பக்கங்கள்

19 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்காவிற்கு எதிரான விசாரணைகள் விரைவில் நடத்தப்பட வேண்டும்!

இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள போர்குற்றச்சாட்டுக்கள் குறித்து தாமதமின்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மீண்டும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சனல் 4 தொலைக்காட்சிகாட்சி வெளியிட்டுள்ள புதிய ஆதாரங்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது போர் குற்றங்களும், மனிதாபிமானத்திற்கு எதிரான யுத்தமும் இடம்பெற்றதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சனல்4 தொலைக்காட்சி கடந்த சனிக்கிழமை செய்தி அறிக்கையில் விரிவான ஆய்வுத் தொகுப்பொன்றை வெளியிட்டது.
இதில் முன்னர் வெளியிடப்பட்ட ஆதாரங்களையும், ஐ.நா அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டுக் கூறிய அந்தத் தொகுப்பில் புதிய ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டன. இறுதிக்கட்ட போர் இடம்பெறுவதற்கு முன்னர் குறிப்பாக 2008ஆம் ஆண்டு வன்னியைச் சேர்ந்த அரச அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்டு இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகளுக்கமைய வன்னியில் நான்கு லட்சத்து 30 ஆயிரம் பேர் இருந்த போதிலும், இறுதிக்கட்ட போர் முடிந்த நிலையில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் மக்களே இடம்பெயர்ந்து, வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் தகவல்களின் அடிப்படையிலேயே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பிய செனல் 4 தொலைக்காட்சி, அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டது. அதேவேளை இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் பேச்சாளராக கடமையாற்றிய கோட்டன் வைசும், இறுதிக்கட்ட போரின் போது நாற்பதாயிரம் வரை மக்கள் கொல்லப்பட்டிருக்கதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் செனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இந்த புதிய ஆதாரங்கள் குறித்தும் ஆராயும் வகையில், சர்வதேசமட்டத்திலான சுயாதீன விசாரணைகளுக்கு ஐ.நா உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

18 ஏப்ரல் 2011

இனப்பிரச்சனை தீர்வில் அரச தரப்புக்கு அக்கறையில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இன விவகாரத்தீர்வு தொடர்பாக நடைபெறும் பேச்சு மிகவும் சுமுகமாக நடைபெறுவதாகக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பேச்சில் கலந்துகொள்ளும் அரசாங்கத் தரப்பினர் இனவிவகாரத்தீர்வில் எவ்வித அக்கறையும் இன்றியே பேச்சில் கலந்துகொள்கின்றனர். அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன விவகாரத் தீர்வு விடயத்தில் தீர்வு குறித்த எவ்வித சிந்தனையும் இன்றி இருப்பதையே இது காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வையே நாம் நாடி நிற்கின்றோம். ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைத் தர அரசாங்கம் தயாரா என்பது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள் இல்லை. பேச்சுவார்த்தையின் போக்கையும் அரசாங்கத்தரப்பினரின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது இழுத்தடிப்பை மேற்கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. தொடர்ந்தும் இழுத்தடிப்பதில் பிரயோசனம் இல்லை. அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவை முன்வைக்க வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் பேச்சு நடத்துவதில் பயனில்லை'' எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

வன்னிப்போரில் ஐ.நா.ஏற்படுத்திய குருதிக்கறை!

வன்னிப் போரில் 20,000 மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள், ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாருக்கு தெரிவித்திருந்தனர். எனினும் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த நம்பியார் விரும்பவில்லை. எனவே போரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை அதன் அறிக்கை அழித்துவிடாது என த ரைம்ஸ் நாளேடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐக்கிய நாடுகள் சபை சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, சிறீலங்காவில் இடம்பெற்ற போர் தொடர்பில் ஒரு அனைத்துலக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அழுத்தத்தை சிறீலங்கா அரசுக்கு ஏற்படுத்தப்போகின்றது. ஐ.நாவின் அறிக்கை ஆதாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது. அவற்றில் காணப்படும் ஆதாரங்களில் சில ரைம்ஸ் நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டவை. சிறீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்களினால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறுதி ஐந்து மாதங்களில் எறிகணைத் தாக்குதல்களில் 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக த ரைம்ஸ் நாளேடு முதலில் தெரிவித்திருந்தது. மனித உரிமை அமைப்புக்களும் பல ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளன. இரு தரப்பினரும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் அதில் உள்ளன. மனிதக் கேடையங்களாக மக்களை பயன்படுத்தியமை, சிறார் படைச்சேர்ப்பு போன்ற குற்றங்கள் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டாலும், சிறீலங்கா அரசின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை தடுத்தமை போன்றவற்றினால் தான் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நடைபெற்ற வடகிழக்கு பகுதியில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகின்றது. வெளிநாட்டு அவதானிப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மக்களின் மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதை சிறீலங்கா அரசும் விரும்பவில்லை. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூவர் கொண்ட ஆலோசனைக்குழு ஒன்றை கடந்த வருடம் அமைத்திருந்தார். சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதே அதன் பணி. மேற்குல நாடுகளினதும், மனித உரிமை அமைப்புக்களினதும் அழுத்தங்களை தொடர்ந்தே அவர் அதனை மேற்கொண்டிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா வெள்ளைச்சாயம் பூச முற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். வன்னிப் போரில் 20,000 மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள், ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியருக்கு தெரிவித்திருந்ததாக ஐ.நா அதிகாரிகள் எமது ஊடக்திற்கு தெரிவித்துள்ளனர். எனினும் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த நம்பியார் விரும்பவில்லை. அதற்கு காரணம் நம்பியாரின் சகோதரர் சதீஸ் நம்பியார் என்பவரே சிறீலங்கா இராணுவத்திற்கு பணத்திற்காக ஆலோசனைகளை வழங்கி வந்திருந்தார். சதீஸ் நம்பியார் இந்திய இராணுவத்தின் முன்னாள் ஜெனரல். ஐ.நாவின் ஆலோசனைக்குழு சிறீலங்கா சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கவில்லை. எனினும் அவர்கள் புகைப்படங்கள், காணொளிகள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெற்றிருந்தனர். ஐ.நாவின் அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்துள்ளது. ஆய்வு செய்யப்படாது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிக்கை ஐ.நாவின் மேலதிக நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளதுடன், சிறீலங்காவுக்கும் – அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் இடையில் மோதல்களையும் உருவாக்கியுள்ளதாக மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அமெரிக்காவும் கடந்த மாதம் தீர்மானத்தை கொண்டுவந்திருந்தது. ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு மூலம் பான் கீ மூன் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்காவை கொண்டு செல்வது கடினமானது, ஏனெனில் சீனா போன்ற எதிர்த்தரப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக உள்ளன. லிபியா மீது நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் ஐ.நா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. லிபியா மீதான தாக்குதலுக்கு முன்னர் கேணல் கடாபியை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது தொடர்பில் பாதுகாப்புச்சபை ஓப்புக்கொண்டிருந்தது. சரணடைந்த விடுதலைப்புலிகளை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் உத்தரவின் பேரில் சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்ததாக தற்போது சிறையில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ஸ்ரீலங்கா பிரச்சாரம்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரியளவிலான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது. நிபுணர் குழு அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையில் ராஜதந்திர ரீதியிலான தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என சிங்கள அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட அணிசேரா நாடுகள் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் எதற்காக அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது என்பதனை தெளிவுபடுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியான தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலான ஆவணமொன்று தயாரிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலும், தாக்குதல்களுக்கான இன்றியமையா அவசியம் தொடர்பிலும் இந்த ஆவணத்தில் தெளிவுபடுத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள், பயங்கரவாத இல்லாதொழிப்பின் மூலம் வடக்கு தெற்கு மக்கள் அடைந்த நன்மைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட உள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கப் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு இராஜதந்திர ரீதியிலான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையிலான ஆவணமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டமா அதிபர், முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்களான நிஹால் ரொட்ரிகோ, எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார மற்றும் பெர்னாட் குணதிலக்க ஆகியோர் இந்த ஆவணத் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மின்சாரக்கதிரையில் இருத்தினாலும் கவலையில்லை என்கிறார் மகிந்த!

