பக்கங்கள்

13 பிப்ரவரி 2013

மகிந்தவை காரைநகருக்கு அழைத்துச்சென்றார் விஜயகலா மகேஸ்வரன்!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மகிந்த அரசாங்கத்துடன் இணைவதற்கு தயாராகியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட நேற்றைய தினம் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து மகிந்த ராஜபக்சவை காரைநகருக்கு அழைத்துச் சென்றார். எதிர்க் கட்சியிலிருக்கும் போதே ஆளும் கட்சியிலுள்ள அமைச்சர்களுடன் நட்புடன் பழகி அவர்களை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துகின்ற விஜயகலா இன்று மகிந்த ராஜபக்சவையே தனது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மகிந்தவின் நிகழ்ச்சி நிரலில் காரைநகர் செல்வதற்கான திட்டமிடல் இருக்கவில்லை. இங்கு செல்வதாக ஊடகவியலாளர்களுக்கோ திணைக்கள அதிகாரிகளுக்கோ எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால், திடீரெனவே இந்த நிகழ்ச்சி நிரல் புகுத்தப்பட்டதாக தெரியவருகின்றது. நயினாதீவுக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச அங்கிருந்து நேரே காரைநகருக்கு உலங்கு வானூர்தியில் மகிந்த வந்திறங்கினார். காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கிய மகிந்த பின்னர் காரைநகர் மணற்காட்டு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசேட வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர் மக்கள் மத்தியிலும் உரையாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்டத்திற்கான ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் மகிந்த ராஜபக்சவை வரவேற்று நிகழ்ச்சியொன்றை ஏற்படுத்தி நடத்தியமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடம் கடும் கொதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விஜயகலா எம்.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பரிசீலித்து வருவதாகவும் கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிய வருகின்றன. விஜயகலாவின் கணவரான தியாகராஜா மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியினூடாக அரசியலில் இறங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் பிரதமர் ஆட்சி நடைபெற்ற போது மகேஸ்வரன் இந்து கலாசார அமைச்சராக இருந்தவர். சிறிலங்கா அரசியலில் மகேஸ்வரன் சிறந்த அரசியல்வாதியாகக் கருதப்பட்டவர். ஆனால், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். மகேஸ்வரனின் இறப்பிற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளராக களமிறங்கிய அவரது மனைவியாகிய விஜயகலா மகேஸ்வரன் அனுதாப வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார். மகேஸ்வரனைப் போன்றே இவரும் அரசியலுக்கு அப்பால் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். இதனால் ஆளும் கட்சி அமைச்சர்களுடன் நட்பு பாராட்டினார். தற்போது இவர் முற்று முழுதாகவே ஆளும் கட்சியில் இணைவதற்கு முயன்று வருவதையே மகிந்த ராஜபக்சவை காரைநகருக்கு அழைத்துச் சென்ற செயல் வெளிக்காட்டி நிற்பதாக பரவலாகப் பேசப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.