பக்கங்கள்

13 பிப்ரவரி 2013

தென்னையில் ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிருடன் மீண்ட அதிசயம்!

தென்னை மரத்தில் இறந்த சிறுவன் திடீரென உயிர் பிழைத்த அதிசயம்!தென்னைமரம் ஒன்றில் மின்சாரம் திடீரெனப் பாய்ந்து அதில் தென்னோலை வெட்டுவதற்காக ஏறிய சிறுவனைத் தாக்கியது. இதில் குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாகக் கருதி நீண்ட நேரத்தின் பின்னர் உடலை கீழே இறக்கிய போதே, அவன் உயிரோடு இருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்றது. இதில் அதேயிடத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அந்தோனிதாஸ் (வயது 13) என்ற சிறுவன் மின்சாரம் தாக்கிய நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:வீதியால் சென்ற சிறுவனை அழைத்து பணம் தருவதாக ஆசை காட்டி தென்னைமரத்தில் ஓலை வெட்டுமாறு ஏற்றியுள்ளனர் வீட்டு உரிமையாளர்கள். சிறுவன் மரத்தில் ஏறி ஓலையை வெட்டியபோது அது சாய்ந்து மின் கம்பியில் வீழ்ந்தது. இதனால் தென்னை மரத்தின் வட்டுக்குள் மின்சாரம் பாய்ந்தது. சிறுவனும் தாக்கப்பட்டு அதற்குள்ளே அகப்பட்டுக் கொண்டான். சிறுவன் உயிரிழந்து விட்டான் என்று கீழே நின்றவர்கள் முடிவெடுத்தனர். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவனின் உடலத்தை கீழே இறக்கினர். இறந்து போனதாகக் கருதப்பட்ட சிறுவனின் உடல் திடீரென துடித்தது. அதன்போதே சிறுவன் உயிரோடு இருக்கும் விடயம் தெரிய வந்தது. உடனடியாக குறித்த சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுவனை ஆபத்தான பணியில் ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல், அவன் இறந்து விட்டதாகக் கருதி நீண்ட நேரமாக மீட்பு நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடாத வீட்டு உரிமையாளர்கள் குறித்து அங்கு கூடிய மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.