பக்கங்கள்

23 ஏப்ரல் 2015

கனடியத் தமிழர்களின் நண்பன் பற்றிக் பிரவுண்!

கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் பற்றிக் பிரவுண் என்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது. கடந்த வாரம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற சமூக விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மேற்படி நிருபர் 36 வயதான திரு. பற்றிக் பிரவுணை சூழ்ந்து கொண்ட கோட்-சூட் அணிந்த தமிழ் ஆண்களும், சேலை அணிந்த தமிழ் பெண்களுமாக பலர் திரு. பற்றிக் அவர்களோடு மிக அன்னியோன்யமாகப் பழகியதா குறிப்பிட்டுள்ளார். சிலர் அவரை “ஹேய் பற்றிக்” என உரிமையோடு அழைத்தனர். வேறு சிலரோ அவரைத் தோளில் தழுவி நீர் எங்களில் ஒருவன் என உரிமை பாராட்டிச் சென்றனர், வேறு சிலரோ மிகவும் மரியாதையோடு கைலாகு கொடுத்துச சென்றனர் எனத் தெரிவித்த பத்திரிகையாளர், யாருமே திரு பற்றிக்கை அணுக சம்பிரதாயங்களைப் பார்க்கவில்லை, தங்களது பக்கத்து வீட்டுப் பையன் போல அவ்வளவு உரிமையோடு பழகினார்கள். அவருடன் தங்களின் விடயங்களை இலகுவாகப் பகிர்ந்து கொண்டனர் எனவும்,குறிப்பிட்டுள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட சாந்தா பஞ்சலிங்கம் என்பவர் “பற்றிக் தமிழர்களது நண்பன்” , “எங்களது இன்ப, துன்பமோ எந்த நிகழ்வென்றாலும் பற்றிக் எங்களுடன் நிற்பார்” எனப் பெருமிதமாகச் சொன்னார். ஒரு பல் வைத்தியரும், அவரது குடும்பமும் பற்றிக்குடன் படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த வைத்தியரின் மகனான சிறுவன் பற்றிக்கோடு மிகவும் உரிமையோடு பழகினான். பற்றிக்கை தெரிந்ததையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன் எனத் தெரிவித்த பொறியியலாளரான மூர்த்தி நாராயணன் பற்றிக் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயற்படுவதற்கு அவர் மரதன் வீரராய் இருப்பதுகூடக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். இவ்வாறு தமிழர்களிற்கும் திரு.பற்றிக் பிரவுனிற்குமான உறவை மேற்படி ஆங்கிலப் பத்திரிகை சிலாகித்துள்ள அதேவேளை, திரு.பற்றிக் பிரவுண் இந்து ஆலயமொன்றிற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதோடு அங்கிருந்த மக்களுடன் இணைந்து உணவருந்திச் சென்றார்.

17 ஏப்ரல் 2015

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் 27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர். இவரது நினைவுகளை சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீடுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலை புலிகளால் வெளியீடப்பட்ட நூல் "சமர்க்கள நாயகன்" அதனை தமிழகத்தில் இராவணன் பதிப்பம் தற்போது வெளியீட்டு வருகிறது. இதன் முதல் நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அணைத்து மாணவர்கள் இளைஞர்கள் இயக்கங்கள் இணைந்து நடத்தும் பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் நூல் அறிமுக விழா 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரி, பி.எட்.அரங்கத்தில் மதியம் 2 மணியளவில் நடை பெற உள்ளது. இவ் விழாவிற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் வருமாறு அழைக்கின்றனர். தொடர்புக்கு: 9600031771, 9884495527, 9940121655.

16 ஏப்ரல் 2015

தேசியத்தலைவரின் இருப்பிடத்தை நெருங்கிய இந்தியப்படைக்கு ஏமாற்றம்!

இந்திய அமைதிப்படையினரால் ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் இந்திய அமைதிப் படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய இந்திய வெளிவிவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியது குறித்து கருத்து வெளியிட்ட போதே, கேணல் ஹரிகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிவைக்க எடுத்த முடிவு கொள்கை ரீதியான உயர்மட்டத் தவறு என்று குறிப்பிட்டிருந்த ஜெனரல் வி.கே.சிங், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அமைதிப்படையினருக்கு பலமுறை சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், ஒவ்வொரு முறையும் பிரபாகரனை பத்திரமாகத் தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியான கேணல் ஹரிகரன், இதனை மறுத்தார். பிரபாகரனின் மறைவிடத்தை இந்திய அமைதிப்படையினரால் ஒருமுறை மட்டுமே நெருங்க முடிந்தது எனக்குறிப்பிட்ட அவர், அப்போது கூட பிரபாகரன் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார் எனத் தெரிவித்தார். “இந்திய அமைதிப்படையின் இராணுவக் குறிக்கோள்கள் தெளிவாக இருக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு முறைதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இந்தியப் படையினர் நெருங்கினர். அப்போது பிரபாகரன் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்திய- இலங்கை உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் அதிக அளவு உயிரிழப்புக்களை சந்தித்தது. நகர்ப்புறங்களில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை அமைதிப்படை கட்டுப்படுத்தினாலும், காடுகளுக்குச் சென்று பதுங்கிய விடுதலைப் புலிகள் கெரில்லா போர் முறையை கையாண்டு இந்திய அமைதிப்படைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். இந்திய அமைதிப்படை எத்தகைய அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றப் போகிறது என்ற தெளிவில்லாத சூழல் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது” என்றும் கேணல் ஹரிகரன் தெரிவித்தார்.

