பக்கங்கள்

14 பிப்ரவரி 2013

ராஜிவ் வழக்கில் 'நிலை' எடுக்க முன்னோட்டமா 4 தமிழர் தூக்கு?: தி.வேல்முருகன்

ராஜிவ் வழக்கில் தூக்கு கொட்டடியில் நிற்கும் மூன்று தமிழருக்கு எதிராக மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள 4 தமிழர்களை தூக்கிலிட முடிவு செய்திருக்கிறதோ? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வீரப்பனின் கூட்டாளிகள் என்று கூறி மீசை மாதையன்,சைமன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குக் கொட்டடியில் நிறுத்தியிருக்கிறார் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அப்சல் குருவை அவசரம் அவசரமாக தூக்கிலிட்டுக் கொலை செய்த கோபத்தில் ஜம்மு காஷ்மீர மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். காஷ்மீரிகளை தனிமைப்படுத்தும் வகையில் தூக்குத் தண்டனையிலும் `தேர்வு' முறையை கடைபிடிப்பதா? என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா குமுறியிருக்கிறார்.இந்தக் கோபத்தையும் கொந்தளிப்பையும் தணிக்க 4 தமிழர்களின் கருணை மனுக்களை நிராகரித்து நாங்கள் நேர்மையான முறையிலேயே தூக்கிலிடுகிறோம் என்று காட்டிக் கொள்கிறது இந்திய அரசு. தூக்குத் தண்டனையே கூடாது என்று ஒட்டுமொத்த உலகமே குரல் கொடுத்து வரும் நிலையில் அகிம்சையை உலகுக்கே எடுத்துச் சொன்ன இந்திய தேசம் அவசரம் அவசரமாக அடுத்தடுத்து தூக்குக் கொலைகளை செய்து வருகிறது. இன்று கூட தற்போது தூக்குக் கொட்டடியில் நிற்கும் 4 தமிழரும் வீரப்பனின் கூட்டாளிகளே அல்ல.. அப்பாவி பழங்குடி மக்கள்தான் என்று வீரப்பனின் துணைவியார் முத்துலட்சுமி கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இத்துடன் இரு முக்கிய காரணங்களுக்காகவும் 4 தமிழர்களை தூக்கிலிட இந்திய அரசு திட்டமிட்டுகிறதோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ஒன்று காவிரி நதிநீர் விவகாரத்தில் கூர்மையடைந்திருக்கும் தமிழக, கர்நாடகா மக்களிடையேயான உறவுநிலையை முற்றிலுமாக சீர்குலைக்கும் வகையில் கர்நாடகாவில் 4 தமிழரை தூக்கிலிட செய்வது, மற்றொன்று ராஜிவ் வழக்கில் தூக்கு மர நிழலில் நிற்கும் மூன்று தமிழர்களுக்கு எதிரான ஒரு நிலையை மேற்கொள்வதற்கு முன்னோட்டமாக தமிழர்களின் உணர்வுநிலையை சோதித்துப் பார்ப்பதுஆகிய காரணங்களுக்காகவே 4 தமிழரை தூக்கிலிட நினைக்கிறது மத்திய அரசு! தூக்குக் கொட்டடியில் நிற்கும் 7 தமிழரை பலியெடுக்க இந்திய அரசு கங்கணம் கட்டிவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஒன்றரை லட்சம் தமிழர்களை ஈழத்தில் பலியெடுத்த அதே இந்திய அரசு தமிழ்நாட்டிலும் தனது மரண வேட்டையை தொடங்கப் போகிறது. இந்திய அரசின் இந்த மனித வேட்டைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழர்களும் சாதி, மத எல்லைகளைக் கடந்து ஒன்று திரண்டு போராடுவோம்! தூக்குக் கொட்டடியில் நிற்கும் 7 தமிழரின் உயிரைக் காக்க ஓரணியில் திரள்வோம்!! என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.