத்தியருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக நேற்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் மகப்பேற்று சமயத்தின்போது கர்ப்பிணியை வல்லுறவுக்குட்படுத்தியதாக சந்தேகநபரான வைத்தியர் ஜயசாந்த பரணமன்ன என்பவர் மீதே சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். சந்தேநபர் 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி மகப்பேற்று அறையில் வைத்தே இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபரான வைத்தியர், நீதவான் தேவிகா தென்னக்கோனினால் 5 இலட்சம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீரப்பிணைகள் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணியான ஹிமாஸி பெரேரா ஆஜராகியிருந்ததுடன் சந்தேக நபரின் சார்பில் சட்டத்தரணி இனோகா பெரேரா ஆஜராகியிருந்தார். இந்த வழக்கு விசாரணை ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

"நாசமாய் போவீர்கள்"படைகளுக்கு மண் அள்ளி தூற்றிய அம்மா!

"நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன்'' என்று கூறி மண் அள்ளி வீசித் தூற்றினார் வயதான தாய் ஒருவர். வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், இறுதியில் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார். மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்தனர். அப்போதே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தாயார் உணர்ச்சிவசப்பட்டார். "நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிருந்தும் அகதியாய் திரிகிறேன்'' என்று அவர் அழுதார்.

29 ஏப்ரல் 2013

பாதுகாப்பு வலயத்தினுள் உட்புக முனைந்த மக்கள்!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் மீளக்குடியமர அனுமதிக்கக்கோரி இன்று இடம்பெயர்ந்த மக்கள் அடாவடியாக உள்ளே நுழையும் போராட்டமொன்றினை தடாலடியாக நடத்தியுள்ளனர்.முன்னதாக இன்று காலை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பதாக அமைதி வழியினில் மக்கள் எதிர்ப்புப்போராட்டமொன்றினில் குதித்திருந்தனர்.காலை 11 மணி தாண்டியும் குடாநாட்டின் பலபகுதிகளினிலிருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்திற்கென அணிதிரண்டு வந்தவண்ணமிருந்தனர். சுமார் எண்ணூறு முதல் ஆயிரம் வரையான இடம்பெயர்ந்த மக்கள் இப்போராட்டத்தில் குதித்திருந்தனர்.திடீரென அமைதி வழி போராட்டத்தில் குதித்திருந்த மக்கள் காங்கேசன்துறை வீதியூடாக உயர்பாதுகாப்பு வலயமென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளினுள் உட்பிரவேசிக்க முற்பட்டனர்.இதையடுத்து அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பதாக வழிமறிக்கப்பட்டனர்.பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு மேற்கொண்டு அவர்களை செல்லவிடாது தடுக்கப்பட்டனர்.அதையடுத்து சீற்றமடைந்த மக்கள் அரசிற்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.திட்டித்தீர்த்தனர்.மண்ணை அள்ளி வீசி பெண்கள் சாபமிட்டனர்.அவசர அவசரமாக பெருமளவிலான கலகம் அடக்கும் பொலிஸார் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டனர். கட்சி பேதமின்றி கூட்டமைப்பினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஜனநாயக மக்கள் முன்னணியினர் என பலதரப்பினரும் சிவில் அமைப்புக்களை சார்ந்தவர்களும் மதப்பெரியார்களும் இப்போராட்டத்திற்கான ஆதரவை வழங்கியிருந்தனர்.போராட்டகாரர்கள் பின்னர் மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பதாக குவிந்து பிரதான வாயிலை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தப்போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா ,எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வீ.ஆனந்த சங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பாஸ்கரா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்களுடன்; பிரதேச சபைத் தலைவர்கள் உறுப்பினர்கள்இ பொதுமக்கள் எனப் பெரும்பாலானவர்கள் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதேவேளை இந்தப் போராட்டத்துக்கு மக்களை ஏற்றியிறக்கும் பணிகளில் எந்தவொரு மினி பஸ்ஸும் ஈடுபடக்கூடாது என்று 'இராணுவப் புலனாய்வாளர்கள்' என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட சிலர மினிபஸ் உரிமையாளர்களின் வீடுகளுக்குச் சென்று எச்சரித்துள்ளனர் என்று நேற்றுத்தெரிவிக்கப்பட்டது. இன்றும் தொண்டமனாறு உள்ளிட்ட பகுதிகளினில் போராட்டத்தினில் கலந்து கொள்ள வந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

28 ஏப்ரல் 2013

நவீன கருவிகள் மூலம் ஒட்டுக்கேட்க போகுதாம் புலனாய்வுப்பிரிவு!

தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதற்கான நவீன கருவிகளை சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கருவிகளின் மூலம் கைத்தொலைபேசி மற்றும் தரைவழித் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். கடந்த ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்தக் கருவிகளின் மூலம், எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தினதும் ஒத்துழைப்பு இல்லாமலேயே தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். எனினும், இந்த முறையின் மூலம் தொலைபேசிகளை ஒடடுக் கேட்பது சட்டவிரோதமானது என்றும் இதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும் எனவும் சிறிலங்கா சட்டவாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவது நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைச் சட்டத்துக்கும், தனிநபர் உரிமைக்கும் முரணானது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க வேண்டுமென்றால் அதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட வேண்டும் என்று சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் பொதுச்செயலர் சஞ்சய கமகே தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவிலும் 526 ஏக்கர் காணி பறிப்பு!

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில், கேப்பாபுலவு கிராமத்தில் 526 ஏக்கர் காணி படையினருக்குச் சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் அந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன. சொந்த ஊரில் அகதி ஏற்கனவே கோம்பாவில் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த இடத்தி லேயே அகதி முகாம் அமைத்து குடியமர்த் தப்பட்டுள்ளன. இதில் 136 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் எவையும் இன்றி நிர்க்கதி நிலையில் உள்ளன. இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை படையினரி டம் இருந்து விடுவித்து அங்கு தம்மை மீளக்குடியேற அனுமதிக்குமாறு கோரியுள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லை, உட்கட்டுமான வசதிகள் இல்லை, சமுர்த்தி நிவாரணம் இல்லை, தொண்டு நிறுவனங்களது உதவிகளோ, தற்காலிக வீடுகளோ இதுவரை கிடைக்கவில்லை. ஒருவேளை உணவுக்கே திண்டாடுகிறோம் என்கின்றனர் அந்த மக்கள். இந்த குடிசைகளைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவிக்கையில்; ""போரால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களே இங்கு இருக்கின்றனர். பெண் தலைமை குடும்பங்கள், ஊனமுற்ற குடும்பங்கள், முன்னாள் போராளிளாக இருந்த குடும்பங்கள் என்று வாழ்வாதார நிலையில் பெரும் நெருக்கடிகளே அதிகம். குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. இதற்காக நாங்கள் தினமும் 300 மீற்றர் வரை அலைய வேண்டும். மருத்துவ, கல்வி சேவைகளுக்கு அதைவிட நெருக்கடி நிலையே எதிர்கொண்டுள்ளோம். முன்பள்ளி பருவத்தில் 15 வரையான குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இன்று வரை மர நிழலிலேயே கற்று வருகின்றனர். மலசலம் கழிப்பதற்கு கூட இரவு வரும்வரை காத்திருக்கிறோம் என்கிறார் அந்தப்பெண். இதே கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; ""நான் ஒரு அங்கத்தவர். எனக்கு அரச, அரச சார்பற்ற எந்த உதவிகளும் இல்லை. காரணம் ஒரு அங்கத்தவர் என்பதே எனக்கு எந்த அரச உதவிகளையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உயர்பாதுகாப்பு வலயத்தில் எனக்கு 5 ஏக்கர் காணியுள்ளது. அதை என்னிடம் ஒப்படைத்தாலே போதும்'' என்றார். சொந்த இடத்தில் நாங்கள் அகதிகளாக இருக்கிறோம். எங்களை ஏன் என்றும் கேளாது அரசு தனது பாட்டுக்கு காணிகளை அபகரிக்கிறது. ஏன் இந்த அநியாயம் என்று கேள்வி எழுப்புகிறார் அந்தப்பகுதியில் முடியாதிருக்கும் வயதான பெண் ஒருவர். தனக்கு துணைக்கு யாரும் இல்லை என்று குறிப்பிடும் அந்த மூதாட்டி படுத்துறங்குவதற்கு ஒரு குடிசையை அமைப்பதற்கு கூட எனக்கு உதவ யாரும் வரவில்லை என்று கவலை கொள்கிறார். எது எப்படியோ காணி எடுத்தல் அலுவலகம் சார்பாக முல்லைத்தீவு கேப்பாபுலவில் 526 ஏக்கர் காணி பறிக்கப்படுகிறது. இவற்றில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளும் உள்ளடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

27 ஏப்ரல் 2013

திருமணம் செய்வதாக கூறி பல லட்சம் ரூபா மோசடி-யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்வதாகக் கூறி 12 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்
தியட்சகர் மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து யாழ். பிறவுண் வீதியில் உள்ள நீராவியடி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஆதிகோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 03 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைபாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

26 ஏப்ரல் 2013

உயர் பாதுகாப்பு வலயம் குறித்து விசாரிக்க யாழ். சென்ற அமெரிக்கக் குழு!

அண்மையில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள் குழு உயர் பாதுகாப்பு வலயங்கள், உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் கீழ் உள்ள தொழிலாளர், மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான பிரிவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் குழு யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது. அமெரிக்கக் குழுவினர் உயர் பாதுகாப்பு வலயம், மீள்குடியமர்வு, காணி விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தியதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி மேலும் கூறியுள்ளார். ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் நிலைமைகளில் முன்னெற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதே இந்தக் குழுவின் பயண நோக்கம் என்று தெரியவருகிறது.

