பக்கங்கள்

26 மே 2017

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம் 2017!

புளியங்கூடல் செருத்தனைப்பதி அருள்மிகு சிறீ  இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 09.06.2017 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பதினெட்டு(18)தினங்கள் விழா நடைபெறும்.பதின்நான்காம் திருவிழாவாகிய 22.06.2017 வியாழக்கிழமை வேட்டைத்திருவிழாவும்,பதினாறாம் திருவிழாவாகிய 24.06.2017 சனிக்கிழமை இரதோற்சவமும் நடைபெற்று பின்னர் மறுநாள் 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும்.18ம் திருவிழாவாகிய 26.06.2017 திங்கட்கிழமை பூங்காவனமும் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் அம்பாளின் 2017ம் ஆண்டின் வருடாந்த உற்சவம் நிறைவுக்கு வரும்,
ஆலய விழா தொடர்பான விபரங்களை ஆலய நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

25 மே 2017

மெலிஞ்சிமுனை சுற்றிவளைப்பில் சிலர் கைது!

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியில் பொலிஸார் நேற்று திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சிலரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதற்றநிலை உருவாகியிருந்தது. இந்நிலையில், குறித்த பகுதியில் வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 மே 2017

முகமாலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறி தேடுதல்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஏ9 பிரதான முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளை 12.30 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு இடமான சத்தம் கேட்டபோது போக்குவரத்து பொலிஸார் டோர்ச் லைட் ஒளி மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள் பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர். இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருக்கின்றன. இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட சுற்றியுள்ள பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பெருமளவு ஆயுதம் தாங்கிய படையினர் மற்றும் பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என சொல்லப்படுகின்றது.

17 மே 2017

வித்தியாவின் தாயார் மைத்திரிபாலவிற்கு கடிதம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்குமாறு, அவரின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் சரஸ்வதி (தே.அ.அ.இல. 668512127V) ஆகிய நான் தங்களுக்கு செய்யும் தாழ்மையான விண்ணப்பமாவது. எனது மகள் வித்தியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை தாங்கள் அறிந்ததே. எனது மகளது கொலை வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. தற்போது அவ்வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து வழக்கானது மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படவுள்ள நிலையில் குறித்த வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படவுள்ளதாக பத்திரிகை வாயிலாக கேள்வியுற்ற போது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். குறித்த விசாரணைகள் தமிழ் மொழியில் பரீட்சயமற்ற நீதிபதிகளால் விசாரிக்கப்படவுள்ளதாகவும் அறிந்தேன். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த மாண்பு மிகுந்த ஐனாதிபதியவர்கள் கடந்த 2015.05.26ம் திகதி என்னை வேம்படி மகளீர் கல்லூரிக்கு அழைத்து குறித்த வழக்கானது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடைபெற தான் நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவாதம் வழங்கியிருந்தார். குறித்த உத்தரவாதத்திற்கு முரணாக தற்போது இவ்வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படுவது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கொழும்பிற்கு வந்து தங்கியிருந்து வழக்கு விசாரணைகளில் பங்கு பெறுவது எனக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் வறுமையில் நாம் இருப்பதன் காரணமாக மிகுந்த பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்பதுடன் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் எனது உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்காது. நாம் சிங்கள மொழி பேச முடியாது இருப்பதால் தமிழில் எம்மால் வழங்கப்படும் சாட்சியங்கள் சிங்கள மொழியிற்கு மொழிபெயர்க்கப்படும்போது திரிபடையும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் எனது மகள் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. ஊர்கர்வற்துறை நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மொழியில் காணப்படுவதால் அவற்றை மொழிபெயர்ப்பதற்காக மேலும் காலதாமதம் ஏற்படும் என அஞ்சுகின்றேன். எனவே இவை அனைத்தும் எனது மகளின் இழப்பிற்கு கிடைக்க வேண்டிய நீதியை இல்லாது செய்துவிடும் என நியாயமாக அஞ்சுகின்றேன். எனவே காலதாமதமின்றி இவ்வழக்கு நடவடிக்கைகளை கொழும்பில் மேற்கொள்ளாது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையாக கோருகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் எழுதியுள்ள இக்கடிதத்தின் பிரதியானது பிரதம மந்திரி, பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்படுகிறது.

09 மே 2017

மகிந்தவின் சகோதரி மரணம்!தூக்கிச்சென்றார் மகிந்த!

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோரி காந்தினி விசித்ரா ராஜபக்ச நேற்று கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். கொழும்பு மலர் சாலைக்கு மஹிந்த தனது  சகோதரியின் உடலை ஒரு கையால் தூக்கிச் சென்றார். ஒரே இரத்தத்தில் பிறந்த சகோதரியின் உடலை ஒரு கையில் தூக்கி சென்ற அண்ணன் என ஊடகங்களில் செய்தி வெளியியாகியுள்ளது.    இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் சகோதரியின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

04 மே 2017

இலங்கையின் புகழ்பூத்த அறிவிப்பாளர் சற்சொரூபவதி காலமானார்!


சற்சொரூபவதி நாதன் காலமானார்இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான செல்வி. சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றிய இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். முதலில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றிய பின்னர் தனது ஒலிபரப்புத்துறை வாழ்க்கையை ஒரு பகுதி நேர அறிவிப்பாளராக 1965இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பித்தார். 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், தொடர்ந்து பல பதவிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வகித்திருக்கின்றார். இலங்கையில் செய்தி வாசிப்பு துறையிலும், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பிலும் சிறந்து விளங்கிய பெண்களில் இவர் மிகவும் பிரபலமானவராக கணிக்கப்படுகின்றார். இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படும் ஒலிபரப்பாளராக அவர் இறுதிவரை திகழ்ந்தார். ஒலிபரப்புத்துறைக்கு அப்பால் கொழும்பு தமிழ் சங்கத்தின் துணைத்தலைவராக இவர் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் வானொலித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன. இவரது இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளதாக அவரது சகோதரர் தயாபரநாதன் தெரிவித்தார் என பிபிசி தமிழோசை குறிப்பிட்டுள்ளது.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை  பல தலை சிறந்த அறிவிப்பாளர்களையும் கலைஞர்களையும் தந்த வானொலி என்பது குறிப்பிடத்தக்கது.புகழ்பூத்த அறிவிப்பாளர் சற்சொரூபவதி அவர்களின் இழப்பு தமிழ் கூறு நல்லுலகிற்கு பேரிழப்பாகும்.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது அகவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.