பக்கங்கள்

14 மார்ச் 2013

தமிழக கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
நாள்: 14-03-2013

அறிக்கை:
உலக வரலாற்றில் இதுவரை சர்வதேச சமூகம் கண்டிராத இனப்படுகொலையை கடந்த 2009ம் ஆண்டில் சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு எம் தாய் நிலமான தமிழீழ மண்ணில் இழைத்து உள்ளது. பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரை பாதுகாக்க ஓடிவந்த எம்மக்களை சிங்கள அரசு கொன்றொழித்தது. திட்டமிட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக மெளனமாக இருந்து அங்கீகரித்து வருகிறது என்பது தான் சோதனையான உண்மை. சென்ற நவம்பர் 2012 ஆம் மாதம் ஐ.நா. பெருமன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் இந்தியா இறுதி நேரத்தில் வலியுறுத்தி செய்த திருத்தங்களால் அத்தீர்மானமே வலுவற்று போனது. தற்போதும் அமெரிக்கா தாக்கல் செய்து இருக்கின்ற இலங்கைக்கு எதிரான தீர்மானம் உண்மையில் இலங்கை அரசை தண்டிக்கும் வகையில் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, இனப்படுகொலைக்கு எதிராக சுதந்திரமான சர்வதேச விசாரனையை நடத்துவதற்கு உகந்த தீர்மானமாக இல்லை என்பது அப்பட்டமான உண்மை. ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதை உணர்ந்து சர்வதேச சமூகம் ஈழப்பிரச்சனையை அணுகி இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா தற்போது தாக்கல் செய்துள்ள தீர்மானத்தினால் இனப்படுகொலையை திட்டமிட்டு செய்த சிங்கள பேரினவாத அரசினை தண்டிக்க இயலாது. இந்நிலையில் டெசோ போன்ற அமைப்புகள் வலுவில்லாத,சிங்கள பேரினவாத அரசிற்கு எவ்விதமான நிர்பந்தங்களையும் அளிக்காத அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது தமிழ் இனத்திற்கு செய்யப்படும் மற்றொரு துரோகம் என்றே நான் கருதுகிறேன். சுதந்திரமான பொது வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முழு இறையாண்மை கொண்ட சுதந்திர தனித்தமிழீழ நாட்டினை சர்வதேச சமூகம் அமைத்து தரவேண்டும் என்பதுதான் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை கோரிக்கையாக இருக்கிறது. தொடக்கம் முதலாகவே ஈழத்தமிழருக்கும், தமிழ்த்தேசிய இனத்திற்கும் இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களுக்கு முற்றிலும் எதிராகவே இருக்கிறது. தெற்காசிய பகுதியில் வலிமையான நாடாக, 7 கோடிக்கும் தமிழர்கள் வாழும் நாடாக விளங்கும் இந்திய நாட்டின் நிலைப்பாடு ஈழப்பிரச்சனையில் மிக முக்கியமானது. எனவே தான் தமிழகத்தின் கல்லூரி மாணவர்கள் இந்திய பெருந்தேசத்திற்கு தங்களது உணர்வுகளை உண்ணாநிலை அறப்போர் மூலமாக வெளிப்படுத்தி கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வித நிர்பந்தங்கள் இல்லாமல் சுதந்திரமாக நடத்துவதற்கு உகந்த திருத்தங்களை அமெரிக்கா தாக்கல் செய்திருக்கின்ற தீர்மானத்தில் ஏற்படுத்தாமல் தற்போதைய வடிவத்திலேயே அமெரிக்கா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அது சிங்கள பேரினவாத அரசிற்கு உதவியாகவே இருக்கும். இச்சூழ்நிலையை உணர்ந்து தான் தமிழக கல்லூரி மாணவர்கள் எழுச்சியாக திரண்டு தமிழீழத்திற்கு ஆதரவாக, இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் போராட்டி வருகின்றார்கள். தமிழக கல்லூரி மாணவர்கள் முன் வைத்திருக்கின்ற கோரிக்கைகள் இச்சுழலில் மிக அவசியமானது மட்டுமல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நான் கருதுகிறேன். போராட்டக் களத்தில் நிற்கும் என் மாணவத் தம்பிகளே..தங்கைகளே.. மாணவ சக்தி மகத்தானது என்பதைதான் வரலாறு அழுத்தமாக போதிக்கிறது. வெடித்தெழுந்த புரட்சிகளின் தொடக்கம் துளிர்த்த தோட்டங்களாக கல்லூரியின் வகுப்பறைகள் தான் விளங்குகின்றன. போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறாது என்கிற உன்னத மொழிக்கேற்ப ஈழ விடுதலைக்காக தன் வயிற்றில் பசி என்னும் நெருப்பினை சுமந்து, தமிழீழம் ஒன்றே தீர்வு என்கிற தெளிவாக முழக்கத்தோடு , மரணத்திற்கு அஞ்சாமல் போராடும் உங்களின் தீரமிக்க போராட்டம் சர்வதேசத்தையே தமிழகம் பக்கம் திருப்பி உள்ளது. அறவழியில் நின்று ஒருமித்த குரலில் நீங்கள் விடுக்கிற விடுதலைக்கான அறைகூவல், இனப்படுகொலைக்கு எதிரான முழக்கம் போன்றவை ஈழ விடுதலைப்பயணத்தில் மைல் கற்களாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்பதை உணர்ந்து தன்னலம் துறந்து இனநலன் காக்க போராட்டக்களத்தில் துணிந்து நிற்கிற சட்டக்கல்லூரி, பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் கல்லூரி உள்ளீட்ட அனைத்துக் கல்லூரி மாணவர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது போராட்டம் வெல்லட்டும். நமது மற்றொரு தாய் நிலமான தமிழீழத்திற்கு விடுதலையின் ஒளி கிடைக்கட்டும். மேலும் தமிழக மாணவர்களோடு போராட்டக் களத்தில் திரண்டிருக்கும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் உள்ளீட்ட அனைத்து ஆதரவு சக்திகளுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னெழுச்சியாக அரசியல் சார்பில்லாமல் போராடும் தமிழக கல்லூரி மாணவர்களை மாநில அரசு எந்த வடிவத்திலும் ஒடுக்க கூடாது என்றும் எவ்விதமான நிர்பந்தங்களுக்கும் தமிழக கல்லூரி மாணவர்களை தமிழக அரசு உள்ளாக்கக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் அறவழியில் போராடிவரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் களத்திலும் முழுமையாக துணை நிற்கும் என்றும் உறுதியாக தெரிவித்து கொள்கின்றோம்.

நாம் தமிழர்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.