ஐந்தாயிரம் ஏக்கர் காணியை கையகப்படுத்த படைகள் முயற்சி!

newsபூநகரிப் பிரதேசத்தில் தாம் வாழும் வளமான பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரச அதிகாரிகள் துணைபோகின்றனர். இவ்வாறு பூநகரிப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பூநகரிப் பிரதேச மக்கள் அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து பூநகரிப் பிரதேசம் ஒரு சூனிய பிரதேசமாகவே காணப்பட்டது. இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தாம் இடம்பெயர்ந்து செல்லொணாத் துயரங்களை அனுபவித்து தற்போது மீளக்குடியேறியுள்ளோம். அடிப்படை வசதிகள் இல்லை, குடிதண்ணீர் வசதி இல்லை, போக்குவரத்து, சுகாதார, கல்வி மேம்பாடுகள் இல்லை, தொழில் முயற்சிகளுக்கான வளவாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாதுள்ளது. வளமான பகுதிகள் எனக் கருதப்படும் இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பிரதான தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. முக்கொம்பனில் உள்ள 130 ஏக்கர் தென்னம் தோட்டக் காணி இராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளது. முழங்காவிலில் ஒரே படைப் பிரிவினருக்கு 3000, 700,50 ஏக்கர் என வெவ்வேறு இடங்களில் காணி கோரப்பட்டுள்ளது. வறண்ட பிரதேசமான பூநகரியில் செழிப்பாக இருக்கும் இடங்களை இராணுவத்தினருக்கு தாரை வார்க்க சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, மக்களது நலன் கருதி, எதிர்கால அபிவிருத்திகளுக்காக அந்த நிலங்கள் குடிமக்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தமிழ் கிராமம் மீண்டும் பொன்விளையும் பூமியாக மாற்றப்படுதல் வேண்டும். இதற்கு சமூகப் பொறுப்புடைய அரச அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் முன்வரவேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.சே. பிரிவு 19 வாழும் குடும்பங்கள் 6,350
மொத்த சனத்தொகை 22,543
காணிகள் அற்று 180 குடும்பம் வரை
இராணுவ முகாம்கள் - 31 வரை
படையினர் எண்ணிக்கை - 4,500 பேர்.

25 ஏப்ரல் 2013

புலிகளின் காலத்தில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது-சிறீதரன்

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது. இன்று எங்கள் வீட்டினுள் வந்து எங்களை எழுப்பிக் கலைக்கக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது. நாங்கள் போராடுவதன் மூலமே எங்கள் நிலத்துக்குச் செல்ல முடியும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக வலி.வடக்கு மக்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாஸ்கரா: அதன் பின்னர் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா, இந்த அரசு வடக்கில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் கிழக்கிலும், மலையகத்திலும் காணிகளைச் சுவீகரித்து வருகின்றது என்றார்.
விக்கிரமபாகு: தொடர்ந்நு உரையாற்றிய நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, தமிழ் மக்களின் சொத்துக்களை இந்த அரசு கபளீகரம் செய்கின்றது. இந்த அரசு தமிழ் மக்களை விடுவிப்பது என்ற பெயரில் இன அழிப்புப் போரை நடத்தியது. இங்கு, இராணுவ சிங்கள ஆளுநர் ஆட்சி செய்து கொண் டிருக்கின்றார். அப்படியாயின் எப்படி சிவில் நிர்வாகம் இங்கே நடக்கும் என்றார்.
பாக்கியசோதி: இதன் பின்னர் உரையாற்றிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும் முரண்பாடுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.
கஜேந்திரன்: தொடர்ந்து உரையாற்றிய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், இங்கு நடக்கின்ற காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்தவும் இன அழிப்பைத் தடுக்கவும் இடைக்கால நிர்வாகமே தீர்வு என்றார்.
ஐங்கரநேசன்: இதன் பின்னர் உரையாற்றிய சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் இப்போது துப்பாக்கிச் சத்தங்கள்தான் கேட்கவில்லையே தவிர எங்கள் குரல் வளைகள் இன்னமும் நெருக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார். சிவாஜிலிங்கம்: தொடர்ந்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சிவாஜிலிங்கம், எதிர்வரும் 29 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேசசெயலகத்துக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டம், 1961 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கில் மாவட்ட செயலகங்களை முடக்கி நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று அமைய வேண்டும் என்றார்.

24 ஏப்ரல் 2013

எட்டு மாதங்கள் கடந்தும் பேசாமல் இருக்கிறார் டக்ளஸ்!

டக்ளஸ் தேவானந்தா 
மூன்று மாதங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்படும் என்று சொன்ன அமைச்சர் டக்ளஸ் எட்டு மாதங்கள் கடந்தும் அது தொடர்பில் பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார். எங்கள் காணிகள் பறிப்பதற்கான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் எங்களை எங்கே கொண்டு சென்று மீள்குடியமர்த்தப் போகிறார் என்று வலி.வடக்கு மக்கள் நேற்றுக் கேள்வியெழுப்பினர். தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் கடந்த செப்ரெம்பர் மாதம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விடுவிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது பிரதேசங்கள் நிரந்தரமாக இராணு வத்தினரால் பறிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஊடகங்களில் வெளியான செய்திகளை நம்ப வேண்டாம். இன்னும் 3 மாதங்களில் அந்தப் பகுதிகள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்படித் தெரிவித்து 8 மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும எந்தவொரு பகுதியும் விடுவிக்கப்படவில்லை. மாறாக அந்தப் பகுதிகளை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைள் நேற்று முன் தினம் முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும் என்று சொன்ன அமைச்சர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார். எங்கள் பகுதிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் பொருட்டு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. இனி எங்களை எங்கே கொண்டு சென்றுமீளக் குடியமர்த்தப் போகின்றனர் என ஆவேசமாகக் கேட்டனர் வலி.வடக்கு மக்கள்.

இனியும் பயந்து பிரயோசனமில்லை-சிறீதரன்

இனியும் பயந்து ஒதுங்கி ஒதுங்கிப் போவதில் பிரயோசனமில்லை. நாங்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்த வேண்டும். எங்கள் நிலத்தை விடுவிப்பதன் மூலமே தமிழர்கள் என்ற எமது இருப்பை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அரசு பௌத்தசிங்கள மேலாதிக்க சிந்தனையோடு தமிழ் மக்களைச் சொந்த நிலங்களிலிருந்து எப்படி வெளியேற்றலாமோ அதனைச் செய்து வருகின்றது. இலங்கையில் தமிழர்கள் என்ற இனமே இருக்கக்கூடாது என்பதற்காக அதனை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொழி ரீதியாக, கலை பண்பாட்டு ரீதியாக இனத்தை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு வடிவமாகத்தான் காணிகளைப் பறிக்கின்றது. எமது இருப்பைத் தீரிமானிப்பதில் நிலம் முக்கியமானது. நிலமில்லாமல் நாங்கள் போராடவும் முடியாது. பேசவும் முடியாது. நிலங்களைப் பறிப்பதும் அகதிகளாக்குவதும் இன சுத்திகரிப்பின் ஓர் அங்கமே. இந்த நிலப்பரப்பு வெறுமனே அரசியலுக்காகக் கதைக்கும் விடயமல்ல. மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம். இலங்கை அரசு போர் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தது, தமிழ் மக்களின் நிலங்களைப் பறித்து அந்த நிலங்களில் தமிழர்களை அந்நியப்படுத்தி, அந்தப் பகுதிகளில் ராணுவக் குடியேற்றங்களை நிறுவி தமிழர்களின் இன விகிதாசாரத்தை மாற்றியமைத்து முழுமையான இனச் சுத்திகரிப்பு மேற்கொள்வதற்காகவே. என்னுடைய வீட்டுக்குப் பிரச்சினையில்லை என்று மற்றவர்கள் நினைக்கக்கூடாது. இது தனியே வலி.வடக்கு மக்களின் பிரச்சினையன்று. நாளைக்கே மல்லாகத்தில், சுன்னாகத்தில் இராணுவத்தினர் காணிகளைப் பறிக்கலாம். எனவே யாழ்ப்பாணத்திலுள்ள புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினர், சமய நிறுவனங்கள், வர்த்தகர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்திலும் நீதியில்லை. சிங்கள இனவாத அரசு தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கப் போவதில்லை. எனவே இலங்கை என்ற நாட்டில் எங்களையும் தமது நாட்டின் பிரஜைகளாகக் கருதி எங்களது இடங்களுக்கு இலங்கை அரசு விட வேண்டும். இல்லையேல் நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

23 ஏப்ரல் 2013

உயரதிகாரிகளால் பெண் உத்தியோகத்தர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயகத்தில் கடமையாற்றும் ஒரு சில உயரதிகாரிகளினால்
அங்கு கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் சக உத்தியோகத்தர்களிடம் முறையிட்ட நிலையில் இது குறித்து அறிந்துகொண்ட பிரதேச செயலர் குறித்த பெண் உத்தியோகத்தரையும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட பிரதேச செயலகத்தின் ஒரு உயரதிகாரியினையும் அழைத்து விசாரணை செய்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் நிர்வாக பிரிவில் உயரதிகாரியாக கடமையாற்றும் அவர் தொடர்ந்தும் சம்மந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர் மற்றும் அவரோடு நெருங்கிய ஊழியர்களையும் பழிவாங்கும் வகையில் அலுவலகத்தில் கடமை ரீதியில் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் இதனால் தங்களால் தொடர்ந்தும் இயல்பான மன நிலையில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர் இந்த உயரதிகாரியின் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு பல பெண்கள் உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அவர்கள் இந்த விடயங்களை பல்வேறு காரணங்களை கருதி வெளியில் தெரிவிக்காமல் இருப்பதாகவும் குறிப்பிடும் சில உத்தியோகத்தர்கள் அண்மையில் பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொள்ளும் நோக்கில் அலுவலகத்தில் வைத்து ஒரு பெண் உத்தியோகத்தரின் கையை பிடித்து இழுத்த போது அப்பெண் உத்தியோகத்தர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வெளியேறிய நிலையில் குறித்த உயரதிகாரியின் பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடவடிக்கைகள் வெளியில் தெரியவந்துள்ளது. எனவே மேற்படி அதிகாரியின் இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மட்ட உயரதிகாரிகளிடம் பூநகரி பிரதேச செயலகத்தின் பல ஊழியர்களை வேண்டுகோள் விடுத்துள்ளனா.; இதேவேளை குறித்த உயரதிகாரியின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள சில பெண்கள் தாங்கள் இரகசியமாக எவரிடமும் முறையிட தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வலி.வடக்கு நில அபகரிப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் இன்று அவசர கலந்துரையாடல்!

