பக்கங்கள்

15 பிப்ரவரி 2013

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்குதல் நடத்தினர்!

2013-02-15 10_10_59(1)யாழ். தெல்லிப்பளையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது தாக்குதல் நடத்திய நபர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்த இப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் வீரகேசரி செய்தித்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பில் ஈ.சரவணபவன் எம்.பி. மேலும் தகவல் தருகையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு வந்த மூன்று பேர் ‘எல்லாம் முடிஞ்சுது போ.. போ” எனக் கூறிய வண்ணம் வந்தனர். எதிர்ப்பாராத இச்சம்பவத்தினால் நாமும் பொதுமக்களும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். பொதுமக்களை விரட்டத் தொடங்கிய அவர்கள் சிலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் பத்திரிகையாளர்களின் கமெராக்களையும் உடைத்தனர். அவர்களைக் கைது செய்யுமாறு அருகில் இருந்த பொலிஸாரிடம் கோரினேன். எனினும் அவர்கள் உடனடியாகத் தப்பிச் சென்று வாகனமொன்றில் ஏறிச் சென்றுவிட்டனர். இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள். ஜனநாயக ரீதியிலான போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் என்பதை அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார். இச்சம்பவத்தில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் நடராஜா மதியழகன், வலி. தென்மேற்கு பிரதேச சபை தலைவர் எஸ்.ஜெபநேசன் ஆகிய இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.