பக்கங்கள்

12 பிப்ரவரி 2013

வவுனியாவில் திருமணச் சாப்பாட்டில் புழு!

வவுனியாவில் கடந்த மாதம் 28ஆம் திகதி இறம்பைக்குளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தின் போது பரிமாறப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தமை தொடர்பாக வவுனியா நகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (11) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மண்டப உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா காசுப் பிணை மற்றும் 3 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த மாதம் 28ஆம் திகதி இறம்பைக்குளத்தில் உள்ள உணவகத்தினால் திருமண வைபவத்தில் பரிமாறப்பட்ட உணவில் உயிருள்ள புழுக்கள் காணப்பட்டமையினால் திருமண வீட்டார் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனையில் ஈடுபட்டதுடன் நீதிமன்றத்திலும் அன்றைய தினம் வழக்கு தாக்கல் செய்தனர். இந் நிலையில் திருமண மண்டபத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் நேற்றைய தினம் வழக்கு தவணையும் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்டையில் நேற்று (11) வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி அலெக்ஸ்ராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது திருமண மண்டபத்தின் உரிமையாளரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதிபதி உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா காசுப் பிணையிலும் 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்ததுடன் திருமண மண்டபத்தினை அடுத்த வழக்கு தவணைவரை மூடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.