தேசத்திற்காக மின்சார நாற்காலி தண்டனையை தந்தால்கூட சந்தோசமாக எற்றுக்கொள்வேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததனை தாங்கிக்கொள்ள முடியாத சில தரப்பினர் சர்வதேச ரீதியில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான போலிப் பிரச்சாரங்களுக்கு பதிலளிப்பதற்கு தாம் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட போது மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தில் மக்கள் தமது வேலைகளை சுதந்திரமான முறையில் மேற்கொண்டதனை அவதானித்ததாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே தினத்தன்று இலங்கையில் காணப்படும் சுதந்திரத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறுகிய அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு சில தரப்பினர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடிக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

16 ஏப்ரல் 2011

கருணாநிதிக்கு நெடுமாறன் ஐயா கண்டனம்!

தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் எந்த விதமான அசம்பாவிதங்கள் இல்லாமல் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையத்தின் சிறப்புதான். தமிழக முதல்வர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை குறை கூறி வருகிறார். ஆனால் மக்களும் எதிர்க்கட்சிகளூம் பாராட்டுகின்றன. தேர்தல் ஆணையைத்தை கலைஞர் குறை சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமங்கலத்தை போல தில்லுமுல்லு செய்யமுடியாததாலும் முறைகேடுகள் செய்ய முடியாததாலும் தான் குறை கூறி வருகிறார்கள். மே- 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதை கலைஞர் குறை கூறியுள்ளார். இந்த ஒரு மாத கால இடைவெளியில் அரசு நிர்வாகம் ஸ்தபித்துவிட்டது என்று சொல்கிறார். இது தவறான குற்றச்சாட்டு. 5ஆண்டுகாலம் முதல்வராக இருந்தவருக்கு இது தெரியாதது அல்ல. ஊழல் முறைகேடுகளை அழிக்க தேர்தல் ஆணையைம் தடையாக இருக்கிறது என்பதால்தான் குற்றம் கூறிக்கொண்டிருக்கின்றார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று கூறினார்.

தமிழ் நாட்டில் உதை வாங்கியவர் பிரான்சில் தஞ்சம்!

பிரபாகரன் என்ற சிங்களப்படத்தை இயக்கிய துசார பீரிஸ் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். சிறீலங்கா இராணுவத்தினரால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியே அவர் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விமர்சித்து தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை கொச்சபை;படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் புலிகளின் பெண் தற்கொலை போராளி ஒருவரின் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைத்திருந்த போதிலும் தமிழக திரைப்பட தணிக்கை குழு இன்னும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஜெமனி வர்ண ஆய்வுக் கூடம் இந்த திரைப்படத்தை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

15 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கையை ஸ்ரீலங்கா பயன்படுத்த வேண்டும்!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கையின் போது நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும் இலங்கை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மார்ச் சீ டோனர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை மற்றும் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சில பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நிபுணர் குழுவின் அறிக்கை பக்கச்சார்பானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்றவாளிதான்!

சிறீலங்கா அரச தலைவர்கள் போர்க்குற்றங்களை மேற்கொண்ட குற்றவாளிகள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்காவின் மேரிலான்ட் இல் உள்ள பல்ரிமோர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் சட்டத்துறை மாணவன் ரஜீவ் சிறீதரன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின்; சகோதரர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் போர்க்குற்றவாளிகள் என தெரிவித்துள்ள சிறீதரன் அவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்கு பதில் தரும்போதே சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நூரெம்பேர்க் தொடக்கம் டாபர் பகுதி வரையிலுமான வரலாற்றை பார்த்தால் தெரிவுசெய்யப்பட்ட சில மக்களுக்கே நீதி கிடைத்துள்ளது. அவர்களுக்கே வரலாற்றை எழுதும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது கல்வியை தொடர்ந்தவாறே அவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்புடனும் இணைந்து பணியாற்றிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

14 ஏப்ரல் 2011

பான் கீ மூனின் உத்தியோகபூர்வ தளத்தில் நிபுணர் குழு அறிக்கை!

2009ஆம் ஆண்டு மே மாதமளவில் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை பான்கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனுடைய பிரதி ஒன்றும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த அறிக்கையை இலங்கை அரசு கடுமையாக விமர்சித்துமிருக்கின்றமை தெரிந்ததே. இந்நிலையில் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சமாக சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை பான்கீ மூன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபாரிசு செய்திருப்பதாக நம்பத்தகுந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிபுணர் குழுவின் அறிக்கை இன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனின் உத்தியோகபூர்வ தளத்தில் வெளியிடப்படும் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வறிக்கை இலங்கை நேரப்படி இன்று இரவு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர் குழு அறிக்கை பக்கச்சார்பானது என்கிறது ஸ்ரீலங்கா!

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை எமக்கு கிடைத்துள்ளது. அது ஒருபக்கச்சார்பானது, அறிக்கை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் நேற்று (13) தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை. பல விடயங்களில் அடிப்படைத் தவறுகள் காணப்படுகின்றன.
அறிக்கை ஒருபக்கச்சார்பானதாக கணப்படுகின்றது. எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாது பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கை தொடர்பில் நாம் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றோம். விரைவில் சிறீலங்கா அரசு தனது கருத்தை வெளியிடும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஐ.நாவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு முன்வைக்கப்பட வேண்டும் எனவும், அதனை அடிப்படையாகக் கொண்டு சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுத்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

13 ஏப்ரல் 2011

புலிகளை காட்டித்தருமாறு சிங்களப்படைகள் மிரட்டல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி பிரதேச தமிழ் வர்த்தகர்கள் மீது சிறீலங்கா இராணுவமும், துணைஇராணுவக்குழுவினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: வடமுனை, பெண்டுகள்சேனை, ஊற்றுச்சேனை, போத்தனை, தரவை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழ் வர்த்தகர்கள் பால் கொள்வனவுக்காக படுவான்கரையில் உள்ள பால் பண்ணைக்கு சென்ற சமயம், அவர்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரும், துணைஇராணுவக்குழுவினரும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்களின் பகுதிகளில் மறைந்திருக்கும் விடுதலைப்புலிகளை காட்டித்தரும்படி கேட்டே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இடைமறித்து சோதனைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். மட்டக்களப்பு – பதுளை (ஏ-5) வீதியில் வீதித்தடைகளும் கடந்தவாரம் போடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு – கொழும்பு (ஏ-4) மற்றும் திருமலை – மட்டக்களப்பு (ஏ-15) ஆகிய நெடுஞ்சாலைகளிலும் வீதித்தடைகளும், சோதனை நிலையங்களும் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வீடு வீடாகவும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை, முதலிக்குடா, மகிழடித்தீவு, கரடியனாறு, வடமுனை, ஊற்றுச்சேனை, புனானை, வாகரை, வெருகல் மற்றும் படுவாங்கரை ஆகிய பகுதிகளில் புதிய காவலரன்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மனைவிக்கு நாடுகடத்தல் உத்தரவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் அமரர் ஜோஸப் பரராஜசிங்கத்தின் மனைவியான திருமதி சுகுணம் பரராஜசிங்கத்தின் அகதி மனுவை நிராகரித்த கனடிய கன்சவேட்டிவ் அரசாங்கம் அவரை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது.
2005ம் ஆண்டு நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தினுள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது ஜோஸப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இடம்பெற்ற போது அவருடன் கூடவிருந்த திருமதி சுகுணம் பரராஜசிங்கம் படுகாயமடைந்திருந்தார்.
இதேவேளை, திருமதி ஜோசேப் பரராஜசிங்கத்தின் நாடுகடந்தல் கோரிக்கையை எதிர்த்து மனுச் செய்யப் போவதாக அவரது சட்டத்தரணி ராகுல் பௌலாக்கியா தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களின் பார்வைக்கு முனைவைக்கவேண்டும் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையை எல்லா சிறீலங்கா மக்களும் பார்க்கவேண்டும். சிறீலங்காவில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான இந்த அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு முன்வைப்பதே சிறந்தது என அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரிபி தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறலகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதே அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கான வழி என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எனவே அவர் தனது வார்த்தைகளை காப்பாற்ற வேண்டும்.
போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் இந்த அறிக்கையானது சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணைகளின் ஆரம்பமே தவிர முடிவல்ல. சிறீலங்காவின் வரலாற்றில் வன்முறைகள் என்பது ஒரு தொடர்கதை, எனவே புதிய வரலாற்றை உருவாக்குவதற்கு இந்த வன்முறைகள் தொடர்பில் நீதி கிடைக்கவேண்டும்.
பொதுமக்களின் பார்வைக்கு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் ஒரு சுயாதீன அனைத்துலக விசாரணைக்கான ஏதுநிலைகளை உருவாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

