பக்கங்கள்

10 பிப்ரவரி 2013

முள்ளிவாய்க்காலில் தங்கப் புதையலுக்கு மோதல் துரத்திப் பிடிக்கப்பட்டார் லெப்.கேணல்

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டியெடுப்பதில், சிறிலங்காப் படை அதிகாரிகளுக்குள் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் உள்ளிட்ட 4 சிறிலங்காப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ஒருவர் தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றனர். பாரா 3 கப்பலின் சிதைவுகளை அண்டிய கடற்கரையில் அவர்கள் நிலத்தை தோண்டினர். அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள, சிறிலங்கா தேசிய காவல்படையின் 29வது பற்றாலியன் துருப்பினர் அதை அவதானித்து, அவர்களிடம் ஏன் தோண்டுகிறீர்கள் என்று விசாரித்தனர். தன்னை அடையாளம் காட்டிய லெப்கேணல், அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவு தங்கம் மற்றும் பணத்தை புதைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதுபற்றி தான் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாவும் தேசிய காவல்படையின் 29வது பற்றாலியன் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதற்கு தமது முன்அனுமதி பெற்றே அங்கு தோண்ட வேண்டும் என்று தேசிய காவல்படை அதிகாரிகள் அவர்களுக்கு கூறினர். இதனால், இருதரப்புக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தாம் வந்த டபிள்கப் வண்டியில் ஏறி லெப்.கேணல் மற்றும் மூன்று படையினரும் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக தேசிய காவல்படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, தப்பிச் சென்ற லெப்.கேணல் மற்றும் படையினரைப் பிடிக்க வீதித் தடுப்புகள் போடப்பட்டன. பன்சல்கட பகுதியில் போடப்பட்டிருந்த வீதித்தடையில் அந்த டபிள் கப் வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டபோது, அது வேகமாக செல்ல முயன்றது. அங்கிருந்த சிறிலங்காப் படையினர் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் அதையும் மீறி அவர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்த 62-1 பிரிகேட் படையினருக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் பராக்கிரமபுர பகுதியில் வீதிகளில் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர். இதை அவதானித்த அந்த நால்வரும் வாகனத்தை நெடுங்கேணிப் பக்கம் திருப்பிக் கொண்டு தப்பிசென்ற போதும், 62-1வது பிரிகேட் படையினர் துரத்திச் சென்று கைது செய்து சிறிலங்கா இராணுவ காவல்த்துறையிடம் ஒப்படைத்தனர். லெப்.கேணல் உள்ளிட்ட நான்கு சிறிலங்காப் படையினரும் சிறிலங்கா இராணுவக் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய உறுதிப்படுத்தியுள்ளார். சோதனைச்சாவடியில் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மீறியதாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.