பக்கங்கள்

17 பிப்ரவரி 2013

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே நிரந்தரப் பாதையை அமைத்துத் தருக;மக்கள் கோரிக்கை

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே நடைபெற்று வரும் “பாதை’ சேவைக்குப் பதிலாக நிரந்தரமான வீதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காரைநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை காரைநகருக்குச் சென்ற ஜனாதிபதி மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொண்டார். பின்னர் பொது மக்களைச் சந்தித்து உரையாடினார். அதன் போதே காரைநகர் மக்கள் சார்பாக மனு ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அந்த மனுவில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: காரைநகருக்குரிய நீதிமன்றம், பொலிஸ் நிலையம், வலயக்கல்வி அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பன ஊர்காவற்றுறையிலேயே அமைந்துள்ளன. இதனால் காரைநகரில் இருந்து கடல் வழியாகவே போக்குவரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே காரைநகர் ஊர்காவற்றுறைக்கான நிரந்தர தரைப் பாதையை அமைக்க வேண்டும். ஏழரைக் கிலோ மீற்றர் நீளமான காரைநகர் சுற்று வீதியை அகலமாக்கி “காப்பெற்’ வீதியாக அமைக்க வேண்டும். காரைநகர் கோவளம் வெளிச்ச வீட்டை உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் புனரமைத் துத்தர வேண்டும். கோவளம் ஆலடி வீதியை “காப்பெற்’ வீதியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்டு உருத்தெரியாமல் சிதைந்து போய் உள்ள சீநோர் கட்டடத்தை புனரமைத்து காரைநகர் பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.