வலி. வடக்கில் தமிழ் மக்களின் 6400 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் சுவீகரிப்பு செய்வதாக சுவரொட்டிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் ஆராயப்படவுள்ளது. இச்சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வலி.வடக்கு பிரதேச சபையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதன்போது நில அபகரிப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இச்சந்திப்பில் வலி.வடக்கு பகுதி மக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வலி வடக்கு பிரதேச சபை மற்றும் மீள்குடியேற்ற சபை என்பன அறிவித்துள்ளன. மேலும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

22 ஏப்ரல் 2013

கொட்டடியில் இளைஞர்கள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம், கொட்டடி கோணாத்தோட்டம் பகுதியில் வைத்து இளைஞர்கள் இருவர் மீது ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 15 பேர் கொண்ட குழுவினரே இந்த இளைஞர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. சம்பவத்தில் மீனாட்சி அம்பாள் பகுமியை சேர்ந்த 24 வயதான எஸ்.நியூட்டன் மற்றும் சிவஞானம் வினோத் ஆகிய இருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

21 ஏப்ரல் 2013

லண்டனில் மீண்டும்'போர் தவிர்ப்பு வலயம்'

சிறிலங்கா படையினர் மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆவணப்படம் இலண்டனில் வெளியிடப்படவுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி தயாரித்துள்ள 'போர் தவிர்ப்பு வலயம்' என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி மீண்டும் லண்டனில் திரையிடப்படவுள்ளது. இந்நடவடிக்கையால் சிறிலங்கா அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி 138 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை கல்லும் மக்ரே தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், புதுடெல்லியிலும் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிகளவு நாடுகள் ஆதரவு அளிப்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு காரணியாக இருந்தது. இந்தநிலையில், இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி வரும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் திரையிடப்படவுள்ளது. இலண்டனில் கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் முக்கிய கூட்டம் நடக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது சிறப்பம்சமாகும். இது கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் இருந்து இடமாற்றம் செய்வது குறித்து சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இரகசியமாக நடைபெறும் வடமாகாண எல்லை நிர்ணயம்!

வடக்குமாகாணசபைத் தேர்தல் தொகுதிவாரி முறைமையில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில்,யாழ்.மாவட்ட எல்லை நிர்ணயச் செயற்பாடுகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் உள்ளூர் ஊடகங்களில் எதுவித
விளம்பரங்களும் செய்யப்படாமல் அரச ஊடகங்களில் மாத்திரமே விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை மாவட்ட எல்லை மீள் நிர்ணயக் குழுவுக்கும் சட்டத்துக்கு முரணான வகையில் அரசியல் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க,உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மாவட்ட எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வட்டார முறைமையைக் கொண்டே நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் எல்லை மீள் நிர்ணயக் குழு அமைக்கப்படுகின்றது.இதன் தவிசாளராக மாவட்ட அரச அதிபர் செயற்படுவதுடன் அவருக்குக் கீழே 5 பேர் பதவி வழியாக உள்ளூராட்சி அமைச்சினால் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் யாழ்.மாவட்டத்தில் சட்டத்துக்கு முரணான வகையில் 6 பேர் அமைச்சர் அதாவுல்லாவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல்கள் திணைக்களத்தின் சார்பில் எஸ்.அச்சுதனும்,மாவட்டம் அமைந்துள்ள மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் பிரதிநிதியாக க.வரதீஸ்வரனும்,நில அளவையாளர் தலைமையதிபதித் திணைக்களத்தின் சார்பில் ஐ.ஈஸ்வரமூர்த்தியும்,தொகை மதிப்புப் புள்ளி விவரத் திணைக்களத்தின் சார்பில் எஸ்.உதயகுமாரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைவிட அமைச்சரால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட பகிரங்க அலுவலராக ஒருவரை நியமிக்க முடியும்.ஆனால் யாழ்.மாவட்டக் குழுவில் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கமும்,சமுர்த்தி உதவி ஆணையாளர் எஸ்.மகேஸ்வரனும் இதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் குழுவின் தவிசாளர் என்ற வகையில் மாவட்ட செயலரிடம் கேட்டபோது,இந்த நியமனங்கள் அமைச்சர் அதாவுல்லாவினால் நேரடியாக வழங்கப்பட்டன.யார் யார் பதவி வழியாக நியமனம் பெற்றனர் என்பது தொடர்பில் எதுவும் தெரியாது என்றார். இதே போன்றே கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்ட எல்லை மீள் நிர்ணயக் குழுவில் சட்டத்துக்கு முரணான வகையில் அரசியல் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.எனத் தெரிவிக்கப்பட்டது.

20 ஏப்ரல் 2013

நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேந்திரரசா உத்தரவிட்டுள்ளார். கடந்த 6ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 26 பேரை கரையோர பாதுகாப்பு படையினர் மற்றும் கடற்படையினர் கைதுசெய்து நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். அவர்கள் 26 பேரையும் நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தி இரண்டு தடவைகள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களும் நேற்று 19ஆம் திகதி மீண்டும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த யாழ் ஊர்காவற்
றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேந்திராசா குறித்த மீனவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.

19 ஏப்ரல் 2013

புங்குடுதீவை சேர்ந்த இளம் தாய் தவறான மருந்தால் மரணம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயரட்ணம் நிர்மலாதேவி (வயது 37) என்பவரே உயிரிழந்தார். இவர் பெண் குழந்தை ஒன்றின் தாயாவார். இருதயநோய் காரணமாக நிர்மலாதேவி மாதாந்தம் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று ஊசி ஏற்றி வருகிறார். அவ்வாறே நேற்றுமுன்தினமும் ஊசி போடுவதற்காக முற்பகல் 10.45 மணிக்கு அங்கு சென்றுள்ளார். அங்கு ஊசி ஏற்றப்பட்ட பின்னர் முற்பகல் 11.15 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரியிருந்தார். பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, 1998ம் ஆண்டிலிருந்து அவருக்கு இருதய நோய் இருந்துள்ளது. ஊசி ஏற்றப்பட்டு அரை மணித்தியாலயத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். மருத்துவத் தவறு காரணமாக அவர் உயிரிழந்தாரா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்குப் போடப்பட்ட ஊசி மருந்து போன்று நேற்று முன்தினம் 33 பேருக்கு அதேவகை ஊசி ஏற்றப்பட்டது. அவருக்குச் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பலமுறை கிளினிக்கொப்பியில் எழுதியுள்ளனர். அவரின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

செங்கலடி தம்பதிகள் படுகொலை!கல்விப்பணிப்பாளர் கருத்து!

கொடூர மாணவி 
செங்கலடி மத்திய கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கக்கேடுகள் தொடர்பாக ஏற்கனவே தமது கவனத்திற்கு பல புகார்கள் கிடைத்துள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார். செங்கலடி நகர வர்ததகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் ஏறாவூர் பொலிஸாரால் சந்தேகத்தின பேரில் கைதாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். குறித்த மாணவிக்கும் மாணவனொருவனுக்கும் இடையிலான காதல் தொடர்புகளின் பின்னணியிலேயே இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர்கள் ஒழுக்கக்கேடு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த மாதம் இந்த ஒழுக்கக்கேடுகள தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்கள் ஒழுக்கம் தொடர்பாக பாடசாலை நிருவாகத்தினருக்கு பல்வேறு உத்தவுகளைப் பிறப்பித்திருந்தேன். மாணவர்கள் விடும் ஒழுக்கக் கேடுகள் பற்றி சுடடிக்காட்டினாலும் பாடசாலை நிருவாகம் அதனை மூடி மறைப்பதற்கே முற்படுகிறது. இதன் விளைவாகவே குறித்த கொலைச் சம்பவம் பலரும் கூறுவதை மறுக்க முடியாத நிலையே உள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் சந்தேக நபர்களாக காணப்படுவது தொடர்பான நிருவாக ரீதியான விசாரணைகள் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆசியர்கள் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பாடசாலை சமூகத்துடன் இதுபற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும். இந்த பாடசாலையைப் பொறுத்தவரை புதிய மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கமைய 7 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய அதிபர் உட்பட சகல ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்குவது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளரின் கவனத்திறகு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது என பதிலளித்தார்.

18 ஏப்ரல் 2013

பாடசாலை மாணவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலிப் பகுதியில் 19 வயதுடைய மாணவன் ஒருவன் சித்தரைப் புத்தாண்டு தினத்தன்று காணாமற்போயுள்ளதாக பெற்றோரால் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய குலசிங்கம் சசிதரன் என்ற மாணவனே காணாமல் போயுள்ளார். புதுவருட தினத்தன்று மூன்று மணியளவில் வீட்டில் இருந்து மைதானத்திற்கு விளையாடுவதற்காக சென்ற மாணவன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பெற்றோர் மைதானத்திற்கு சென்று நண்பர்களிடம் வினவியபோது, கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்த நிலையில் விளையாட்டை இடையில் கைவிட்டு சென்றதாக தெரிவித்தனர். இதன்பின்னர் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்தபோதும் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புனித பிலிப் நேரியர் திருச்சொரூபத்தை உடைத்தெறிந்த முஸ்லீம்கள்!

