பக்கங்கள்

17 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ஸ்ரீலங்கா பிரச்சாரம்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரியளவிலான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது. நிபுணர் குழு அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையில் ராஜதந்திர ரீதியிலான தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என சிங்கள அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட அணிசேரா நாடுகள் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் எதற்காக அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது என்பதனை தெளிவுபடுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியான தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலான ஆவணமொன்று தயாரிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலும், தாக்குதல்களுக்கான இன்றியமையா அவசியம் தொடர்பிலும் இந்த ஆவணத்தில் தெளிவுபடுத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள், பயங்கரவாத இல்லாதொழிப்பின் மூலம் வடக்கு தெற்கு மக்கள் அடைந்த நன்மைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட உள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கப் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு இராஜதந்திர ரீதியிலான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையிலான ஆவணமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டமா அதிபர், முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்களான நிஹால் ரொட்ரிகோ, எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார மற்றும் பெர்னாட் குணதிலக்க ஆகியோர் இந்த ஆவணத் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.