பக்கங்கள்

26 மார்ச் 2011

மூதாளரின் மரணத்தில் மர்மம்!

கடந்த 22 ஆம் திகதி காணாமற்போன மூதாளர் ஒருவரின் சடலம் ஊதிப்பெருத்த நிலையில் நைலோன் கயிற்றால் வயிற்றுப் பகுதி கட்டப்பட்ட நிலையில் வயல் கிணறு ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான செபஸ்தியாம்பிள்ளை மரியநாயகம் (வயது 65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
பிரஸ்தாப நபர் கடந்த 22 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
பல இடங்களிலும் தேடி அவரைக் காணவில்லை. இந்நிலையில், நான்கு நாள் கழிந்த நிலையில் அவரது சடலம் ஊதிப் பெருத்த நிலையில் மாதகல் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்டது என்றும் வயிற்றுப் பகுதியில் நைலோன் கயிறு கட்டப்பட்டிருந்தது என்றும் கல் ஒன்று போடப்பட்ட பிளாஸ்ரிக் பை உடலில் இணைக்கப் பட்டிருந்தது என்றும் ஸ்ரீலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொறுப்பதிகாரி புஞ்சிஹேவா தலைமையிலான பொலிஸாரும் இளவாலைப் பொலிஸாரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினர்.
மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் அ.தம்பிமுத்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்டன என வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த மூதாளர் கொலைசெய்யப்பட்ட பின் கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது கிணற்றில் வீசப்பட்டு மரணமானாரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.