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் உள்ள புனித பிலிப் நேரியர் தேவாலயத்திற்கு முன்பாக கண்ணாடிப் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் முஸ்லீம்களால்
சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்திற்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு 11 மணியளவில் வந்த நபர்கள் கண்ணாடிப் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபத்தை தூக்கி எடுத்து சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று நடு வீதியில் போட்டு உடைத்து சேதமாக்கியுள்ளதாக அடம்பன் பங்குத்தந்தை லக்கோன்ஸ் பிகிராடோ அடிகளார் தெரிவித்தார்.
இந்த திருச்சொரூபம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் விடத்தல்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அடம்பன் பங்குத்தந்தை கூறினார்.
இந்த நிலையில், குறித்த வீதியில் திரண்ட மக்கள் வீதியை மறித்து போக்குவரத்தை தடைசெய்தனர். பின் குறித்த இடத்திற்கு வந்த உரிய அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடினர்.
புனித பிலிப் நேரியர் தேவாலயத்திற்கு முன்பாக பல வருடங்களாக கண்ணாடிப் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் எந்தவித சேதமும் இன்றி இருந்ததாகவும் அடம்பன் பங்குத்தந்தை லக்கோன்ஸ் பிகிராடோ அடிகளார் தெரிவித்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

17 ஏப்ரல் 2013

கைதாகிய சிறுமிகளின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்!

யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுமிகளில் கைது செய்யப்பட்ட ஏழு சிறுமிகள் தொடர்பிலான வைத்திய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். அந்த ஏழு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார். அந்த சிறுமிகள் தொடர்பிலான வைத்திய அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். வைத்திய பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும் வரை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்களா? இல்லையா? என்பது பற்றிய கருத்துக்கள் வெளியிட முடியாதென்றும் அவர் மேலும் கூறினார். அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் பணிப்பு இதேவேளை, கைது செய்யப்பட்ட சிறுமிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட சிறுவர், அபிவிருத்தி குழு உத்தியோகத்தர்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பணித்துள்ளார். இச்சிறுவர்களின் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பிலான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார். இவ்வாறு சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு சிறுவர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், துஷ்பிரயோகம் மேற்கொள்பவர்கள் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், இச்சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் மீதானதும், அதிகாரிகள் மீதும் உரிய விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிஸாரிடம் யாழ். அரச அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்,குடாநாட்டில் தங்கத்தின் விலை சரிவு!

சர்வதேச சந்தைகளில் தங்க பிஸ்கட்டுக்களின் வருகை குறைவடைந்துள்ளதால் குடாநாட்டில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 10 ஆயிரம் ரூபாவுக்கு மேலாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வர்த்த கர்கள் மேலும் தெரிவித் ததாவது: தங்க பிஸ்கட்டுக்களை கொள்வனவு செய்யும் விலைக்கு தங்கத்தின் கரட் பெறுமதிக்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படும் நிலையில் தங்க பிஸ்கட்டுக்கள் சர்வதேச சந்தைகளில் முடக்கப்பட்டுள்ளன. இதனால் இருக்கக்கூடிய தங்க பிஸ்கட்டுக்களை தரம்பிரித்து நகைகள் செய்யப்படுவதால் நகைகளின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் நகைப் பெறுமதிக்கு ஏற்ப குடாநாட்டு நகைக்கடைகளிலும் அதே விலையில் நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் இந்தியாவிலும் நகையின் பெறுமதிக்கேற்ப விலைகள் தற்போது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் நகைகளின் விலைகள் குறை வடைந்துள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தோன்றலாம். ஆனால் குடாநாட்டைப் பொறுத்தவரையில் நகை விலைகளில் பெரிதாக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. எனினும் கடந்த 2 மாத காலப் பகுதிக்குள் நகைகள் விற்பனை செய்யப்பட்ட பெறுமதியில் இருந்து தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு மேலாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி நகைக்கடை உரிமையாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஏனெனில் தங்க பிஸ்கட்டுக்களைக் கொள்வனவு செய்யும் போது இருந்த விலையும் தற்போதைய விலையும் மாறுபாடு உடையதாகக் காணப்படுவதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நகைகளின் பெறுமதி இன்று சந்தையில் என்ன என்பதைக் கூற முடியாது அது நாளுக்கு நாள் மாறுபடும் என்றனர்.

16 ஏப்ரல் 2013

நயினை அம்மன் ஆலயத்தினுள் மேலாடை கழற்றாமல் நுழைந்த போலிஸ் அதிகாரி!

சிவில் உடையில் ஆலயத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் மேலாடையை கழற்றாமல் கோவிலுக்குள் நுழைந்தது மட்டுமன்றி தான் பாதுகாப்பு அதிகாரியென்றும் மேலாடையை கழற்றமாட்டேன் என்றும் அடம்பிடித்துள்ளார். நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பூஜையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி மேலாடையை கழற்றாமல் கலந்துக்கொண்டுள்ளார். குறித்த கோவிலுக்கு பூஜைக்கு செல்கின்ற ஆண்கள் மேலாடையை கழற்றிவிட்டே ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். எனினும், குறித்த அதிகாரி அவ்வாறு செய்யவில்லை. அவரின் நடவடிக்கை தொடர்பில் ஆலயத்தில் இருந்த ஏனைய பக்தர்கள் அவருக்கு எடுத்துரைத்த போதிலும் குறித்த அதிகாரி அவர்களின் பேச்சை கணக்கில் எடுக்கவில்லை, குறித்த அதிகாரியின் நடவடிக்கை தொடர்பில் அங்கிருந்த பூசகர் ஒருவரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதிலும் பாதுகாப்பு தரப்பினருடன் முரண்பட்டுக்கொள்ள விரும்பவில்லை என்பதனால் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தொடர்பில் அவருக்கு தெளிவுப்படுத்த தாம் விரும்பவில்லை என்று அங்கிருந்த பூசகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கோவிலுக்கு வந்திருந்த போது பூஜை வழிபாடுகள் மற்றும் சம்பிரதாயங்களை கடைப்பிடித்தார் என்பதனை குறித்த அதிகாரிக்கு தான் தெளிவுப்படுத்தியதாக அந்த பூசகர் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரியின் இந்த செயற்பாடுகள் தொடர்பில் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் முணுமுணுத்துக்கொண்டனர்.

பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க அனுமதி கோரி மனு!

balachandran-0001படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனுக்கு சேலத்தில் சிலை எழுப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து கட்சியின் பொதுச் செயலர் வை.காவேரி, ஒருங்கிணைப்புச் செயலர் எம்.பி.காமராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனு விவரம்: இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையில் அப்பாவித் தமிழ் சிறுவன் பாலச்சந்திரன் ராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும் இன உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் நினைவைப் போற்றும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க உள்ளோம். எனவே சேலம் ஐந்து ரோடு பகுதியில் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இடைக்கால நிர்வாக யோசனையாளர்களை தெரிந்து கொண்டதாம் சிங்கள புலனாய்வுப்பிரிவு!

இனப்பிரச்சினைக்கு தீர்வாக விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனைக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த 12 பேர் யார் என்ற தகவல்கள் இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.நரேந்திரன், எஸ். சிவதாசன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பி. சரவணபவன், வினோத் கனகரத்தினம், கே. குருச்சரன், பேராசிரியர் சம்பந்தன், பேராசிரியர் பலாசுந்தரம்பிள்ளை, சாந்தி அபிமானசிங்கம் ஆகியோரே இந்தியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவினரை சந்திக்க புளொட், டெலோ, ரி.எம்.வி.பி கட்சிகளின் பிரதிநதிகளுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் திவயின கூறியுள்ளது.

15 ஏப்ரல் 2013

மண்டைதீவில் இளம் குடும்பஸ்தர் மீது கடற்படை தாக்குதல்!

யாழ். மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் படைமுகாமில் வைத்து மோசமாக தாக்கப்பட்டுள்ளார். எனினும் ரோந்து சென்ற படையினரை தாக்கியதாக பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள 29 வயதுடைய ஜெ.காண்டீபன் எனும் குறித்த பொதுமகன் தற்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கடந்த சனிக்கிழமை இரவு குறித்த பொதுமகனது வீட்டிற்குள்ளே அடாத்தாக புகுந்த கடற்படை சிப்பாய் ஒருவர் வீட்டில் தனித்திருந்த பெண்களை பாலியல் ரீதியாக துனபுறுத்தியுள்ளார். அவ்வேளை தொழில் முடிந்து வீடு திரும்பியிருந்த ஜெ.காண்டீபன் எனப்படும் குறித்த குடும்ப தலைவர் அச்சிப்பாயை அடித்து விரட்டியுள்ளார். தப்பியோடிய குறித்த சிப்பாய் பின்னர் தனது சகபாடிகளுடன் சென்று காண்டீபனை முகாமிற்கு கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர் ரோந்து சென்ற கடற்படையினரை தாக்கியதாக கூறி அவரை மண்டைதீவு பொலிஸாரிடம் கையளித்துமுள்ளனர். இந்நிலையில் காயங்களுக்கு சிகிச்சை பெறவென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காண்டீபன் பத்திரிகையாளர்களிடம் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். தீவகப் பகுதிகளிலும் அதே போன்று குடாக்கடலை அண்டிய பகுதிகளிலும் இரவு வேளைகளில் தொழிலுக்காக
 ஆண்கள் கடலுக்கு சென்றுவிடும் நிலையில் தனித்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகங்கள் கடற்படையினால் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நெடுந்தீவுக்கான படகுசேவை கட்டுமானம் நடைபெறுமா என்பதில் சந்தேகம்!