12 ஏப்ரல் 2011

சரணடைவது பற்றி அறிந்திருந்தும் ஐ.நா.அலட்சியம் செய்தது!

வன்னியில் நடைபெற்றபோரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு பா.நடேசன் உட்பட முக்கியமானவர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணிநேரங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு தெரியும் என ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ்நெற் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் நடைபெற்றபோரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு பா.நடேசன் உட்பட முக்கியமானவர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணிநேரங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு தெரியும். ஆனால் சரணடைந்தவர்களை சிறீலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர். சரணடைபவர்களின் விபரங்களும் ஐ.நாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அவர்களை வரவேற்பதற்கு கொழும்பில் பணியாற்றிய ஐ.நா அதிகாரிகள் வவுனியாவுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தனர். அப்போது கொழும்பில் பணியாற்றிய ஐ.நா அதிகாரிகளில் பலர் தற்போது பணியில் இருந்து விலகியுள்ளனர் அல்லது சிறீலங்காவை விட்டு வெளியேறியுள்ளனர். சரணடைவது தொடர்பான மாயைகளை உருவாக்கி விடுதலைப்புலிகளை படுகொலை செய்யவே கொழும்பும், கொழும்புக்கு ஆதரவான ஐ.நா அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். அந்த சமயம், ஐ.நா செயலாளர் நாயகம் பான கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் கொழும்பில் தங்கியிருந்தார். இரு ஐ.நா அதிகாரிகளே ஒமந்தையில் உள்ள சிறீலங்கா சோதனைநிலையத்திற்கு இரகசியமாக அனுப்பப்பட்டபோதும், ஏனையவர்கள் தாண்டிக்குளத்தை தாண்டுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பில் அனைத்துலக விசாரணைகளின்போது சாட்சியமளிக்க தான் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு எதிராக கலிபோர்னியாவில் போராட்டம்!

சிறீலங்கா அரசு மிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) நடைப்பயணம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மைல் தூரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்தில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களை சந்திக்கவும், அவர்களின் கதைகளை கேட்பதற்குமான ஏற்பாடுகளையும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் மேற்கொண்டிருந்தனர். டாபர் பகுதிக்கான கூட்டமைப்பு, போதும் திட்ட அமைப்பு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்திருந்தன. புதிய அமெரிக்க அமைப்பை சேர்ந்த றெபேக்கா ஹமில்ட்டன், போதும் திட்டஅமைப்பின் ஆலோசகர் ஓமார் இஸ்மயில் ஆகியோர் அங்கு முக்கிய உரையாற்றியிருந்தனர். டாபர், சிறீலங்கா, சாட் ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள் தொடர்பில் அதிக கவனங்கள் செலுத்தவேண்டும் என ஹமில்ட்டன் தனது உரையில் தெரிவித்துள்ளார். இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் சார்பாக 25 தமிழ் மக்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். சிறீலங்காவின் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் காங்கிரஸ் சபை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரி நடைப்பயணத்தின்போது கையெழுத்துக்களும் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 ஏப்ரல் 2011

கனடிய மனித உரிமை அமைப்பு புது உத்வேகம் பெறுகிறது!

கனடிய மனித உரிமை அமைப்பின் ஆலோசகர் குழுவின் தலைவராக கனடாவின் பிரபல சட்டத்தரணியும், துப்பறியும் ஊடகவியலாளருமான திரு.பீற்றர் சில்வர்மான் இணைந்துள்ளதை மேற்படி அமைப்பு வரவேற்றுள்ளது. சிறீலங்காவின் யுத்தக் குற்றவிசாரணைகளை முன்னெடுக்கும் கனடிய மனித உரிமை அமைப்புடனான இந்தப் பிரபல சட்டத்தரணியின் இணைவு யுத்தக் குற்றவிசாரணையை விரைவாக முன்னெடுக்க உதவும் என்றே கருதப்படுகிறது. பீற்றர் சில்வமானின் இணைவு தங்களது அமைப்பின் திடகாத்திரமான செயற்பாட்டிற்கும் மனித உரிமைகள் சம்பந்தமான கருத்தூட்டத்திற்கும் இன்றியமையாததாக இருக்கும் என்று தெரிவித்த கனடிய மனித உரிமை அமைப்பின் தலைவரான திரு. பாபு நாகலிங்கம் அவர்கள், திரு. பீற்றர் சில்வமானின் காத்திரமான பங்களிப்பை தாங்கள் கனடிய மனித உரிமை அமைப்பினூடாக எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த பீற்றர் சில்வமான் அவர்கள், கனடிய மனித உரிமை அமைப்பினூடாக தான் மனித உரிமை சார்ந்த விடயங்களிற்கு திடமான பங்கை வழங்கவிருப்பதாகவும், மனித உரிமைகள் சம்பந்தமான விவகாரங்களிலான பங்களிப்பை கனடா மண்ணிலேயே வழங்க ஆரம்பித்து அதனை உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த தான் கனடிய மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

10 ஏப்ரல் 2011

தனது நலனுக்காக கூட்டணியை பயன்படுத்துகிறது ஸ்ரீலங்கா?

“அரசாங்கம் எங்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றது. அது தான் விரும்பி இப்பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இது நடைபெறுகிறது. இப்படியான ஒரு பேச்சுவார்த்தையில் அரச தரப்பு எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கும். எவ்வளவு தூரம் பிரச்சினைகளைத் தீர்க்க ஆவல் கொள்ளும் என்பது கேள்விக்குரியதே.’ இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, இதுவரை நாங்கள் மூன்று முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பான பல விடயங்களை எடுத்துக் கூறியிருக்கின்றோம். பேச்சுவார்த்தை என்பது ஒரு குறுகிய நாட்களுக்குள் நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் மாதத்தில் இரண்டு தடவை பேச்சுவார்த்தை நடைபெறும் என ஒத்துக்கொள்ளப்பட்டது. அது சில சமயங்களில் ஒருமாதத்திற்கு மேலாக இழுபறி ஏற்பட்ட நிலைமைகளும் உண்டு. இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்த அளவில் அதுவொரு அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினையாகப் பார்க்கின்ற ஒரு கண்ணோட்டமாகவே இருக்கின்றது. ஆகவே இந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை என்பது இழுபட்டுப் போகக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாங்கள் அரசியல் மாற்றங்கள் பற்றி எதுவுமே பேச முடியாத நிலையில் உள்ளோம். நாம் பேச முடியாத நிலையில் உள்ளபோது ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, “நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். அரசியல் மாற்றங்கள் தொடர்பாக பேசுகின்றோம்’ என்பது உள்ளிட்ட பல விடயங்களைக் கூறியிருக்கிறார். இந்நிலையில் பேச்சுவார்த்தை என்பது எம்மை தமது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளதா? எனச் சிந்திக்க வைக்கிறது என்றார்.

