பக்கங்கள்

07 ஆகஸ்ட் 2010

திருமலையில் இரு மாணவிகளை காணவில்லை.



திருகோணமலையில் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகிறது. இரு மாணவிகளும் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக திருகோணமலை பொலிஸாருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணையின் இறுதி நாளான நேற்று பாடசாலைக்குச் சென்ற மேற்படி மாணவிகள் இருவரும் நேற்று மாலை வரையில் வீடு திரும்பாததை அடுத்து, இது தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் பெற்றோரினால் முறையிடப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுகின்றது.
சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி மாணவிகள் இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சக மாணவியொருவரின் தந்தையைப் பார்வையிடச் சென்றதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணையின் இறுதிநாள் என்பதால் பாடசாலை வழமையை விட நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக விடப்பட்டது. ஆனாலும், குறித்த இரண்டு மாணவியரும் பிற்பகல் 3 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதன் பின்னரே பெற்றோர் மாணவிகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து பாடசாலைக்கே சென்று விசாரித்ததுடன், பல்வேறு இடங்களிலும் மாணவிகளைத் தேடிப் பார்த்துள்ளனர். இந் நிலையில், இருவரும் மூதூருக்குச் செல்வதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், அது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
அத்துடன், இது தொடர்பில் பெற்றோர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், மூதூர் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாணவிகள் இருவர் தொடர்பிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என திருகோணமலை, மூதூர் பொலிஸார் நேற்று இரவு தெரிவித்தனர்.
பிந்திய செய்தி :

திருமலை மாணவிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில்
காணாமல் போனதாக புகாரிடப்பட்ட, திருகோணமலை மகளிர் கல்லூரியொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும், இரு மாணவிகளும் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக திருகோணமலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாடசாலைக்கு சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை என திருகோணமலை பொலிஸில் மாணவிகளின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இம்மாணவிகள் கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.
அதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் மூலம் மாணவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். தாம் கடத்தப்பட்டிருக்கவில்லை என்றும், பரீட்சை புள்ளி குறைவு காரணமாக வீட்டுக்கு செல்லாமல் பஸ் மூலம் புறப்பட்டு வந்ததாகவும் அவர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.