பக்கங்கள்

20 பிப்ரவரி 2013

பிரபாகரனின் குடும்பம் தொடர்பில் எதுவும் தெரியாது : அச்சத்தில் பொன்சேகா

கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வே.பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோரின் மரணம் பற்றி இராணுவம் எதையும் அறிந்திருக்கவில்லை என சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். “2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இரவு தொடங்கி 19ஆம் திகதி 10 மணி வரை நடந்த இறுதி யுத்தம் முடிந்த பின் நாம் பிரபாகரன், அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி  மற்றும் 400 பயங்கரவாதிகளின் உடல்களை கண்டெடுத்தோம். பிரபாகரன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி ஆகியோரின் உடலை அப்போது அமைச்சராக இருந்த கருணா அம்மான் அடையாளம் காட்டினார்” என அவர் குறிப்பிட்டார். பிரபாகரனின் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் எங்குள்ளனர் என்பதையிட்டு இராணுவத்திற்கு எதுவும் தெரியாது எனவும் அவர் கூறினார். பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோர் வகித்த பதவிகள் பற்றி இராணுவத்திடம் தகவல்கள் இருக்கவில்லை. இவர்கள் இலங்கையில் இருந்தனரா அல்லது யுத்தத்தின்போது இறந்துவிட்டனரா என்பதெல்லாம் இராணுவத்திற்கு தெரியாது என சரத்பொன்சேகா தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனை இராணுவம் பிடித்து வைத்திருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் சனல் – 4 இனால் வெளியிடப்பட்ட படங்கள் பற்றி கருத்து தெரிவித்த பொன்சேகா இராணுவத்திடம் பிரபாகரனின் இளைய மகன் பற்றிய தகவல் எதுவும் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.