மக்கள் காணாமல் போதல் தொடர்கிறது!

சிறீலங்காவில் பெருமளவான தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் சிறீலங்கா அரசு தடுத்துவைத்துள்ள அதேசமயம், அங்கு தொடர்ந்தும் மக்கள் காணாமல்போவதாக அமெரிக்க கடந்த வெள்ளிக்கிழமை (08) வெளியிட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா அரசு எண்ணிக்கை தெரியாத விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை தடுத்து வைத்துள்ளது. 1,200 இற்கு மேற்பட்டவர்கள் சிறீலங்கா காவல்நிலையங்களிலும், குற்றப்புலானாய்வு அலுவலகங்களிலும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களிலும், சிறிலங்கா இராணுவ முகாம் மற்றும் துணைஇராணுவக்குழுவினரின் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,400 என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அங்கு வெளியார் செல்வதற்கு சிறீலங்கா அரசு அனுமதிகளை மறுப்பதால் அவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர் என்பது தொடர்பில் அறிவது கடினம். பொதுமக்களை சாதாரணமாக கைது செய்யும் அதிகாரங்களை சிறீலங்கா படையினருக்கு வழங்கும் அவசரகாலச்சட்டத்தை சிறீலங்கா அரசு தொடர்ந்து வருகின்றது. சிறீலங்கா படையினரின் முகாம்களிலும், காவல்நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மரணமடைகின்றனர். இது நீதிக்குப்புறம்பான படுகொலையாகும். அங்கு இடம்பெறும் படுகொலைகள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 ஏப்ரல் 2011

அனலைதீவில் குடும்பஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் அனலைதீவுப் பகுதியில் கடந்த 6ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு முன்னதாக கண்டியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற படுகொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் இச் சம்பவத்தில் அங்கு நிலை கொண்டுள்ள ஈபிடிபி அமைப்பின் அங்கத்தவர் தொடர்பு பட்டிருந்ததாகவும் குறித்த நபர் இவரது வீட்டில் தங்கியிருந்ததாகவும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்த முற்பட்ட வேளை இவரது வீட்டில் தங்கியிருந்த குறித்த கட்சியின் நபர் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இந்த ஆயுதம் கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இந்த நிலையிலேயே வீட்டின் உரிமையாளரை புலனாய்வுத்துறையினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர். குறித்த ஈபிடிபி அமைப்பின் உறுப்பினர் சரணடைந்தால் மட்டுமே கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்போம் எனவும் புலனாய்வுத்துறையினர் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

டக்ளசை மிரட்டிய மகிந்த!

ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு மஹிந்தராஜபக்சவினால் மிரட்டல் விடுக்கப்பட்ட விடயத்தினை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வாய் தடுமாறி வெளிப்படுத்தியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும் தெரிவு செய்யப்பட் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன. அங்கு உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, ஏ-9 வீதி, ஏ-23 வீதி என்பன 3 மாதம் தொடக்கம் ஒரு வருடத்திற்குள் திருத்தி அமைக்கப்படும். அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த போது யாழ்.மாவட்டத்திலுள்ள வீதிகளை துரிதமாக திருத்தி அமைக்க வேண்டும். இல்லையேல் பதவியில் இருந்து கலைத்துவிடுவேன் என்று தனக்கு ஜனாதிபதி எச்சரித்ததாக உரையாற்றினார். சம்பவத்தை அடுத்து திடுக்குற்ற யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உடனடியாக சிறு ஒற்றையில் குறிப்பு ஒன்றை எழுதி உரையாற்றிக் கொண்டிருந்த டக்ளசிடம் வழங்கினார். இதனை அடுத்துச் சுதாகரித்துக் கொண்ட டக்ளஸ், வீதியைத் திருத்தாவிடின் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளை பணியில் வைத்திருக்க மாட்டேன் என்று ஜனாதிபதி எச்சரித்தார் என்று தடுமாறியபடி உரையாற்றியிருக்கின்றார்.

ஸ்ரீலங்கா தரைப்படைக்குள் அதிகரித்துள்ள பிளவுகள்!

சிறீலங்கா இராணுவத்திற்குள் தீவிரமடைந்துள்ள அதிகாரப் போட்டியினால் பாதுகாப்புச் செயலாளரிடம் நல்லபெயர் பெற்று இராணுவத் தளபதி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள ஜெனரல் ஜெகத் ஜயசூரிய கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது எந்தவொரு முக்கியமான பங்களிப்பையும் ஆற்றவில்லை என சிறீலங்காவின் மூத்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துவருகின்றனர். அவருக்கடுத்த நிலையில் இராணுவத் தளபதியாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் நிலையும் அதுதான். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அவர் நாட்டில் இருக்கவில்லை என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் கிழக்கில் படை நடவடிக்கை மேற்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் தளபதி தயா ரத்நாயக்க இராணுவ அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக விளங்குகின்றார். அத்துடன் அவருக்கு இராணுவத் தளபதி பதவிக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இராணுவத்தினர் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதன் காரணமாக தன் பதவியைப் பாதுகாத்துக் கொள்ளவும், தயா ரத்நாயக்கவின் செல்வாக்கைக் குறைக்கவும் அவருக்கெதிராக பாதுகாப்புச் செயலாளரிடம் தகவல்களை சொல்லும் பணியில் இராணுவத் தளபதி ஜெனரல் ஜயசூரிய ஈடுபட்டுள்ளார். தயா ரத்நாயக்க முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் நம்பிக்கைக்குரியவர் என அவர் கூறியதை நம்பிய சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும் தயா ரத்நாயக்கவை ஓரங்கட்டும் பிரயத்தனங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன் காரணமாக சிறீலங்கா இராணுவத்திற்குள் இரண்டு அணிகளாகப் பிளவு ஏற்பட்டுள்ளதுடன், அதிகாரப் போட்டியும் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

08 ஏப்ரல் 2011

காணாமல் போனோர் பற்றிய விபரம் வெளியிடப்படவேண்டும்!

காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வெறுமனே நிராகரிக்காமல், அவற்றுக்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட சகலர் தொடர்பிலும் தரவுகளை வெளியிட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

படைச்சிப்பாயின் சடலம் காட்டுக்குள்ளிருந்து மீட்பு!