நெடுந்தீவு பிரதேச சபை நெடுந்தீவுக் கடல் போக்கு வரத்துக்கு ஈடுபடுத்தும் நோக்குடன் படகு ஒன்றைக் கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. எனினும் அது இப்போது சாத்தியப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிகின்றது. கொழும்பு டொக்யாட் நிறுவனத்தில் ஏற்கனவே இது தொடர்பாக பிரதேச சபை தனது செயற்பாடுகள் குறித்துத் தெரிவித்திருந்த போதும் சமீபத்தில் இங்கு வந்த டொக்யாட் நிறுவன அதிகாரிகள் படகைக் கட்டுவதற்கு கடற்படை அனுமதிக்க வேண்டும் எனவும் அலுமினியத்தில் படகைக்கட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அலுமினியத்தில் கட்டப்படும் படகு நெடுந்தீவுத் துறைமுகத்துள் வரக் கூடியதாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று கூறப்படுகின்றது. "நெல்சிப்' திட்டத்தின் நிதி யுதவியுடன் பிரதேச சபை நெடுந்தீவுக்கான படகைக் கட்டத் திட்ட மிட்டிருந்தது. "நெல்சிப்' திட்டத்தில் இந்தப் படகைக் கட்டுவதற்கு ரூபா இரண்டு கோடி நிதி வழங்கப்படவுள்ளது என்று கூறப்பட்டது.

14 ஏப்ரல் 2013

அவுஸ்திரேலியாவில் 7ஆவது நாளும் தொடர்கிறது உண்ணாவிரதம்!

newsஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் தமிழ் அகதிகளால் கடந்த 8ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் 7ஆவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விடுதலை செய் அல்லது கருணைக்கொலை செய் என்ற கோரிக்கையுடன் தொடரும் இந்தப் போராட்டத்தில் 25 தமிழர்கள் உட்பட 27 அகதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். மழை, பனி, குளிர் என நெருக்கடியான மெல்பேர்ண் காலநிலையில், தடுப்பு முகாமின் முற்றத்தில் படுத்திருந்தவாறு தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார்கள். இதுவரை ஐந்து பேர் இயலாதநிலையில் மயக்கமடைந்த பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லபட்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட உடனடியான சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் திரும்பிவந்து இணைந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு ஆதரவாக தடுப்பு முகாமிற்கு வெளியில் கடந்த மூன்று நாட்களாக மணிநேர கவனயீர்ப்பு போராட்டம் வேற்று சமூகமக்களின் ஆதரவுடன் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. அகதிகள் என சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை வெளிப்படையற்ற விசாரணையின்றி தடுத்துவைப்பது அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கு எதிரானது. சிறுவர்கள் பெண்கள் இளைஞர்கள் என எந்த வேறுபாடுமின்றி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாழ்க்கை வாழும் இவர்களின் விடுதலை தொடர்பாக எந்தவித உறுதியான நடவடிக்கைகளையும் அவுஸ்திரேலிய அரசு எடுக்கவி்ல்லை. தற்போதைய நடைமுறையின்படி அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்பு பரிசோதனை என்ற மதிப்பீட்டை அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பான ASIO மேற்கொண்டபின்னர் அகதிகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு மதிப்பீட்டில் ஒருவர் நிராகரிப்பட்டால் அவர் காலவரையறையற்ற முறையில் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார். அவர்களுக்கான மீள் விசாரணையோ மேல்முறையீடோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையின் காரணமாக ஈழத்தமிழ் மக்களே பெரும்பாலும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இவ்வாறு பாதுகாப்பு மதிப்பீட்டில் நிராகரிக்கப்பட்ட நிலையில் பெண்கள் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட சுமார் 55 ஈழத்தமிழர்கள் காலவரையறையற்ற முறையில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மூன்றாண்டுகளுக்கும் மேலாக எதிர்காலம் பற்றிய எதுவித நம்பிக்கையுமின்றி, சாகும்வரை தடுப்புக்காவலிலேயே வாழ்ந்தழியும் நிலைமீது அதிருப்தி அடைந்த நிலையில் மெல்பேர்ண் முகாமில் தங்கியுள்ள 28 பேர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்களில் ஒரு ஈரானியர் சுகயீ்னம் காரணமாக தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். ஏனையவர்களில் சிலர் சிறுநீரகத்துடன் இரத்தம் கசியும்நிலையிலும் உறுதியோடு தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார்கள்.

13 ஏப்ரல் 2013

பிரிட்டனில் இலங்கைத் தமிழர் மரணம் : ஒருவர் கைது

பிரிட்டனில் பெட்ஃபோர்ட் என்னும் இடத்தில் கடை ஒன்றை நடத்தி வந்த
 இலங்கைத் தமிழரான வைரமுத்து தியாகராஜா என்பவர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். தனது கடைக்கு மேலே உள்ள தனது அடுக்குமாடி வீட்டிலேயே அவர் காயமடைந்து காணப்பட்டார். 56 வயதான அவர் பின்னர் மருத்துவமனையில் மரணமானார். இந்த சம்பவம் தொடர்பில், மஜிஸ்திரேட் முன்பாக ஆஜர் செய்யப்பட்ட திலக் மோகன் ராஜ் (25 வயது) மீது கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரேதப் பரிசோதனை திங்களன்று நடைபெறும்.

செய்தி:பி.பி.சி.தமிழ் 

உதயன் பிரதான அலுவலகத்தில் விசமிகள் அட்டகாசம்!

newsயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன்நாளிதழ் மீது இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிகளுடன் உள்நுழைந்த இனந்தெரியாதவர்கள் சரமாரியாகச் சுட்டபடி அச்சகத்தினுள் புகுந்து அச்சு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் பெற்றோல் ஊற்றி இயந்திரத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். அச்சு இயந்திரம் இயங்க முடியாத அளவுக்கு பழுதடைந்திருப்பதுடன் அச்சு இயந்திரப் பெருமளவான அச்சுத் தாள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. உதயன் நாளிதழினை முடக்கும் நோக்குடன் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலினால் பத்திரிகை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 13ஆம் திகதி அதிகாலை 4.30 மணி அளவில் உதயன் அலுவலக வாசலுக்கு தலைக் கவசம் அணிந்தபடி வந்த மூவரில் ஓருவர் "தூஷண'' வார்த்தைகளால் பாதுகாப்பு ஊழியர்களை ஏசியபடி, அங்கிருந்து ஓடுமாறு விரட்டியபடி வான்நோக்கி வேட்டுக்களைத் தீர்த்திருக்கின்றார். அவனோடு வந்த மற்றைய இருவரும் பிரதான அச்சு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று பணியாளர்களை வெளியேறுமாறு கூறி வேட்டுக்களைத் தீர்த்தனர். அச்சகப் பணியாளர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு 9மில்லி மீற்றர் பிஸ்ரல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பிக் கொண்ட பணியாளர்கள் அச்சுக் கூடத்தை விட்டுஓடித் தப்பி விட்டனர். துப்பாக்கிதாரிகள் அச்சு இயந்திரத்தின் மீதும் பிரதான மின்மார்க்கத்தின் மீதும் துப்பாக்கியால் சுட்ட பின்னர் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காகித றோல்களைத் தீயிட்டு கொழுத்தி அச்சு இயந்திரத்தின் பிரதான பகுதிகள் மீதும்பெற்றோல் ஊற்றிக்கொழுத்தியுள்ளனர். தமிழர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் உதயனின் குரல்வளையை நசுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளின் பட்டியல் நீண்டு கொண்டேசெல்கிறது. உதயன், மக்களின் கரங்களில் செல்வதைத் தடுக்கும் வகையில் விநியோகப் பணியை முடக்கும்செயற்பாடுகள் இந்த வருடத்தின் ஆரம்பம் முதலேமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 10 ஆம் நாள் உதயன் நாளிதழ் விநியோகப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயம் வடமராட்சிப் பகுதியில் வைத்து விநியோகப் பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதோடு அவரது மோட்டார் சைக்கிளும், அவர் கொண்டு சென்ற பத்திரிகைகளும் நடு வீதியில் வைத்து தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. அத்துடன் ஜனவரி 15ஆம் நாள் உதயன் ஊடகவியலாளர் யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து மிக மோசமாகத் தாக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக யாழ். பஸ் நிலையத்தில் வைத்து உதயன் ஊடகவியலாளர் ஒருவருக்கு சீருடை தரித்த இராணுவ அதிகாரி ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி உதயன் கிளிநொச்சி பிராந்திய காரியாலயத்துக்குள் புகுந்துகொண்டகாடையர் குழு அங்கிருந்த பணியாளர்களைப் படுமோசமாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. இது தவிர கடந்த காலங்களிலும் உதயன் பல சவால்களை எதிர்கொண்டிருந்தான். 2006ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் உலக ஊடக நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த வேளை மே முதலாம் நாள் இரவில் உதயன் வளாகத்தினுள் புகுந்த காடையர்கள் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். காடையர்களின் இந்தத் தாக்குதலினால் உதயன் விநியோக முகாமையாளர் மற்றும் உதயன் பணியாளர் ஒருவருமாக இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது கொல்லப்பட்டனர். அத்துடன் உதயன் ஆசிரியர் பீடத்தினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அலுவலகக் கணினி மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களையும் அழித்தனர். கடந்த 2010ஆம் ஆண்டு பெப்பிரவரிமாதம் உதயன் அலுவலகத்தின் மீது கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் உதயன் பிரதம ஆசிரியரின் வாசஸ்தலம் மயிரிழையில் தப்பியது. கடந்த ஏப்ரல் 3ஆம்திகதி கிளிநொச்சியில் உதயன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபரிடம் மேலதிக பாதுகாப்புக் கோரி விண்ணப்பித்த போதும் இதுவரையில் அதற்குரிய எந்த விதநடவடிக்கைகளையும் பொலிஸ்மா அதிபர் மேற்கொள்ளவில்லை. இதேவேளை இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் அவசரத் தொலைபேசி இலக்கமான 119க்குத் தொடர்புகொண்டபோதும் மேலும் யாழ்.பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு உதயன் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட போதும் பொலிஸார் பதிலளிக்கவில்லை. இதன் பின்னர் எமதுகொழும்பு அலுவலகத்தின் ஊடாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன்சிகேராவின் கைத்தொலைபேசிக்கு அறிவித்ததன் பின்னரே பொலிஸார் உதயன் பணிமனைக்கு வருகை தந்து விசாரணைகளைமேற்கொண்டனர்.

