பக்கங்கள்

02 செப்டம்பர் 2010

இனப்பிரச்சினைத் தீர்வுபற்றி இலங்கையிடம் நிருபமா கேட்டுச் சொல்ல வேண்டும்.



இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட ஆக்கபூர்வமான விடயங்கள் என்ன என்பதை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் கொழும்பு நிர்வாகத்திடம் அறிந்து தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசாங்கத்தை தவிர்த்துவிட்டு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையும் போரினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள் குடியேற்றத்தையும் முன்னெடுக்க முடியாது என்று குறிப்பிட்ட மனோ கணேசன், இந்திய அரசு, இலங்கை அரசுடனும் தமிழ்க் கட்சிகளுடனும் தொடர்ச்சியாக பேச்சுகளை நடத்திக்கொண்டிருந்தாலும் நடைமுறையில் எதிர்பார்க்கின்ற முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுதான் தமிழ் மக்கள் மத்தியிலே நிலவுகின்ற கருத்து என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியபோது அங்கு உடனும் மாகாணசபைத் தேர்தலை நடத்திய இலங்கை அரசு, வடமாகாணத்தைக் கைப்பற்றியபின்னர் ஏன் அவ்வாறு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டுவரும் நோக்கம் இலங்கைக்கு இல்லை என்பதையும் குறிப்பிட்டார். வடமாகாண அரசு ஒன்று உருவாக்கப்பட்டால், இந்தியா வடபகுதி மக்களுக்குச் செய்யும் உதவிகளை அதனூடாகவே செய்யலாம். அதுவே சரியான முறையாகவும் இருக்கும் எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.