பக்கங்கள்

28 செப்டம்பர் 2017

ஆறறிவு மிருகம் குதறிய ஜீவனை ஐந்தறிவு மிருகம் தேடுகின்றது!.

ஆறறிவு மிருகம் குதறிய ஜீவனை ஐந்தறிவு மிருகம் தேடுகின்றது
. நெஞ்சை நெகிழவைக்கும் வித்தியாவின் ஐந்தறிவுள்ள நாய்....
விலங்கு மனத்தையும் விம்மி அழவைத்த வித்தியா!! உள்ளத்தை உருக்கிய பதிவுகள்! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவு பல்கோடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. பல தமிழ் மக்களை மட்டுமன்றி இனம் மதம் மொழி என அனைத்தையும் கடந்து மானுடத்தை நேசிக்கும் அத்தனை மக்களையும் அவளது பிரிவு உலுக்கியது. அந்த வகையில் மனிதர்களை மட்டுமன்றி
 ஐந்தறிவு படைத்த சீவன் ஒன்றைக்கூட அந்த இளங்குருத்து வாடிப்போன சம்பவம் வேதனையில் வாட்டியுள்ளது. மாணவி வித்தியா செல்லமாக ஒரு நாயினை வளர்த்து வந்துள்ளாள். சிறு குட்டியாக இருக்கும்போதே அதனை வளர்த்தபடியால் அதற்கு ‘குட்டி’ என்று பெயர் சூட்டினாள். செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த நாய், வித்தியா தினமும் பாடசாலை செல்லும்போது வீதிவரை அவளது தாயோடு வந்து வாலாட்டி வழியனுப்பிவைக்கும். பின்னர் பாடசாலை முடித்து வீடு வரும்போதுகூட வாலைக்குழைத்தபடி வித்தியாவை வட்டமிடும். வித்தியா இந்த மண்ணை விட்டு மறைந்து புண்ணிய சொர்க்கத்தில் குடிபுகுந்தபோது இந்த ஐந்தறிவு சீவனும் கோடானகோடி மக்களில் ஓருயிராக கதிகலங்கிப்போனது. சாவு நிகழ்ந்த அந்த நாட்களில் மிகுந்த சோகத்துடன் இந்த நாய் காணப்பட்டுள்ளது. வித்தியாவின் உடலம் புதைக்கப்பட்ட இடத்தையே சில நாட்களாக குறித்த நாய் சுற்றிச் சுற்றி வந்து வானத்தைப் பார்த்து ஊளை ஒலி எழுப்பியுள்ளது. வித்தியாவின் நாற்பத்தைந்தாம் நாளின்போது ‘குட்டி’யின் முன்னால் வித்தியாவின் அமருவப் படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்போது அந்தப் படத்தையே ‘குட்டி’ வெறித்தப்டி பார்த்துக்கொண்டு நின்றுள்ளது. இந்தக் காட்சி அப்போது அங்கே நின்ற மனிதர்களின் கண்களை மீண்டும் கலங்க வைத்துள்ளது. ஊதையிற் பட்ட பூளைப் பூவைப்போல் கயவர்களால் நூறி எறியப்பட்ட எங்கள் வித்தியாவின் ஆத்துமா மனிதத்தை மட்டுமன்றி ஐந்தறிவு விலங்கினத்தையும் உருகவைத்துள்ளமை இதனூடு கண்கூடாகின்றதல்லவா!

நன்றி:இராவணன் பாலம்(முக நூல்)

26 செப்டம்பர் 2017

சிறுவனின் கையை முறித்த கொடூரன்!