12 ஏப்ரல் 2013

இராணுவ அறிக்கை அப்பட்டமான பொய்!

இராணுவ நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் எவ்வித உண்மையும் கிடையாது, இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த சிறிலங்கா இராணுவம் இப்போது பொய் கூறிவருகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். போர் குற்றங்களில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டனர் என்பது பகிரங்கமாக எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றும் அவர் தெரிவித்தார். 2009 இல் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் இறுதி நாட்களில் பொதுமக்கள் இருந்த பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது என்ற குற்றச்சாட்டிலிருந்து இராணுவத்தை விடுவித்து இராணுவ நீதிமன்றம் மேலும் ஒரு புதிய அறிக்கையை நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது. இறுதிப் போர் சம்பவங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றமானது இராண்டாவது தடவையாக மாபெரும் பொய்களைக்கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இராணுவத்தைப் பாதுகாக்கும் நோக்குடனும், உலகத்தை திசைதிருப்பும் நோக்குடனுனேயே வெளியிடப்பட்டுள்ளது. இராணுவம் நீதிமன்றம் முதலாவது தடவையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் காணாமல்போனவர்கள் என எவரும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க இறுதிப் போரில் 5 ஆயிரம் மக்கள்தான் கொல்லப்பட்டனர் என்று அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித விஜேயசிங்க தெரிவித்திருந்தார். அதேவேளை, வன்னியில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் மூலம் 7 ஆயிரம் மக்கள் மட்டும் பலியாகினர் என்று தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சு அவற்றில் விடுதலைப் புலிகளே அதிகம் பலியாகியுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தது. இவ்வாறு இறுதிப் போர் சம்பவங்கள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை இராணுவ நீதிமன்றமும், அரச நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சும் ஏற்கனவே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதிப் போரின் இறுதி நாட்களில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டிலிருந்து இராணுவத்தை விடுவித்து இராணுவ நீதிமன்றம் தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளினாலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனவும், சர்வதேச சமூகமானது விடுதலைப் புலிகளின் யுத்த மீறல்களை தடுத்துநிறுத்தத் தவறிவிட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இராணுவ நீதிமன்றத்தின் இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். அத்துடன் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். உலகத்தைத் திசைதிருப்பவே இந்தக் குற்றச்சாட்டுக்களை இராணுவ நீதிமன்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த அறிக்கை நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேர்மையற்றது; நீதியற்றது; சர்வதேசத்தின் பார்வைக்கு பிரயோசனமற்றது. இது இராணுவத்தின் மற்றுமொரு பொய் முகத்தை எடுத்துக்காட்டுகின்றது. இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவம் எந்த மனச்சாட்சியோடு பொய்களைக் கூறுகின்றது? பொய்களைக் கூறி தப்பித்துக்கொள்ள முடியுமா? எனவே, இராணுவ நீதிமன்றம் இந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் போடட்டும். நீதியான சர்வதேச விசாரணையே உண்மையை வெளிக்கொணரும்! இதேவேளை, இலங்கை அரசு தரப்பினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம். அதாவது தங்கள் படைத்தரப்பினர் இறுதி யுத்தத்தில் குற்றமிழைக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு நீங்கள் தயங்குவதேன்? எனவே, பெரும்பாலான உலக நாடுகள் எதிர்பார்க்கும் சர்வதேச விசாரணையை இறுதிப் போரில் நடந்த சம்பவங்களை வெளிக்கொணரும். அதனூடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம். இதை ஐ.நா. உணர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

11 ஏப்ரல் 2013

மாத்தளை மனித புதைகுழி அருகே கோத்தாவின் அடியாட்கள் நடமாட்டம்!

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மனித புதைகுழி உள்ள பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவினர் என சந்தேகிக்கப்படும் சிலர் நடமாடியதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நேற்று (10) இரவு வேளையில் இக்குழுவினர் இடையிடையே நடமாடியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பொலிஸ் மாஅதிபரிடம் முறையிட்டுள்ளதாக அக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்று (10) இரவு எட்டு மணியளவில் ஜீப் ஒன்றில் இராணுவ சீருடையைப் போன்ற உடை அணிந்த 10 பேர் கொண்ட குழு மனித பதைகுழி உள்ள இடத்தில் நடமாடியதாக தமது கட்சியின் மாத்தளை மாவட்ட உறுப்பினர் தகவல் வழங்கியதாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு சோமவன்ச அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து சோமவன்ச அமரசிங்க பொலிஸ் மாஅதிபரிடம் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 150க்கும் மேற்பட்ட மனித உடல் எச்சங்கள் மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையுடன் இணைந்து செயற்பட முடியாது!

மஹிந்த ராஜபக்ஷ பதவியில் நீடிக்கும் வரையில் இலங்கையுடன் இணைந்து செயற்பட முடியாது என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான மதிப்பீடுகளுக்கு உதவி வழங்க முடியுமா என கொழும்பு ஊடகமொன்று க்ளோபல் தமிழ் போரம் அமைப்பிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடாத்தும் என்பதில் உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே அதற்கு ஆதரவு அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதி மணித்தியாலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சியில் நீடிக்கும் வரையில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

10 ஏப்ரல் 2013

முல்லையில் மக்கள் போராட்டம்!

நில அபகரிப்பு,கடல் ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மக்களின் இந்த உரிமைப்போராட்டத்துக்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. முல்லைத்தீவு பிரஜைகள் குழுவின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தில் கொக்கிளாய் பங்குத் தந்தை,தமி்ழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன்,செல்வம் அடைக்கல நாதன்,தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தை குழப்பும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

09 ஏப்ரல் 2013

போர்க்குற்ற ஆதாரங்களின் பின்னணியில் அதிகாரப் போட்டி? – ஆங்கில ஊடகம் சந்தேகம்

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஒளிப்படங்கள் வெளியான விடயத்தில்,இலங்கைப் படைத் தளபதிகளுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், அனைத்துலக ஊடகங்களுக்கு கிடைத்துள்ள பெரும்பாலான ஒளிப்படங்கள், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் கீழ் செயற்பட்ட பிடைப்பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை வெளிப்படுத்தியவையாகும். இது எதிர்காலத்தில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதை தடுக்கும் சதித் திட்டமாக இருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. சனல் 4, சிறிலங்காவில் ஜனநாயத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு, உலகத் தமிழர் பேரவை என்பனவற்றினால் வெளியிடப்பட்ட படங்களில் இடம்பெற்ற சம்பவங்களுடன் 53வது டிவிசன் மற்றும் 8வது அதிரடிப்படைபிரிவே தொடர்புபட்டிருந்தது. 2009 ஏப்ரல் 06ஆம் திகதி புதுக்குடியிருப்பில் சரணடைந்த விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டது, 2009 மே 17ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டது, மற்றும் 2009 மே 19ஆம் திகதி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது ஆகியன இந்தக் காணொலிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர வெளியிடப்பட்ட மற்றொரு காணொலி மற்றும்ஒளிப்படங்கள் 2009 மே 17ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஸ் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சியைக் கொண்டது. கேணல் ரமேசை சுற்றி நிற்கும் சிறிலங்கா படையினர் கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், அப்போது சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவுக்கு கேணல் ரால்ப் நுகேரா தலைமை தாங்கியிருந்தார் என்றும் காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. வன்னிப் போர் நடவடிக்கையின் போது, கேணல் ரமேஸ் படுகொலை செய்யப்பட்டது மட்டுமே கொமாண்டா படைப்பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட ஒரே போர்க்குற்றம் அல்ல. முதலில் பிரிகேடியர் சாஜி கல்லகேயும், பின்னர் பிரிகேடியர் சவீந்திர சில்வாவும் இந்தப் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியிருந்தனர். சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58வது டிவிசனும் அப்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. இருந்தபோதிலும் அந்தப் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எனவே மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கிலேயே இந்த காணொலி மற்றும் ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வன்னிப் போரின் போது, ஊடகவியலாளர்கள் மாத்திரமின்றி, இராணுவத்தினர் கூட குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. எனினும் மூத்த அதிகாரிகளுக்கு மட்டும் சுதந்திரமாக எங்கும் செல்லும் அனுமதி இருந்தது. ஒரு கட்டளை அதிகாரி தனது வாகனத்தில் ரூபவாகினி ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவரை தான் செல்லும் போர்க்களப் பகுதி எங்கும் அழைத்துச் சென்றிருந்தார். இந்த ஒளிப்படப்பிடிப்பாளரிடம் பல ஒளிப்பதிவுக் கருவிகள் இருந்தன. போர்முனைக் காட்சிகளை படம்பிடிக்க ரூபவாகினி முத்திரை பதிக்கப்பட்ட ஒளிப்படக்கருவி தவிர்ந்த வேறு கருவிகளை அவர் ஏன் பயன்படுத்தினார் என்ற சந்தேகம் உள்ளது. மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண நன்று அறியப்பட்ட மற்றும் அமைதியான ஒரு அதிகாரி. அவர் மீது சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஊடகங்களுடன் அவ்வளவு நெருக்கமானவர் அல்ல. எனவே அடுத்த இராணுவத் தளபதி பதவிக்கு அவரே கோத்தபாய ராஜபக்சவின் தெரிவாக இருக்கும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

08 ஏப்ரல் 2013

செங்கலடியில் விப்ரா மளிகைக்கடை உரிமையாளரும் அவரது மனைவியும் வெட்டிக்கொலை!