09 ஏப்ரல் 2015

தம்பாட்டியில் நண்டு பதனிடும் தொழிற்சாலை!

ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை, தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுவையும் போசாக்கு மிக்கதுமான நண்டுக்கு சர்வதேச அளவில் பெரும் சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால், உரிய பதனிடும் வசதி இல்லாததால் குடாநாட்டில் பிடிக்கப்படும் நண்டுகள் உள்@ர் மக்களினாலேயே நுகரப்பட்டு வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு நண்டுகளை ஏற்றுமதி செய்யும் நோக்கிலேயே இந்நண்டு பதனிடும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. தீவகக் கடற்பரப்புகளில் மாத்திரம் அல்லாமல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பிடிக்கப்படும் நண்டுகளையும் தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கொள்வனவு செய்து இத்தொழிற்சாலையில் பதனிடவுள்ளது. இதன் பின்னர் பதனிடப்பட்ட நண்டுகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டு தகரக் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். நண்டு ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு அன்னியச் செலவாணியை ஈட்டித்தருவதோடு, தம்பாட்டி கிராமத்தில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் இத்தொழிற்சாலை வழங்க உள்ளதாக தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நவீன வசிதிகளுடன்கூடிய இந்நண்டு பதனிடும் தொழிற்சாலையை இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் கிரற் லோஹீன், ஐக்கியநாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உயர் நிர்வாக அதிகாரியுமான ஹோலியாங்சூ, ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினைநந்தி மற்றும் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர். இத்தொழிற்சாலை அமைந்துள்ள ஏழு நெல்பரப்புக் காணியையும் அமரர் பொன்னுச்சாமி குமாரசாமி என்பவரின் ஞாபகார்த்தமாக அவரது குடும்ப உறவினர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

07 ஏப்ரல் 2015

புளியங்கூடல் தெற்கு அருள்மிகு வீரபத்திரர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

புளியங்கூடல் தெற்கில் அமைந்துள்ள அருள்மிகு வீரபத்திரர் ஆலய ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் எதிர்வரும்(10.04.2015)வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.(08.04.2015)புதன்கிழமை குருமாரம்பமும்,(09.04.2015)வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்துதலும் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து (10.04.2015)வெள்ளிக்கிழமை அருள்மிகு வீரபத்திரர் ஆலய ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற உள்ளது.வீரபத்திரர் அடியார்கள் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறையருளை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மேலதிக விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ளவும்.

06 ஏப்ரல் 2015

நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்! - துரத்திய மக்கள்!

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு தேராவில் பகுதியில் நேற்றுமன்தினம் நள்ளிரவு 12மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் இப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சிப்பாய் வீட்டுக்குள் நுழைவதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்துவிட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் கூடி படைச்சிப்பாயை துரத்தியுள்ளனர். இந்நிலையில் படைச்சிப்பாய் அருகிலுள்ள படைமுகாமிற்குள் தப்பிச் சென்றுள்ளார். குறித்த படைச்சிப்பாய் ஓடி வருவதைப் பார்த்து படைமுகாமில் காவலில் நின்ற சிப்பாய் முகாமின் பிரதான வாயிலை திறந்து சிப்பாயை உள்ளே விட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் முகாமிற்குள் செல்ல முடியாத நிலையில் திரும்பியுள்ளனர். எனினும் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணைகள் நடத்தியுள்ளதுடன், குறித்த வீட்டு உரிமையாளரை நேற்றுக் காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைத்தனர். நேற்றுக்காலை குறித்த வீட்டாருக்கு அழைப்பினை எடுத்த பொலிஸார் விசாரணைக்கு வரவேண்டாம். படையினருடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற படையினர், சிப்பாய் வீட்டுக்குள் வந்தது உண்மைதான் ஆனால் அந்த சிப்பாய் யார் என்பது தெரியவில்லை. வாயிலில் காவலுக்கு நின்ற சிப்பாயும் உண்மையை சொல்ல மறுக்கின்றான். எனவே சமாதானமாக போங்கள் என கேட்டுள்ளனர். ஆனால் சமாதானத்திற்கு மக்கள் முழுமையான மறுப்பினை தெரிவித்துள்ளனர்.