பக்கங்கள்

19 பிப்ரவரி 2013

சிறிலங்காவின் 'மிருக்கத்தனமான ஆட்சி'க்கு ஆயுதவிற்பனை!

மனிதஉரிமைகளை மீறுகின்ற மிருகத்தனமான சிறிலங்காவின் ஆட்சியாளர்களுக்கு, பிரித்தானிய அரசு ஆயுதங்களை விற்ற விவகாரம், பிரித்தானிய ஊடகங்களின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. பிரித்தானியாவின் முக்கிய ஊடகங்களான, ‘தி இன்டிபென்டென்ட்‘ மற்றும் ‘தி கார்டியன்‘ என்பன இந்த ஆயுத விற்பனையை மோசமாக விமர்சித்துள்ளன. “சிறிலங்காவின் மிருகத்தனமான ஆட்சிக்கு ஆயுதங்களை விற்ற பிரித்தானியா“ என்று இன்றைய பதிப்புக்கு ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு பிரதான தலைப்பிட்டுள்ளது. இந்தச் செய்தியில் பிரித்தானிய மகாராணி சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கும் ஒளிப்படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மோசமான மனிதஉரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் குறித்து விலாவாரியாக விளக்கும் வகையில், இந்தப் பிரதான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ‘சிறிலங்காவின் மீறல்கள் குறித்து உரக்கக் கத்தினோம், மூன்றாண்டுகளாக நாமே ஆட்சியாளர்களுக்கு ஆயுதங்களை அளிக்கிறோம்‘ என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரையையும் இன்றைய ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு வெளியிட்டுள்ளது. மேலும், ‘சிறிலங்கா குறித்த பிரித்தானியாவின் கபடநாடகம்‘ என்ற தலைப்பில், இந்த ஆயுத விற்பனையை விமர்சித்து, ஆசிரிய தலையங்கத்தையும் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பிரித்தானியாவின் மற்றொரு பிரபல நாளேடான தி கார்டியனும், சிறிலங்கா அரசுக்கான இந்த ஆயுத விற்பனையை கடுமையாக விமர்சித்துள்ளது. மோசமான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள - பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் ‘கவலைக்குரிய நாடாக‘ பட்டியலிடப்பட்டுள்ள நிலையிலும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ‘தி கார்டியன்‘ கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.