பருத்தித்துறை பகுதியில், 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறிய தந்தையும் அதை வேடிக்கை பார்த்த தாயையும் பொலிஸார் நேற்று கைது செய்தனர். சிறிய தந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபரே சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதன்போது சிறுவனின் தாயாரும் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிறுவனின் தாயாரும் சிறிய தந்தையும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

07 செப்டம்பர் 2017

தெருவில் விடப்பட்ட மூதாளரின் வீட்டை மீண்டும் பெற்றுக்கொடுத்த மனிதாபிகள்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்முரசறைந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டி மீண்டும் சொந்த வீட்டில் குடியேற்றப்பட்டார் -மனிதநேயச் செயற்பாட்டார்களின் நிதியுதவியில் வீடு மீட்கப்பட்டது- செய்தி மூலம் சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பிய சிவ தொண்டர் பொன் ராசாவும் விரைந்து செயலாற்றிய உண்மையான மனிதநேய சீலர்களும் மறக்க முடியாத சமூக முன்னுதாரணங்கள் காரைநகரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மூதாட்டியின் வீடு நேற்று மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன் அந்த பெண்மணி நேற்று மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார். காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற பெண்மணி பணத் தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் அறுதி உறுதி எழுதி ஈடு வைத்தார். சுமார் மூன்று இலட்சம் ரூபாவிற்கு ஈடு வைக்கப்பட்டது. உரிய காலத்தில் அந்த வீட்டை மீட்க முடியாத காரணத்தால் ஈடு பிடித்தவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையினல் அந்த வீடு ஈடு பிடித்தவர்களுக்குச் சொந்தமானது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மூதாட்டியின் வீட்டுக்கு பொலிஸார் சகிதம் வந்த நீதிமன்றப் பணியாளர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே, வீதியில் தூக்கி வைத்துவிட்டு அந்தப் பெண்மணியையும் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தனர். 'அவர்கள் வரும்போது பானையில் சோறு அவிந்துகொண்டிருந்தது. அந்தப் பானையை அப்படியே தூக்கி வெளியே வைத்தனர்' என மூதாட்டி அழுதவாறு கருத்து வெளியிட்டிருந்தார். மூதாட்டியின் நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களும் இணைய, அச்சு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டதன் அடிப்படையில் அவருக்கு உதவுவதற்கு பல தரப்பினரும் முன்வந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக மேஜர் இளமகள் என்ற மாவீரரைத் தந்த தாய் என்ற அடிப்படையில் அவர் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. இந்நிலையில், அவரது ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ளவர்கள் சிலர் தாங்களாக முன்வந்து பணத்தை திரட்டி அனுப்பியதன் பயனாக ஈடு பிடித்தவர்களுக்கு 5 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி அந்த வீடு மீண்டும் பெறப்பட்டு மூதாட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேம்படி காரைநகரில் உள்ள பாரதி கலைக் கல்லூரியின் புலம்பெயர் தேசத்தில் உள்ள செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான தம்பையா கருணாநிதி (பபி கனடா) எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது. மேலும், அவ்வூரைச் சேர்ந்த சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் முயற்சியால் 2 இலட்சத்து 96 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது. இதன்மூலம் அந்தக் காணி தற்போது மீட்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் சட்டத்தரணி சாருஜா சிவநேசனின் காரைநகரில் உள்ள அலுவலகத்தில் காணி மீளவும் அந்த மூதாட்டியின் பெயரில் எழுதப்பட்டது. இதன்போது ஈடு பிடித்தவர்கள், காணி உரிமையாளரான ஞானேஸ்வரி, பாரதி கலை மன்றம் மற்றும் சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அப்பிரதேச கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் நலன்விரும்பிகள் சிலரும் பிரசன்னமாகியிருந்தனர். காணி எழுதப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மூதாட்டியை அழைத்துச் சென்று அவரிடம் வீட்டுத் திறப்பைக் கையளித்து, வீட்டில் குடியேற்றினர். இதன்போது சட்டத்தரணி சாருஜா சிவநேசனும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். தனது வீடு மீண்டும் கிடைப்பதற்கு உதவி செய்த மனிதநேயம் மிக்க அனைவருக்கும் அந்த மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். தனது இறப்பு வரை அவர்களைத் தாம் மறக்கமாட்டார் எனவும் அவர் கூறினார்.

நன்றி:பரா நந்தகுமார்(முகநூல்)