பக்கங்கள்

24 பிப்ரவரி 2013

மக்களை அலட்சியப்படுத்திய டக்ளசும்,சுந்தரமும்!

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கு பற்றுவதற்காக நேற்றுச் சனிக்கிழமை காலை குறிகாட்டுவான் துறைமுகத்தைச் சென்றடைந்த மக்கள் நீண்டநேரமாக கால் கடுக்க வெயிலில் காத்திருந்தனர். அந்தவேளையில் அங்குவந்த டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் அங்கு கூடியிருந்த மக்களையும் கவனிக்காமல் வடதாரகை படகில் ஏறி கச்சதீவுக்குச் சென்றனர். அதன் பின்னர் குறிகாட்டுவானுக்கு வந்த யாழ். மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரியான யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகமும் மக்களைப்பற்றி கவனத்தில் எடுக்காமல் தன்பாட்டில் புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினதும் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினதும் பொறுப்பற்ற செயலினால் குறிகாட்டுவானில் கச்சதீவு செல்வதற்காக திரண்டிருந்த நுற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் இவர்களின் பொறுப்பற்ற செயலை ஆத்திர மேலீட்டால் வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தனர். கச்சதீவு அந்தோனியர் உற்சவத்துக்குச் செல்வதற்காக குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு நேற்றுக்காலையிலிருந்தே அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் சென்றனர். காலை 9.30 மணிக்குப் பின்னர் நுற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டபோதும் படகுகள் எவையும் வராத காரணத்தினால் அவர்கள் வெயிலில் காத்திருந்தனர். அந்தச் சமயத்தில் துறைமுகத்தில் வடதாரகைப்படகு நிறுத்தப்பட்டிருந்தது. மதியவேளை தனியார் படகு ஒன்று வந்து மக்களை ஏற்றிய போதும் பயணிகள் போதாது எனத்தெரிவித்து ஏற்றிய பயணிகளை படகின் உரிமையாளர் இறக்கிவிட்டார். கூடுதலான பணம் தருகிறோம் ஏற்றிச் செல்லுங்கள் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தபோதும் படகு உரிமையாளர் அதனைக் கணக்கிலெடுக்காமல் சென்றுவிட்டார். பிற்பகல் ஒரு மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் அங்கு வந்தனர். இதன் போது அங்கு கால் கடுக்க காத்திருந்த மக்கள், அமைச்சர் தலைமையிலான குழுவினரை சுற்றிவளைத்தனர். தங்களையும் வடதாரகைப் படகில் ஏற்றிச் செல்லுமாறும் அல்லது வேறுபடகை ஏற்பாடுசெய்து தருமாறும் கெஞ்சிக் கேட்டனர். இதனைப் பொருட்படுத்தாத அமைச்சர் நில்லுங்கள் படகு வரும் உங்களுக்கு நிற்க விருப்பம் இல்லாவிட்டால் திரும்பிப் போங்கள் என்று பதிலளித்துவிட்டு, வடதாரகைப்படகில் புறப்பட்டு சென்று விட்டார். காலையிலிருந்து காத்திருந்த மக்கள் வெயிலில் அத்தரித்துக் கொண்டுநிற்க அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவும் அவரது குழுவினரும் வடதாரகையில் ஏறி கச்சதீவு நோக்கிப்பயணமாகினர். இதன் பின்னர் குறிகட்டுவானுக்கு யாழ்.மாவட்ட அரச அதிபர் வருகை தந்தார். அவரைச்சுற்றி வளைத்த மக்கள் தமக்குப் படகு ஒழுங்கு செய்து தருமாறும் தாங்கள் கட்டாயம் கச்சதீவு சென்று தமது நேர்த்திக் கடனை நிறை வேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். காலையில் சென்ற படகு திரும்பி வந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு மணிநேரத்துக்குள் படகு வரும். நீங்கள் அதில் செல்லலாம் எனத் தெரிவித்து விட்டு அரச அதிபரும் அங்கிருந்து சென்றார். மணிக்க்ணக்காக மக்கள் காத்திருந்த போதும் நேற்று மாலை 5 மணிவரையில் படகுகள் எவையும் வராததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லத் தொடங்கினர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினதும், அரச அதிபரதும் பொறுப்பற்ற நடவடிகடகையை மக்கள் திட்டித் தீர்த்தனர். இது தொடர்பாக யாழ்.மாவட்ட அரச அதிபரை அவரது கைத் தொலைபேசி இலக்கத்தினூடாகப் பலமுறை தொடர்பு கொண்ட போதும் எமது அழைப்புக்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.