மட்டக்களப்பு, செங்கலடியில் இளம் வர்த்தகரும் அவரது மனைவியும் அவர்களது வீட்டில் வைத்து நள்ளிரவு நேரம் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. செங்கலடிச் சந்தியிலுள்ள விப்ரா மளிகைக் கடை உரிமையாளரான சிவகுரு ரகு ( 48வயது) மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா (41வயது) ஆகியோரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். செங்கலடி – பதுளை வீதியில் உள்ள இவர்களது வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத ஆயுதம் தரித்த கும்பல் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளதுடன் கத்தியினால் கழுத்துப் பகுதியில் வெட்டியும் உள்ளனர். இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒரு அறையில் கணவன் மனைவியும் இன்னுமொரு அறையில் இரண்டு பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மிதிவெடியில் சிக்கி பணியாளர் பலி!

2(2126)[1]முகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை 9.55 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த கே.முருகவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

07 ஏப்ரல் 2013

"இளந்திரையன் மனைவி,பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம்"

லோகினி ரதிமோகன்
லோகினி ரதிமோகன்
விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி,பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் பிபிசிக்கு தகவல் தந்துள்ளார். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த இளந்திரையன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தமக்குத் தெரியாது என இளந்திரையன் குடும்பத்தார் தன்னிடம் கூறியதாக லோகினி தெரிவித்தார்.துபாயில் ஐநா அகதிகள் உதவியமைப்பின் (யு என் எச் சி ஆர்) பொறுப்பில் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களில் லோகினியும் ஒருவர். தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சிங்கப்பூர் கடற்படையால் காப்பாற்றப்பட்டு துபாயில் தற்போது யு என் எச் சி ஆர் பொறுப்பில் இருக்கும் 19 இலங்கைத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைகள் அமைப்பு சனியன்று கோரியிருந்த நிலையில் லோகினி ரதிமோகன் தமிழோசையிடம் பேசினார். விடுதலைப் புலிகள் நடத்திவந்த தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக தான் பணியாற்றி வந்தவரென்றும்,யுத்தம் முடிவடைவதற்கு முன்னால் தான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தனது கணவர் இந்தியாவில் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பிழைக்க வழியில்லை என்பதாலும்,எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிடலாம் என்பதாலும் அங்கிருந்து கிளம்பி ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாக அவர் கூறினார். ஆஸ்திரேலியா செல்லும் வழியில் படகு பழுதடைந்த வேளையில் ஐநா அகதிகள் உதவி அமைப்பை தொடர்புகொண்டபோது, சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு துபாய் வந்து சேர்ந்ததாக அவர் கூறினார். தான் வந்த படகில் இருந்த 46 பேரில் 39 பேரை அகதிகளாக யு என் எச் சி ஆர் அங்கீகரித்தது என்றும், ஏனையோர் 7 பேர் இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் லோகினி சொன்னார். அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களில் பாதியளவானோருக்கு அமெரிக்கவும் சுவீடனும் அடைக்கலம் அளித்துள்ளது ஆனால் எஞ்சியுள்ள 19 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார். இலங்கைக்கு தான் திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தான் அஞ்சுவதாக லோகினி கூறினார். இலங்கையில் வாழும் தமது குடும்பத்தாரும் தன்னை வர வேண்டாம் என்று அறிவுறுத்துவதாக அவர் கூறினார். விடுதலைப் புலிகளுடைய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த இசைப்பிரியா கொல்லப்பட்டதை தான் அறிந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

நன்றி:பி.பி.சி.தமிழ் 

புலம்பெயர் தமிழர் விபரம் கோரல் திசை திருப்பும் நடவடிக்கை!

யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடாத்த வெளிநாட்டு உதவிகள் அவசியமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு உள்ளிட்ட யுத்தம் இடம்பெற்ற அரசாங்க அதிபர் காரியாலயங்களில் யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என அரசாங்கம் அறிவித்திருந்தது. சர்வதேச சமூகத்தையும் நாட்டு மக்களையம் திசை திருப்பும் மற்றுமொரு முயற்சியாகவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கருத வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் தொடர்பான அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் 70000 மக்கள் யுத்த வலயத்தில் சிக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும் , பின்னர் 287000 மக்கள் இடம்பெயர் மக்கள் அரசாங்க முகாம்களில் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு தரவுகளைக் கொண்டே சரியான விபரங்களை வெளியிட முடியாத நிலையில் வெளிநாட்டு உதவிகளையும் பெற்றுக்கொண்டால் புள்ளி விபரங்கள் மேலும் குழப்பமாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ வரலாறு பாடப்புத்தகங்களில் வேண்டும்-மாணவர்கள் தீர்மானம்

தமிழீழ வீர வரலாற்றைத் தமிழக மாணவர்களின் பாட நூல்களில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டக் கல்லூரிகளின் மாணவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துச் சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

*இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. இது குறித்து நம்பத் தகுந்த சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

*ஈழத் தமிழர்களுக்குத் தனித் தமிழீழமே ஒரே தீர்வு. இதனை ஐக்கிய நாடுகள் சபை பொதுவாக்கெடுப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும். 

*இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். அத்துடன் இலங்கையுடான உறவை இந்தியா கண்டிக்க வேண்டும்.

*இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும். 

*தமிழீழ வரலாற்றை தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

06 ஏப்ரல் 2013

நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!

வீர வேலன் எங்கள் தோழன்
ஊருக்கு நீ பாலகன்
வீரர்களுக்கு நீ மாவீரன்
கண்ணி வெடிகளை
தாண்டித்தாண்டி தான்
நீ நொண்டி விளையாடினாய்...
கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி
நீ பந்து விளையாடினாய்....
பதுங்கு குழிகளுக்குள் மறைந்து
கண்ணாமூச்சி விளையாடினாய்... 
நீ விளையாடிய விளையாட்டையும்
கொரில்லா பயிற்சியாக
ரசித்தார் உம் தந்தை
உலகத் தமிழ்த் தந்தை...
கையில் கொடுத்த பிஸ்கட்டுகளையும் 
நெஞ்சை துளைத்த குண்டுகளையும்
ஒன்றாகவே பார்த்த வீரன்...
வயிற்று பசிக்கு பிஸ்கட்டையும்
மார்பு பசிக்கு குண்டுகளையும்
உண்ட வீரன்... நீ!
பூக்களின் தேசத்தில் போர்க்களம்
புத்தன் கை பிடித்தே
யுத்தம் செய்த ஆரிய அரக்கன்...
புத்தமும் காந்தியமும் கை கோர்த்தே
பாலச்சந்திரனின் 'புன்னகையை'
புதைகுழிக்குள் தள்ளியது
வீரமும் ஈரமும் நிறைந்த இனத்தில்
துரோகமும் ஒன்றாகிப் போன
'விஷத்தின்' விரல் பிடித்தே
எங்கள் பாலகனின் மார்பைத் துளைத்தாய்
கரிகாலன் பெற்றெடுத்த
மாவீரனின் மார்பை 'கரு'(னா)நாகத்தின்
துணைகொண்டு துளைத்தாய்
உன் மார்பில் துளைத்தது
தோட்டாக்கள் அல்ல
தமிழின துரோகத்தின் அடையாளம்... 
ஊடுருவிக் கொன்ற துரோகத்தின் 
தலையெடுக்கவே தகிக்கின்றது
மானமுள்ள தமிழர்களின் கரங்கள்...
முடங்கி சுரணையற்றுக் கிடக்கும் 
தமிழ் மூடர்களை முடுக்கிவிட்டுள்ளது
உன் வீர மரணம்... 
நீ பிணமல்ல... சோம்பிக் கிடந்த
தமிழர் இதயங்களை எரியூட்டும் தீ! 
நீ மூட்டிய தீயில் கருகிப் போவார்கள்
'கருணை' இல்லா குருடர்கள் 
உன் சிதைக்கு மூட்டிய தீ
காற்றோடு காற்றாக
கடல் தாண்டிப் பரவட்டும்...
தமிழ் பேசும் நெஞ்சங்கள் எல்லாம்
சுவாசமாய் மாறட்டும்...
எம் மண்ணோடு கலந்துள்ளது
உன் வீர சாம்பல்...
அங்கே முளைக்கும் பயிரும்
பாலகனும் எங்கள் பாலச்சந்திரனாய் பிறப்பான்...
ஆயிரமாயிரம் புதிய
பாலச்சந்திரன்களாய் பிறப்பான்...
அதுவரையிலும்
உன் சாம்பல் பூசி
துரோகிகளின் தோலுரிக்க
எதிரிகளின் உயிரெடுக்க
உலகமெங்கும் துடித்துக் கொண்டுள்ளது
ஈரமுள்ள வீரமுள்ள நல்லோர் இதயங்கள்...

-சே.த.இளங்கோவன்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைது!

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த போது கரையோர பாதுகாப்பு படை பிரிவினரும், இலங்கை கடற்படை பிரிவினரும் இணைந்து இவர்களை நேற்றிரவு 8 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 26 மீனவர்களும் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் இலங்கை கடற்படையினரால் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு காரைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் 5 ரோலர் படகுகளில் அத்துமீறி நுழைந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் 26 பேரும் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

05 ஏப்ரல் 2013

கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் கடத்தப்பட்டு சித்திரவதை!

