பக்கங்கள்

30 ஏப்ரல் 2012

.நெடுந்தீவு கழுதைத்தீவாம்"தேரரின் நக்கல்!


நெடுந்தீவைக் ‘கழுதைத் தீவு’ எனக் கிண்டலடித்துள்ளார் மகிபால ஹேரத்!நெடுந்தீவைக் ‘கழுதைத்தீவு‘ என்று கிண்டலடித்துள்ளார் சிறிலங்காவின் சப்பிரகமுவ மாகாண முதல்வர் மகிபால ஹேரத்.
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐதேக, இம்முறை தமது மே நாள் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சப்பிரகமுக மாகாண முதல்வர் மகிபால ஹேரத்,
“‘கழுதைத் தீவான‘ நெடுந்தீவில் போய் ஐதேக மே நாள் பேரணியை நடத்தட்டும். அங்கு தான் அதிகளவு கழுதைகள் உள்ளன.
அங்கு அவர்களின் ஆதரவாளர்களை ஏற்றிச் செல்ல போதிய கழுதைகள் இருப்பதால் அவர்களுக்குப் போக்குவரத்துப் பிரச்சினை இருக்காது.
அல்லது கழுதைகளுக்குப் பெயர் பெற்ற இன்னொரு இடமான புத்தளத்தில் பேரணியை நடத்தலாம்.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

29 ஏப்ரல் 2012

யாழில் நடந்த கொலைகள் இதுவரை எவரும் கைதாகவில்லை!


யாழ். மாவட்டத்தில் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 417 பேர் நீதிக்குப் புறம்பான வகையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரச ஆவணங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் “சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புக் கருதி அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்தக் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இவர்களின் பெயர்கள், முகவரிகள், கொல்லப்பட்ட திகதிகள் போன்ற அனைத்து விவரங்களையும் உதயன் பெற்றுள்ளது. இவற்றுக்கு மேலாக இதேகாலப் பகுதியில் விடுதலைப் புலிகள் எனக் கருதப்படும் 9 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநராகப் பதவி வகிக்கும் ஜி.ஏ.சந்திரசிறி, இலங்கை இராணுவத்தின் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்த காலப் பகுதியிலேயே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் பல கொலைகள் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன என்பது பதிவுகளில் இருந்து தெரியவருகிறது. இந்தக் காலப்பகுதியில் யாழ். குடாநாடு முழுவதும் இராணுவ ஊடரங்குச் சட்டத்துக்குள் இருந்தபோதும் கொலைகளுக்கான காரணங்களோ அவை தொடர்பான விசாரணைகளோ பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பான எந்தவொரு சம்பவத்திலும் கொலையாளி எவரும் இனங்காணப்படவும் இல்லை.
இந்த மூன்று வருட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலைகளுக்கு இராணுவத்தினரும் துணைப்படைகளுமே காரணம் என்று சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அரசும் இராணுவமும் முற்றாக மறுத்து வருகின்றன.
சர்வதேச சமூகம் இறுதிப் போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று விசனம் தெரிவிக்கும் யாழ்ப்பாணத்தின் புலமையாளர்கள், இங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டுவதற்கான அழுத்தங்களையும் சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
இதேவேளை, “இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்குவதன் காரணத்தினால் கடத்தல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் தண்டிக்கப்படுவோம் என்கிற எந்தவிதப் பயமும் இன்றி ஈ.பி.டி.பியினால் ஈடுபட முடிகிறது” என்று 2007ஆம் ஆண்டில் கொழும்புக்கான அமெரிக்கத் தூதராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக், வாஷிங்ரனுக்கு அனுப்பி வைத்த இரகசிய ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆவணத்தை விக்கி லீக்ஸ் தனது இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுக்கிறார். அத்தகைய தகவல் பொய்யானது போலியானது என்று அவர் கூறுகிறார்.
“ஒருவரைக் கொலை செய்வதற்கு ஈ.பி.டி.பியினர் தீர்மானித்துவிட்டால் அது பற்றி முதலில் இராணுவத்தினருக்குத்தான் தகவல் தெரிவிக்கப்படும். பொதுவாகச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு சந்தியிலும் படையினரின் நிலைகள் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட ஒரு நேரத்தில் எல்லாப் படையினரும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வது வழமை. அந்தச் சமயத்தில் மோட்டார் சைக்களிலில் வரும் முகமூடி அணிந்த நபர்கள் தாம் நினைத்த நபர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பிவிடுவார்கள்” என்று பிளேக்கின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

