பக்கங்கள்

20 செப்டம்பர் 2010

இராணுவம் பொதுமக்கள் மீது கொத்துக்குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசியது!

கிளிநொச்சியில் மூன்று நாட்களாக நடந்துவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வின் முன்னால் 500 க்கும் மேற்பட்டோர் இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர். பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் சாட்சியம் அளித்த பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி, போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது நாம் வெளியேறுவதைத் தடுப்பதற்காகப் புலிகள் பச்சை மட்டைகளால் அடித்தனர். அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கிச் சுட்டனர். இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை சுந்தரமூர்த்தி விவரித்தார்.
மேலும், பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் சிறு பிரதேசங்களுக்குள் மக்களை முடக்கியதன் மூலம் புலிகள் தமது ஆளணியை இலகுவாகத் திரட்டவும், ஆயுதங்களை வைத்து இயக்குவதற்கு தளங்களை அமைக்கவும் அரசாங்கமே வழிசமைத்துக் கொடுத்தது. அரசு இவ்வலயங்களை அறிவிக்காவிட்டால் நாம் எமக்கான பாதுகாப்பு இடங்களை நாங்களே தேடிக்கொண்டிருப்போம் என்றார் அவர். இந்த பாதுகாப்பு வலயங்களுக்குள் இராணுவத்தின் எறிகணைகளால் தினமும் 200 பேர் இறந்தனர் என்பதைக் குறிப்பிட்ட அவர் தாம் இருந்த தறப்பாள் கூடாரங்களைச் சுற்றி இறந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.