பக்கங்கள்

15 மார்ச் 2013

சிறிலங்கா பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்கிறது அமெரிக்கா!

சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் உண்மையான அக்கறையை வெளிப்படுத்துவதுடன், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமெரிக்கத் தூதுவர் எய்லீன் சம்பெர்லைன் டொனஹே தெரிவித்துள்ளார். ஜெனிவாவில், அமெரிக்கா ஓரங்கக் கூட்டத்தின் பின்னர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட டொனஹே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவின் ஒத்துழைப்பை உள்நாட்டு விடயங்களில் தலையீடு செய்யும் செயற்பாடாக கொழும்பு கருதக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். ஜனநாயகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் உதவ முன்வரும் போது அதனை சிறிலங்கா வேறு கண்ணோட்டத்தில் தப்பாகப் பார்க்கக்கூடாது. பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முதலில் சிறிலங்கா அரசு வெளிப்படுத்த வேண்டும். அதிலிருந்து அந்நாடு தப்ப முடியாது. மனித உரிமைகள் பாதுகாப்பில் இன்னமும் முன்னேற்றம் தேவை. கருத்துச் சுதந்திரம், சுயாதீனமான நீதித்துறை உட்பட்ட பல விடயங்களில் சிறிலங்கா இன்னமும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு சுமார் எத்தனை நாடுகள் இதுவரை ஆதரவை அளித்துள்ளன என்று அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதை இப்போதைக்கு வெளியிடுவது நல்லதல்ல. வொஷிங்டன் அவற்றை கையாளுகின்றது என சூட்சுமாக பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.