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான அங்கயன் மற்றும் அவரது தந்தையார் இராமநாதன் ஆகிய இருவரும் தம்மை கடத்திச்சென்று சித்திரவதைகளை மேற்கொண்டதாக கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இக்கடத்தல் மற்றும் தாக்குதல் தொடர்பாக அவர் வெள்ளவத்தை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த புதன்கிழமை வழமை போன்று தான் கொழும்பு சென்றிருந்த நிலையில் வெள்ளவத்தைப்பகுதியில் வைத்து பிற்பகல் 2.30 மணியளவில் தன்னை கைத்துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற அங்கயனின் தந்தையாரான இராமநாதன் தமது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் தன்னை மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்தார்.அத்துடன் சுமார் ஜந்து மணிநேரமாக தனித்து வைத்து சித்திரவதைகளையும் அவர்கள் மேற்கொண்டதாக கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் மேலும் குற்றம் சாட்டினார்.இன்று யாழ்.ஊடக அமையத்தினில் அவர் பத்திரிகையாளர் மாநாடொன்றை கூட்டியிருந்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் நல்லூர் கோவில் வீதியினில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அமைப்பாளரொருவருக்கு சொந்தமான விபச்சார விடுதி கைப்பற்றப்பட்டிருந்தது.இதன் பின்னணியினில் தாமே இருந்ததாக குற்றஞ்சாட்டியே தம்மை கடத்தி; தாக்குதல்களையும் சித்திரவதைகளையும் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அங்கு அங்கஜனும் பிரசன்னமாகியிருந்ததாகவும் தமக்கும் அரசுக்கும் எதிராக சேறு பூசும் வகையில் வெளிநாட்டு இணையங்கள் சில செயற்படுவதாக குற்றஞ்சாட்டியே தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்த நிசாந்தன் அத்தகைய ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு நிர்ப்பந்தித்ததாகவும் கூறினார்.துப்பாக்கி முனையில் தன்னை தடுத்து வைத்து வாக்குமூலங்கள் பெற்று அவற்றை வீடியோ பதிவு செய்ததாகவும்; வெள்ளை தாள்களில் மிரட்டி ஓப்பங்கள் பெறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் விந்தன் ஆகியோரும் இவ்வாறு இலங்கை அரசுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்வதாக குற்றஞ்சாட்டி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே கடந்த காலங்களினில் இடம்பெற்ற ஆட்கடத்தல்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாமென சந்தேகம் வெளியிட்ட அவர் தான் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார். ஈபிடிபி சார்பில் போட்டியிட்டு யாழ்மாநகரசபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட நிசாந்தன் பின்னா அங்கு முரண்பட்டு வெளியேறியிருந்தார்.பின்னர் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான அங்கயன் தலைமையில் இணைந்து பணியாற்றியிருந்தார். பின்னர் அங்கும் முரண்பட்டு தற்போது கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.

புலம்பெயர் தமிழரின் விபரத்தை தேடுகிறது சிறீலங்கா!

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் தகவல்களை திரட்டுவதில் சிறிலங்கா அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இறுதிக்கட்ட போரின் போது பலியானவர்கள் எண்ணிகையை கணக்கிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இதன்படி தமது நாடுகளில் புகலிடம் தேடியவர்கள் பற்றிய தகவல்களைத் தருவதற்கு பல மேற்குலக நாடுகள் தயக்கம் காட்டி வருவதால் போரின்போது எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற சரியான கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாதுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 2006ம் ஆண்டு முதல் இடம்பெற்ற போரின்போது விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எத்தனை பேர் இறந்தனர் என்ற கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன. இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, முறைப்படியான விசாரணைக்கு, சிறிலங்காவில் இருந்து எத்தனை பேர் புலம்பெயர்ந்தனர் என்ற சரியான கணக்குத் தேவைப்படுகிறது. 2009 இல் போரின் முடிவில் காணாமற்போனவர்களாகவும், மரணமானவர்களாகவும் கருதப்பட்டவர்கள் பலர் இப்போது வெளிநாடுகளில் உள்ளனர். விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இவ்வாறான பலர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் இன்னமும் அவர்களை பொதுமக்களாகவே வலியுறுத்துகின்றனர் என சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

04 ஏப்ரல் 2013

தமிழீழம் மலர வேண்டும் என்ற கொள்கை தீ! அது இலக்கை அடையும் வரை ஓயாது!

picஈழ தமிழர்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டி தமிழகம் முழுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது தமிழக அரசு…பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏப்ரல் 3 புதன்கிழமையில் இருந்து தமிழக கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது மூடியது கல்லூரியின் கதவுகள் தான் எங்கள் இதயங்கள் அல்ல! எங்கள் இதயங்களில் எரிந்து கொண்டு இருக்கும் தீ! தமிழீழம் மலர வேண்டும் என்ற கொள்கை தீ! அது இலக்கை அடையும் வரை ஓயாது! அணையாது!’ என்றவாறே சேலம் வின்செண்டில் இருக்கும் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக முள்ளுவாடி கேட் அருகே இருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகை இட முயற்சித்து கல்லூரியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் புறப்பட்டனர். ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கே குவிக்கப்பட்டு கல்லூரி வாசலிலேயே மாணவர்கள் தடுக்கப்பட்டனர். எனவே தங்கள் உணர்வை காட்டும் விதமாக அவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். ஆனாலும் சில நிமிடங்களில் குண்டு கட்டாக தூக்கி அவர்களை காவல்துறை கல்லூரிக்குள் அனுப்பினர். மாணவர்கள் சார்பாக பேசிய மனோஜ் மற்றும் மாணவர்கள், ‘எங்கள் தமிழினம் உறவுகள் அங்கே அழிக்கப்பட்டுள்ளது அவர்களை அழித்த ஆயுதங்கள் காங்கிரஸ் இந்திய மத்திய அரசு தந்தவைகள். அப்படியிருக்க இங்கே உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நீலி கண்ணீர் வடிக்கின்றனர் மறுபுறம் ஈழ தமிழர்களுக்கு எதிராக உள்ளனர் நம் இனத்திற்காக ஜனநாயக முறையில் போராடிய மாணவர்களை காங்கிரஸ் குண்டர்கள் தாக்கியுள்ளனர். இங்கே அதை கண்டித்து நாங்கள் ஒட்டிய போஸ்டர்களை அவர்கள் கிழுத்துள்ளனர் இதையெல்லாம் காவல்துறை கண்டுகொள்வதில்லை ஆனால் போராடும் மாணவர்களை மட்டும் தடுத்து ஒடுக்கி வருகிறது தவறு செய்த காங்கிரஸ் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போட்டு வருகிறது காங்கிரசிற்கு தில் இருந்தால் எங்கள் கல்லூரி முன் வந்து எதிர்க்கட்டும் பார்க்கலாம். தமிழினத்திற்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியையே நாடு கடத்த வேண்டும். இம்மண்ணை விட்டு விரட்ட வேண்டும் இலங்கைக்கு சாதகமாகவே தீர்மானம் போட்ட அமெரிக்காவை எதிர்க்கும் விதமாக அவர்களின் கோக் பெப்சி பொருட்களை நாங்கள் புறக்கணிக்கிறோம் தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. கல்லூரி திறந்தாலும் மூடினாலும் எங்கள் இதயங்களில் எரிந்துகொண்டு இருக்கும் தனி ஈழ தீ அணையாது’ என்றனர் உணர்ச்சிப்பூர்வமாக…

03 ஏப்ரல் 2013

உதயன் மீதான தாக்குதலுக்கு த.தே.ம.மு.கண்டனம்!

20130403-114932.jpgஉதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீதும் அலுவலகத்தின் மீதும் கண்மூடித்தனமாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீதும் அலுவலகத்தின் மீதும் இன்று அதிகாலை 5.00 மணியளவில் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விநியோகத்திற்காக பத்திரிகையினை எடுத்துச் சென்றிருந்த பணியாளர்கள் இருவரும், அலுவலகத்தில் கடமையில் இருந்த முகாமையாளரும் உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளதுடன், வாகனம் மற்றும் அலுவலகத்திலிருந்த கணணிகள் மற்றும் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதி உச்ச இராணுவ பிரசன்னம் மற்றும் இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகளால் முடக்கப்பட்டுள்ள கிளிநொச்சி போன்றதொரு இடத்தில் சிறீலங்கா அரசினது ஆசீர்வாதம் இல்லாது இவ்வாறான தாக்குதல் ஒருபோதும் நடைபெற்றிருக்க முடியாது. அந்த வகையில் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இராணுவத்தினருடைய புலனாய்வுப் பிரிவினரே இருந்திருப்பார்கள் என்ற முடிவைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வரமுடியாதுள்ளது. இந்த சம்பவம் என்பது சர்வதேச சமூகத்தினுடைய கவனம் இலங்கையில் விமர்சன ரீதியாக கூடுதலாக செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடைபெற்றுள்ளது. இது சிங்கள பௌத்த தேசியவாத நிகழ்ச்சிநிரலை முன்nகொண்டு செல்வதில் எந்தவொரு அழுத்தத்திற்கும் சிறீலங்கா அரசு அடிபணியப் போவதில்லை என்பதனை நிரூபித்துக் காட்டுகின்றது. தொடர்ச்சியாக தமிழ் இனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வாறான தாக்குதல்கள் அனைத்தும், இலங்கைத் தீவில் தமிழர் தாயகப் பிரதேசம் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆதிக்கத்தினுள் இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசிய இருப்பு என்பது எவ்வளவு பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்பதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது. இந்த சம்பவங்கள் அனைத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மிக மோசமான பலவீனங்களை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இந்தப் பின்னணியில் இவ்வகையான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு கட்டங்களிலும் இவற்றை வெறுமனே கண்டிப்பதுடன் நின்றுவிடாது, இவற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய வகையில் தமிழ் அரசியல் தலைமைகள் தெளிவாக கோரிக்கைகளை முன்வைத்து செயற்பட வேண்டும். இதுவே இன்றைய தேவையாகும். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தரப்பினருக்கே தெரியும், அவ்வாறான பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது. இதுவே இயற்கை நியதியாகும். அந்த வகையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்களுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஒட்டுமொத்த தமிழ் தேசத்தின் மீதான அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒரு நிலைமாற்று நிர்வாகம் ஒன்றினை உருவாக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றது. இந்த உண்மையை அனைத்துத் தமிழ்த் தரப்புக்களும் உணர்ந்து வலியுறுத்த வேண்டுமெனக் கோருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.