பக்கங்கள்

25 செப்டம்பர் 2021

கோத்தாவிற்கு எதிராக களம் கண்ட நாடுகடந்த தமிழீழ அரசு!

சிறிலங்கா அரசுத்தலைவர் கோத்தபாய இராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருக்க, சிறிலங்காவை சர்தேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பினார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கோத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை புதன்கிழமை ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது. ஓர் போர்குற்றவாளியை ஐ.நா தனது அரங்கில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டதனை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைகின்றோம். இனப்படுகொலையாளி ஒமர் அல்-பஷீர் இந்த அரங்கில் உரையாற்றினார் என்ற உண்மையை அறிவோம். உகண்டா நாட்டு சர்வாதிகாரி இடி அமீன் ஒருமுறை இந்த அரங்கில் உரையாற்றினார் என்பதையும் அறிவோம். இந்நிலையில் இந்த அரங்கில் (.ஐ.நா) கோத்தா உரையாற்ற அனுமதிக்கப்பட்டதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குரலெழுப்பியிருந்தார். சர்வதேச நீதிப்பொறிமுறையினை நிராகரித்து உள்ளகபொறிமுறை குறித்து தனது நிலைப்பாட்டை கோத்தா வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றிய பிரதமர் வி.உருத்திரகுமாரன், பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச நீதிப்பொறிமுறை என்பது தமிழர்களின் நிலைப்பாடு மட்டுமன்றி, அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு என்பதனை வலியுறுத்தினார். சிறிலங்கா அரசு, அதன் அரசாங்க கட்டமைப்பு யாவிலும் ஆழவேரூன்றியுள்ள இனநாயகம், இனவெறியின் உண்மையினை உலகம் அறியும் என்பதோடு, இதன் ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க இடமில்லை என்பதனை, சிறிலங்காவின் வரலாறு பல தசாப்தங்களாக நன்கு நிரூபித்துள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்திருந்தார். தமிழினத்தின் மீது நடந்தேறிய குற்றங்கள் என்பது ஒரு தனிநபராலோ அல்லது தனிப் பட்டாலியனாலோ அல்ல, மாறாக சிறிலங்கா அரசால் நிகழ்தப்பட்டது. குற்றத்தை புரிந்தவரே நீதிபதியாக இருக்க முடியாது என்பது பொது அறிவு மற்றும் அடிப்படை சட்டக் கொள்கையாகும் என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறித்துரைத்திருந்தார். கோத்தபாயாவுக்கு தார்மீக தைரியம் இருந்தால், சிறிலங்காவின் தலைவராக ரோம் சட்டத்தில் கைச்சாத்திட்டு, பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் சவால் விடுகிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்ததோடு, அவர் அதை செய்ய மாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவர் ஒரு கோழை என இடித்துரைத்தார். ஐ.நாவில் உரையாற்ற கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஐ.நாவின் நெறிமுறைகள் அனுமதித்தாலும், 1987ம் ஆண்டு ஐநாவில் பொதுச்சபைக்கு வருவதற்கு அப்போதைய ஒஸ்திரிய அதிபர் கர்ட் வால்ட்ஹெய்முக்கு விசா வழங்க மறுத்ததைப் போலவே, கோதாவுக்கும் அமெரிக்கா அனுமதி மறுத்திருக்கலாம் என்பதையும் கூற வேண்டும். இரண்டாம் உலகப் போரில் அவர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்ற அடிப்படையில் மறுக்கப்பட்டதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை, கோத்தாவை தனது கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்து, எதிர்காலத்தில் அவர் நுழைவதை மறுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் எனக் கோரியிருந்த வி.உருத்திரகுமாரன், இன்று கோத்தாவுக்கு சத்தமாகவும் தெளிவாகவும் இங்கிருந்து ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம். பஷீருக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அவருடைய அணியில் சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் உள்ளே உரையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் கோத்தபாயவை நோக்கி இடித்துரைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 செப்டம்பர் 2021

அரசியல் கைதிகளை மிரட்டிய அமைச்சர்,கஜேந்திரகுமார் கண்டனம்!

