பக்கங்கள்

18 பிப்ரவரி 2013

டக்ளஸின் தலையீட்டால் தான் வீதிகளின் அபிவிருத்தி முடக்கம்!

உலக வங்கியின் நிதியுதவியுடன் யாழ். குடாநாட்டில் வீதிகளைப் புனரமைப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தில் இரு தொகுதிகள் அரசியல் தலையீடு காரணமாக செயலிழக்கும் அபாயநிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் 700 மில்லியன் ரூபா செலவில் திருத்தம் செய்யப்பட வேண்டிய 6 வீதிகளின் புனரமைப்பு வேலைகள் அப்படியே நின்று போயுள்ளன. இவற்றைச் செய்து முடிக்க வேண்டிய காலப்பகுதி இந்த வருடம் மே மாதத்துடன் முடிவடையும் நிலையில் அதற்குரிய ஒப்பந்தக் காரரைச் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள அமைச்சர்கள் மட்ட கூட்டு அரசியல் தலையீட்டால் பணிகள் அனைத்தும் அப்படியே முடங்கிவிட்டன. இந்த நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு இந்த நிலை நீடித்தால் வழங்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை உலக வங்கியில் எதிர் காலத்தில் வடக்கு அபிவிருத்திக்கு என நிதி உதவிகள் வழங்கப்படாத நிலைமை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். புன்னாலைக்கட்டுவன் புளியங்கிணற்றடிவீதி, மல்லாகம் புன்னாலைக்கட்டுவன் ஈவினை வீதி, சண்டிலிப்பாய் உடுவில் வீதி ஆகிய மூன்று வீதிகளையும் புனரமைப்பதற்கு 406 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. காரைநகர் சிவன் கோயில் வீதி, வேலணை சுருவில் வீதி, மண்டைதீவு வீதி ஆகியவற்றைப் புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. உள்ளூரில் உள்ள யூரோவில் என்னும் பொறியியல் நிறுவனத்தின் கீழ் இந்த வீதிகளைப் புனரமைக்கும் ஒப்பந்தம் 2011 ஆம் ஆண்டு கடைசிக் காலாண்டில் வழங்கப்பட்டது. 18 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு இறுதிவரை புனரமைப்புப் பணிகளில் 5 வீதம் கூட இந்த நிறுவனத்தால் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒப்பந்தங்கள் அனைத்தும் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரத்துச் செய்யப்பட்டன. இந்த 6 புனரமைப்புத்திட்டங்களுக்காக யூரோவில் நிறுவனத்துக்கு 90 மில்லியன் ரூபா முற்பணமாக வழங்கப்பட்டது. எனினும் வேலைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் உலக வங்கியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டன. பின்னர் இந்த வீதிகளை புனரமைப்பதற்கான மீள் ஒப்பந்தம் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விவகாரத்தில் தலையிட்டதை அடுத்தே மீள் ஒப்பந்தத்துக்கான கேள்வி இதுவரை கோரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒப்பந்தத்தை மீளவும் யூரோவில் நிறுவனத்திடமே வழங்கும் படி கேட்டுள்ளார். ஆளுநர் அதனை ஏற்று ஒப்பந்தத்தை மீளவும் பழைய ஒப்பந்தகாரரிடமே வழங்கும் படி உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கு சிபாரிசு செய்துள்ளார். இந்த நிலையில் ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்ட முற்பணத்துக்கான வங்கிப் பாதுகாப்பு உத்திரவாதத்தின் அடிப்படையில் முற்பணத்தின் ஒரு தொகுதியை கடந்த வாரத்தில் வங்கி, வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸிடம் கையளித்தது. ஆனால் சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் மாறாக அந்தக் காசோலை வங்கியிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடே இதற்கும் காரணம் என அதிகாரிகள் கூறினர். “உலக வங்கியிடம் இருந்து அங்கீகாரம் பெற்றமைக்கு அமைய இந்தத் திட்டங்கள் மீண்டும் கேள்வி கோரப்பட்டு வேறு ஒப்பந்த காரருக்கு உடனடியாக வழங்கப்படாது விடின் எதிர் காலத்தில் வடமாகாணத்துக்கென உலக வங்கியிடம் இருந்து கிடைக்கும் கடனுதவிகள் கிட்டுவது கேள்விக்குறியாகிவிடும்” என்று மாகாண சபை அதிகாரி ஒருவர் உதயனிடம் தெரிவித்தார். “மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்ட போதிலும் உரிய அரசியல் தலைவரிடம் பேசி அதனை நாம் மீள பெற்றுக்கொண்டோம்” என்று யூரோவில் நிறுவனத்தின் பணிப்பாளர் ராமதாஸ் உதயனிடம் தெரிவித்தார். அரசியல் வாதிகளின் சொந்த நலன்களுக்காக அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாறு பந்தாடப்படுவது குறித்து யாழ்ப்பாண மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். அரசியல் வாதிகளின் தாளத்துக்கு ஆடாமல் உரிய நெறிமுறைகளில் நின்று அதிகாரிகள் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.