சிறீலங்கா இராணுவக் காவல்துறையினருக்கு பயந்து காட்டுக்குள் ஒளிந்துகொண்ட சிறீலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடிய சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுர மாவட்டத்தில் உள்ள கலன்பின்துனுவேவா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறீலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடிய சிப்பாயை தேடி தினமும் இராணுவக் காவல்துறையினர் அவரின் வீட்டுக்கு செல்வதால். இரவு வேளைகளில் தினமும் காட்டுக்குள் தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார் குறிப்பிட்ட சிப்பாய். ஆனால் அவர் காட்டுக்குள் ஒளிந்துகொள்ளும் இடம் அவரின் தாயாருக்கு மட்டுமே தெரியும். வழமைபோல கடந்த புதன்கிழமை (06) இரவும் காட்டுக்குள் ஒளிந்துகொள்ளச் சென்ற சிப்பாய் காலை வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அவரின் மறைவிடத்தை தேடிச் சென்ற தாயார் சிப்பாய் சடலமாக கிடப்பதை கண்டுள்ளார். அனில் சுதர்சனா (25) என்ற சிப்பாயே இறந்துள்ளார். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

07 ஏப்ரல் 2011

நெடுந்தீவு கடற்கரையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரினால் இன்று அதிகாலை யாழ்.போதன வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.இதேவேளை கடற்றொழிலுக்குச் சென்ற நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் மூவரைக் காணவில்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனா.

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் விஜயகலா.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுடன், புதிய பதவி நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் படி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொது செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகலரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய இளைஞர் முன்னணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் முன்னணியின் தலைவராக மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோனகஹகே நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பிரதி இணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், கட்சியின் செயற்குழுவுக்கு ரணில் விக்ரமசிங்க 16 புதிய உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கட்சியின் செயற்குழுவில், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் பெயரும் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விஜயகலா அண்மைக்காலங்களில் மகிந்த மற்றும் சுதந்திரக் கட்சியுடன் நெருக்கமான உறவுகளை பேணிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

06 ஏப்ரல் 2011

ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முயலும் கோத்தபாய.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் முயற்சியில் இஸ்ரேலிய நிறுவன மொன்றுடன் கைகோத்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புக்கள் பதிவுசெய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நோக்கமாகும். ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில்நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்டகால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார். ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப் படையினர் விட்டுவைத்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், வேண்டும் என்றால் ஸ்கைப் உரையாடல்களை தடைசெய்ய மட்டுமே முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆயினும் அதன் பின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­ பிரஸ்தாப விடயத்திற்காக இஸ்ரேலின் தொழில்நுட்ப நிறுவனமொன்றை நாடியுள்ளார். பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தில் அதனை மேற்கொள்ள இணங்கியுள்ளனர். ஏனெனில் இதுவரை ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கான வசதியை தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அலட்சியப்போக்கு!

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் கடத்தல்கள் தொடர்பில் காவல்துறையினரோ அல்லது சிறீலங்காவின் மனித உரிமை அமைப்புக்களோ நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இது மிகவும் வேதனையானது என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் சட்டக்கல்லூரியில் கல்விகற்கும் மாணவன் எம்.துசாரா ஜெயரட்னா என்பவர் கடந்த மாதம் 04 ஆம் நாள் கடத்தப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இது தொடர்பில் அவர் மேற்கொண்ட முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மறுப்புத்தெரிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 05 ஆம் நாள் சிறீலங்காவில் உள்ள சட்டக்கல்லூரியில் நடைபெற்ற பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டதால் துசாரா கடத்தப்பட்டிருந்தார். இந்த முறைகேடுகளில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நமால் ராஜபக்சாவும் தொடர்புபட்டிருந்தார். நாமல் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்தினரிடமும், அனைத்து அமைப்புக்களிடமும் துசாரா மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பில் கடத்தலில் ஈடுபட்;டவர்கள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05 ஏப்ரல் 2011

இலங்கையையும் பூகம்பம் தாக்கக்கூடும்!

உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது. உலகளாவிய ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய 05 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும் அது இலங்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நிபுணர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன்போது ஏப்ரல் 03ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில் ஜப்பானிலும் ஏப்பிரல் 06 ஆம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் இடையில் சீனாவிலும் ஏப்பிரல் 10ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானில் ஏப்பிரல் 16ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில் மீண்டும் பூகம்பம் தாக்கும் வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தோனேசியாவில் ஏற்படக் கூடிய பாரிய பூகம்பத்தினால் இலங்கையிலும் அதன் பாதிப்பு உணரப் படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

04 ஏப்ரல் 2011

இளவாலையில் நடந்த உதைபடும் ஆட்டம்!

யாழ். இளவாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட சண்டையில் பத்துக்கு மேற்பட்டவாகள் காயங்களுக்கு உள்ளாகியதுடன் பொலிஸ் வாகனம் தாக்கப்பட்டதுடன் மற்றுமொரு தனியார் பஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இளவாலை யங் ஹென்றீஸ் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்திய உதைபந்தாட்டப் போட்டி இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று 03 ம் திகதி பிற்பகல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையே இடம்பெற்ற போட்டியில் விளையாட்டு வீரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கற்கள் வீசப்பட்டதுடன் தடிகள் பொல்லுகள் கொண்டும் இரு பகுதியினரும் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் முகமாக அயலில் உள்ள இளவாலைப் பொலிஸார் உடனடியாகக் களத்திற்கு வந்து இரு அணிகளினதும் சண்டையை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இந் நிலையில் சண்டையில் ஈடபட்டவர்கள் பொலிஸாரின் வாகனத்தின் மீது கற்களை வீசியதுடன் பொலிஸாரையும் தாக்கியுள்ளார்கள். உடனடியாக பாதுகாப்பைப் பலப்படுத்திய பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரியகல்லாறை சேர்ந்தவரை காணவில்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த சிவகுரு கணேசலிங்கம் (47) என்பவரை கடந்த மார்ச் மாதம் 23 ஆம் நாளில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்ற அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கணேசலிங்கத்தின் உறவினர்கள் மட்டக்களப்பு சிறீலங்கா காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டில் தெரிவத்துள்ளனர். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

03 ஏப்ரல் 2011

பிரித்தானியாவிற்கு வந்த பீரிஷிற்கு ஏமாற்றம்!

பிரித்தானியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி சந்திக்க மறுத்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடந்தவாரம் .ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பிக்க முன்னர், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தார்.சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்படாத நிலையிலும், அவரைச் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லண்டன் சென்றிருந்தார். ஆயினும், அவரை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி சந்தித்துப் பேசவில்லை. இதன்காரணமாக, பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர், லியம் பொக்ஸ், வர்த்தக முதலீட்டு அமைச்சர் லோர்ட் கிறீன், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் ஆகியோரையே அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேச்சு நடத்தியுள்ளார். பிரித்தானிய வெளிவகார அமைச்சருடனான சந்திப்பு சாத்தியமாகாத நிலையில், தமது அதிகாரபூர்வ பயணத்தை இடையிலேயே முடித்துக் கொண்டு, தொடர்ந்தும் அங்கு தனிப்பட்ட ரீதியாகத் தங்கவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார். சிறிலங்கா அமைச்சர் பீரிசின் மகளும், பேரக்குழந்தையும் லண்டனில் இருப்பதைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். லண்டனில் இருந்து அடுத்த வாரமே கொழும்பு திரும்பவுள்ள அவர், தனிப்பட்ட ரீதியாக அங்கு தங்கவுள்ளதாகக் கூறியுள்ள போதும் , அதிகாரபூர்வமான பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காவைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்களின் சங்கத்தில் சிறிலங்கா அமைச்சர் பீரிஸ் உரையாற்றவுள்ளார்.ஸ்ரீலங்கா வம்சாவழியினரான சுமார் 400 துறைசார் வல்லுனர்கள் இந்தக் கூடத்தில் கலந்து கொள்வர் என்று லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. அத்துடன் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் பங்கேற்கும் ஊடகச் சந்திப்பு ஒன்றிலும் பீரிஸ் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் கோரியதன் பின்னர் சிறிலங்காவுடன் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமரின் இந்த வேண்டுகோளை சிறிலங்கா நிராகரித்து விட்டது. இந்தநிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து சமாதானப்படுத்தவே சிறிலங்கா அமைச்சர் பிரீஸ் முயற்சி மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. நன்றி:புதினப் பலகை.

