பக்கங்கள்

31 மார்ச் 2011

யாழ்,மக்களின் வாழ்வு அச்சத்துடனேயே கழிகின்றது!

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்றது உண்மையே. ஆனால் யாழ்.குடாநாட்டு மக்கள் சமாதானம் கிடைத்ததாகக் கூறும் மனநிலைக்கு இன்னும் வரவில்லை என சர்வமதத் தலைவர்களிடம் மக்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய கிறிஸ்தவ திருச்சபையினரின் ஏற்பாட்டில் சர்வமதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று யாழ்.வருகைதந்தது. இதன்போது யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, யாழ்.குடாநாட்டில் உள்ள மக்கள் சமாதான சூழலில் வாழவில்லை. தினந்தோறும் பயந்த மனநிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தால் தாம் இருந்த வீடுகளையெல்லாம் இழந்து நிர்க்கதியாகவுள்ள மக்களிடையில் சமாதானம் எவ்வாறு நிலைகொள்ளும். இதுவரை காலமும் அகதிகளாக வாழ்ந்த மக்கள் யுத்தம் முடிந்தும் தமது சொந்த இடங்களில் குடியேறமுடியாமல் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இவை தவிர கொலை, கொள்ளை என்பனவும் இங்கு அதிகரித்துவிட்டன. அண்மையில் கூட ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவரின் கொலையுடன் தொடர்புடைய எவரும் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் சமாதானத்தைப் பற்றி மக்கள் எவ்வாறு கருதுவார்கள். மக்கள் மனதில் பயம் குடிகொண்டுள்ளது. அதைபோக்க அனைவரும் பாடுபடவேண்டும். மண்டைதீவில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்தநிலையில் உள்ளன. வீட்டுக்கு சொந்தக்காரர்கள் ஓலைகுடிசையில் வாழ்கின்றனர். இவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதேபோல் யாழ். குடாநாட்டில் பல பிரதேசங்களில் இன்னும் மக்கள் மீள்குடியேறமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களை மிகவிரைவாக மீள்குடியேற்ற வேண்டும். இவைதவிர பாதுகாப்பு முகாம்களில் எந்தவித வழக்கு விசாரணைகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகள் விடுதலை செய்யப்பட வேண்டும். மக்கள் மனம் திறந்து பேசவிரும்பவில்லை. குறிப்பாக சிங்களவர், தமிழர் என்ற பாகுபாடு இப்பொழுதும் மக்கள் மத்தியில் இருந்துவருகிறது. எனவே நாட்டில் முழுமையான சமாதானம் ஏற்படவேண்டுமானால். மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதோடு மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கும் அச்சநிலையையும் போக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர். இதன்போது பதிலளித்த சர்வமதக் குழு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எங்களால் அடையாளம் காணமுடிகின்றது. ஆனால் அதற்கான தீர்வெதனையும் பெற்று வழங்க தம்மால் முடியாதிருப்பதாக பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளனர். குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று வருகைதந்த சர்வமதக் குழுவில் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பிரதிநிதிகள் அடங்கியுள்ளனர். கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கொத்தாவ தர்மலங்கார தேரர், பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள், மௌவி ஆதம்பாவா உள்ளிட்ட பல தரப்பினர் இக்குழுவில் அடங்குகின்றனர். குடாநாட்டின் பல்வேறு தரப்புகளையும் அவர்கள் சந்தித்து பேச்சுக்கள் நடத்தினர். யாழ் நகரப் பகுதியில் இராணுவத்தினரின் சிவில் நிர்வாகக் காரியாலயத்திற்கும் இந்தக் குழு விஜயம் செய்திருந்தது. அதேபோன்று யாழ். நகரிலுள்ள நாகவிகாரைக்கும் சென்று அங்குள்ள பௌத்த மதகுருவையும் இக்குழு சந்தித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.