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளிடச் செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 12ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை முழந்தாளில் இருக்க செய்துள்ளார். பின்னர் அவர் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இதனை உறுதிப்படுத்த முடியும், இராஜாங்க அமைச்சரின் கொடுரமான நடவடிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக கண்டிக்கின்றது. உலகின் மிகவும் பயங்கரமான சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,சிலர் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அவர்களிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலன்களை கவனிக்க வேண்டிய அமைச்சர் அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளமை அவர்களது நிலையை மேலும் மோசமாக்கியிருக்கும். குறிப்பிட்ட அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும் அவரது பொறுப்புகளை பறிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது. ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐநா மனித உரிமை பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாகவும் பதிவிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையை ஒரு பொருட்டாகக் கருதாத இலங்கையை தொடர்ந்தும் ஐநா மனித உரிமைப் பேரவைக்குள் வைத்திருப்பது அர்த்தமற்றது எனவும், அதற்கு அப்பால் குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

08 செப்டம்பர் 2021

புலமைப்பித்தனின் இல்லத்தை மறு தாயகம் என புலிகள் கூறினார்கள்!

உடல்நலக் குறைவால் காலமான அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் (வயது 86) உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது புலமைப்பித்தனின்  மனைவி கதறி அழுதார். அவரது கையை பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.1935-ம் ஆண்டு கோவையில் பிறந்தவர் புலமைப்பித்தன். 1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகத்துக்கு வந்தார்.அந்த படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நான் யார்? நான் யார்? என்ற பாடல் இன்றளவும் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு புலமைப்பித்தன் பாடல்கள் எழுதினார். குடியிருந்த கோவில், அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் புலமைப்பித்தன். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களான பிரபாகரன், பேபி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் புலமைப்பித்தன் வீட்டில் தங்கி தங்களது பணிகளை செய்ததும் வரலாறு. புலமைப்பித்தனின் வீடு தங்களது இரண்டாவது தாயகம் என்றுதான் அந்நாளில் புலிகளின் தலைவர்கள் கூறியதை அவரே பல பேட்டிகளில் பதிவும் செய்திருக்கிறார்.1964-ல் தொடங்கிய புலமைப்பித்தனின் திரைப்பயணம் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த எலி திரைப்படம் வரை இடைவிடாமல் தொடர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கருத்தில் உறுதியானவராகவும் இருந்தார். கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புலமைப்பித்தன். அண்மையில் மருத்துவமனையில் புலமைப்பித்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா. இன்று காலை சிகிச்சை பலனின்றி புலமைப்பித்தன் காலமானார். அவரது உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அதிமுகவின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர். சரஸ்வதி, திருமுருகன் காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.முன்னதாக புலமைப்பித்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலை கேள்விப்பட்டு நேற்று நேரில் சென்று சசிகலா, புலமைப்பித்தனிடம் நலம் விசாரித்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இதயக்கனி திரைப்படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கணும் என்ற பாடலின் மூலம், அதிமுகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல தோள் கொடுத்தவர் புலமைப்பித்தன் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.ஆரம்ப காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி சேகரித்து வழங்கியவர் புலவர் புலமைப்பித்தன் என்பது குறிப்பிடத்தக்கது. 

05 செப்டம்பர் 2021

ஜோர்ஜ் மாஸ்ரர் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் பருத்தித்துறையில் இன்று காலமானார். பருத்தித்துறையில் 1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையில், மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார். இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன், நடைபெற்ற அனைத்து பேச்சுக்களின் போதும், பிரதான மொழிபெயர்ப்பாளராக அவர் செயற்பட்டிருந்தார். இறுதிப்போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அவர், 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் பருத்தித்துறையில் வசித்து வந்த நிலையிலேயே இன்று அவர் காலமானார் என செய்திகள் தெரிவிக்கின்றன.