பக்கங்கள்

15 ஆகஸ்ட் 2010

அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை!



அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை.. ஆனால் நான் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காகவே எனது நாட்டை விட்டு வெளியேறினேன் - இப்படி கூறினார் ஓசியன் லேடி கப்பல் மூலம் கடந்த வருடம் கனடாவை வந்தடைந்த ஈழத் தமிழர்கள் 76 பேரில் ஒருவரான 21 வயது இளைஞன்.
அவர் பாதுகாப்புக் காரணங்களாக பெயரை வெளிப்படுத்த மறுத்து விட்டார். ஆயினும் அக்கடல் பயணத்தின்போது எதிர்கொண்ட பேராபத்துக்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்தவை வருமாறு:-
”நான் மூன்று இலட்சம் தமிழர்களில் ஒருவராக வவுனியாவில் முட்கம்பி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தவன்.ஒருவாறு அங்கிருந்து தப்பினேன். உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காகவே கடற்பயணத்தில் ஈடுபட்டேன்.
அந்த நாற்பது நாட்கள் கொண்ட கடல் பயணம் மிகவும் கொடூரமானது.பேராபத்துக்கள் நிறைந்தது. அந்த நாற்பது நாட்களும் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.நான் கப்பலில் உயிரைக் குடிக்கும் கடுங்குளிரில் தூங்க வேண்டித்தான் இருந்தது.
காலநிலையுடன் போராட வேண்டி இருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கத்தான் முடிந்தது. கடல் அடிக்கடி பயங்கரமாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது.கடுங்காற்றும் வீசியது. கப்பல் ஒருவாறு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா தீவை கடந்த ஒக்டோபர் மாதம் வந்தடைந்தது.
இப்பயணிகள் அனைவருமே எமது அகதிக் கோரிக்கை தொடர்பாக கனேடிய அரசினால் இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை கனடாவில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டோம். என்னை அதிகாரிகள் கேள்விகளை அடிக்கடிக் கேட்டு அரித்துக்கொண்டே இருந்தனர்.
ஐந்து மாதங்கள் சிறையில் போட்டனர். விடுவிக்கப்பட்டேன். தற்போது தலைநகர் ரொரன்ரோவில் வாழ்கின்றேன். எனது அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.
எனது தற்போது தொழில் பார்க்கும் உரிமை கிடையாது.எனது ஆங்கில அறிவை விருத்தி செய்ய வகுப்புகளுக்குச் செல்கின்றேன்.என்னை மனிதாபிமான தொண்டர்கள் சிலர்தான் ஆதரித்து வைத்திருக்கின்றார்கள்.
கணனித் துறையில் ஒரு மேதாவியாக வந்து சாதனைகள் நிலைநாட்ட வேண்டும் என்பது எனது இலட்சியக் கனவு. எனது தந்தை இறந்து விட்டார். எனது தாய், எனது சகோதரர்கள் இப்போதும் வவுனியா முட்கம்பி முகாம்களுக்குள்தான் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எனது வாழ்க்கை கனடாவில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்நாட்டுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருகின்ற ஈழத் தமிழர்கள் உண்மையிலேயே அப்பாவிகளும், பாதிக்கப்பட்டவர்களும்,ஆதரிப்பார் யாரும் இல்லாதவர்களுமே ஆவர்.
ஓசியன் லேடி கப்பலில் வந்த எம் மீது கனேடிய அரசு ஓரளவு கருணை காட்டி நடந்து கொண்டது. அக்கருணையை எம்.வி.சன்.சி கப்பலில் வந்திருப்பவர்கள் மீதும் காட்டுதல் வேண்டும்.கனடா அப்படி நடந்து கொள்ளும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.ஆகவேதான் நாம் நாட்டை விட்டு வெளியேறி பேராபத்துகளுக்கு மத்தியில் வேறு நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி வர வேண்டி இருக்கின்றது.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.