பக்கங்கள்

27 பிப்ரவரி 2013

இரகசிய முகாமில் இருந்து தப்பிய புலிகளை சுட்டுகொன்ற படைகள்!

நேற்றைய தினம்(26) மதியம் அளவில், வெலிகந்தையில் உள்ள இரகசிய முகாம் ஒன்றில் இருந்து முன் நாள் விடுதலைப் புலிகள் இருவர் தப்பியுள்ளார்கள் என அறியப்படுகிறது.இதேவேளை வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்து காரொன்றை கடத்திச்செல்வதற்கு முயன்றவேளையில் இவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் அங்குள்ள கார் ஒன்றைக் கடத்திச் சென்றுவிட்டனர். இதனையடுத்து குறிப்பிட்ட இருவரையும், தேடிப் பிடிப்பதற்கு இராணுவத்தினரை பொலிசார் அழைத்துள்ளார்கள். இதனையடுத்து திம்புலாகல மலையில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். பொதுமக்கள் கொடுத்த தகவலுக்கு அமைவாக தேடுதல் நடத்திய இராணுவத்தினர், திம்புலாகல மலையில் வைத்து அவ்விருவர் மீதும் கடுந்தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனையடுத்து குறிப்பிட்ட 2 தமிழ் இளைஞர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். வெலிகந்தையில் உள்ள இரகசிய முகாம் ஆனது மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. இதில் இருந்து இலகுவாக எவராலும் தப்பிக்க முடியாது. எனவே சிலவேளைகளில் , இவர்களை வேண்டும் என்றே தப்பிக்க விட்டு, இறுதியில் இலங்கை இராணுவம் சுட்டுகொன்றதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. கொழும்பில் உள்ள பல ஊடகங்கள் முன்னுக்குப் பின் பல முரணான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் புலிகள் உறுப்பினர் என்று ஒரு ஊடகமும், இல்லை அவர்கள் பாதாள உலகக் கோஷ்டியினர் என்று மற்றுமொரு ஊடகமும் தெரிவித்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் தமிழ் இளைஞர்கள் என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.