மாங்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் மீட்பாம்!

மாங்குளம் - நத்தன்கண்டால் வனப் பிரதேசத்தில் பொதியிட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உரித்தானது என கருதப்படும் 39 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே நேற்று இந்த படகுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நத்தன்கண்டால் பிரதேசத்தில் அடர்ந்த காட்டில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு பொதியிடப்பட்டிருந்த படகுகள் இரகசியத் தன்மையுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் மாங்குளம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த படகுகள் மோதல் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் தாக்குதல் மேற்கொள்வதற்காகவே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அரசசாங்க தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

02 ஏப்ரல் 2011

கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரிப்பு.

வடபகுதியில் உள்ள சகல அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் நீக்கி,வட மாகாணத்திற்கு காவற்துறை அதிகாரங்களை வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார் என திவயின கூறியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, இந்த யோசனைகளை முன்வைக்க இருந்தது. வடபகுதிக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அரசாங்கத்தின் எந்த ஒரு அரசியல்வாதிக்கும், பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பானத்திற்கு செல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகளுக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்ல, அந்த மாநில காவற்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் திவயின கூறியுள்ளது. திவயின போன்ற சிங்கள பத்திரிகைகள், சிங்கள மக்களை தவறாக வழிநடத்தி வருவதாக நடு நிலையான அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மாநிலங்களுக்கு சட்டங்களை இயற்றும் அதிகாரமும் உள்ளது. இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகளுக்கு விமான நிலையத்தில் இருந்து மாநிலத்திற்குள் செல்ல அனுமதியளிக்கப்படவில்லை என திவயின கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி காஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற போவதாக கூறி, போராட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இதனடிப்படையில், அந்த கட்சியின் தலைவர்கள் அங்கு சென்று தேசிய கொடியை ஏற்ற முயற்சித்தனர். இவர்களின் இந்த நடவடிக்கையால் மாநிலத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்கலாம் என்ற காரணத்தில் இந்திய அரசாங்கம், பாரதீய ஜனதா கட்சியை மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்பதே உண்மையான காரணம் என்பதை மேற்படி செய்தியை எழுதியுள்ள, திவயினவின் பாதுகாப்புச் செய்தியாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய சுட்டிக்காட்டவில்லை.

01 ஏப்ரல் 2011

தி.மு.க.கூட்டணி தோல்வி அடையும் என்கிறது கருத்துக்கணிப்பு.

இலங்கை தமிழர் விடயத்தின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் அனைத்திந்திய ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே, மெயில் டுடே ஆகிய பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவுட் லுக் வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பிலும் இதே பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் – காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப கைப்பற்றும் அசாமில் எந்தக் கட்சிக்கும் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இலங்கை தமிழர்கள் தொடர்பில் போதிய செயற்பாட்டை முன்னெடுக்காமை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சந்தித்த அசாதாரண நிலைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காமை, போன்ற காரணங்களுக்காக தமிழக மக்கள் கருணாநிதியை இந்த முறை எதிர்ப்பர் என சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் – அதிகாரிகளின் ஊழல் போன்ற காரணங்களுக்காகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லாது போயுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையை முறையாக கையாள தமிழக அரசாங்கம் தவரிவிட்டது என, இந்த கருத்துக் கணிப்பில் கலந்துக் கொண்ட 41 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இலங்கை தமிழர்களுக்காக போதிய அளவில் கருணாநிதி செயற்பட்டுள்ளார் என 25 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். எவ்வாறாயினும், இலங்கை தமிழர் விவகாரம் தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்தாது என அண்மையில் த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும்!

தெற்கு லண்டன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐந்து வயது தமிழ் சிறுமியும், மற்றுமொரு தமிழரும் காயமடைந்துள்ளனர். இதனை மேற்கொண்ட குற்றவாளிகள் தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 50,000 பவுண்ஸ்கள் சன்மானம் வழங்கப்படும் என லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெற்கு லண்டனில் உள்ள ஸ்ரொக்வெல் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கியே இவர்கள் காயமடைந்துள்ளனர். இரண்டு நபர்களை, துப்பாக்கி ஏந்திய மூன்று நபர்கள் துரத்திவந்தபோது, அவர்கள் குறிப்பிட்ட கடைக்குள் சென்று ஒளிந்துள்ளனர். எனினும் கடைக்குள் புகுந்த நபர்கள் சரமாரியாக சுட்டத்தில் துசா கமலேஸ்வரன் (05) மற்றும் றொசான் செல்வகுமார் (35) ஆகியயோர் காயமடைந்துள்ளனர். துசாவின் இரு சகோதரர்களும் கடையில் இருந்தபோதும், அவர்கள் காயங்கள் இன்றி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

31 மார்ச் 2011

யாழ்,மக்களின் வாழ்வு அச்சத்துடனேயே கழிகின்றது!

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்றது உண்மையே. ஆனால் யாழ்.குடாநாட்டு மக்கள் சமாதானம் கிடைத்ததாகக் கூறும் மனநிலைக்கு இன்னும் வரவில்லை என சர்வமதத் தலைவர்களிடம் மக்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய கிறிஸ்தவ திருச்சபையினரின் ஏற்பாட்டில் சர்வமதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று யாழ்.வருகைதந்தது. இதன்போது யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, யாழ்.குடாநாட்டில் உள்ள மக்கள் சமாதான சூழலில் வாழவில்லை. தினந்தோறும் பயந்த மனநிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தால் தாம் இருந்த வீடுகளையெல்லாம் இழந்து நிர்க்கதியாகவுள்ள மக்களிடையில் சமாதானம் எவ்வாறு நிலைகொள்ளும். இதுவரை காலமும் அகதிகளாக வாழ்ந்த மக்கள் யுத்தம் முடிந்தும் தமது சொந்த இடங்களில் குடியேறமுடியாமல் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இவை தவிர கொலை, கொள்ளை என்பனவும் இங்கு அதிகரித்துவிட்டன. அண்மையில் கூட ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவரின் கொலையுடன் தொடர்புடைய எவரும் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் சமாதானத்தைப் பற்றி மக்கள் எவ்வாறு கருதுவார்கள். மக்கள் மனதில் பயம் குடிகொண்டுள்ளது. அதைபோக்க அனைவரும் பாடுபடவேண்டும். மண்டைதீவில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்தநிலையில் உள்ளன. வீட்டுக்கு சொந்தக்காரர்கள் ஓலைகுடிசையில் வாழ்கின்றனர். இவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதேபோல் யாழ். குடாநாட்டில் பல பிரதேசங்களில் இன்னும் மக்கள் மீள்குடியேறமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களை மிகவிரைவாக மீள்குடியேற்ற வேண்டும். இவைதவிர பாதுகாப்பு முகாம்களில் எந்தவித வழக்கு விசாரணைகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகள் விடுதலை செய்யப்பட வேண்டும். மக்கள் மனம் திறந்து பேசவிரும்பவில்லை. குறிப்பாக சிங்களவர், தமிழர் என்ற பாகுபாடு இப்பொழுதும் மக்கள் மத்தியில் இருந்துவருகிறது. எனவே நாட்டில் முழுமையான சமாதானம் ஏற்படவேண்டுமானால். மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதோடு மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கும் அச்சநிலையையும் போக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர். இதன்போது பதிலளித்த சர்வமதக் குழு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எங்களால் அடையாளம் காணமுடிகின்றது. ஆனால் அதற்கான தீர்வெதனையும் பெற்று வழங்க தம்மால் முடியாதிருப்பதாக பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளனர். குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று வருகைதந்த சர்வமதக் குழுவில் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பிரதிநிதிகள் அடங்கியுள்ளனர். கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கொத்தாவ தர்மலங்கார தேரர், பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள், மௌவி ஆதம்பாவா உள்ளிட்ட பல தரப்பினர் இக்குழுவில் அடங்குகின்றனர். குடாநாட்டின் பல்வேறு தரப்புகளையும் அவர்கள் சந்தித்து பேச்சுக்கள் நடத்தினர். யாழ் நகரப் பகுதியில் இராணுவத்தினரின் சிவில் நிர்வாகக் காரியாலயத்திற்கும் இந்தக் குழு விஜயம் செய்திருந்தது. அதேபோன்று யாழ். நகரிலுள்ள நாகவிகாரைக்கும் சென்று அங்குள்ள பௌத்த மதகுருவையும் இக்குழு சந்தித்திருந்தது.