28 ஏப்ரல் 2012

தமிழன் மண்ணை தமிழனுக்கே விற்கும் சிங்களவன்!

யாழ்ப்பாணத்தானுக்கு ஆப்படிக்கும் சிங்களவர்கள்!யாழ்ப்பாணத்தின் சில முக்கிய வீதிகளின் புனர் நிர்மாணப் பணிகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகளில் சிங்கள ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வீதிகளை அகலமாக்கும் போது அங்கிருந்த மண் முதலில் வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் குறித்த இடத்தில் கிறசர் மண் பரவப்படுகின்றது.
குறித்த இடங்களில் வெட்டி எடுக்கப்படும் மண் அந்தப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கே நயவஞ்சகமாகப் பேசி விற்கப்படுகின்றது.
சிங்களவர்களின் இந்த மண் வியாபாரமானது அங்கு கொடி கட்டிப் பறப்பதாக யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இப்படியாக வெட்டப்படும் மண் 3500 ரூபாயில் இருந்து 4500 ரூபாய் வரை பேசி விற்கப்படுகின்றது.
சிங்கள ஒப்பந்தக் காரர்களின் இந்த நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது தவிர, யாழ்ப்பாணத்தில் உள்ள ஏராளமான ஒழுங்கைகள், வீதிகள் போன்றவை குண்டும் குழியுமாக இருப்பதனால் மழை காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டாக்காலி பிள்ளைகள்!

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றமைக்கு பெற்றோரின் கவனமின்மையே முக்கிய காரணம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று  நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவால் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் பெற்றோர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி விடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியாத நிலையில் அவர்களின் வாழ்க்கை போகிறது. பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாத பிள்ளைகள் கட்டாக்காலிகளுக்கு சமன். பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் முதன்மையான கடமையாகும். பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காத பிள்ளைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

27 ஏப்ரல் 2012

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் ஆர்வமில்லை!

UNHCRநாடு திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2012 முதல் காலாண்டில் குறைந்து விட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 408 பேர் யுஎன்எச்சிஆர் இன் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 597 பேர் நாடு திரும்பியிருந்தனர்.

கடந்த ஆண்டு முதல் கொழும்பு – தூத்துக்குடி படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டமையும் இலங்கை திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும் என யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டில் நாடு திரும்புவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்திருந்த அவேளை அவ் ஆண்டின் இறுதிப் பகுதியில் சடுதியாக குறைவடைந்தது.
பெரும்பாளான இலங்கை அகதிகள் தமிழக முகாம்களிலேயே இருக்கின்றனர்.
இதனை விட மலேசியா, ஜோர்ஜியா, ஹொங்கொங் ஆகிய நாடுகளிலும் கணிசமான அளவு இலங்கை அகதிகள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவு அறிக்கை குறிப்பிடுகிறது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை அகதிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, கொழும்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை திருகோணமலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் இருந்து திரும்புகின்றனர் எினும் இவர்களது தொகை ஏனைய மாவட்டங்களை விட குறைந்தளவிலேயே காணப்படுகிறது.
இறுதியாக 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாத இந்திய அரசின் கணிப்பீட்டின் படி தமிழ்நாட்டிலுள்ள 112 முகாமில் 68,049 இலங்கை அகதிகள் உள்ளனர்.
இத்துடன் அகதி முகாம்களை தவிர்த்து இந்தியாவில் 32,467 இலங்கையர்கள் வாழ்கின்றனர்.
இலங்கையர்கள் 65 நாடுகளில் 141,000 இற்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருவதாக யுஎன்எச்சிஆர் அறிக்கை தெரிவிக்கிறது.

விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

lalith kukan_CIகாணாமற் போன லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ் மாவட்ட நீதவானுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காணாமற்போன இவர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. லலித், குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படும் இடம் தொடர்பாக அரசு எதுவித தகவல்களையும் வெளியிடவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

26 ஏப்ரல் 2012

2006 யுத்த காலத்தில் காணாமல் போனோர் குறித்து விசாரணை!

கடந்த 2006 ஆம் ஆண்டு யுத்த காலப் பகுதிகளில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவர்களது மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளும் பொருட்டு இரண்டாம் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் இந்த தகவலை தெரிவித்தார்..
இது குறித்து அவர் விபரிக்கையில் : 2006, 2007, 2008 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அந்தக் காலகட்டத்தில், காணாமற் போனவர்களது உறவினர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் 2007, 2008, 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் எம்மிடம் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இவர்களின் உறவினர்களை அழைத்து இரண்டாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்தோம்..
2006 ஆம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்போதே அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றோம். முறைப்பாடுகளில் இருக்கின்ற ஆவணக் குறைபாடுகளைச் சீர்செய்வதுடன், காவல்துறை முறைப்பாடு தொடர்பிலும் ஆவணங்களைப் பெற்று வருகின்றோம்.
இந்த விசாரணைகள் ஒரு வார காலத்துக்கு எமது அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன. இதன் பின்னர் கொழும்பிலிருந்து எமது தலைமையகத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

25 ஏப்ரல் 2012

பிஞ்சுகளை பறித்தெடுத்த கொடூர வெடி பொருள்!

கிளிநொச்சி பளை- முல்லையடி பகுதியில் மர்மப் பொருள் ஒன்றை அடித்து விளையாடிய சகோதரர்கள் இருவர் உடல் சிதறிப் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நகரத்தை அண்டியுள்ள இந்தப் பகுதியில் வீட்டு வளவினுள் மர்மப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து வந்த மு. தமிழ்மாறன்(வயது4), மு. தனோஜன்(வயது2) ஆகிய சிறுவர்கள் இருவரும் அதனை கத்தியினால் வெட்டியும், அடித்தும் உள்ளனர், இதன் போது மிகப் பாரியளவு சத்தத்துடன் அது வெடித்துள்ளது.
இதில் சிறுவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுபயங்கரமாக முறையில் உயிரிழந்துள்ளார், மற்றய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பளை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதே வேளை, குறித்த சிறுவர்களின் தாய், ஒரு முன்பள்ளி ஆசிரியை எனவும், தந்தை ஒரு கூலித் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் இருவருக்கும் இந்த இரு பிள்ளைகளே உள்ளனர் என்பதும் சோகமான விடயம்.(எப்படித் தாங்குமோ பெற்ற மனங்கள்?)

24 ஏப்ரல் 2012

திருமலையில் விநாயகர் ஆலயத்திற்கு அச்சுறுத்தல்!

தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60 வருடங்களுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
இலங்கை அரசு நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான செயல்களும் நாட்டில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் அரங்கேற்றப்படுகின்றன.
இதனால், தமிழ் மக்கள் கடும் அதிருப்தியடைந்து பொங்கி யெழுந்துள்ளனர். தமிழர் கலை, கலாசாரங்களையும், சமய விழுமியங்களையும் அழிக்கும் நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றது என்றும் அவர்கள் விசனமடைந்துள்ளனர்.

23 ஏப்ரல் 2012

கனத்தையில் இரகசியமாக சடலங்கள் எரிப்பு!

