பக்கங்கள்

21 ஜூன் 2019

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமா செய்ய அழைக்கிறார் அங்கஜன்!


நீண்ட காலமாக போராடி வரும் கல்முனை வாழ் தமிழ் மக்களுடன் கைகோர்த்து அவர்களுக்காக தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறியத் தயார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக போராடி வரும் கல்முனை வாழ் தமிழ் மக்களுடன் கைகோர்த்து அவர்களுக்காக தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறியத் தயார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். பதவிகளை மக்கள் வழங்குவது அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவேயன்றி பிரச்சினை வரும் போது வீர வசனம் பேசி விட்டு அதன் சொகுசுகளை அனுபவிக்கவல்ல. கல்முனை வாழ் தமிழ் மக்களுக்காக எனக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இப்போதே தூக்கியெறிந்து செல்லத் தயார் என்ற போதிலும் தனியொருவருடைய இராஜினமா எந்தவொரு பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்ற வரலாற்று பூர்வ யதார்த்தத்தை அறிந்துள்னேன். எனவேதான் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒட்டு மொத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்வதன் ஊடாக கல்முனை மக்களின் நீண்ட நாள் கனவான நனவாக்க, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்ந்த முடியும். இந்த வரலாற்று திருப்புமுனையை யதார்த்தமாக்க வடக்கு கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயார் என்றால் அவர்களுடன் இணைந்து தமது இராஜினாமா கடிதத்தினையும் தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்க தாம் முன்னிற்பதாக உறுதியளித்துள்ளார் எனவே தமிழர்களின் ஒருமித்த பலத்தினை முழுதேசத்திற்கும் எடுத்துக் காட்டி வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயகப்போரின் முதல் அத்தியாத்தை எழுதுவதற்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கைகோர்க்க வேண்டும் என அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், தமிழ் மக்களின் இறைமைகளை தொடர்ந்தும் அடகு வைக்காமல் மக்களின் போராட்டங்களோடு ஒன்றிணைந்து வெற்றிபெற செய்ய தமிழர் பிரதிநிதிகள் இராஜினாமா கடிதத்தை வழங்க முன்வரவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். தமிழ் அரசியல் தலைமைகளின் பிரிவினால் கடந்த காலங்களில் பல மக்கள் போராட்டங்களை வெற்றி பெறச்செய்ய முடியாமல் போன யதார்த்தத்தை உணர்ந்து இதனை சிறந்த தருணமாக எண்ணி மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு பலம் சேர்க்க அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் தம்முடைய இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அங்கஜன் ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

16 ஜூன் 2019

கஜேந்திரகுமார் இணைந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை-விக்கினேஸ்வரன்!

கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே நாங்களும் விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவிக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். 'எனக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் முரண்பாடு வந்திருக்கும் இந்த நேரத்தில் அவர் இல்லாதது தம்பி கஜனுக்கு ஆறுதல் தான். கட்டாயம் நான் கூறுவதை ஏற்குமாறு கஜனை வற்புறுத்தி இருப்பார் தர்மராஜா அவர்கள்! காரணம் இன்றைய நிலை அப்படி என்பதை நண்பர் தர்மராஜா நன்றாக அறிந்திருந்தவர். வடகிழக்கை துண்டாட, படையினரை நிரந்தரமாக வட கிழக்கில் வைத்திருக்க, தமிழ் பேசும் மக்களை பயங்கரவாதிகள் என்று சித்திரிக்கத் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் யாவுமே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளதை அவர் அறிந்திருந்தார். கடந்த 30 வருடகால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் வடகிழக்கில் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாங்கள் இன்று இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு வருவதை நன்கறிநதிருந்தார். காணிகள் பற்றிய சட்ட அறிவைக் கொண்டிருந்த அவர் நிலம் போனால் எமது அடிப்படை நிலையே போய்விடும் என்பதைப் பலதடவைகள் கூறியும் வந்துள்ளார். நிலைமை கட்டுமீறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை தமது அந்திமகாலத்தில் கூறி அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர் நண்பர் தர்மராஜா அவர்கள். பலமுள்ள கொள்கைப் பற்றுள்ள தமிழ்த் தலைவர்கள் சேர வேண்டியதன் அவசியத்தை அவர் அறிந்திருந்த காரணத்தால் எனக்கு சார்பாக தம்பி கஜனிடம் சிபார்சு செய்திருப்பார் என்று கூறுகின்றேன். கொள்கைப் பற்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் சேர்ந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நண்பர் தர்மராஜா அறிந்திருந்ததால் கஜனிடமும், கஜனின் தாயாரிடமும், அவர் கட்சி அங்கத்தவர்களிடமும் பேசி நிலைமையை புரிய வைக்கக் கூடிய ஒருவராகவே அவர் இருந்தார். கீரியும் பாம்புமாக இருந்த தமிழ்த் தலைவர்கள் முன்னர் தமிழ் மக்கள் நலம் கருதி ஒன்று சேர்த்ததை அவர் மறந்திருக்கவில்லை. அவரின் மறைவு என்னைப் பலம் இழக்கச் செய்து விட்டது என்று கூறலாம். கஜேந்திரகுமார் மீது அவருக்கு அலாதியான பாசமும் மரியாதையும் இருந்தது. ‘இந்தப் பிள்ளை நல்லதொரு சட்டவல்லுநர் வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளது. அவருக்கு என்னதான் இல்லை? ஏன் தான் கட்சி அரசியலுக்குள் சென்று சீரழிகின்றாரோ தெரியவில்லை’ என்று கூறுவார். கஜேந்திரகுமார் தனது தந்தை போல் பாட்டனார் போல சட்டத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கஜனின் அரசியல் பிடிவாதம் அவருக்கு ஆத்திரத்தை ஊட்டவில்லை. பாசத்தையே கூட்டியது. தொடர்ந்து கஜேந்திரகுமார் அரசியலில் நன்றாகச் செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். நாங்களும் கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து.” என்று கூறினார். இந்த நிகழ்வில் கஜேந்திரகுமாரும் பங்கேற்றிருந்தார்.

15 ஜூன் 2019

கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் நீதியரசர்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ' திரும்பவும் அவர்களுடன் சேர்ந்து இணங்கிப் போவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது, எனவே, இதுபற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. எந்த இடத்திலும் எவரையும் நான் குற்றம் கூறுவதாக இல்லை. முஸ்லிம் மக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது பல இருக்கின்றன. அதில் அவர்கள் அனைவரும் கூட்டாக விலகிய ஒற்றுமையும் ஒன்று, தங்களுக்குள் ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும் தங்கள் சமூகத்தை பாதிக்கின்ற விடயம் வருகின்ற போது அவர்கள் ஒன்று சேர்வார்கள். இது இங்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்க காணகூடியதாக இருக்கிறது. தமிழர்களிடையே வேறுவிதமான குணம் காணப்படுகிறது. நாங்கள் மட்டும்தான் விடயங்களை தெரிந்தவர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் நடக்க முற்படுவதனால்தான், எங்களிடையே ஒற்றுமை தடைப்பட்டு இருக்கிறது. எனவே முஸ்லிம்களின் இந்தச் சம்பவத்தை வைத்துக் கொண்டு தமிழர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

09 ஜூன் 2019

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவ பெருவிழா!

புளியங்கூடல் செருத்தனைப்பதி சிறீ இராஜ மகாமாரியம்மன் வருடாந்த பெரும் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(14.06.2019)ஆரம்பமாகி தொடர்ந்து பதினெட்டுத் தினங்கள் சிறப்புற நடைபெற உள்ளது.15ம் திருவிழாவான (28.06.2019)வெள்ளிக்கிழமை சப்பரத் திருவிழாவும்,16ம் திருவிழாவான சனிக்கிழமை (29.06.2019) தேர்த் திருவிழாவும் இடம்பெறும்,ஞாயிற்றுக்கிழமை(30.06.2019)தீர்த்தோற்சவமும் திங்கட்கிழமை(01.07.2019)பூங்காவனத் திருவிழாவும் இடம்பெற்று வருடாந்த பெருவிழா இனிதே நிறைவு பெறும்.