பக்கங்கள்

09 பிப்ரவரி 2013

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்!

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு இன்று காலை 8 மணிக்கு தூக்கில் இடப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை இன்று காலை நிறைவேற்றப்பட்டது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அரசு இந்தத் தகவலை தெரிவிக்கவில்லை. இருப்பினும் உள்துறை அமைச்சகம், காலை 8 மணிக்கு அப்சல்குரு தூக்கில் இடப்பட்டதாக தெரிவித்துள்ளது. உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இந்தத் தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி வேணு ராஜாமணி தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அனுப்பப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவை ஜன.26ல் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாகவும் அதைத் தொடர்ந்தே அப்சல் குரு, தில்லி திகார் சிறையில் தூக்கில் இடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்சல் குரு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத உறுப்பினராக இருந்தவர். கடந்த டிச.13, 2001ம் ஆண்டு தில்லி நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவி, தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர் அப்சல் குரு. இவருக்கு டிச.18, 2002ல் தில்லி நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல் முறையீடு செய்து, கடந்த ஆக.4, 2005ல் உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, கடந்த 2006ம் ஆண்டு அக்.20ல் அவரைத் தூக்கில் இட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், அவரது மனைவி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்த நிலையில், அப்சல் குரு மீதான விசாரணை முறைப்படி நடக்கவில்லை என்று கூறி, மனித உரிமை அமைப்புகள் சிலவும், சில அரசில் கட்சிகளும் குற்றம் சாட்டின. ஆனால், பா.ஜ.க.வோ அப்சல் குரு ஏன் தூக்கிலிடப் படவில்லை என்று கூறி பிரசாரத்தில் ஈடுபட்டது. குறிப்பாக, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்ட பின்னர், இந்தக் கோரிக்கை வலுவடைந்தது. இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காகவே நாட்டின் பாதுகாப்பை அடகு வைத்து காங்கிரஸ் அரசு அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றாமல் உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், 2012, டிச.10ம் தேதி, அப்சல் குருவின் கருணை மனு குறித்து பதிலளித்த உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது பற்றி முடிவு செய்யப்படும் என்றார். இந்த நிலையில், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் பிரணாப் முகர்ஜி இந்தக் கருணை மனுவை நிராகரித்து அனுப்பியுள்ளார். அப்சல் குரு உதவியுடன் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 போலீஸார் உள்பட பாதுகாப்பு வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.