பொறளை கனத்தை மயானத்தில் மர்மமான முறையில் பிணத்தை எரிக்கும் பணிகள் நேற்று அதிகாலை 1 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது -
வழக்கத்தில் கனத்தை மயானத்தில் மாலை 7 மணிக்குப் பின்னர் சடலங்களை எரிக்கும் பணிகள் இடம்பெறுவதில்லை.
நேற்று அதிகாலை சடலம் எரிக்கும் பணி இடம்பெற்றபோது மயானப் பகுதியில் இரண்டு ஜீப் வண்டிகளும், வெள்ளைவான்களும் நின்றதாக அயலில் உள்ள ஒருவர் பொறளை காவல்துறையிடம் முறையிட்டுள்ளார்.
இதுபற்றித் தாம் 1.40 மணியளவில் பொறளை காவல்துறையிடம் முறையிட்டதாகவும், ஆனால், அந்த ஜீப்கள் மற்றும் வெள்ளைவான்கள் அகன்று செல்லும் வரை சிறிலங்கா காவல்துறையினர் அங்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கனத்தையில் காணப்பட்டவர்கள் சாதாரண உடை அணிந்திருந்ததாகவும், ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் சிறிலங்காப் படையினரைப் போன்று காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொறளை காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த முறைப்பாடு கிடைத்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் மேற்பார்வையில் இயங்கும் கனத்தை மயானம், இரவு 7 மணிக்குப் பின்னர் இயங்குவதில்லை என்றும், அதன்பின்னர் மயானத்தின் சாவி பிரதம பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கொழும்பு மாநகரசபை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் கனத்தையில் நேற்று அதிகாலை சடலம் எரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது பற்றி எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
1988,89 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜேவிபி தலைவர் றோகண விஜேவீர உள்ளிட்ட ஏராளமானோரின் சடலங்கள் நள்ளிரவு நேரங்களில் இரகசியமாக கனத்தை மயானத்தில் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

22 ஏப்ரல் 2012

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டார்களாம்!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார்.
“எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான்.
எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவர் என்று எனது மகன் பதிலளித்தான்.
சிலகாலங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தைக் காணவில்லை.
அதற்கு என்ன நடந்தது என்று மகனிடம் கேட்டபோது, அவர் ஒரு கதாநாயகன் அல்ல என்று புரிந்து கொண்டதால் தான் அதை அகற்றி விட்டதாக மகன் கூறினான்.
அவனது அந்த முடிவுக்கு அமர்தலிங்கத்தைப் புலிகள் சுட்டதே காரணம் என்று பின்னர் அறிந்து கொண்டேன்" என்று ரங்கராஜன் கூறினார்.
அந்தக் கதையை ரங்கராஜன் கூறி முடித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடங்கினார்.
"போர் முடிவடைய முன்னதாக பிரபாகரனைச் சந்தித்தபோது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களை வலியுறுத்தினேன்.
முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள்.
இந்த இரண்டையுமே அவர் கவனத்தில் கொள்ளவில்லை" என்றார் இரா. சம்பந்தன்.
இவர்கள் இருவரும் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச, ரங்கராஜனைப் பார்த்து, “விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் முதலாவதாக இருந்தது யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
"அவர்களின் கொலைப்பட்டியலில் முதலில் இருந்த்து எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச தான்.
அதற்கடுத்ததாக இருந்தது யார் என்று தெரியுமா? அது சம்பந்தன் தான்." என்றார்.
"அதை நீங்கள் அறிவீர்களா?" என்று இரா.சம்பந்தனைப் பார்த்துக் கேட்டார் பசில் ராஜபக்ச.
அதற்கு அவர் தனக்குத் தெரியும் என்று பதிலளித்தார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

21 ஏப்ரல் 2012

ஜெயலலிதா,கருணாநிதி போன்றோரால் எம்மை அசைக்க முடியாது!

mervin muderஇலங்கை வந்துள்ள இந்தியக் குழுவாலோ அல்லது இந்திய தேசத்தில் இருக்கின்ற கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரினாலேயோ இலங்கை அரசை அசைக்க முடியாது. நம்மை அசைப்பதற்கு அவர்களுக்குத் தகுதி இல்லை. நாம் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நிற்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் மேர்வின் சில்வா.இலங்கை வந்துள்ள இந்தியக் குழு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களின் விருப்பத்தின்படிதான் தீர்வைக் கொடுக்கும் அரசு. ஏனெனில், இந்த நாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மை இனத்தவர்.

அவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இந்தியாவுக்கு அடிபணிந்து நாம் செயற்படமாட்டோம். கருணாநிதி ஐயாவும், ஜெயலலிதா அம்மையாரும் பாடும் பாடல்களுக்கு நாம் ஆடமாட்டோம். எம்மை இந்திய தேசத்தால் அசைக்க முடியாது.
இலங்கை வந்துள்ள இந்தியக் குழு இங்குள்ள மக்களை பார்வையிட்டு போகலாம். ஆனால், தீர்வை உடன் வழங்குமாறு எம்மை நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறினார் அமைச்சர் மேர்வின் சில்வா.

20 ஏப்ரல் 2012

ஐ.நா.குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும்"சீமான் வேண்டுகோள்.

இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் அக்கறையற்ற முறையில் பயணம் மேற்கொண்டு வருவதால் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற இந்திய எம்.பிக்கள் குழுத் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி முகாமில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை புயல் வேகத்தில் பயணம் செய்து ஆங்காங்கே வாழும் சிலரிடம் மட்டும் பேசிவிட்டு, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுத் தொடர்பாக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பணிகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளது வியப்பளிக்கிறது.

வன்னி முகாம்களில் இன்னமும் இருக்கின்ற தமிழர்களிடம் நாடாளு மன்றக் குழுவினர் பேசிய போது, அவர்கள் ஒரு அச்சத்துடனேயே தங்களிடம் பேசியதாக தமிழ்நாட்டில் இருந்து சென்ற 2 உறுப்பினர்கள் கூறியுள்ளனர். தங்களோடு பேசிய அம்மக்களின் கண்களில் அச்சம் தெரிந்தது என்று மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
முல்லைத்தீவில் மக்களிடம் பேசியபோது அங்கு ஏராளமான இராணுவத்தினரும், சாதாரண உடையில் உளவுப்பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தனர் என்று பல நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இராணுவத்தின் கெடுபிடி ஏதும் இருப்பதாக எந்தத் தமிழரும் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணம் எந்த விதத்திலும் பயனளிக்காது என்று கூறப்பட்ட கருத்துக்கள் உண்மையாகியுள்ளன. இன்றளவும் தமிழர்கள் கடத்தப்படுகின்றனர். தமிழ்ச் சிறுமிகளை இராணுவத்தினர் கடத்தி கற்பழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் பகுதிக்கான அரசு முகவர் இமால்டா சுகுமார் கூறியிருக்கிறாரே, ஏன் அப்படிப்பட்ட நிலை இருக்கிறது? என்பதை விசாரித்து அறியாமலேயே இந்த உண்மைக் கண்டறியும் குழு பயணம் செய்துக் கொண்டிருக்கிறது.
எனவே இப்படிப்பட்ட குழுவின் பயணத்தால் துயரத்திலும், அவலத்திலும், வாழும் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மேம்போக்காக ஒரு பயணத்தை மேற்கொண்டு இந்தக் குழு அளிக்கும் அறிக்கை, உண்மையை மறைப்பதாகவும், இலங்கை அரசைக் காப்பதாகவுமே இருக்கும் என்பதற்கு சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ள கருத்துக்களே சான்றாகும்.
எனவே இலங்கையில் போர் நடந்த பகுதிகளுக்கு மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட பன்னாட்டுக் குழுவை ஐக்கிய நாடுகள் மன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.