பக்கங்கள்

17 ஜனவரி 2023

யாழ்ப்பாண அரச அதிபராக சுருவிலூர் சிவபாலசுந்தரன் நியமனம்!

3 பேர் மற்றும் நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் இன் படமாக இருக்கக்கூடும்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை நியமனம் செய்வதற்கான அனுமதியை 16 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவை வழங்கியுள்ளது. இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.தீவகத்தின் சுருவிலை சொந்த இடமாக கொண்ட இவர் பிரபல கவிஞரும்(கவிஞர் ஆரணி) ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

05 ஜனவரி 2023

சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்-கஜேந்திரகுமார்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை சந்திக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலளார் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என நோக்காது, ஆட்சி மாற்றத்திற்கான முன்னேற்பாடாக இதனைக் கருதி வாக்களிக்க வேண்டும் எனக் கோரினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம். நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதாக இருந்தால் நிலையான அரசாங்கம் அமையவேண்டுமென சர்வதேச நிதி நிறுவனங்கள் விரும்புகின்றன. நாடாளுமன்ற தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவது நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும். ஒற்றையாட்சிக்குள் ஏக்கியராஜ்ஜியவை ஏற்றவர்கள் 13ஆம் திருத்ததை ஏற்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் வாக்குபெறுவதற்காக தற்போது தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி சிறிலங்கா அரசாங்கத்தின் கூலிகள் - போலித் தமிழ் தேசிய வாதிகள் இவர்களை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டார்.

மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைக்காதே!

ஆக்கிரமிப்பு இராணுவமே மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைக்காதே ஸ்ரீலங்கா இராணுவமே எமது மண்ணில் இருந்து வெளியேறு' என்ற கோஷங்களை எழுப்பியவாறு குறித்த வாசகம் எழுதிய பதாகையை கையில் ஏந்தியவாறு மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ப.அரியநேத்திரன் ஞா.சிறிநேசன்,மாநகர மேயர் தி.சரவணபவன் செங்கலடி பிரதேச சபை தவிசாளர் சி.சர்வானந்தன் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சி.வவானந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட பொறுப்பாளர் த.சுரேஸ் ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர்களான கு.வி.லவக்குமார் எஸ்.நிதர்சன் மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். துயிலும் இல்லத்துக்கு முன்பாக ஒன்று கூடியவர்கள் “இராணுவமே வெளியேறு”, “துயிலும் இல்லங்களை அபகரிக்காதே”, “வன இலகா என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யாதே”, “மாவீரர்களை அவமதிக்காதே”, “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “ரணில் அரசே பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டாதே” போன்ற கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு வன பாதுகாப்பு திணைக்களம், “தொப்பிகல ஒதுக்கு காடு” என பெயர் பொறித்து துயிலும் இல்லத்தில் திடீரென நடப்பட்டதாக கூறப்படும் பெயர் பலகையையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கற்கலால் எறிந்து சேதப்படுத்தி அப்பகுதியில் இருந்து பிடுங்கி அகற்றினர். அங்கு நடப்பட்டிருந்த மரக்கன்றுகளும் பிடுங்கப்பட்டன. கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த நவம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு 25 ஆம் 26 ஆம் திகதிகளில் மாவீரர் தினம் தொடர்பான பதாதை காட்சிப்படுத்தப்பட்ட போது அவை கிழித்தெறியப்பட்டிருந்தன. பின்னர் குறித்த பிரதேசத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகளை அரச இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்டாக தெரிவித்து தரவை ஏற்பாட்டுக் குழுவினருக்கும் புலனாய்வு பிரிவினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மரக்கன்றுகள் நடும் விடயத்திற்கும் தமக்கும் தொடர்பில்லையென வாழைச்சேனையில் அமைந்துள்ள வன இலகா தினைக்கள அதிகாரி தெரிவித்திருந்தார். தற்போது அதே இடத்தில் குறித்த திணைக்கள அமைச்சின் பெயர் தாங்கிய பெயர் பலகை இடப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக இரு சாராருக்கும் இடையில் மாறி மாறி சச்சரவுகள் இடம்பெறுவது தொடர் கதையாகவுள்ளது. மேற்படி விடயத்தினை கண்டித்தும் குறித்த செயற்பாட்டினை நிறுத்தி தருமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுக்கின்றனர். எனவே மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமிப்பு செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிடும் வரையில் அரசாங்கத்துடனனான பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லை என்ற தீர்மானத்தை தமிழ்க் கட்சிகள் எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.