பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2010

கொட்டாஞ்சேனைத் தமிழர்களையும் பதியும்படி போலீஸ் அறிவிப்பு.



கொழும்பில் தங்கியிருக்கும் தமிழர்கள் மீது சந்தேகப் பார்வையை வைத்துள்ள போலீசார் தற்போது கட்டம் கட்டமாக அவர்கள் மீது சில வரையறைகளை விதித்து வருகின்றனர். இதன்படி வெள்ளவத்தைப் பகுதியில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரும் போலீசில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை அண்மையில் அமுல்படுத்தப்பட்டது. இதேபோல, கொட்டாஞ்சேனைப் பகுதியை நேற்று அதிகாலை சுற்றி வளைத்த போலீசார், தமிழ்மக்களை போலீஸ் நிலையத்தில் பதிவுசெய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். எதற்காகப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பிய சில தமிழர்களைப் போலீசார் தம்முடன் போலீஸ் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. "தமிழ்மக்கள் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற ஷரத்து அவசரகாலச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பின்னர் ஏன் நாங்கள் பதிவுசெய்யவேண்டும்?" என சிலர் கேள்வி எழுப்பினர் என்றும் அதற்குப் போலீசார் வெளிநாடுகளிலுள்ள புலிகள் கொழும்பில் ஊடுருவியிருக்கலாம் எனத் தெரிவித்தனர் என்றும் கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் போலீஸ் நிலையத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.