பக்கங்கள்

04 மார்ச் 2013

இலங்கை மீதான பிரேரணை ஜெனிவாவில் இன்று தாக்கல்!

தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை மீது கடந்த ஆண்டு (2012 மார்ச்) அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறிய நிலையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படியும் அதற்கான ஆலோசனைகள் மற்றும் தொழில் நுட்ப உதவிகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும்படியும், 2012 மார்ச் தீர்மானம் இலங்கை அரசை வலியுறுத்தியிருந்தது. அதனை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்று அமெரிக்காவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையும் (நவநீதம்பிள்ளை) இந்தக் கூட்டத் தொடரின்போது காட்டமாகத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய பிரேரணை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டுத் தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கான சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என இந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது சர்வதேச கண்காணிப்புக்குழு ஒன்றின் கீழ் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்று பிரேரணை கோரும் என ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவு மிகக் குறைவு என்பதனால் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்படும் என்று தெரிகின்றது. இலங்கையும் அத்தகைய நிலையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.