பக்கங்கள்

17 ஆகஸ்ட் 2010

நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்.



பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ளது மிகவும் பாசிசமான போக்கு ஆகும் என்று நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இன்று தமிழ்நாட்டு மக்களின் கருத்துரிமைக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது.
உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உள்ளூர் மக்கள் மீது நடத்தி வரும் அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ளது.இது மிகவும் பாசிசமான போக்கு ஆகும்.இதனை நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் கூட்டமைப்பினர் உரிய முறையில் அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது.அதனை மீறி பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 8 பெண்கள் உட்பட 59 பேரையும் தமிழக அரசு கைது செய்து வேலூர் மற்றும் புழல் சிறைகளில் அடைத்துள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் இடங்களில் சைதாப்பேட்டை பனகல் மாளிகையும் ஒன்றாகும்.ஆனால் திட்டமிட்டு அனுமதி மறுப்பதும் பின் கைது செய்வதும் தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான போக்கு தொடர்ச்சியான நிலவுவதைக் காட்டுகின்றது.
மீனவர் பிரச்சனையா,ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது.உள்ளூர் விவசாயிகளின் பிரச்சனையா,போராட்டத்திற்கு அனுமதி கிடையாது.டாஸ்மாக் தொழிலாளியின் கூலி உயர்வுக்கான போராட்டமா,அனுமதி கிடையாது.தொப்புள் கொடி தமிழர்களின் உயிர்ப் பிரச்சனையா போராட்ட அனுமதி கிடையாது.
சரி இங்கு உள்ள பிரச்சனைக்குத்தான் அனுமதி கிடையாது,எங்கோ உள்ள காஷ்மீர் மக்களின் பிரச்சனை என்றாலும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்றால் இது ஜனநாயகம் கடைபிடிக்கப்படும் நாடா அல்லது கருணாநிதியின் தலைமையில் மன்னராட்சி நடைபெறும் நாடா என்று சந்தேகம் எழுகின்றது.நாடு முழுவதும் மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டித்தும் உலகிற்கு எடுத்துச் சொல்லவும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் காவல்துறையும் அதிகார வர்க்கமும்,தமிழர்களை வதைக்கும் முதல்வருக்கு யாராவது பாராட்டு விழாக்கள் நடத்தி குத்தாட்டம் போட்டால் ஆதரவாக முழு வீச்சில் இயங்குகின்றன.இந்த நிலை ஜனநாயகத்தில் மிகவும் இழிவான போக்கு ஆகும். இதற்கு எம் தமிழ் மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.