பக்கங்கள்

23 செப்டம்பர் 2010

மீண்டும் கூரைமீது ஏறி போராட்டம்!

அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை மீண்டும் புகலிடம் கோருவோர் குழுவொன்று கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்துள்ளது. தடுப்பு நிலையமொன்றிலிருந்த பிஜி நாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 29 மணித்தியாலங்கள் இடம்பெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் நேற்று புதிதாக மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. 9 பேர், பிரதானமாக சீனர்கள் வில்லாவூர்ட் தடுப்பு நிலையக் கூரையின் மீது ஏறியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8 மணியளவில் கூரை மீதான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக குடிவரவு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். இவர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக வந்தவர்கள் அல்லர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றியோ, அவர்கள் புகலிடம் கோருகின்றார்கள் என்பது குறித்தோ, செயற்பாட்டாளர்களின் அறிக்கைகள் குறித்தோ பேச்சாளர் எதனையும் உறுதிப்படுத்தவில்லை. நேற்று போராட்டத்தை ஆரம்பித்திருப்போரில் 4 பெண்களும் உள்ளனர். இவர்களில் ஒரு பெண் கர்ப்பிணியாவார். அலுவலர்கள் இக்குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பான முறையில் கீழே இறக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக பேச்சாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.