பக்கங்கள்

30 ஜூன் 2016

மல்லாவியிலும் ஆசிரியர் அராஜகம்!

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து மூலம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஊடாக அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதிபர் இந்த விடயத்தை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து, வலயக் கல்விப் பணிமனையால் புதன்கிழமை (29) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆசிரியரை பாடசாலை வளாகத்தில் இயங்குகின்ற கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் தொடர் கொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது,‘பாதிக்கப்பட்ட குறித்த மாணவியால் பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்திய நிலையில் விசாரணைக்குழு ஒன்றினை அமைத்து உடனடியாக விசாரணை செய்ய பணிக்கப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறித்த ஆசிரியர் தற்காலிகமாக துணுக்காய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தின் இரண்டு பாடசாலைகளில் மாணவிகள், அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த நிலையில், தற்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இசம்பவம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

27 ஜூன் 2016

மண்கும்பானில் கிணற்றில் வீழ்ந்து யுவதி மரணம்!

வேலணை 5ம் வட்டாரம், மண்கும்பான் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாளியை எடுக்க முற்பட்ட இளம் பெண் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸாரை  மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.இன்று நடந்த இச்சம்பவத்தில் சோமசேகரம் கோசலா (வயது 20) என்ற இளம் பெண்ணே நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.மரண விசாரணைகளை தீவகத்துக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.தியாகராஜா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

24 ஜூன் 2016

புளியங்கூடல் அம்பாள் ஆலய இரதோற்சவம் நாளை!

புளியங்கூடல் செருத்தனைப்பதியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ இராஜ மகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 10ம் திகதி ஆரம்பித்து பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.நாளை(25.06.2016)சனிக்கிழமை மகாமாரி அம்பாள் இரதத்தில் அமர்ந்து வீதியுலா வரும் பெருவிழா காலை 8:00மணிக்கு ஆரம்பமாகி பக்தர்களின் ஆனந்தப் பெருவெள்ளத்தினூடே வெகு சிறப்பாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.அடியவர்தம் வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றிக் கொடுப்பதால் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்கள் வருகை தந்து அன்னையின் தேர்த்திருவிழாவிலே கலந்து தாயவளின் ஆசிகளை பெற்றுய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

22 ஜூன் 2016

ஆசிரியர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உதவாக்கரைகள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பில் வலையக் கல்விப்பணிமனை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் ஏழாம் வகுப்பில் கற்று வரும் மாணவிகள் சிலருடன் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார்.இந்தச்சம்பவம் தொடர்பாக அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவிகளின் பெற்றோரும் இணைந்து அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும்,அதிபர் இவ்விடயத்தை மறைக்க முயன்றதாக தெரியவருகிறது.இதையடுத்து அதிபருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.இதேவேளை இச்சம்பவம் குறித்து கல்விப்பணிப்பாளரும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் வரணிப்பகுதியிலும் இத்தகையதொரு சம்பவம் இடம்பெற்றதும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அதிபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.புலிகளின் ஆளுமை இருந்த காலங்களில் தமிழர் பகுதிகளில் நீதி நிர்வாகம் சிறந்த முறையில் விளங்கியது.பெண்கள் இரவு நேரங்களிலும் தன்னந்தனியாக நடமாட முடிந்தது.இன்று நல்லாட்சி என்ற பெயரில் கலாச்சார சீரழிவுகளே முடுக்கி விடப்பட்டுள்ளது.தமிழின அழிப்பும்,சிங்களக் குடியேற்றமும் தொடர்கதையாக உள்ளது. 

19 ஜூன் 2016

நயினாதீவு கடலில் இளைஞர் மூவர் பலி!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவுக்கு சென்ற இளைஞர் குழுவொன்று கடலில் நீராடிய போது, அதில் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். நயினாதீவு தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ள சென்ற எட்டுப் பேர் கொண்ட இளைஞர் குழு அங்கு கடலில் நீராடியுள்ளது.அந்த எட்டுப் பேரும் நீர்ச்சுழியில் அகப்படுள்ளனர். இதில் ஐவர் காப்பாற்றப்பட்ட போதும் ஏனைய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணம், கோண்டாவில் நாராயணன் கோயிலடியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

17 ஜூன் 2016

இலங்கை அகதிகள் படகில் பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு!

இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு இந்தோனேசியாவின் அச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது. படகிலுள்ள அகதிகளை தரையிறங்க விடாமல் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில், படகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, தம்மை தரையிறங்க அனுமதிக்குமாறும் அகதிகள்கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அதற்கு அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டுள்ள நிலையில், நேற்று படகில் இருந்த ஐந்து பெண்கள் கடற்கரையில் குதித்தனர். இதனால் அவர்களுக்கு சிறியளவில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அகதிகள் தரையிறங்குவதை தடுக்கும் நோக்கில் வானத்தை நோக்கி இந்தோனேசிய பொலி்சார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அத்துடன், தரையிறங்கிய பெண்கள், மீண்டும் படகில் ஏற்றப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், படகின் இயந்திரத்தை திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 ஜூன் 2016

இரகசியத்திட்டத்துடன் ஜெனீவா பயணமாகும் கஜேந்திரகுமார்!

இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் பல இரகசிய திட்டங்களுடன் ஜெனீவா பயணமாகவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர், நேற்று ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தின் சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தொடரின்போது முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து பகிரங்கமாக அறிவித்துவிட்டுச்ப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இம்முறை அவ்வாறு இடம்பெறு சென்றதால், அவற்றை முறியடிக்க பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளவதை தடுக்கும் நோக்கிலேயே தமது திட்டங்களை இரகசியமாக வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

11 ஜூன் 2016

'காற்றே காத்திரு…. !'பேரறிவாளன் தந்தை கண்ணீர் கவிதை!

காற்றே! உன்னை வேண்டுகிறேன்.
இன்னும் சிறிது காலம் உடலோடு ஒத்துழைத்து
உதவ வேண்டுகிறேன்.
என் மகனை நான் தழுவும்வரை……
 என் கண்ணுக்குத் தெரியாமல் நான் அழுகின்றேன்.
கால் நூற்றாண்டுகளாக…
இமயத்தில ஏற நான் பயின்றபோது
இமயத்துப் புலி டென்சிங் நார்கே
எனதொரு காலை அவர் தோள்மீதும்
மறுகாலை அவர் உள்ளங்கையாலும் தாங்கிட
இமயம் ஏறிய என் கால்களோ
இன்று வேலை நிறுத்தம் செய்கின்றன!
மூளையோ எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால்...
என்று தடைபோடுகிறது! தடுமாறுகிறது!
ஈரல்கள் அவ்வப்போது உன் வரவைத் தடுத்து
இரண்டகம் செய்கின்றன!
அச்சம் ஊட்டுகின்றன!
சில பற்களோ பாவம் எழுபத்து நான்கு ஆண்டுகள்
எனக்காக உழைத்து இறுதியாகப் பிரிந்தே விட்டன.!
உணவுப் பாதையோ குண்டும் குழியுமாக உள்ள
சிற்றூர் பாதையாக…..!
என் இறுதி காலத்தில்
எனக்குத் துணையாக இருக்க வேண்டிய
என் மனைவியோ அவளின் இறுதிக் காலத்தில்
தன்னையும் மறந்து என்னையும் மறந்து
தனித்து விட்டுவிட்டு இன்னும் எங்கள் மகனைத் தேடி அலைந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகளாய்……! ஊழிக்காற்றே! நான் எதைத்தான் தாங்கிக்கொள்வது?
எப்படி?எத்தனைக் காலம்?
இதற்காக நான் என்னை அழித்துக் கொள்ள நேர்ந்தாலும்
அது எம் இனத்திற்குப் பயன்படுவதாக அமையுமே யன்றி
வீணாக இல்லை.
மானிடத்திற்கு என் பங்களிப்பு ஏதுமில்லாப்
பயனற்ற வாழ்வை நானும் விரும்பவில்லைதான்.
எனவே என்னைவிட்டு நீ விடுதலை பெற
எண்ணுவது சரியானதுதான்.
ஆனால் சற்றே பொறு நான் பொறுத்திருப்பதுபோல.
நீதியை அடைகாத்துவரும் சூது
உண்மையைப் பொறுத்து
வானில் விடுதலையைப் பறக்கவிடும்வரை.…..
 இதுநாள்வரை நான் இப்புவியில் இருக்க
உதவிய உனக்கும் எங்களுக்காகப்
பேச்சாலும் செயலாலும் மனிதத்தை
வெளிப்படுத்திய மனிதா;
அனைவருக்கும் என் நன்றியைப் படைக்கின்றேன்.

 -அன்புடன் குயில்தாசன்

03 ஜூன் 2016

சுவிஸ் குமாரின் தாயாருக்கும் விளக்கமறியல்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். கடந்த மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தன்னை சந்தேக நபர்களின் உறவினர்கள் மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.இதையடுத்து, அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு மாணவியின் தாயாருக்கு நீதவான் அறிவுறுத்தி இருந்தார். அதற்கமைய, தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், மே மாதம் 18ஆம் திகதி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் அவரின் மற்றுமொரு உறவினர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, மாணவியின் தாயாரை மிரட்டியவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களை நேற்று ஊர்காவற்துறை பொலிஸார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

மதம் மாறிய மகளை அடித்துக்கொன்ற தாய்!

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்த சம்பவம் தொடர்பாக அவரது தாயாரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் பொலிசார் தெரிவித்தனர். மத்தியமுகாம் 6ஆம் பிரிவு 11ஆம் கொலனியைச் சேர்ந்த 21 வயதுடைய செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் திருமணம் முடித்து கணவனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதுடன் கணவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதனை உயிரிழந்தவரின் தாயார் கேள்விப்பட்டுள்ளார் சம்பவ தினமான கடந்த 31ஆம் திகதி இரவு உயிரிழந்தவர் தாயாரின் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கிவிட்டு வருவதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் தனியாக வாழ்ந்துவரும் தாயாருக்கும் மகளுக்கும் மதம் மாறியது தொடர்பாக வாய்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து தாயார் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியதையடுத்து மகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மகளின் உடலை தூக்கிச் சென்று வீட்டின் பின்பகுதியில் உள்ள நிலத்தில் கிடங்குவெட்டி புதைத்துள்ளார். இதன் பின்னர் மகளை காணவில்லை என புரளியை கிளப்பிவிட்டுள்ள நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பொலிசார் நேற்று மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று நடத்திய விசாரணையின்போது தாயார் தான் கொலை செய்து வீட்டின் பின்பகுதியில் புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாயாரை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரை சடலம் புதைக்கப்பட்ட பகுதியில் பொலிசார் காவற்கடமையில் ஈடுபட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.