தந்தை செல்வா ஜனன தினம்!

அமரர் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 113வது ஜனன தினம் இன்று 31ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. வவுனியா மணிக்கூட்டு சந்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கும் வைபவம் காலை 9 மணிக்கு நடை பெறும். தந்தை செல்வா அறங்காவல்குழுவினர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர் என இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்தார்.

30 மார்ச் 2011

அமைச்சர்கள் இரசித்த அழகிகள் அணிவகுப்பு!

அழகிகளின் அணுவகுப்பு விழா ஒன்றை நடத்தி சிறீலங்கா அரச அதிகாரிகளையும், அமைச்சர்களையும் கொழும்பில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: கொழும்பில் உள்ள ஆடம்பரவிடுதிகளில் ஒன்றான ஹில்டன் ஆடம்பரவிடுதியில் நடைபெற்ற இந்த விழாவில் அழகிகளின் அணிவகுப்புடன், அமைச்சர்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் உயர் வகை மதுபானங்களும், உணவுகளும் வழங்கப்பட்டதுடன், பெண்களை தெரிவுசெய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அழகுக்கலை நிபுணரான அனுசா ராஜபக்சாவின் ஏற்பாட்டின்பேரில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ரானியா, தேசா, சப்னா, றொசெல்லா, பிளங்கற், ஹர்சினி, ஈரோ, திரிசா (தென்னிந்திய நடிகையல்ல), ராசங்கிகா, தஸ்யா ஆகிய அழகிகள் பங்கெடுத்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் 100,000 தொடக்கம் 150,000 ரூபாய்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு தேவையான அரசியல் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நிறுவனங்கள் இவ்வாறான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது கட்சி வேட்பாளருக்கே அடித்த விஜயகாந்த்.

தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர் தனது பெயரை பாஸ்கர் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே சரமாரியாக அடித்தார். பெயரை மாற்றி சொன்னதை சுட்டிக்காட்டிய வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சொந்தக் கட்சி வேட்பாளரையே விஜயகாந்த் அடித்தது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

29 மார்ச் 2011

விஜயகாந்தை தரக்குறைவாக பேசிய வடிவேலு மீது வழக்கு.

நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்தை, திருவாரூர் தி.மு.க., கூட்டத்தில் தரக்குறைவாக பேசிய வடிவேலு மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. சில பல மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்திற்கும், வடிவேலுவுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஊர் அறிந்தது. இவர்கள் பிரச்சனையில் வ‌டிவேலு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கொதித்து போன வடிவேலு, அப்போது நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் தேர்தலும் வந்துவிட்டது. விஜயகாந்தை எதிர்த்து வடிவேலு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்‌போவதாக அறிவித்தார். முதல் பிரச்சாரத்தை கடந்த 23ம் தேதி திருவாரூரில் நடந்த முதல்வர் கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் தொடங்கினார். அப்போது பேசிய வடிவேலு, விஜயகாந்தை மிகவும் கீழ்தரமாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதனால் விஜயகாந்தின் இமேஜ் பாதிக்கப்படுவதாக கூறி அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீன் குமாரிடம் புகார் ‌செய்தனர். இவர்களது புகாரை ஏற்ற பிரவீன் குமார், வடிவேலு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி நடிகர் வடிவேலு மீது, பொய்யானதைப் பேசி இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்படுத்தும் நோக்கம், அவதூறாக பேசுதல், தனி மனிதனை தரக்குறைவாக விமர்சித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் நடிகர் வடிவேலு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

மன்மோகனைப்பார்த்து நியுசிலாந்தை அழைத்து ஏமாந்த மகிந்தர்.

இந்தியாவின் மொஹாலி நகரில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் துடுப்பாட்ட போட்டியை பார்வையிடுவதற்கு வருமாறு பாகிஸ்தான் அதிபருக்கு இந்திய பிரதமர் அழைப்பை விடுத்ததை அறிந்துகொண்ட சிறீலங்கா அரச தலைவர் நியூசிலாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: நாளை (30) புதன்கிழமை இந்தியாவில் நடைபெறும் துடுப்பாட்டத்தின் அரையிறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் யூசுஃப் ராசா கிலானிக்கு அழைப்பை விடுத்திருந்தார். புதன்கிழமை நடைபெறும் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. எனினும் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் அதிபர் போட்டியை காணவருவதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்துகொண்ட சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தானும் நியூசிலாந்து பிரதமரை அழைத்திருந்தார். ஆனால் அதனை அவர் நிராகரித்தது சிறீலங்காவுக்கு மிகப்பெரும் அவமானமாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, இன்று (29) கொழும்பில் நடைபெறும் துடுப்பாட்டத்தின் அரையிறுதிப்போட்டிக்கு வரலாறுகாணாத பாதுகாப்புக்களை வழங்க தான் திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை மாஅதிபர் மகிந்தா பாலசூரியா தெரிவித்துள்ளார்.

28 மார்ச் 2011

மகிந்தவின் அழைப்பை நிராகரித்த நியூசிலாந்து.

நாளை (29) கொழும்பில் நடைபெறும் அரையிறுதி துடுப்பாட்டத்தை கண்டுகளிக்க வருமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா விடுத்துள்ள கோரிக்கையை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துடுப்பாட்டத்தையும் அரசியலாக்கி அதில் லாபம் காண எண்ணிய மகிந்தா ராஜபக்சாவுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், சிறீலங்கா மற்றும் இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவரை இந்த போட்டியை காண்பதற்கு இந்தியாவில் இருந்து சிறீலங்கா வருமாறு சிறீலங்கா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தென் ஆபிரிக்காவை தோற்கடித்த நியூசிலாந்து நாளை (29) சிறீலங்காவுடன் மோதவுள்ளது. மகிந்தாவின் அழைப்பை நிராகரித்துள்ள நியூசிலாந்து பிரதமரின் பேச்சாளர் அதற்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் சிறீலங்காவுக்கான தூதுவரை துடுப்பாட்ட போட்டியில் கலந்துகொள்ள வருமாறு சிறீலங்கா அரச தலைவரின் ஊடகப்பிரிவின் தலைவர் பந்துல ஜெயசேகரா அழைப்பு விடுத்துள்ளார்.

27 மார்ச் 2011

காங்கிரசிற்கு எதிரான சீமானின் பிரச்சாரம்.

நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர். இன்று காலை நாம் தமிழரின் காங்கிரசு கட்சிக்கு எதிரான பரப்புரை புளியங்குடியில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுட்சி உரையாற்றினார். காங்கிரசு கட்சி தமிழினத்திற்கு செய்த கொடுமைகளையும் தலைவிரித்தாடும் காங்கிரசின் ஊழல்களை பற்றியும் காங்கிரசு தலைவர்களின் மக்கள் விரோத எண்ணத்தையும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் உணர்ந்துகொள்ளும் விதமாக கருத்துக்களை அடுக்கினார். கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் உணர்வுடன் தமிழர்கள் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம், நெல்லை சிவக்குமார், தலைமை நிலைய பேச்சாளர்கள் ஜெயசீலன், திலீபன் உட்பட கட்சியினர் பலர் பங்குபெற்றனர். இக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பரப்புரை குழுவினர் கடையநல்லூர் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கிளம்பினர்.

இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்வது யாழில் அதிகரிப்பு.

14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் தாம் விரும்பியவர்களைக் காதலித்துப் பின்னர் அவர்களுடன் சென்று தங்கிவிடுகின்றனர். இதனால் பெற்றேர்கள் தமது பிள்ளையைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைள் குறித்து அதிக கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.இவ்வாறு ஆலோசனை கூறுகிறார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி கே.எ.வி.எஸ்.பத்மசிறி. இளம்வயதினர் தவறான வழிகளில் செயற்பட்டு வருகின்ற சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. 14 வயதுக்கும் 18 மற்றும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினர் தாம் விரும்பியவர்களைக் காதலித்துப் பின்பு அவர்களுடன் ஓடிச்சென்று தங்கி விடுகின்றனர். இதனை அறியாத பெற்றோர்கள் தமது பிள்ளைகளைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். நாமும் முறைப்பாட்டை ஏற்று அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பிக்கும் மறுநாள் தமது பிள்ளை, விரும்பியவருடன் தங்கியிருக்கிறார் மீட்டுத்தாருங்கள் எனக் கேட்கின்றனர் பெற்றோர். இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் இவ்வாறான 9 முறைப்பாடுகள் யாழ்ப்பாணப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறு ஏனைய பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. பொலிஸில் முறைப்பாடு செய்யப்படாத இவ்வாறான பல சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே பெற்றோர்கள் விழிப்பாகச் செயற்படவேண்டும். பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் அதிக கவனம் செலுத்தவேண்டும். பாட சாலை நேரங்களில், ரியூசன் நேரங்களில் பிள்ளை வேறு எங்காவது செல்கின்றனரா என அவதானிக்கவேண்டும். பிள்ளையுடன் கூடத் திரியும் நண்பர்கள் குறித்தும் பெற்றோர்கள் அறிந்திருக்கவேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல புத்திமதி கூறி வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். பாடசாலை, ரியூசன் தவிர்ந்த நேரங்களில் வெளியிலும் உறவினர் வீடுகளுக்கும் செல்வதாகவும் சுற்றுலா செல்வதாகவும் கூறி விட்டுத் தவறான செயல்களில் இளம்வயதினர் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே பெற்றோர்கள் விழிப் படைவதன் மூலமே இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க அல்லது குறைக்க முடியும் என்றார்

26 மார்ச் 2011

அரசின் செயல்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்.

மகிந்த அரசின் வியூகங்கள் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன. தற்போது வடக்கு மக்கள் அனுபவிக்கும் இராணுவ அடக்கு முறையிலான ஆட்சியை எதிர்வரும் நாட்களில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள் அனுபவிக்க நேரிடும் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான முன்னேற்பாடே உள்ளூராட்சி சபைகளை ள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபனமாகும். இதற்கு ஆளுனராக நியமிக்கப்படுபவர் 100 வீதம் இராணுவ அதிகாரியாகவோ அல்லது சர்வாதிகாரியாகவோ அல்லது சர்வாதிகார கொள்கையுடையவராகவோ இருப்பார் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய அரசாங்கத்தின் காய் நகத்தல்கள் தொடர்பாக ஜே.வி.பி. கடந்த காலங்களில் கூறிய எதிர்வு கூறல்கள் பொய்யாகவில்லை. சபைகளை உள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபனம் தொடர்பாக ஜே.வி.பி ஏற்கனவே பொதுமக்களை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஜனநாயக ஆட்சி முறைமை ஒன்றிற்கான மூலக்கூறுகளை முடக்கும் செயலிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
அரசாங்கம் செல்லும் வழி மிக தெளிவாகவே உள்ளது. அதன் ஆபத்துக்கள் குறித்து மக்கள் விழிப்படையவில்லை. என்பதே தற்போதைய உண்மையான நிலையாகும்.
18வது தடவையாக அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களானது ஜனநாயக ஆட்சியில் முடிவை சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக 17வது திருத்தம் அரசியலமைப்பில் அப்புறப்படுத்தப்பட்டமையானது ஜனநாயக செயற்பாடுகளுக்கு விழுந்த முதல் அடியாகும்.
எனவே தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபன முறையானது தேர்தல்களின் ஊடாக வெளிப்படும் மக்கள் ஆணையை இல்லாதொழிக்கும் நிலமையாகும். இன்று கொழும்பு, தெஹிவளை, கோட்டே, கொலன்னாவ மற்றும் முல்லேரியா போன்ற உள்ளூராட்சி சபைகளுக்கு ஏற்பட்ட நிலமை நாட்டின் ஏனைய சபைகளுக்கும் ஏற்படும்.
அரசாங்கத்தின் இந்த திட்டத்தினை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த நகரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் அல்லது ஆளுனராக நியமிக்கப்படுபவர் இராணுவஅதிகாரியாகவே காணப்படுவார்.
என்பது உறுதியான விடயமாகும். இன்று வடக்கில் உள்ள சூழலே தெற்கிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படப்போகின்றது.

மூதாளரின் மரணத்தில் மர்மம்!

கடந்த 22 ஆம் திகதி காணாமற்போன மூதாளர் ஒருவரின் சடலம் ஊதிப்பெருத்த நிலையில் நைலோன் கயிற்றால் வயிற்றுப் பகுதி கட்டப்பட்ட நிலையில் வயல் கிணறு ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான செபஸ்தியாம்பிள்ளை மரியநாயகம் (வயது 65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
பிரஸ்தாப நபர் கடந்த 22 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
பல இடங்களிலும் தேடி அவரைக் காணவில்லை. இந்நிலையில், நான்கு நாள் கழிந்த நிலையில் அவரது சடலம் ஊதிப் பெருத்த நிலையில் மாதகல் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்டது என்றும் வயிற்றுப் பகுதியில் நைலோன் கயிறு கட்டப்பட்டிருந்தது என்றும் கல் ஒன்று போடப்பட்ட பிளாஸ்ரிக் பை உடலில் இணைக்கப் பட்டிருந்தது என்றும் ஸ்ரீலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொறுப்பதிகாரி புஞ்சிஹேவா தலைமையிலான பொலிஸாரும் இளவாலைப் பொலிஸாரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினர்.
மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் அ.தம்பிமுத்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்டன என வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த மூதாளர் கொலைசெய்யப்பட்ட பின் கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது கிணற்றில் வீசப்பட்டு மரணமானாரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

25 மார்ச் 2011

வடமராட்சி கடற்பகுதியில் இந்திய கடற்படையினர்.

வடமராட்சிக் கடற்பரப்பில் நேற்று இந்தியக் கடற்படையினரின் நடமாட்டம் அதிகமாக இருந்தது என்று வடமராட்சி வடக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
வழமைக்கு மாறாக நேற்றுக் காலை முதல் மாலை வரை வடமராட்சிக் கடற்பரப்பில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்தியக் கடற்படையினரின் அதிவேகப் படகுகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் கடலில் தொழிலுக்குச் சென்ற வல்வெட்டித் துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் கடலில் வைத்து இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
கடந்த மூன்று நாள்களில் இந்திய மீனவர்களால் கடத்தப்பட்ட ஐந்தாவது மீனவர் இவர்.